நந்தலாலா

– யூகி

nanth4 வழியில் சாதிக் கலவரத்தால் பலர் அடித்துக்கொள்ளும்போது அந்த ஊரைக் கவனத்துடன் கடக்கும்போது பாஸ்கரின் சாதியைக் கேட்கிறார் கிராமத்துப் பெண். அதற்கு பாஸ்கரின் பதில் ”மென்டல்”.”அப்படி ஒரு சாதியா?”பாலியல் தொழிலாளியான பெண்ணையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரின் கிராமத்துக்கு வருகிறார்கள்.

மிகச் சில படங்களே திரைப்படம் பார்ப்பதை மனசுக்கு நெருக்கமான அனுபவமாக மாற்றி நம்மிடம் சலனங்களை ஏற்படுத்துகின்றன. நந்தலாலா – அந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.மனநலம் குன்றிய இளைஞரான பாஸ்கர்மணியும், பாட்டியுடன் வாழ்ந்து தன்னுடைய அம்மா ஒரு நாளில் தன்னைக் காண வருவார் என்று முத்தத்தால் எதிர்கொள்ளக் காத்திருக்கும் பத்து வயதுப் பையனான அகியும் சந்திக்கிறார்கள்.
பாஸ்கர்மணி மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவமனையில் இருந்து தப்பித்துக் காவலாளியின் யூனிஃபார்முடன் வருகிறார். பள்ளியில் டூர் அழைத்துச் செல்வதிலிருந்து தப்பித்துக் கையில் பணத்துடன் அம்மா இருக்கும் ஊர் மட்டும் நினைவில் இருந்தபடி கிளம்புகிற அகியின் காப்பாளனாக பாஸ்கர்  மாறி – அவரும் தன்னை மருத்துவமனையில் விட்டுச்சென்ற தாயை ஏசியபடி பார்க்கச் செல்கிறார்.இருவரின் நோக்கமும் தாயைத் தேடுவது தான். பேருந்து நிலையத்திலிருந்து துவங்கும் அவர்களுடைய பயணத்தில் அவர்கள் சந்திக்கிறவர்களின் அனுபவங்கள் சுவாராஸ்யமான சித்தரிப்பு

nanth1சிறுவனான அகியிடம் இருக்கும் பணத்தைத் திருட முயலும் மெலிந்த இளைஞன், வழியில் பசியுடன் இளநீரைத் திருட பாஸ்கர் முயல்கிறபோது முதலில் மோத முயன்று அவர்களுக்கு இளநீர் வெட்டித்தரும் வயதான பெரியவர், வழியில் லிப்ட் கொடுத்து காணாமல் போகும் புதுமணத் தம்பதிகள், பாதை காட்டவரும் கால் ஊனமுற்ற இளைஞர்,  பாஸ்கரை  ‘மென்டல்’ என்று சொன்னதால் விரட்டி விரட்டி அடிவாங்கும் ஆட்டோ டிரைவர், வித்தியாசமான பைக்கில் லிப்ட் கொடுக்கும் தடிமனான இரண்டு மனிதர்கள்,  மதுபானக் கிளர்ச்சியில் மறித்து பீர் பாட்டிலால் அடிவாங்கும் கேளிக்கை இளைஞர்கள் – என்று பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசம்.

 

வழியில் சாதிக் கலவரத்தால் பலர் அடித்துக்கொள்ளும்போது அந்த ஊரைக் கவனத்துடன் கடக்கும்போது பாஸ்கரின் சாதியைக் கேட்கிறார் கிராமத்துப் பெண். அதற்கு பாஸ்கரின் பதில் ”மென்டல்”.”அப்படி ஒரு சாதியா?” – இது அந்தப் பெண்ணின் பதில். வழியில் இடிந்த கட்டிடத்தில் லாரி டிரைவருடன் தன்னைப் பகிர்ந்தபடி இருக்கும், சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலாளி ஆன ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்கள். விரட்டும் கும்பலிடம் இருந்து அவரைக் காப்பாற்றித் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். போகும்போது ஒரு பாலத்துக்கு அடியில் அனைவரும் படுத்திருக்கும்போது தலைக்கு மேலே ஒரு மலைப்பாம்பு நெளிந்து தன்போக்கில் அதற்கான இயல்புடன் போகிறது. எதிர்ப்படும் மனிதர்கள்தான் இம்சிக்கிறார்களே ஒழிய மற்ற உயிரினங்கள் தன்போக்கில் இருப்பதைப் புலப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இந்தக் காட்சியின் நேர்த்தி.
ஒருவழியாக அந்தப் பத்து வயதுப் பையனான அகியின் அம்மா இருக்கும் ஊருக்குப் போய் வீடுவீடாகத் தேடும்போது பாஸ்கர் தேடிப்போன வீட்டில் அகியின் அம்மா இன்னொரு குடும்பமாகப் பாதுகாப்பாக இருக்கிறார். பணத்தையும், நகையையும் கொடுத்துப் போய்விடும்படிக் கெஞ்சும்போது அவரை அறைந்துவிட்டு வரும் பாஸ்கர் அதை அகியிடம் சொல்லத் தயங்குகிறார்.
மறுபடி பயணம்.

nanth2

பாலியல் தொழிலாளியான பெண்ணையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரின் கிராமத்துக்கு வருகிறார்கள். பாஸ்கரின் வீட்டிற்குப் போகும்போது அங்கு காலில் பிணைக்கப்பட்ட சங்கிலியடன் புறக்கணிப்பின் தழும்பு ஏறிய காலுடன் இருக்கிறார் பாஸ்கரின் தாயான ரோகிணி. அவரைச் சரி பண்ணி மொட்டையடித்து மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் பாஸ்கர். தன்னுடைய அம்மாவைப் பற்றிக் கேட்டு நச்சரிக்கும் பையனிடம் வேறு வழியில்லாமல் அவர் இறந்துவிட்டதாகச் சொன்னதும் அகி பாஸ்கரை ‘மென்டல்’ என ஏசும்போது குமைந்து அழுகிறார் பாஸ்கர்.

திரும்பிப் போகும் வழியில் அகியின் அம்மா வேறொரு குடும்பத்துடன் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறான் அகி. அம்மாவின் கசங்கலான புகைப்படத்தை நழுவ விட்டுவிட்டு உடன் பயணிக்கும் பாலியல் தொழிலாளியான பெண்ணை அம்மாவாக ஏற்று அவர் முகத்தை இளம் முத்தங்களால் நிறைக்கிறான். அருகில் பெருமிதமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் பாஸ்கர். இந்த இடத்திலேயே படத்தை நிறைவு செய்திருக்கலாம். அதற்கு மேல் அகியும் அவன் அம்மாவாக ஏற்றுக்கொண்ட பெண்ணும் பள்ளிக்குப் போகிறார்கள். போகும் வழியில் தெரிந்த குரல். பார்த்தால் பலூன் வியாபாரியாக பாஸ்கர். வண்ணப் பலூன்களை விற்றுக்கொண்டு மனதிற்குத் தொந்தரவை ஏற்படுத்தாத ஒரு தொழிலுடன் நடக்கிறார் பாஸ்கர். அத்துடன் முடிகிறது படம்

nanth3

விரைவான தமிழைப் பேசியபடி முகத்தில் பல பாவங்கள் காட்டும் பாஸ்கர் பாத்திரத்தை அற்புதமாகப் பண்ணியிருக்கிறார் இயக்குநர் மிஸ்கின். குழந்தையின் மனநிலைக்கு குறைந்த முகபாவத்தை ஏந்தியடியும், சில சமயம் வெறித்த கண்களோடு வேகம் கொள்வதும், தன்னுடைய இருத்தலைப் பற்றி சமூகம் ஒட்டவைத்திருக்கும் சொல்லைப் பிறர் விட்டெறியும்போது குமுறி அழுவதுமாக மிஸ்கின் அடர்த்தி குறைவான தலைமுடியுடன் பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.
அகியாக வரும் அந்தப் பையன், மனநலம் பாதிப்பட்டவராக வரும் ரோகிணி, எதிர்கொள்ளும் பாத்திரங்கள்,  படத்தில் இன்னொரு ரசமாகத் ததும்பும் இளையராஜாவின் இசை,  பின்னணியில் உழைத்திருக்கிற ஒளிப்பதிவாளர், (பயணத்தில் பல பிரேம்களில் அவர்களுடைய கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன) அழகியல் இயக்குநராக உழைத்திருக்கும் ட்ராட்ஸ்கி மருது என்று பலர் படத்திற்குச் செழுமை சேர்த்திருக்கிறார்கள்.
நமக்கு முன்னால் நகரும் வாழ்க்கையைப் பார்க்கிற உணர்வைக் கொடுக்கிறது – நந்தலாலா.  இதே மாதிரியானவர்கள் நம் வாழ்வில் நமக்கு முன் எதிர்ப்பட்டால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற மென்மையான படிப்பினையையும் அளிக்கிறது. இதைத் தயாரிக்க முன்வந்த ஐங்கரன் நிறுவனத்திற்கு வாழ்த்துச் சொல்வதைவிட குறைந்தபட்சம் நேரடியாகப் போய்ப் படத்தைப் பார்ப்பது தயாரித்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை.

 நட்பிலிருந்து இவ்விமர்சனம்நன்றியுடன் பிரசுரமாகிறது

 

1 Comment on “நந்தலாலா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *