அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும்

“வேதி”யின் (மலையகம்) நான்கு கவிதைகள்

அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும்

“ சங்கீத”  இங்கிதமறியா
கிராமத்து தாயின் அவரோகணம் – என்
நரம்பு மண்டலத்துள் நுழைந்து
அதிர்விக்கிறது.

ஒழுகும் கூரையின் கீழமர்ந்து
மகனை மடியிலிட்டு
அழுதபடி பாடுகிறாள்.
அழுதகுழந்தையின் குரல் கேட்டு வாரா
மதுரை மீனாட்சியும்,
மாத்தளை முத்துமாரியும்
பாடல் கேட்டு மகிழ்கிறார்கள்.
மாமன்மார் சீர்வரிசை பற்றியும்
ஏழைகளின் கைக்கெட்டா கோட்டைகள் பற்றியும்;;….
வெற்றுக் கனவென தெரிந்தும் தன்
தாய்வழி ராகத்தை நீட்டுகிறாள்.
வம்சத்தின் மாவீரம் பற்றியும்
விளைச்சலால் சரிந்த கழனி பற்றியும்
குழந்தையிடம் கதைகதையாய்…. பாடுகிறாள்.

கண்ணீருக்கு காரணம்…
எந்த பூ
மொட்டால் யார் அடித்திருப்பார் என்ற வினாக்களோடும்
தெரியும் காரணம் மறைத்து
பொய் புனைந்து மயங்குவிக்கிறாள்
உறங்கிப் போகிறது குழந்தை…
எனக்கும் தெரியும்
பால்வற்றிய தாயின் மடியில்
பசியால் அழுத களைப்பில்தான்

குழந்தை உறங்கிபோன சேதி.

******
புயலை எதிர்த்தல்

கூடை சுமைதனிலே நாடே நிமிர்ந்ததடி – நின்றன்
கூன் விழுந்த வாழ்க்கையது யார் வந்தும் நிமிரந்;ததோடி?
மாமலை ஏறிச் செல்வாய் மலையென நிமிர்ந்தே நிற்பாய்
மலை நிகர் உறுதிகண்டு தலைவர்கள் குருதி கேட்பார்.

தலையினை அழுத்தும் கயிறு’தலை யெழுத்தினை’ அழித்துப்போக
விலையிலா வியர்வைக் கொட்டி களைப்பினில் உழன்று வாழ்ந்தாய்
உலகத்தின் உறக்கம் நீக்க உதிரத்தை ஊற்றி னாயா
உறிஞ்சுவோரின் கோப்பை களில் உரைக்கிறதே சிவப்புச் சாயம்.

ஆயாளும் புதைந ;தழிந்தாள் -உன்தாயாளும் விதைந்து போனாள்
நீயாக முளைத ;தெழுவாய்- நின்சேயாளை விளைக்கச் செய்வாயு;
புயலோடு காற்றும் நோக்கும் பொலிவிலா முகத்தை தாக்கும்
புழுதிலா திடத்தைக் கொண்டு புயலையும் எதிர்த்தேச் செல்வாய்…

*****

நாளைக்கு முன்னைய வாழ்க்கை

அகல விரிந்த குடையின் கீழிருந்து
அதிகாரம் கோலோச்சும் திடுமென பொழியும் மழை

கடசவுக்கு கூந்தழுக்குள் இராட்சதக் கோதலிட்டு
சீரின்றிக் கடக்கும் பிள்ளைச் சூறாவளி
சுழன்றடிக்கும் சாரல் நிறப்போர்வைத்தாண்டி
ஏக்கமுடை முக்த்தையும்
தேயிலைகளில் தேங்கிய நீர்
படங்கு மீறி தொடைவரையும்
நனைப்பித்து விறைப்பூட்டும்

கரங்களும் கால்களும் உறைநிலை ஜடமாகி
பின்னும் இயங்கும்
பேய் பிடித்தாடும் மரங்களிடை கூடைக்கனம் கீழிழுக்க
சவாலுடைத்து வேலிகளுடுருவி
மலையேறத் துடிப்புறும் பாதங்கள்

நனைந்த குளிரின் கொடூரம்
உலகத்துயரைத்திரட்டி மலைச்சாரலில் மேயவிடும்
இருதயக் குருதியே உறையும் நிலையில்
சுரக்கும் வியர்வையின் அடர்த்திக்கு நிகரில்லா வேதனம்
ஏதிர்பொழுதுகளை பட்டினியாக்கும்.

உருவிலா கனவிற்காக மீளவும் நகரத்தொடங்கும்
நாளைக்கு முன்னைய வாழ்க்கை.

****

வலிமைகள் நிமிரும்

செத்துப் புதைந்துபோன நாட்களிலெல்வாம்
எத்தனை செறிவான நம்பிக்கைகள் என்னில்

உள்ளங்கைகள் கோர்த்து – என்
பால்வெள்ளை விழிகளுக்குள்
புதைந்து நீ உதிர்த்த மலட்டு பாராட்டுக்களின்
உள்ளீடின்மையை நான் உணராதிருந்தமை
உனது பழமான பலம்தான்.

ஏத்தனை ஆற்றல்கள் துடிப்பு ஈர்ப்பு
பதக்கங்கள் சான்றிதழ்கள் என நீளும் பட்டியலை
இரும்பு நிகர் விசுவாசத்தோடுதானே
எடுத்து வந்தேன்

உன் கயிற்றுக்குள் விழுந்;த சில
கடிகார காலத்திற்குள் ஒரு பித்தனாய் நீ
மாறிப்போனதெப்படி?
அரைவயிற்றுக் கஞ்சோடு
கல்லுடைக்கச் செல்லும் என்
வலதிடையில் அமர்ந்தவளும்
இடக்கை பிடித்து நடக்கும்
இன்னொரு மைந்தனும்
அழுக்குச் சேலை மாராப்பில்
பத்திரமான இறுக்கத்தில் முடிச்சிட்டு வைத்திருக்கும்
என் இலட்சியத்தை நிமிர்த்துவர்.

மார்புவற்றிய நாட்களிலும் கற்பாறைக் காட்டி
வலிமையுட்டுகிறேன்
நிச்சயம் நாளை நானும் என் வலிமைகளும்
முழுதாய் நிமிர்வோம்
அன்று நீ மட்டும்
நீமட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *