ஓட்டிச உலகில் நானும்… ஆனந்தராணி பாலேந்திரா(லண்டன்)

மைதிலி றெஜினோல்ட்டின் தன் வரலாறு

09.3.2024 அன்று லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடாத்திய பெண்கள் சந்திப்பில் இந்நூல் பற்றிய அறிமுகத்தை ஆனந்தராணி அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

ஓட்டிச உலகில் நானும் – நூல் விமர்சனம்

ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல சுவாராஸ்யமான சம்பவங்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகள், சங்கடமானவை, சவாலானவை, நெகிழ்ச்சியான தருணங்கள் என்று நிறையவே இருக்கும். மகிழ்ச்சியான விடயங்களை மனந்திறந்து பகிரும் நாம், நாங்கள் எதிர் நோக்கும் கஸ்டங்கள், சவால்கள் நோய்கள் பற்றிப் பகிரத் தயங்குகிறோம். சமூகம் பற்றிய ஒரு அச்சம் உண்டு. பேச வேண்டிய விடயங்கள் பேசாப் பொருளாக இருக்கின்றன. இப்போதுதான் மிக மெதுவாக ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையான இப்போது 20 வயதாகிவிட்ட மகன் றினோஷின் உலகில் தானும் நுழைந்து தானும் கணவர் றெஜியும் எதிர்நோக்கிய பிரச்சினைகள், கஸ்டங்கள், சவால்கள், மகனின் வளர்ச்சிப் படிமங்கள், சாதனைகளை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடியே தந்து இப்படியான சிறப்புப் பிள்ளைகளின் பெற்றோர் குடும்பத்தினர் மட்டுமல்லாது இது பற்றிய புரிதல் இல்லாதவர்களும் புரியும் படியாக எழுத்து வடிவில் தந்திருக்கின்றார் சுவிற்சர்லாந்தில் வாழும் மைதிலி றெஜினோல்ட். அவரின் இந்த முன்மாதிரியான முயற்சிக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி நூலுக்கு வருவோம்.
ஆரம்ப காலங்களில் ஓட்டிசம் பற்றிய புரிதலும் அதைப் பெறுவதற்கான வழிகளும் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் நீண்ட கால உணர்வுப் போராட்டங்களின் ஊடாக தனிப்பட்ட சவால்களை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியைப் பெற்றுவிட்டேன். என்று ஆரம்பித்து ஒரு கதை சொல்லல் பாணியில் “ஓட்டிச உலகில் நானும்” என்ற இந்த நூலை மைதிலி எழுதியிருக்கிறார். நல்ல சரளமான எழுத்து நடையில் எழுதப்பட்ட இந்நூல் எல்லோராலும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் இருக்கிறது. ஒரு நாவல் விரிகிறது. எதுவுமே சொந்த அனுபவத்தினூடாக வரும்போது அதற்கு ஒரு கனதி இருக்கிறது. எனவே மைதிலியின் இந்த நூல் பலரையும் வாசிக்கத் தூண்டும் என நான் நினைக்கிறேன்.

ஓட்டிசம் என்பது மனிதரில் உள்ள பல வகையான தன்மைகளில் ஒருவகைத் தன்மையாகும். அதாவது ஒரு குணாதிசயம். தம்முள் தோன்றும் கோபம், கவலை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை எம்மைப் போன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல வெளிப்படுத்த முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள செய்திப் பரிவர்த்தனை மையம் சீரற்று இயங்குதலே இதற்குக் காரணம் என ஓட்டிச உண்மையை வெளிப்படுத்துகிறார் மைதிலி.;
ஓட்டிசப் பிள்ளைகளின் உடல் தோற்றம் சாதாரண பிள்ளைகளைப் போல இருப்பதனால் அவர்களின் நடவடிக்கைகள் வேறாக இருக்கும் போது அவர்களைப் புரிந்து கொள்வது பல நேரங்களில் பெற்றார், குடும்பத்தவர் உட்பட பலருக்கும் மிகக் கடினமாக இருக்கும் என்று கூறும் மைதிலி இந்தப் புத்தகத்தின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வினை எம் மத்தியில் கொண்டு சேர்க்கிறார்.


இந்த நாட்டிலை ஒரு உதவியும் இல்லாமல் பிள்ளையளை வளக்கிறது எவ்வளவு கஸ்டம் என்று நாம் புலம்பியிருக்கிறோம். ஓட்டிசக் குழந்தையின் பெற்றோர் என்ற வகையில் மைதிலியும் அவர் கணவர் றெஜியும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் திணறிய சம்பவங்கள் மனதை நெருடுகின்றன. சுவிற்சர்லாந்தில் ஒரு சின்னஞ் சிறிய கிராமம் ஒன்றில் ஒரு தமிழர்களுமே இல்லாத இடத்தில் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். மொழிப் பிரச்சினை வேறு.
ஒரே மாடிக் கட்டடத்தில் வசித்த அயலவர்களின் அழுத்தங்கள், எமது சமூகத்தினரின் புரியாத தன்மை, ஏளனங்கள், எனப் பலவற்றைச் சந்தித்திருக்கிறார்கள். ஆசையாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் மகனை இருத்தி வைக்க முடியாமல் அவர் பின்னால் ஓடித் திரியும்போது ஏன் அங்கையும் இங்கையும் ஆடித் திரியிறியள்? ஒரு இடத்திலை ஒழுங்கா இருங்கோவன் என்ற பேச்சு. ஏன் உது ஒரு மாதிரி இருக்குது? என்ற கேள்வி. மைதிலியும் றெஜியும் தமது மனதிலும் உடலிலும் மிக வலுவோடு இவற்றையெல்லாம் கடந்திருக்கிறார்கள் என்பதை இந்நூலை வாசிக்கும்போது அறிய முடிகிறது. அவர்களின் உறுதியை நான் மிகவும் மெச்சுகிறேன்.


ஓட்டிசம் என்பது Mild, moderate, severe என்று ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது. 30 வருடங்களுக்கு மேலாக லண்டனில் சிறுவர் நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்ட போது ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சில பிள்ளைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு Mild symptoms தான். றினோஷின் தீவிரமான நோய்க்கூறு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அறியும்போது அவரின் பெற்றோரின் பொறுமை, விடாமுயற்சி, நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக மகன்மேல் இருக்கும் மாறாத பாசம் தெரிகிறது. அவர்களும் அவ்வப்போது நிறையவே துவண்டு போயிருக்கிறார்கள். மைதிலி கூறுவது போல தோற்றுப் போய்விடுவோம் என்று முயற்சி செய்யாமல் இருக்கிறதைவிட, முயற்சி செய்து தோற்றுப் போறது எவ்வளவோ சிறந்தது. ஏனெண்டால் ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் நாங்கள் ஒவ்வொரு பாடத்தைப் படிக்கிறம். அதே எங்களுக்கு மகா வெற்றிதான். நிச்சயமாக அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிதான் பெற்றிருக்கிறார்கள்.

ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஆபத்து புரிவதில்லை. றினோஷிக்கு நெருப்புச் சுவாலை மீது ஒரு தீவிர ஆர்வம். அதனால் தனது வீட்டில் மட்டுமல்ல, அவர் வேறு சில வீடுகளில்கூட நெருப்பைப் பற்றவைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது அவரது 16ஆவது வயது வரை தொடர்ந்திருக்கிறது. இதனால் வீடு மாறவேண்டிய சூழ்நிலைகளும் வந்துள்ளன. றினோஷை விளங்கிக்கொண்ட ஒரு சில நண்பர்கள் வீடுகளுக்கு மட்டும்தான் போக முடிந்திருக்கிறது. றினோஷ் பல தடவைகள் காணாமல் போயுள்ளார். கண்ணுக்குள் எண்ணையை விட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அவர் ஏதோ ஒருவிதமா வெளியில் போய்விடுகிறார். இவர்களின் வீட்டின் கதவு யன்னல் எல்லாம் பாதுகாப்பாக பூட்டிய நிலையில் றினோஷ் காணாமல் போய்விட்டார். மைதிலி ஓடி ஓடித் தேடாத இடமில்லை. வேலையால் வீடு திரும்பிய பக்கத்து வீட்டுப் பெண்மணி இவருடன் சேர்ந்து றினோஷைத் தேடிவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவக்கு தன் கண்களை நம்பமுடியவில்லை. றினோஷ் சோபாவில் இருந்து ஜஸ்கிறீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மைதிலிக்கும் அந்தப் பெண்மணிக்கும் இவர் எப்படி வீட்டுக்குள் வந்தார் என்று ஒரே குழப்பம். பிறகுதான் நடந்தது தெரிந்தது. தன் வீட்டு பாத்றூமில் சிறிது திறந்திருந்த சிறிய யன்னலில் ஏதோ விதமாக ஏறி வெளியே இறங்கி யன்னல் விளிம்புப் பலகையால் அவதானமாக நடந்து பக்கத்து பாத்றூம் யன்னலால் உள் இறங்கி அந்த வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இது முதலாம் மாடி வீட்டில் நடந்திருக்கிறது.


முதல்முறை தலைமயிர் வெட்ட முடி ஒப்பனையாளரிடம் கூட்டிப்போனபோது றினோஷிக்கு தலையை ஆட்டாமல் இருக்க முடியாமல் போனதில் வீட்டிற்கு வந்து தானே வெட்ட ஆரம்பித்து பட்ட கஸ்டத்தை நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இவ்வாறு றினோஷிம் பெற்ற பயிற்சியினால் முடி வெட்டும் கலையில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்கிறார் மைதிலி றினோஷிக்கு வெளியில் செல்வது பிடிக்கும், அதுவும் இயற்கைக் காட்சிகளைப் பார்க்க விருப்பம் என்று தெரிந்து மைதிலி றெஜி இருவரும் தமக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் எல்லாம் அவரை வெளியில் கூட்டிச் செல்வதை வழமையாகக் கொண்டார்கள். படிப்படியாக அவருக்கு சைக்கிள் ஓடப் பழக்கினார்கள். சிறப்புப் பாடசாலையில் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றில்லாமல் அவர்கள் எப்படி றினோஷ் உடன் தொடர்பாடல் கொள்கிறார்கள் என்பதை அறிந்து வீட்டிலும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

அவருக்கு குளிக்க விருப்பமாக இருக்கும்போது குளியல் படம் உள்ள அட்டையைக் கொண்டு வந்து காட்டுவது போன்ற பல விடயங்களை அவர் செய்ய ஊக்குவித்தார்கள். இரண்டாவது பிள்ளை அனோஷ் பிறந்த பின்னர் மைதிலி றெஜி இருவருக்கும் வேலைப்பளு கூடியது. அனோஷ் சாதாரண குழந்தையாக இருந்ததால் றினோஷினில் கூடிய கவனம் செலுத்தும்போது தாம் பாரபட்சமாக நடக்கிறோமோ என்ற குற்ற உணர்வும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. அனோஷ+ம் ஆரம்பத்தில் பெற்றோர் தன்னில் அக்கறை இல்லை என வருத்தப்பட்டிருக்கிறார். பின்னர் அண்ணாவின் நிலை அறிந்து சமாதானமாகியிருக்கிறார். ஆரம்பத்தில் டொச் பாஷை தெரியாமல் தடுமாறிய மைதிலி தான் இருந்த apartment இல் இருந்த வயதான சுவிஸ் பெண்ணிடம் முதலில் கொஞ்சம் பாஷை கற்றுக் கொண்டார். இரண்டாவது மகனின் பாடசாலையில் வகுப்பறை உதவியாளராகி தனது மொழி அறிவை விருத்தி செய்து கொண்டார். மொழி மட்டுமல்லாது ஏனைய பல விடயங்களையும் நான் அங்கு கற்றுக் கொண்டதால் மன முதிர்ச்சி அடைந்தேன் என அவர் எழுதுகிறார். பொதுப் போக்குவரத்து சாதனைங்களில் றினோஷை கூட்டிப்போய் பட்ட கஸ்டங்களால் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டு அவரை நூலகம், நீச்சல் குளம் என பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

கொழும்பில் acupuncture சிகிச்சைக்குப் பின் றினோஷ் 11 வயதில் முதன் முதலாக அம்மா என்று அழைத்தபோது அவர்கள் அடைந்த ஆனந்தம், பின்னர் அவருக்கு சிறு சிறு சொற்களை வீட்டிலும் பாடசாலையிலுமாக பழக்கியது என அவர்களின் அர்ப்பணிப்பு என்னை நெகிழ வைக்கிறது. றினோஷ் 18 வயதை அடைந்தபோது அவர் வயது வந்தோர் பிரிவில் அடங்குவதால் அவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட இடத்தில் உதவியாளருடன் வாழ சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவர்களோடு மிக உறுதியாக நின்று அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெற்றோராகிய தாமே உதவியாளராக இருந்து வருவது அவர்களின் தொடர்ந்த விடாமுயற்சியையும் உறுதியையும் காட்டுகிறது. இப்போது றினோஷ+க்கு 20 வயது. நெருப்புடனான விளையாட்டு குறைந்திருக்கிறது. தனக்கான உணவைத் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். புதியவைகளை ஓரளவு முயற்சி செய்து பாhக்கிறார். மரவேலை, கைவேலை, வர்ணம் தீட்டுதல், நடைப்பயணம், விமானத்தில் பயணிப்பது, கணனியில் வேலை செய்வது என ஆர்வமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கணிதத்தில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். கடைசியாக நிகழ்ந்த கூட்டத்தில் அவரது சிறப்பு ஆசிரியர் கூறியது றினோஷினால் இப்போது பத்தாயிரம் எண்ணிக்கை வரையிலான பெரிய கணக்கை ஒரு வினாடியில் செய்து முடித்துவிட முடியும்,என்பது.

ஓட்டிச உலகில் நானும் என்ற இந்த நூல் 412 பக்கங்களைக் கொண்டது. சிறு சிறு அத்தியாயங்கள், சின்னச் சின்னப் பந்திகள், பெரிய எழுத்து என்பன வாசிப்பை மிக இலகுவாக்குகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கட புத்தகங்கள் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் அட்டை வடிவமைப்பை றினோஷின் தம்பி அனோஷ் றெஜினோல்ட் செய்திருக்கிறார். ஓட்டிசம் பற்றி ஒரு ஓட்டிசக் குழந்தையின் தாயாக தனது அனுபவங்களைப் பேசும் மைதிலியின் இந்த நூல் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *