தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்

உமாசக்தி இந்தியா

abarnasen1 சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள்

சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள். அதிலும் வெற்றி பெற்ற இயக்குனராக வேண்டுமென்றால் அவர்கள் குடும்ப வாழ்க்கை உட்பட. தனக்கான எல்லா விஷயங்களை இழக்க நேரிடும். ஆண்களின் அசைக்க முடியாத கோட்டையான சினிமாவில் நின்று ஜெயிப்பதற்கு மிகப் பெரிய திறமை மட்டுமின்றி அயராத உழைப்பும் மனத் தெளிவும், திடமும் தேவையிருக்கிறது. புகழின் உச்சியைத் தொடும் பல கலைஞர்களின் சொந்த வாழ்க்கையென்பது பெரும் சோகமாகவே முடிந்து விடுகிறது. ஆனால் அதையும் மீறிய அவர்களது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர்களை உயர உயர பறக்க வைக்கிறது.

இத்தொடரில் இந்திய சினிமாவில் தங்களின் இருப்பை ஆழமாக பதிய வைத்த சில பெண் இயக்குனர்களைப் பற்றிய விபரங்களையும், அவர்கள் இயக்கியிருக்கும் திரைப்படங்கள் குறித்த பார்வையும் வைக்கிறோம்.

மொழி – வங்காளம்
இயக்குனர் – திருமதி அபர்ணா சென்

  வங்காள மொழியில் பல திரைப்படங்களை இயக்குயிருக்கும் அபர்ணா சென் பன்முகத் தன்மை உடையவர். நாடகம் மற்றும் திரை நடிகை, திரை எழுத்தாளர், திரை இயக்குனர். பெங்காலி பத்திரிகையான சனந்தாவில் அவர் ஆசிரியையாக பல வருடங்கள் இருந்தார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் தன் முத்திரையை ஆழமாகப் பதித்தார்.

 அபர்ணா சென் கல்கத்தாவில் 1945 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை சிதாநந்த தாஸ்குப்தா திரை விமர்சகர், தயாரிப்பாளர். கல்கத்தாவில் மாடர்ன் பள்ளியிலும் ப்ரஸிடென்ஸி கல்லூரியிலும் படித்தார். இரண்டு முறை மணமாகி விவாகரத்து பெற்ற அபர்ணா சென்னுக்கு கமலினி, கொங்கனா சென் (இவர் பிரபல நடிகை) இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

 தன்னுடைய பதினாறாவது வயதில் சத்தியஜித் ரே இயக்கிய ‘தீன் கன்யா’ எனும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கிய இவர் தன்னுடைய கனவு சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தார். பல நாடக மேடைகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

 

abarnasen2

1981-ல் தனது முதல் திரைப்படமான ’36 செளரிங்கி லேன்’னை இயக்கினார். அது அவருக்கு மத்திய அரசு விருதை மட்டுமின்றி உலக அளவில் அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது. அதன்பின் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அவர் இயக்கிய படங்கள் பெரும் புகழ் அடைந்தன. அவர் இயக்கிய படங்கள் ஆழமாக உணர்வுகளைத் தீண்டும் கவித்துவமான காட்சியமைப்புகள் கொண்டவை. அவருடைய படங்களில் பாடல்கள் இருக்காது ஆனால் இசை மனதை ஊடுருவும். டூயட் பாடும் கதாபாத்திரங்களை இவர் படங்களில் காண முடியாது. யதார்த்தையை மீறிய சிறு விஷயமும் அவரின் திரைக்கண்ணில் பார்க்க முடியாது. சில கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும், அவர் இயக்கியுள்ள படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் மாற்று சினிமாவை நோக்கி தன் அழகிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று முறை தேசிய விருதையும் உலகத் திரைவிழாக்களின் அரங்குகளில் எட்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்

 பெங்காலி இலக்கியங்கள் மீது அபர்ணா சென்னிற்கு பெரும் மதிப்பு இருக்கிறது. அவருடைய   திரைப்படங்களுக்கான கதையை அங்கிருந்தே அவர் பெறுகிறார். தன்னை பாதித்த அற்புதமான கதைகளை திரைமொழியாக்கம் செய்கிறார்.

இயக்குனராக அவர் பணியாற்றிய படங்கள்.

 

1. ஐடிஐ மிருணாளினி (தற்போது படப்பிடிப்பில்)
2. தி ஜாப்பனிஸ் வைஃப் (2010)
3. மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் (2002)
4. பரோமிதர் ஏக் தின் (2000)
5. வாட் தி ஸீ செட் (1995)
6. சதி (1989)
7. பிக்னிக் (1989)
8. பரோமா (1984)
9. 36 செளரிங்கீ லேன் (1981)
  abarnasen3

 அபர்ணா சென்னின் சமீத்திய திரைப்படமான ‘தி ஜாப்பனீஸ் வைஃப்’ப் உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டிச் செல்லும் அற்புதமான ஒரு திரைப்படம். ஒவ்வொரு காட்சியும் கவிதையைப் போல அழகாக திரையாக்கம் செய்துள்ளார்

abarnasen6

சுற்றிலும் ஆறு சூழப்பட்ட சுந்தர்பன் எனும் குக்கிராமத்தில் ஸ்நேகமாய் கணக்கு வாத்தியாராக வேலை செய்கிறான். மிகச் சிறிய வயதில் தாய் தந்தையை தீ விபத்தில் இழந்த அவனை வளர்த்து ஆளாக்கியது அவனது மாமி.

ஸ்நேகமாய் தற்செயலாக மியாகி எனும் ஜப்பானிய பெண்ணிடம் பேனா நட்பு கொள்கிறான். ஜப்பானுக்கும் சுந்தர்பனுக்கும் அறிமுக கடிதத்தில் தொடங்கி நூற்றுக் கணக்கில் கடிதப் போக்குவரத்து நிகழ்கிறது. மியாகி வயதான நோயுற்ற தன் தாயை பராமரிக்க வீட்டிலிருந்தபடியே சிறிய கடையொன்றை நடத்தி வருகிறாள்.

ஸ்நேகமாயைப் போலவே மியாகியும் கூச்ச சுபாவம் உடையவள். எழுத்துக்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது. அரை குறை ஆங்கிலத்தில் எழுதினாலும் ஆத்மாவிலிருந்து எழுதப்பட்ட அவ்வாக்கியங்கள் ஒருவரை மற்றொருவர் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இருவரும் வெகு விரைவில் மன நெருக்கம் அடையவே ஒரு கட்டத்தில் ஸ்நேகமாயின் அத்தை தன் தோழியின் மகளான சந்தியாவை மணம் முடிக்குமாறு சொல்கிறாள். அவனால் சந்தியாவின் முகத்தை ஏறிட்டுக் கூட பார்க்க முடியவில்லை. அவனது மனதில் மியாகி அனுப்பி வைத்திருந்த புகைப்படம் ஆழமாக பதிந்திருந்தது. இதைப்பற்றி மியாகிக்கு கடிதம் எழுதி அனுப்பியதற்கு பதிலாக அவள் இருவரும் மணந்து கொள்ளலாம் என்கிறாள். கடிதங்கள் மூலமாகவே அவர்கள் திருமணம் நடக்கிறது. தன் பெயர் பொறித்த வெள்ளி மோதிரத்தை மியாகி அவனுக்கு அனுப்பஇ குங்குமத்தையும்இ திருமண அடையாளமாக கைவளையல்களையும் ஸ்நேகமாய் அவளுக்கு அனுப்புகிறான்.

abarnasen4

 

வெகு தூரத்தில் இருந்தாலும் ஒருவர் மற்றவரின் மீது செலுத்தும் அன்பு குறையாமல் திருமண நாளிற்கு பரிசுகளை அனுப்பி மகிழ்கிறார்கள். மியாகியால் இந்தியா வரமுடியாத காரணம் மரணத்துடன் போராடும் தாய்இ ஸ்நேகமாயிக்கு ஜப்பான் செல்லவே முடியாத துயரின் காரணம் ஏழ்மை. அவனுடைய சம்பளத்தில் இந்திய எல்லையைத் தாண்டுவது என்பது கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்று.

இவர்களின் விசித்திர திருமணம் பற்றி ஊரில் பல கதைகள் இருந்தாலும்இ மிகவும் அமைதியான அந்த ஊர் வாத்தியாரின் மீது அவர்களுக்கும் அன்பும் மதிப்பும் இருந்தது. அதையும் மீறி யாரேனும் அவரைக் கிண்டல் செய்தாலும் ஸ்நேகமாய் ஒரு புன்னகையில் அதை கடந்து விடுவான். இந்நிலையில் மாமியின் தோழியின் மகளான சந்தியா விதவையாகிவிட ஆதரவு யாருமற்ற நிலையில் தன் பத்து வயது மகனுடன் இவர்கள் வீட்டில் அடைக்கலம் தேடி வருகிறாள். ஸ்நேகமாயின் அன்பை எதிர்பார்த்து அந்த வீட்டில் வேலைக்காரியைப் போல உழைக்கின்றாள். தன் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களையும் மியாகிக்கு தெரியப்படுத்தும் ஸ்நேகமாய் இதையும் சொல்கிறான். மெளனமே மியாகியின் பதிலாக இருக்கிறது. அதன்பின் மற்றொரு பெண் தன் வாழ்க்கையில் குறுக்கிடுவதை மியாகி விரும்பவில்லை என்பதை அறிந்து சந்தியாவிடமிருந்து விலகியே வாழ்கிறான். சந்தியா தன்னை அறியாமலேயே அவன் மீதான அன்பை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்கிறாள். தன் மகனிடம் ஸ்நேகமாய் அன்புடன் பழகுவதைப் பார்த்து மகிழ்கிறாள்.

இப்படியே பதினேழு ஆண்டுகள் கடந்து விடுகின்றது.
ஒரு மழை நாளில் மியாகியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள செய்தியைத் தாங்கிய கடிதம் வரவே துடித்துப் போகிறான். அவளுக்கு கான்சர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இங்கிருந்தபடி பல மருத்துவர்களை சந்தித்து அவளுடைய நோய்ப் பற்றி கேட்கிறான். நகரத்தில் இருக்கும் பெரிய மருத்துவரைப் பார்க்க கொட்டும் மழையில் கிளம்பிச் செல்கிறான். ஸ்கேன் ரிப்போர்ட்டுக்களைப் பார்த்த மருத்துவர் பிழைக்கும் சதவீதம் குறைவாகவே இருக்கிறது உடனே நோயாளியை அழைத்து வாருங்கள் என்கிறார். நேரில் பார்த்தே இல்லாத மனைவிக்கு இவ்வளவு தொலைவிலிருந்து மருத்துவம் எப்படி பார்ப்பது என அறியாமல் செய்வதறியாது அவளுக்கு போன் செய்கிறான். அது அவர்களுக்கான கடைசி உரையாடல் என்பதை அறியாமல் அவளிடம் ஆசையாகவும் ஆறுதலாகவும் பேசுகிறான். பேய் மழையில் மாட்டிக் கொண்டு ஒரு வழியாய் வீடு வந்து சேரும் ஸ்நேகமாய் கடும் காய்ச்சலில் வீழ்கிறான். சந்தியாவும் அவன் மாமியும் அவனை கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் காய்ச்சல் விடுவதாக இல்லை. நகரத்திற்கு போய் மருந்து வாங்கவும் வழியில்லாமல் சில நாள்களில் அவன் இறந்து போய்விடுகிறான். அந்தச் சிறிய குடும்பம் அவன் இழப்பால் நிலைகுலைந்து போகிறது

abarnasen5

 
சில மாதங்கள் கழித்து மொட்டை அடக்கப்பட்டு வெள்ளை சேலை அணிந்த மியாகி படகிலிருந்து இறங்கி ஸ்நேகமாயின் வீட்டை விசாரித்து வந்து சேர்கிறாள். சந்தியா அவளை எதிர்கொண்டு வீட்டினுள் அழைக்கிறாள். தன்னுடைய அன்புக் கணவன் ஸ்நேகமாயின் அறையில் அவன் வாழ்ந்த இடத்தை, அவள் அவனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருந்த மேஜையை, ஆற்ற முடியாத துயரடன் பார்க்கிறாள். மெல்லிய இசையுடன் படம் முடிகிறது.

 மனதை மிகவும் கனக்கச் செய்த இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதையைப் போல இருக்கிறது. குறிப்பாக ஸ்நேகமாய் தன் காதலிக்கு கடிதம் எழுதும் காட்சிகள். ஸ்நேகமாயியாக நடித்திருப்பவர் ராகுல் போஸ், ரைமா சென் சந்தியாவாகவும், சிகுஸா டகாகூ மியாகியாக நடித்துள்ளார்கள்.மென்மையான விஷயங்களை ரசிப்பவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு திரைவிருந்து.

(நன்றி – இவள் புதியவள் ஆகஸ்ட் இதழ்)

 

2 Comments on “தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்”

  1. சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள்……………………………….

  2. நானொரு பெண்ணிய இயக்குநரா என்று
    மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது:
    ‘நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;’

    -சாந்தால் அகர்மான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *