பாரிஸ். டிசம்பர் 2018″ பிரசாந்தி

ஒரு நாவல் எழுதும் போது கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி ‘இல்லை’ என்று சொல்லப்பழகுவது. இல்லை, இன்று ஒரு வைன் குடிக்க என்னால் வர இயலாது. இல்லை, உன் குழந்தையை இன்று என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு மதிய உணவுக்கு, காலாற ஒரு நடைக்கு, ஒரு நேர்காணலுக்கு அல்லது ஒரு சினிமாவுக்கு என்னால் வர முடியாது.இந்த “இல்லை”கள் அதிகரிக்கும் போது, அழைப்புகளும் மெல்ல மெல்ல அரிதாகும். தொலைபேசி அடிக்கடி மின்னாது. மின்னஞ்சல் பெட்டியிலும் வெறுமனே விளம்பரங்கள் மட்டும் இருக்கும். “இல்லை” சொல்வதென்பது மனிதர்களில் இருந்து விலகி வாழ்வது, ஒரு வித வீம்புத்தன்மையை வெளிக்காட்டுவது, எதற்கும் இணங்காதிருப்பது, தன்னைச் சுற்றி மறுப்புகளாலான ஒரு பெருஞ்சுவர் எழுப்பி, அந்தச் சுவரில் மனித வாழ்வின் அனைத்து மயக்கங்களும் சுக்குநூறாவதைக் காண்பது.

Roth இலிருந்து Stevenson வரை, Hemmingway உட்பட மிக எளிதாக சொன்ன ஒன்று தான்: “ஓர் எழுத்தாளரின் மிகப்பெரிய எதிரி, தொலைபேசி மற்றும் விருந்தாளிகள். மேலும், வாழ்வின் ஒரேயொரு அடிவானம் எது எனும் கேள்விக்கு ‘இலக்கியம் அல்லது எழுத்து’ பதிலாகும் போது, தனிமை என்பது தானாகவே எமை வந்து சேரக்கூடியதொன்று.” சில மாதங்களாக நான் என்னை ஒரு நிலைக்குக் கட்டாயப்படுத்துகிறேன்: அது, தனிமைக்கான சூழல்களை உருவாக்குவது. எனது குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றதும், மாலை வரை எனது அலுவலக அறைக்குள் என்னை தாளிட்டுக் கொள்கிறேன். நீள அகலத்தில் எனது அறை 3×4 மீட்டர். வலது புற சுவரின் முடிவில் ஒரு ஜன்னல். உணவகங்களின் வித விதமான மணங்கள் அங்கிருந்து மேலெழும். கதவுக்கு எதிரே, அகலமான ஒரு மரப்பலகை – அதுவே நான் எழுதும் மேசை. அருகில், வரலாற்று நூல்கள் மற்றும் கத்தரித்த பத்திரிகைத் தாள்கள். சுவரெங்கும் வித வித வண்ணங்களில் “post -its” ஒட்டப்பட்டு. ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட வருடத்தைக் குறிக்கும். ரோசாப்பூ வண்ணம் – 1953 ஐ குறிக்கும், மஞ்சள் – 1954 , பச்சை – 1955 . வேறு சிலவற்றில், ஒரு கதைமாந்தரின் பெயர், ஓர் எண்ணம், ஒரு காட்சியின் விபரங்கள்.உயிர்ப்பான நாள் ஒன்றில் நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் தலைப்பிடாத நாவலுக்கான நிகழ்வுகளின் காலவரிசையைக் குறித்துக் கொண்டேன்.

Meknes எனும் சிறு நகரத்தில் 1945 ஆம் ஆண்டிற்கும் Morokkan பேரரசின் சுதந்திரத்திற்கும் உட்பட்ட காலத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை அது. 1952 ஆம் ஆண்டின் நகர வரைபடம் நிலத்தில் விரிக்கப்பட்டு. அதில் அரேபிய மதீனா, யூத மெல்லா மற்றும் புதிய ஐரோப்பிய நகரத்தின் எல்லைகள் யாவையும் மிகத் தெளிவாகக் காணலாம்.இன்று உயிர்ப்பான நாள் அல்ல. ஒரு அத்தியாயம் எழுதி, உடனே அதனை நீக்கி விட்டேன். நண்பன் ஒருவன் சொன்னது நினைவில் வருகின்றது. அது நிஜமா என்று தெரியவில்லை, ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Anna Karenina எழுதும் போது Leo Tolstoi ஒரு படைப்பு நெருக்கடிக்குள் ஆளானார். வாரக்கணக்காக ஒரு வரி எழுதவில்லை. தாமதமாகிக்கொண்டே போகும் பிரதியும், நீள் மௌனமும், அனுப்பிய கடிதங்களுக்கும் பதில் அளிக்காத Tolstoi ஐ நேரில் காணச் சென்ற பதிப்பாளரை வரவேற்ற Tolstoi , அவரின் பிரதி எவ்வாறு நகர்கின்றது எனும் கேள்விக்கு: “Anna Karenina சென்றுவிட்டாள்.

அவள் மீண்டும் வரக் காத்திருக்கிறேன்” என்று Tolstoi பதிலளித்து அனுப்பி விட்டார்.இது, அந்த ரஷ்ஷிய மேதையுடன் என்னை ஒப்பிட்டுப்பார்ப்பதோ அல்லது அவரின் மகத்தான படைப்புகளுடன் எனது நாவலை அருகில் வைத்துப் பார்ப்பதோ இல்லை. மாறாக, அந்த வாக்கியம் என்னைத் தொடர்ந்து துரத்துகின்றது: “Anna Karenina சென்றுவிட்டாள்.” சில பொழுதுகளில், நானும் உணர்வதுண்டு, எனது கதையின் மாந்தர்கள் வேறு வாழ்வு வாழ எனை விட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு என்று தோன்றுதோ, அன்று மீண்டும் வருவார்கள். எனது மனமுறிவும், ஏக்கமும், இரைஞ்சலும், ஏன் அவர்கள் மேலான என் காதலும் கூட அவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. அவர்கள் செல்வார்கள், வருவார்கள்.

அவர்கள் மீண்டும் வர, நான் காத்திருக்க வேண்டும். அவர்கள் மீண்டும் வரும் நொடி, நாட்கள் பறத்தலில் விரைந்தோடும். அப்போது நதியென ஓடும் எனது மனதின் ஓட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்துக்கிடக்கும் எனது விரல்கள். கயிற்றின் மேல் ஆடும் கலைஞரை ஒத்தது அந்தப் பொழுது – ஒரு நொடி கீழே பார்த்தால் முடிந்து விடும் ஆட்டமும் அனைத்தும். அது போலத்தான். அவர்கள் மீண்டும் என்னிடம் வரும் போது, என் வாழ்வு முழுதும் அவர்களையே ஆட்கொள்ளும். வெளியில் ஓர் உலகமா? யார் சொன்னார் அது உண்டு என்று!”அன்றாடத்தின் இறுக்கங்கள் எனைத் தின்னும் போது, “எழுது, எழுது” என்று மனது உந்தித் தவித்தாலும், வாசிப்பில் திளைத்திருக்கும் காலம் எனது. இருந்தும், மேலே எழுதிய வரிகளை உடனே தமிழில் மொழிபெயர்க்க வைத்த இந்தப் பொழுதை, இந்த ஞாயிறின் இறுதிக் கோடைகால மஞ்சள் அந்தியை, இன்னும் இன்னும் நேசிக்கிறேன். அந்த வரிகள் Leila Slimani யின் புதிதாக வெளிவந்த „Der Duft der Blumen bei Nacht“ படைப்பில் இருந்து. அந்த எழுத்தின் வசீகரம், இனி வர இருக்கும் ஒளி குறைந்த காலத்தின் எனக்கேயான ஒளியாகும்!

Thanks

https://www.facebook.com/story.php?story_fbid=2401359116713376&id=100005179327173&post_id=100005179327173_2401359116713376

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *