பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…

மூலம்சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Sajeewani Kasthoori Arachi

கவிஞர் குறித்து…

இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரி ஆரச்சி, ஒரு சட்டத்தரணியாவார். இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’,  ‘Ahasa thawamath anduruya’ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. இரண்டும் இலங்கையில் விருதுகள் பெற்றுள்ளன.

 நானா?

 ஓமோம்

 இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்

கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு

 

ஐயோ ஓம்

எழுத்துக்களையும் வாசிக்க முடியும்

பாண் தேயிலை சீனி சுற்றித் தரும்

தாள் துண்டுகளை வாசித்தே

நாட்டுநடப்புகளும்

கொஞ்சமேனும் புரிகிறது

உபகாரப் பணம்பெறும் படிவங்கள்

கிராமசேவகர் தாளெல்லாம்

பூரணப்படுத்துவது நான்தான்

 

ஆங்கிலம்….?

 இல்லை ஐயா,

 

இங்கு ஆசிரியர்கள் இல்லையே

முழுப் பள்ளிக்கூடத்துக்குமே

இருவர்தான் இருக்கிறார்கள்

 அரச தேர்வோ?

ஐயோ

அது மிகக் கடினமாம்

ஆசிரியர்கள் இல்லையே

 

கற்பிக்கவில்லை எங்களுக்கு

விஞ்ஞானம்

கணிதம்

அத்தோடு மொழியையேனும்

 சமயமா?

 

சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை

மட்டுமே தெரியும்

 

நன்றாகப் படிக்க வேண்டுமா?

 ஐயோ இல்லை ஐயா…

 

வீண் கனவுகளெதற்கு?

எழுதுவினைஞர்

ஆசிரியர்

பதவிகளை வகிக்க

எண்ணிப் பார்க்கவும் முடியாது எம்மால்

குறைந்தது

அட்டெண்டண்ட் வேலையாவது எடுக்கமுடியாது

ஆறு பாடமாவது சித்தியடையாமல்

 

இந்தக் கொஞ்ச காலத்தையும்

இப்படியே கடத்திக் கொண்டு போய்

*கார்மண்டுக்காவது போக வேண்டும்

காமண்டிலிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும்

அனுப்புகிறார்களாமே

அப்படியாவது போக முடியுமென்றால்

கொஞ்சமாவது

தலை தூக்க இயலுமாகும்

 

பொய்க் கனவுகளெதற்கு? 

இந்தக் கொஞ்ச காலத்தையும்

இப்படியே கடத்திக் கொண்டு போய்

கார்மண்டுக்காவது போகவேண்டும்

 

* கார்மண்ட் – ஆடை தயாரிப்பு நிலையம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *