பெண் விடுதலை என்பது…

 சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம், இலங்கை.

lakeesha Fernando  குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற கருத்துடன் மட்டும் முற்றுப்புள்ளியிடுவதும் – எந்தவித அழுத்தமும் கொடுக்காத விடயம் மாதிரி விட்டு விட்டு செல்வதும் வழமையாகி விட்டது.

* பெண்ணின் வரலாற்றுப் பாத்திரம்
* பெண் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றாள்
* பெண் விடுதலை கண்ணோட்டம்
*  மாக்சியமும் பெண் விடுதலையும்

 மலையகப் பெண்கள்

* மலையக மக்கள் அறிமுகம்
* மலையகப் பெண்களின் உழைப்பு
* மலையகப் பெண்களும் சமூகமும்
* மலையகப் பெண்களும் பொருளாதாரமும்
* மலையகப் பெண்களின் அரசியல் நிலைப்பாடு
*  மலையகப் பெண்களும் ப+கோள மயமாதலும்
* ஊடகங்கள்
*  மலையகப் பெண்களின் விடுதலை

 பெண் விடுதலை என்பது…

பெண்ணின் வரலாற்று பாத்திரம் பற்றி நாம் பல்வேறு விதமான கருத்துக்களை பல்வேறு அடிப்படையிலும் நோக்க முடிகின்றது. மனிதர்களாய் படைக்கப்பட்ட வேதங்கள் ஆரம்பக்காலத்தில் பெண்ணை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்பட்டதை காண முடிகின்றது. படைப்புக் கதைகளில் மிகப் பழமையான பாபிலோனியாஃசுமேரியாஃகிரேக்கர் கதைகளில் பெண்கள் மூல புருஷியாக கருதப்பட்டனர். மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இது பற்றிய பலமான ஆய்வுகளையும் செய்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் வரலாற்று ரீதியில் ‘பெண்’ தெய்வமாகவும், மிக உயர்வான சமூகப்பாத்திரமாகவும் வழிப்பட்டதையும் போற்றப்பட்டதையும் தாய்வழி சமுதாயத்தில் நாம் காணக்கூடியதாக இருந்தது.

வரலாற்றில் உணவுத் தேடிதிரிந்த காலத்தின் அடுத்து கால்நடை வளர்ப்பு விவசாய காலமாக சமூகம் வளர்ச்சியடைந்தது. இக்காலத்தில்

1. பெண் தெய்வமாக கருதப்பட்டாள்.
2.  சொத்து பெண்வழியில் இருந்தப்படியால் பெண்ணுக்கு மதிப்பு.

ஆண் பெண் பிரிவினையின்றி முழு சொத்தும் ஒரு குழுவிற்கு சொந்தமாக காணப்பட்டது.

lakeesha Fernandoதோட்ட விவசாயம் பின் வயல் விவசாயமாக மாறிற்று. இங்கு எருது, காளைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். உற்பத்தி முறையின் அடிப்படையில் மாற்றங்களுக்கேற்ப

(ஓவியம் லகீசா பெர்னாண்டோ (இலங்கை))

பெண்களின் தொழிலாயிருந்த விவசாயம் ஆண்களின் தொழிலாயிற்று. இந்த உற்பத்தி முறைக்கேற்பவே பெண்வழி உரிமை ஆண்வழி உரிமையாயிற்று என வரலாற்றாசிரியர்கள் நிரூபித்துள்ளனர்.

நிலமானிய சமூகம் எழுச்சி பெற்றதன் பின் தனியுடமை வளர்ச்சியடைந்தமையை நாம் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலையில் சொத்துரிமை யாருக்கு பலமாக காணப்பட்டதோ அவருக்கு அச்சமூகத்தில் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டதை நாம் அவதானிக்க முடிகின்றது. மதம், சாதி என்பனவும் இவ்வடிப்படையிலேயே தோற்றம் பெறலாயிற்று. மேலும் அரசு என்ற நிறுவனத் தோற்றம் முதலாளித்துவ தோற்றப்பாடும் பிற்காலத்தில் ஏற்றத்;தாழ்வுகளை உருவாக்குவதற்கு வழிகோலின எனலாம்.

இங்கு பெண் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு பல்வேறு அடக்குமுறைக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டதை நாம் அவதானிக்க முடிகின்றது. ஆண் உயர்ந்தவராகவும் பெண் இரண்டாம் நிலையிலும் நோக்கக்கூடிய அமைப்பு முறை  வளர்ந்து வரலாற்று ‘பெண்’ அடக்கப்பட்டவளாகவும் இம்சைக்கு உட்பட்டவளாகவும் ஆக்கப்பட்டாள். பல்வேறு  பெண் ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு காணப்படுகின்றாள்.

 பெண்மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளும் பெண் விடுதலைப் பற்றிய கருத்துக்களும் காலம் காலமாக நாம் பேசி வந்தப் பொழுதும் கூட இன்றும் அது சமூகத்தில் பேசப்படும் புதிய பொருள் போலவே, இலக்கியத்தில் புதிய நடை போலவே பார்வையை உயர்த்திப்பிடிப்பது ஆச்சரியத்துக்குரியதே. அவைப்பற்றிய சிந்தனைகளை ஆங்காங்கே அவ்வவ்போது கூடிக்கலையும் – அமைப்பு ரீதியிலே நாம் சந்திக்கக் கிடைத்துள்ளது. அவ்வாறான அமைப்புகள் ஊர் தாண்டி நிலம் தாண்டி கடல் தாண்டி உலக மட்டத்தில் பேசப்படுவதில்லை என்பது உண்மையே. இப்பங்குபற்றுதலால் – இங்கு பெருந்தோட்டத்துறையை சார்ந்த ஒரு பெண் என்றரீதியில் அப்பெண்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடியதான மிகச்சிறந்த வாய்ப்பாகவும் இதனை கருதுகின்றேன்.

 பெண்களின் விடுதலைப்பற்றிய கோஷங்களும் கூறுகளும் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்த போதிலும் அவை ஒரு நிலைப்பட்ட தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும், அழுத்தம் கொடுப்பதற்கான அமைப்புகளும் இன்னுமே உரம்பெறவில்லை என்பது ஆய்வுக்குரிய விடயமே.

 பெண்மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளை இனங்காண்பதிலும் பெண் விடுதலை பெறவேண்டிய வழிகளை தெரிவு செய்வதும் ஒவ்வோர் அமைப்புகளுக்கிடையேயும் தளங்களுக்கிடையேயும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. ஆளுக்கு ஆள் சமூகத்துக்கு சமூகம் தாம் தெரிந்தெடுத்துக் கொண்ட சில குறுகிய வட்டங்களிலே தம்முடைய கருத்துக்களை ஏற்றிவைப்பதும் பெண் விடுதலைப் பற்றிய பலமான சரியான கருத்துக்களை மழுங்கடிக்கச் செய்வனவாகவே காணப்படுகின்றன.

 குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற கருத்துடன் மட்டும் முற்றுப்புள்ளியிடுவதும் – எந்தவித அழுத்தமும் கொடுக்காத விடயம் மாதிரி விட்டு விட்டு செல்வதும் வழமையாகி விட்டது. எனவே அவற்றின் சிந்தனையை சரியான முறையில் சமூகப்பிரச்சினையாக இனங்காட்டுவதன் மூலம் அதன் அழுத்தத்தினை மேலோங்கச் செய்யலாம்.

 ‘பெண்’ எனும் உயிரி வர்க்கத்துக்கு வர்க்கம் இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு வேறுவேறாக பிரித்து நோக்கப்படுவதும் சூழலுக்கு பொருத்தமற்ற கருத்துக்களை புகுத்துவதும் நவீன பார்வையில் பெண் விடுதலைப்பற்றிய கருத்துக்களை விதைப்பதுவும் விசாலப் பார்வை கொண்ட விடுதலைக்கு அது வித்திட முடியாது போனது. எனவே, பெண் விடுதலைப்பற்றிய விடயங்களை தனித்தனியே ‘பெண்கள்’ பிரித்தெடுத்து தூக்கிக் கொண்டாடாமல் சமூகத்துடன் இணைந்த சமூக விடுதலையுடனும், சமூக மாற்றத்துடனும் அவற்றை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குட்பட்டிருக்கும் காலமிது. இது தாமதமானால் பெண்கள் மாத்திரம் பெண்களுக்காக போராடிப் போராடி பெண்கள் சார்ந்த பிரச்சினையாக மட்டும் இன்னுமின்னும் உலகுக்கு காட்டப்படும்.

  காலம் காலமாக ‘பெண்’ என்பதன் கருத்தியல்கள் உடைத்தெறியப்படல் வேண்டும் நீ அடக்கமானவள், நீ தீர்மானங்களை கேட்டுக் கொள்வாய், சுகபோகங்களை அள்ளித் தருபவள், பொத்திப் பொத்தி பாதுகாக்கப்பட வேண்டியவள், கற்புடையவள், மென்மையானவள், ப+ப்போன்றவள் என்பன முற்றாக மாற்றியமைக்கப்படல் வேண்டும். அவள் சார்ந்த செயற்பாடுகளின் மென்மையும், பயமும், அச்சமும், அதைரியமும், பொறுமை, தாங்கும் சக்தி என்பனவும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். சமூகத்தில் நிலவும் அவளின் உயிரியல் வகிபாகம் யாது என்பதனை அவள் தீர்மானிக்க வேண்டும். இன்னுமின்னும் அவள்மீதுப் ப+சப்பட்டு அப்பி வைக்கப்பட்டிருக்கும். கலாசாரம் பண்பாடு சார்ந்த கருத்தியல்களை உடைத்தெறிவது முதன்மையானதாகும்.

 அவள் மீது கட்டவிழ்ந்து விடப்பட்டிருக்கும் சுரண்டல்கள், அடக்குமுறைகள் என்பவற்றுக்கெதிராக அவளாக உணர்ந்து, அவற்றிக்கெதிரான போராடத் துணிவதும் அவசியமாகும். கருத்தியல்களை சுமந்துக் கொண்டே விடுதலைப் பற்றி விதைக்கும் விதை சொத்தையாக போய்விடுவதும் சாத்தியமே.

இவ்வாறாக ‘பெண்கள்’ ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும் புரட்சிகளும் பற்றிய கருத்துக்களும் செயற்பாடுகளும் உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட பொழுதும் அவை உழைக்கும் வர்க்கத்திற்குரியதாக அடையாளப்படுத்துவதில் இன்னும் பின்தங்கியே காணப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய வல்லரசுகளின்  பட்டினங்கள் தொடங்கி நாகரீகத்தின் துளியும் அண்டமுடியாத மிகவும் கொடுமையான ஒடுக்குமுறையில் வாழும் பெண்கள் வரையிலும் இந்தக் கோஷங்களும் கருத்தியல் மாற்றங்களும் என்று மு;னனெடுக்கப்படுகின்றதோ அன்று தான் பெண் விடுதலை என்ற சமூக மாற்றம் உலகையும், வென்றெடுப்பதாய் காணப்படும். இன்றும் உலகின் கல்வியில், பணத்தில் மேல்தட்டு வர்க்கத்தினர் பேசிக்கொண்டிருக்கும் பெண் விடுதலை, பெண் ஒடுக்குமுறை என்பன மிகவும் அடிமட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினரை வந்தடையாமலே அமிழ்ந்தும் போய் விடுகின்றது. உழைக்கும் வர்க்கத்துக்குரிய சமூகம் தான் அடக்கப்படுகின்றோம் என்ற ஆழமான பிரக்ஞையுடன் போராட்டத்துணிகின்ற பொழுது தான் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் பெண் விடுதலை அர்த்தமுள்ளதாக காணப்படும்.

முதலாளித்துவ ஏகாதிபத்தியங்கள் கொடிகட்டிப் பறக்கும் இவ்வுலகின் மூலை முடுக்கெல்லாம் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, கலாசார, மத ரீதியான அம்சங்களில் சன்னம் சன்னமாக ஊடு பாய்ந்து ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைகள் ஆழப்படுத்தியிருக்கின்றதென்பது கொடுமையான உண்மை. அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதும் ஏகாதிபத்திய சூழலிலிருந்து அவர்களை மீட்டெடுத்துக் கொள்ளும் பெண் விடுதலை பேசப்படாத எல்லா திசை நோக்கியும் விடுதலைக்கூறுகளையும் விசாலிப்பதும் அது தொடர்பான சிந்தனைகள் அடிப்படை மாற்றங்களை ஊடு செலுத்துவதில் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் போராட்டங்களை முன்னெடுப்பதுவும் இக்கால கட்டத்தில் பெண்கள் அமைப்புகளும் பெண்களும் முன்னெடுக்க வேண்டிய மிகப்பெரிய காத்திரச் செயலாகும். உலகின் எல்லா செயல்களும் தம் இன, மத, மொழி, வர்க்க பேதமற்று ஒரு அமைப்பின் கீழ் இயக்குவது இச்செயலை இன்னும் பலப்படுத்தும்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், வர்க்கத்துக்கு வர்க்கம் பெண்கள் மத்தியில் புரையோடிப்போயிருக்கும். எல்லாவிதமான கலை, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் பின்னணிகளையும் அதனூடாக செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் இனங்காணப்படவேண்டும். இனங்காணப்பட்டு வெளிக்காட்டப்பட்ட விடயங்களுக்கூடாகவே இவற்றுக்கெதிரான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் வேண்டும்.

வேறுபட்ட இடங்களில் பெண்கள் சார்ந்த அமைப்புகள் காணப்படுவதும், அமைப்பு ரீதியாக்கப்படுவதும் சாதாரணமாக இருந்தப்பொழுதிலும் அது தனிப்பட்ட மேந்தட்டு வர்க்கத்துக்குரியதாகவே பேசப்படுகின்றது. முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு சார்பானதாகவேயில்லாமல், விடுதலைக்கான கூறுகளையும் முன்னெடுக்கக்கூடிய சமூக அமைப்பாக அது காணப்படுதல் அவசியமாகும்.

என்னுடைய பார்வையில் எழுதும் பெண்கள் உழைக்கும் பெண்கள் போராடும் பெண்கள் என் பெண்கள் தனித்தனியாக தம் செய்றபாடுகளை முன்னெடுப்பதென்பது கூட அமைப்பு ரீதியான வலுவினை குறைத்து விடுவதாக காணப்படுகின்றது. எனவே இவர்கள் ஒரே அமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டுமென்பதும் அவர்கள் சார்ந்த குரல்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்பதும் அது ஒரே குரலாக ஒலிக்க வேண்டுமென்பதுவும் காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.

இன்றைய பெண்ணியல்வாத அமைப்பு பெண்களுக்கேற்படுகின்ற ஒடுக்கு முறைகளை பொதுவாகவே ஆண், பெண் முரண்பாட்டை மட்டுமே கருத்திற் கொள்கின்றனர். முனைப்பாக காணப்படும் ஒரு விடயத்தினை மட்டும் தூக்கிப்பிடித்துக் காட்டுவதென்பது சமூக விடுதலைக்கு இட்டுச் செல்லாததாகி விடுகின்றது. அது பின்னிலைவாத நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது. அவற்றிலிருந்து விடுபட்டு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களிலும் பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்னெடுப்பதென்பது இயலாத காரயமாகிறது.

விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வருகின்ற உலகின் நடைமுறை, அனுபவம் என்பது நாளுக்கு நாள் வரலாற்றின் பாதைகளை சரியாக இனங்கண்டு வெற்றிபெற வேண்டியதாகின்றது. இங்கு ‘மாக்ஸ்’ கூறிய குடும்ப அமைப்புப் பற்றிக் கூட நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. குடும்பம் என்பதில் உழைப்பு சுரண்டப்படுவதும், தனி மனித ஆதிக்கம் செலுத்தப்படுவதும் என்பதிலிருந்து விடுதலையே இங்கு பேசப்பட்ட விடயம். அவற்றைப் பிய்த்து சுழற்றி எறிந்துவிட்டு தனிமனித சொத்துரிமை வேண்டப்படுவது விடுதலையல்ல என்பதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். தீவிர பெண்ணியல்வாதிகள் இதற்கப்பாற்பட்டும் செயற்படுவதும் நமக்குத் தெரிந்ததே.

நம்முடைய சமூக அமைப்பானது அனுபவங்களுக்கூடாக ஆணாதிக்கப் போக்கை அதிகமாக கண்டும் அனுபவித்துமிருந்தாலும் அது மாத்திரமின்றி நம்மை ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடுகின்ற விடயம். சமூக வரலாற்று அடிப்படையாக ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிக்கும் தோரணை இன்றுவரையும் தொடர்ந்துள்ளது. ஆண் பெண் முரண்பாடுகளை மட்டும் தூக்கிப்பிடித்திராமல் சமூகத்தில் பெண் விடுதலைக்கான ஏனைய கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டு சிந்திப்பது பெண்ணியல்வாத செயற்பாடுகளை வெற்றிப்பெறச் செய்யும் சரியான முன்னெடுப்புகளாகும். காலம் காலமாக ஆணை நம் எதிரியாகநோக்குவதும், ஆணுக்கு எதிராக – நிகராக சிந்தனைகளை முன்னெடுப்பதும் சாத்தியமற்ற பெண் விடுதலையாகவே கொள்ள முடிகின்றது. ஒருவருடைய சமூகப் பார்வையும் வர்க்க நிலைப்பாடும் பெண்ணியச் சிந்தனைகளை முன்னெடுக்கும் பொழுது மிக முக்கியமாக கைக்கொள்ளப்படுகின்றது. எனவே சமூக விடுதலையுடன் ஆண்களுடன் கைகோர்த்து உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகின்றது.

உலகின் பல்வேறுப்பட்ட துறைகளில் சமத்துவமான நிலைப்பாடும், கல்வி, தொழில் என்பவை வென்றெடுக்கப்பட்டிருந்தாலும் கூட சமூகத்தில் பெண்ணுக்கிழைக்கப்படும் ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் மிகப்பரவலாகவே காணப்படுகின்றது. ஆணாதிக்கம் உட்பட குடும்பத்தில் இரட்டைச்சுமைகள், பாலியல் வன்முறைகள், பண்பாடு, கலாசாரம், ஒடுக்குமுறைகள் முக்கியமாக கருதப்படுகின்றது. இவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதென்பது சட்டென்று இயலுமான காரியமாகவில்லை. அதனை முன்னெடுக்க மிக நேர்மையான முன்னெடுப்புகளை நம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே பெண் விடுதலை என்பது ஆணுக்கு எதிரான கோஷம் அல்ல. நம்முடைய சமூகத்தில் பெண் விடுதலைப்பற்றி பேசுகிற, எழுதுகின்ற, சிந்திக்கின்ற ஆண்கள் இருந்துக் கொண்டேதான் இருக்கின்றார்கள். இது சமூக ரீதியாய் நம்மத்தியில் காணப்படும் கருத்தியல்களின் குவியமே. எந்தவொரு சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களையும் தனித்துப் போராட முடியாது. ஆணாதிக்கத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பெண்ணியல்வாதிகளின் விடுதலை முயற்சிகள் விசாலித்த பார்வையை கொண்டதாக அமைந்திருக்காது.

பெண் விடுதலை பெறுவதற்கு ஆணாதிக்க அடக்குமுறை மாத்திரம் தான் தடையாக உள்ளதென்பதை நாம் சிந்திக்க முடிவதில்லை. அதுவும் கூட சமூகத்தின் வளர்ச்சியினூடாக அவளுக்கு புகுத்தப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. தனியுடமை சமுதாயம் உருவாக்கப்பட்ட நாள் முதல் சொத்துக்குரிய வாரிசை அடையாளம் காணும் தேவை உருவான பொழுதிலிருந்து பெண் சமூக உழைப்பிலிருந்து விலக்கப்பட்டு குடும்பத்துக்குள் தன் உழைப்பை கொடுப்பவளாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டாள். இது அவளை குடும்பத்துக்குள் அடிமையாக்கியதெனலாம். இங்கு வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமானதெனும் தோற்றப்பாடு காணப்பட்டது. பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் சமையல், துணி துவைத்தல், பிள்ளை பராமரித்தல், வீடு கூட்டுதல் என்ற தொழிற்பிரிப்பை மிகச் சாதகமாக அவர்கள் தலைமேல் அழுத்தி வைத்துள்ளது. ஆண் உழைத்துப் போடுவதற்குரிய வகையிலும், பெண் அவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்யும் அடிமையாகவும் வளர்த்தெடுக்கப்பட்டாள்.

பின்னொரு காலம் பெண் உழைக்கப்புறப்பட்ட நிலையில் இவை வேறு கட்டமைப்பை நோக்கிச் செல்வதாயிற்று. இங்கு பெண்ணுக்குரிய இரட்டைச்சுமை அவளை அடிமையாக்கியது. எவ்வளவு உழைத்தாலும் வீட்டுச்சுமைகள் இன்றுவரைக்கும் குறைந்தபாடில்லை. இது அவளை அடிமைப்பண்டமாக்கிவிட்டது. அவள் ஓய்வின்றி உழைக்கும் இயந்திரமாகிவிட்டாள். அவளின் வீட்டுழைப்பு எந்தவித கணக்கெடுப்பிலும் வராதது அவளின் துரதிஸ்டமானது. ஆனால் கால்மாக்ஸ் தன்னுடைய பொருளியல் ஆய்வுகளில் இது கூலியில்லாத உழைப்பு, குடும்பத்துக்கான உழைப்பு என்பதனை சிந்தித்தார். எனவே தான் மாக்கியம் பெண் விடுதலைப்பற்றிய கருத்துக்களை வரலாற்றில் நோக்கிய ஒரு பிரச்சினையாக அடையாளங்கண்டதெனலாம்.

ஏகாதிப்தியத்தின் தேவைகளுக்கு உட்பட்டு ஏகாதிபத்தியங்கள் நம்மீது திணிக்கும் அத்தனை அடக்குமுறைகளையும் மிக சுலபமாக ஏற்றுக்கொண்டு எம்மால் பெண் விடுதலைப்பற்றி நாம் பேசுவதற்கு முன் சமூக விடுதலையும், சமூக மாற்றமும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே. இவற்றுக்கூடாகவே பெண் விடுதலையையும் உயரத்தில் பிடிப்பது மிகப் பெரிய அமைக்குள் அவர்கள் சரியாக வழி நடாத்துவதற்கும் இது இயலுமானதாய் இருக்கும்.

மனித குல வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டு குறிப்பிட்ட காலம் வரை பெண் அடையாளப்படுத்தட்டோ, பெண்ணிய சிந்தனைகளை அடிப்படையாக கொண்டோ – பெண்ணுக்கு செய்வது அடக்குமுறை என்பது இனங்காணப்பட்டோ கருத்துக்கள் முகிழவில்லை. ஆனால் சமத்துவம், சமநீதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமூகத்தில் பெண் தனக்குரிய இடத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக காணப்பட்டது. சமூகத்தின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட விடயங்களை மிக காத்திரமான முறையில் தெளிவாகவும் சரியாகவும் முன்னெடுத்த மாக்கிய வழிமுறைகள் தான் ‘பெண்’ ஒடுக்குமுறையையும் மிகத் தெளிவாக காட்டியதென்பது மிகவும் அழுத்தமானக் கருத்தாகும். இச்சமூக அமைப்பில் தான் ஒடுக்குமுறைகளை உடைத்தெரியக்கூடிய வல்லமையையும் ஒடுக்குமுறைக்கெதிராக போராடக்கூடிய நடைமுறைகளையும் முன்னெடுக்க முடிந்தது.

வரலாற்று ரீதியில் வளர்ந்து முற்றி கனிந்துப் போயிருக்கும் பெண் விடுதலைக்கூறுகள் வரலாற்று ரீதியான உண்மைகளையும் தகர்ப்புகளையும் கொண்டே உடைத்தெரியப்பட வேண்டிய தேவை இன்று பெண் விடுதலை பேசும் அனைவரினதும் பொறுப்பாக காணப்படுகின்றது. ஒருவர் சட்டென்று முளைத்த காளாண் போன்று பெண் விடுதலைப் பற்றி பேசவோ, எழுதவோ, நடைமுறைப்படுத்தவோ இயலாது. அதில் யதார்த்தமும் காணப்படாது. அது பெண்ணை வரலாற்றில் தவறாய் புரட்டிப்போட்ட அத்தனை விடயங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது.

அது கருத்தியல்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், அரசியல், மொழி, பொருளாதாரம், சமூகம் என்பவற்றின் அடிப்படையிலும் மெதுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதனை மிகச் சீக்கிரமாய் திருப்பிப் போட முடியாது. படிப்படியாக எடுக்கப்படும் எத்தனங்களாலே அவற்றை புரட்டிப்போடும் பணியை தொடர்தல் வேண்டும். வேறுவேறான சமூக நடைமுறை சார்ந்த யதார்த்த நிலமைகளை சரியான முறையில் அணுகிப்பார்ப்பதன் மூலம் அவற்றை வெற்றி கொள்ளமுடியும்.

மேலேத்தேய நாடுகளில் காணப்படும் அதே அமைப்பு முறைகளை மிகச் சாதாரணமாய் வாழும் பெருந்தோட்ட உழைப்பாளப் பெண்களிடம் பிரயோகப்படுத்த முடியாது. அவர்களுக்கேற்ற அனுபவ ரீதியான நடைமுறைகளைக் கொண்டே அவற்றைப் பேசத்துணியவும் வேண்டும். திடீரென மேலைத்தேய பெண் விடுதலைக்கூறுகளை நாம் கீழேத்தேய நாடுகளுக்கு பிரயோகிக்க முடியாது. எனவே அவற்றை முறையாக சிந்தித்து தொடர வேண்டியது அவசியமாகும். இவ்வடிப்படையிலேயே நாம் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள், விடுதலைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். சமூக விடுதலைக்கூறுகளையும், மாற்றங்களையும் பெண் விடுதலையுடன் இணைத்துக்கொள்வதில் ஆண்களாலும் அது பேசப்பட வேண்டிய கருத்தாக பரவ வேண்டியதும் அவசியமானதாகும்.

——————–

ஓவியம் லகீசா பெர்னாண்டோ

பெர்லினில் 11.12.2010 அன்று நடைபெற்ற 29வது பெண்கள் சந்திப்பில்  சந்திரலேகாவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் கட்டுரை வடிவில் நன்றியுடன் பிரசுரமாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *