இலங்கையில் – கணவனையிழந்த பெண்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

By Subash Somachandran

widows_displaced

யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3,994 பேரும் கணவனையிழந்த பெண்களாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய புள்ளிவிபரங்கள்  இன்னும் கிடைக்கவில்லை.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, பிரிவினைவாத புலிகளுக்கு எதிராக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் நடத்தப்பட்ட இனவாத யுத்தம், பத்தாயிரக் கணக்கான பெண்களை யுத்ததத்தினால் கணவனையிழந்தவர்களாக்கியுள்ளது.  இலங்கையின்  தென்பகுதியில், பொருளாதார நெருக்கடி காரணமாக இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு ஆயுதத்திற்கு இரையாக பயன்படுத்தப்பட்டதால் பல இராணுவத்தினரின் மனைவிமார் தங்கள் கணவன்களையும் இழந்துள்ளனர்

வடக்கு மற்றும் கிழக்கில் புலிப் போராளிகளின் மனைவிமார் மாத்திரம் யுத்தத்தினால் கணவனையிழந்த பெண்களாக  இருக்கவில்லை. புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அல்லது யுத்தத்தை விமர்சித்த ஆயிரக்கணக்கான தமிழ்  மக்கள் அரசாங்கத்தின் நிழல் கொலைப்படைகளால் ‘காணாமல் ஆக்கப்பட்டார்கள்’ அல்லது படுகொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள், 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலைகாரத்தனமான தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இராணுவத்தினால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட கால் மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்களை இராணுவம் அடைத்து வைத்தது. அதற்கும் மேலாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசாரிக்கப்பட்டு ‘புலி சந்தேக நபர்களாக’ இனம் தெரியாத நிலையங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், அடிப்படை சேவைகள் அற்ற, யுத்தத்தினால் பாழடைந்த நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சிறிய உதவிகளுடன் அல்லது உதவிகளே இன்றி திரும்பியுள்ளனர்.

மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதி அமைச்சர், வி.லி.கி.வி. ஹிஸ்புல்லா, வடக்கு மற்றும் கிழக்கில் 89,000 யுத்தத்தினால் கணவனையிழந்த பெண்கள் இருப்பதாக கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் 49,000 பேரும், வடக்கு மாகாணத்தில் 40,000 பேரும் கணவனையிழந்த பெண்கள்  உள்ளனர். அவர்களில் 12,000 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் மற்றும் 8,000 பேர் ஆகக் குறைந்தது 3 பிள்ளைகளுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ‘யுத்தத்தினால் கணவனையிழந்த பெண்களை பராமரிப்பதற்கு எங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இதற்கான உதவிகளை நாங்கள் வெளிநாடுகளிடமிருந்து வேண்டி நிற்கிறோம்’ என்றும் அவர் தெரிவித்துமிருந்தார்.

உண்மையில், இலங்கை அரசாங்கம் அதன் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டுள்ளது. கணவனையிழந்த பெண்கள்  தமது கணவரின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் நட்ட ஈடாக 50,000 ரூபா (442 அமெ.டொலர்) பெறமுடியும். எஞ்சியுள்ளவர்களுக்கு மாதாந்தம் 150 ரூபா வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு என்பதை விட, இந்த தொகை ஒரு ஆளுக்கு ஒரு நாள் உணவுக்குக் கூட போதாது.

 யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் தொண்டு நிறுவனமான பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளாரான சரோஜா சிவச்சந்திரன், கடந்த வாரம் வடக்கில் யுத்தத்தினால் கணவனையிழந்த  பெண்கள் சம்பந்தமான புள்ளிவிபரங்களை உலக சோசலிச வலைத் தளத்துக்கு வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3,994 பேரும் கணவனையிழந்த பெண்களாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய புள்ளிவிபரங்கள்  இன்னும் கிடைக்கவில்லை.

இந்த கணவனையிழந்த பெண்களின்  கணவன்மார் மோதல்களின் போது கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று சிவச்சந்திரன் விளக்கினார். யாழப்பாண மாவட்டத்தில் மட்டும் 40 வயதுக்கு உட்பட்ட 3,118 கணவனையிழந்த பெண்களும்  மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 38 பேரும் உள்ளனர். 1,042 பேர் அவர்களது கணவன்மார் தற்கொலை செய்து கொண்டதால் கணவனையிழந்தவர்களாக்கப்பட்டுள்ளனர். என்றும் அந்தப் புள்ளிவிபரம் காட்டுகிறது. இவர்கள் நீண்ட யுத்தத்தின்  விளைவினால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பலியானவர்களாவர்.

‘அவர்களுடைய கணவன்மார், அவர்களின் கண் முன்னால் கடத்தப்பட்டதைக் கண்டிருந்த போதிலும், தங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினால் அந்தப்பெண்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். பொலிசில், நீதிமன்றத்தில் அல்லது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தும் கூட அவர்களால் சரியான முடிவுகளை பெற முடியவில்லை. இன்னமும் அவர்கள் தங்களின் கணவன்மாருக்காக காத்திருக்கின்றனர்,’ என்று சிவச்சந்திரன் கூறினார்.

பல நடுத்தர வயதுப் பெண்கள் தனியாக வாழ்கின்ற அதேவேளை, பெரும்பாலான இளம் கணவனையிழந்த பெண்கள்  தங்களின் பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ தங்கி வாழ்கின்றனர். அவர்கள் சில தொண்டு நிறுவனங்களினதும் அல்லது அரசாங்கத்தினது சிறு உதவியுடன் வாழ்கின்றனர். சில பெண்கள்  அன்றாடம் கிடைக்கும் சிறிய கூலி வேலைகளூடாகவும் மற்றும் சிறிய வியாபாரங்களூடாகவும் வருமானத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர். குணவனையிழந்த பெண்கள்  உட்பட பெண்கள், வர்த்தகர்களிடம் மிகவும் மலிந்த கூலிக்கு வேலை செய்வது இங்கு பொதுவான விடயமாகும். சிலர் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர், அவர்களுக்கு கட்டாயம் மருத்துவ உதவி பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 ‘கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்ன? விசாரணை செய்து அவர்களைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அவர்களது கணவன்மாரைக் கொண்டு செல்வதை மனைவிமார் கண்டுள்ளனர். இங்கு ஒவ்வொரு விடயத்தினையும் முடிவெடுப்பது அரசாங்கமே. இந்தப் பெண்களுக்கு ஏதாவது நீதி கிடைக்கும் என்பதில் எமக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.’ என சரோஜா சிவச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் யாழ்ப்பாணத்தில் பல கணவனையிழந்த பெண்களுடன்  பேசினார்கள். அவர்கள் எல்லோரும் மெலிந்து காணப்பட்டார்கள். இது அவர்கள் பொருத்தமான உணவினைப் பெற்றுக் கொள்ள வில்லை என்பதற்கு ஒரு தெளிவான அறிகுறியாகும். அவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்ததோடு, தற்காலிக குடிசைக்குள் வாழ்கிறார்கள்.

30 வயதான கமலா தெரித்ததாவது  ‘எனது கணவன் 26 வயதில் இறந்தார். அவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கும் தொழில் செய்து வந்தார். அவர் அருகில் உள்ள கிராமத்தில் தொழில் செய்தார். 2006 மே மாதம் 15ம் திகதி வழமை போல் காலை 7 மணிக்கு தொழிலுக்குப் புறப்பட்டார். வழமையாக முற்பகல் 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி விடுவார். சம்பவ தினம் அவர் குறித்த நேரத்துக்குப் பின்னரும் வீடு திரும்பவில்லை. அதனால் நாங்கள் அவரைத் தேடிச் சென்றோம். மாலை வேளையில் அவரை இறந்த நிலையில் கண்டுபிடித்தோம். அவருடைய உடல் கைவிடப்பட்ட வீடொன்றினுள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தது. அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தன. தலையில் பலத்த அடியுடன் அவரின் கழுத்து வெட்டப்பட்டிருந்தது. இது கடற்படையால் செய்யப்பட்டது என்பதில் எமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

widows_displaced

‘நான் ஒரு செல் தாக்குதலால் காயப்பட்டிருக்கிறேன். இன்று வரை எனது உடலில் செல் துண்டுகள் இருக்கின்றன. என்னால் சரியாக நடக்க முடியாது. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். எனது தகப்பனார் தான் எங்களைப் பராமரிக்கின்றார். அவர் ஒரு மிகவும் வறிய மீனவர். எனது கணவர் உயிரோடு இருந்தால் நான் இந்த நிலமையில் இருக்க மாட்டேன். அரசாங்கம் எனக்கு மாதம் 150 ரூபா கொடுக்கின்றது. எனது 7 வயது மகளும் 6 வயது மகனும் உள்ளூர் பாடசாலையில் படிக்கிறார்கள். எனக்கு வீடு இல்லை. ஒரு சிறு குடிசையிலேயே வாழ்கின்றேன்,’ என்றார்

30 வயதான கிருஷ்ணா, தனது கணவன் 2000 டிசம்பரில் மரணமானதாக கூறினார். அவர் புலிகளின் கட்டாயப் பயிற்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு தடவைகள் அதை நிராகரித்தார். மூன்றாவது தடவை புலிகள் அவரை வலு கட்டாயமாக பிடித்துச் சென்றனர். அவரது மகன் மற்றும் மகளுக்கு முறையே 12 மற்றும் 10 வயது. ஒக்டோபர் நடுப் பகுதியில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் அவருடன் பேசும்போது, அவர் செப்டம்பர் மாதத்துக்கான 150 ரூபா அரசாங்க கொடுப்பனவை பெற்றிருக்கவில்லை.

கிருஸ்ணா, கடந்த வருடம் இராணுவத் தடுப்பு முகாமில் இருந்து, அண்மையில் தான் விடுதலையாகி இருந்தார். அவர் தற்போது தனது தாயாருடன் வாழ்கின்றார். அவர் விடுதலையாகும் போது, அவருக்கு 25,000 ரூபா பணம், 12 கூரைத்தகடு மற்றும் 6 பைக்கற் சீமெந்தும் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டது. அவர் தற்போதுதான் சிறிய குடிசையைக் கட்டி முடித்துள்ளார். ‘யுத்தம் எமது வாழ்க்கையை பாழாக்கி விட்டது’ என்று அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயனைச் சேர்ந்த 50 வயதான கணவனையிழந்த பெண் கூறுகையில்  ‘எனது கணவன் கடந்த வருடம் மே மாதத்தில் இராணுவத்தின் ஒரு செல் தாக்குதலினால் முள்ளி வாய்க்காலில் (முல்லைத்தீவு மாவட்டம்) கொல்லப்பட்டார். எனக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகளும் உள்ளனர். எனது மூத்த மகள் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டார் (பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை). நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வரும்போது இராணுவம் அவரை கைது செய்தது. இன்னும் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நாங்கள் இராமநாதன் (தடுப்பு) முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நான் பல இராணுவ அதிகாரிகளிடம் எனது மகளைப் பற்றிக் கேட்டேன். ஆனால் அவர்கள் எங்களுக்கு ஒன்றும் இது வரை  சொல்லவில்லை.

‘நாங்கள் மீளக் குடியமர்ந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. எமது வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எமது காணிக்குள் செல்வதற்கு இராணுவம் இன்னும் எம்மை அனுமதிக்கவில்லை. ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வழங்கிய தரப்பாள் டெண்டுக்குள் நாங்கள் வாழ்கிறோம். மழை வரும்போது வெள்ளம் கூடாரத்துக்குள் வந்துவிடும். எனக்கு எதுவித வருமானமும் இல்லை. அரசாங்க நிவாரணம் மட்டுமே பெறுகின்றேன். அதையும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நிறுத்தப் போவதாக அவர்கள் சொன்னார்கள். எனது மூன்று பிள்ளைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அவர்களின் செலவை ஈடு செய்ய என்னால் முடியாமல் இருக்கின்றது,’ என்று கூறிய அவர் அரசாங்கம் மற்றும் பல தமிழ் கட்சிகள் உட்பட சகல அரசியல் கட்சிகள் மீதும் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார். ‘எந்த அரசியல் கட்சியும் வந்து எமக்கு உதவி செய்யவில்லை. அவர்கள் தேர்தல் நேரங்களில் மட்டும் வருகின்றனர்,’ என்றார்.

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி பற்றிய தற்புகழ்ச்சியை மறைமுகமாக சுட்டிக் காட்டும் போது, ‘அரசாங்கம் ‘பொருளாதர யுத்தம்’ மற்றும் ‘தேசத்தினைக் கட்டியெழுப்புதல்’ பற்றி வெறும் காட்சிக்காகப் பேசும் அதேவேளை, இங்கு எங்களை பட்டினியுடன் கூடாரத்துக்குள் வைத்திருக்கின்றது,’ என அவர் மேலும் கூறினார்

நன்றி  புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *