போரைப் பேசுதல் -கவிதா லக்சுமி (நோர்வே )

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே அழிவதை நின்று பாரக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததுண்டா?

ஒஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஓவியக்கண்காட்சி.

”ரோஜாஅரண்மனை” என்பது ஒரு ஓவியக் கண்காட்சி. இரண்டாம் உலகயுத்ததின் போது நோர்வே சந்தித்த பேரழிவுகளின், ஆக்கிரரமிப்பின் சாட்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல் ஒரு யுத்தத்தைப் பேச முயலும் ஒரு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பெருமதில்களின் உயரத்தில் போரின் அழிவுகளும், சிதைவுகளும் ஒவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. கண்காட்சியின் வடிவமைப்பே ஒரு வளிமண்டலத்தில் கோள்கள் சுழல்வது போன்ற நீள்வட்ட வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

போர்க்கால ஆக்கிரமிப்புகளில் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத மனிதர்களின் கதைகள் இங்கே ஓவியங்கள் மற்றும் எழுத்துக்கள் மூலம் மனதை துன்பப்படுத்துகின்றன. சிந்திக்கத் தூண்டுகின்றன. போர்க்காலத்தை நினைக்கவைக்கின்றன.
கதை: ஏதென்ஸ் நகரத்தின் அக்ரோபோலிஸில் பிறந்த ஒரு குட்டிப் பறவை ஷெல். வடதிசை நோக்கிப் பறந்து வந்திருக்கிறது. உலகின் பல கருத்துக்களையும், உரையாடல்களையும் செவிமடுத்து வந்ததனால், இந்த முழு உலகத்துக்குமான குடிமகனாய் தன்னை உணர்வதாகச் சொல்கிறது. தன்னை ஒரு வானியலாளர் என்றும் சொல்லிக்கொள்கிறது வடதுருவ வான்பரப்பை ஆய்ந்தறியக் கிளம்பிய ஷெல், ஒஸ்லோ நகரின் ’ரோஜாஅரண்மனை’யில் இருக்கும் நட்சத்திரத்தை வழியில் கண்டு கொண்டது. அந்நட்சத்திரத்தை ஆய்ந்தறிந்துகொள்வதற்காக இங்கேயே தங்கிவிட்டது. இப் புனைவிலிருந்தே மானுட வலிகளையும் போரையும் பேசத் தொடங்குகிறார்கள் ஓவியர்களானா வேபியோன் சண் (ஏநனஅரனெ ளுயனெ) அய்முன் சண்

காட்சியும் வடிவமும்

வானத்தில் கோள்கள் சுழலும் வடிவத்தில் பாதை அமைத்து, அதன் நெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. போகும் வழியெங்கும் பல அறைகள், அங்கெல்லாம் ஓவியங்கள். இராக்காலத்தில் பார்ப்பவர்கள் ஒளியமைப்பையும் கண்டுணரமுடியும்.

கிரேக்க தேசத்தில் இருந்து எடுத்துவந்த மனிதநேயச் சிந்தனைகளையும், சித்தாந்தங்களையும் குட்டிப் பறவையான ஷெல், பார்iவையாளர்களுக்குச் சொல்லும் வண்ணம் வழிநெடுகிலும் கூடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

போர் பற்றிய கதைகளுக்குப் பஞ்சம் உண்டோ? இரண்டாம் உலக யத்தத்தின் போதிருந்து எமது இன்றைய காலம் வரை போரின் முகங்களாக வாழ்;ந்தவர்களின் முகவோவியங்களுடன் ஆரம்பிக்கும் கண்காட்சி, மெல்லமெல்ல பலதரப்பட்ட மனிதகளுடைய, அனுபவக் கதைகளுக்குள் எம்மை நகர்த்திச் செல்கிறது.

சில கதைகள்

1941 ஆம் ஆண்டு, சோவியத்யூனினுடன் தாக்குதலுக்குச் சென்ற ஜேர்மனியர்களுக்கு எதிராகத் தனது பதினோராவது வயதிலேயே துப்பாக்கி ஏந்திய சிறுமி நீனா.

ஜேர்மனிய சிப்பாயுடன் காதல் கொண்ட ஒரு தாய்க்கு பிறந்த குழந்தை லைலா. தாய் அவரைப் பார்த்துக்கொள்ள முடியாத சூழலில் ஜேர்மனியில் உள்ள அப்பப்பா வீட்டில் வளர்கிறாள் லைலா. போர் முடிந்ததும் நோர்வே அரசு அவளை நோர்வேக்கு வரவழைத்தாலும், ஜேர்மனிய சிப்பாயின் மகளென்ற வெறுப்பின் காரணமாகத் தாயின் புதிய குடும்ப உறவுகளிடம் வரவேற்பினைப் அவளால் பெறமுடியவில்லை. வேண்டப்படாதவளாக, தாயின் அன்பு கிடைக்காதவளாக, உறவினர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கபட்டவளாக, லைலாவின் வாழ்வு பேசப்படுகிறது.

இப்படியாக..

  1. ஒரு நகரமே அழிவதை பார்த்துக்கொண்டு நிற்கும் பெண்,
  2. நாசி நிறுவனங்களுக்கு பணியாததால் கைது செய்யப்பட்ட ஆயிரம் ஆசிரியர்கள்.
  3. ஆழ்கடலில் நிறுத்தப்பட்ட நாசிக்கப்பலுக்குத் தீவைக்கச் சிறுபடகு ஓட்டிச்செல்லும் ஒரு தனிமனிதர்.
  4. மரண தண்டணைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்.
  5. உளவு பார்ப்பதற்காக நாசிப்படை அதிகாரிகள் மத்தியில் வீற்றிருக்கும் ஒரு நடிகை
  6. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சிலமாதங்களே ஆன தன் குழந்தையை அடுப்பறையில் தனியாக விட்டுச்செல்லும் பெண்

போரின் வலிகளையும், இழப்புகளையும், சமூகம் கடந்து வந்த பாதைகளையும், அத்தோடு மனித நேயத்தையும், மானுட உன்னதங்களையும் வலியுறுத்துவற்காகவுமானது இந்தக் கண்காட்சி.

இன்னும் பிறக்காத நட்சத்திரம்

கண்காட்சிப் பயணத்தின் சிகரமாக இருப்பது ஒரு நட்சத்திரம். முட்டைவடிவிலான ஒன்றின் மேல் அந்நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலக மனித நேயத்தின் குறியீடுடாக அது சித்தரிக்கப்படுகிறது.

உலகில் மனித நேயமும், மானிட விடுதலையும் இன்னும் பிறக்கவில்லை என்பதை சொல்வதற்காகவே ”இன்னும் பிறக்காத நட்சத்திரம்” என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. ஒரு விதத்தில் வேதாகமத்தில் யேசுவுடன் பிறந்த ”கடவுள் பிறந்ததைக் காட்டும்” நட்சத்திரத்தினை மறுதலிக்கும் ஒரு போக்காகவும் இதனைப் பார்க்கலாம்.

அந்நட்சத்திரத்தில் இருந்து ஒரு ஆறு ஓடுவதாகவும், அது தற்போது உறைநிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாம் உலகயுத்த ஆக்கிரமிப்பின் நினைவாக (75 ஆண்டு) வைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளிக் கண்காட்சி, ஒரு வருடகாலம் மட்டுமே காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஆரம்பிக்ப்பட்ட இக்கண்காட்சி இந்த வருடம், வைகாசி மாதம் முடிவுக்கு வருகின்றது. பணியாளர்களிடம் பேசிய போது, சில வேளைகளில் காலம் நீடிக்கப்படலாம் என்ற எண்ணம் இருப்பதாகச் சொன்னார்கள்.

இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களை பார்வையாளர்கள் வாங்கிக்கொள்ளவும் முடியும்.

போரைப் பேசுவது


ஒரு போரைப் பேசுவதென்பது இலகுவானதல்ல!

ஒரு போரை நினைவுகூருதல் எப்படி நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாகவும் இதனை நாம் பார்க்கமுடியும்.

போரைப் பேசுதல் ஒரு கலை. சிந்தனையைச் செதுக்க முடிந்தவர்களினால், காலத்தை ஊடுருவிப் பார்க்க முடிந்தவர்களினால், குறுகிய வட்டத்துள் நிற்காது பரந்த ஒரு பரப்பிற்கு எடுத்துச்செல்ல உழைப்பவர்களினால் மட்டுமே இது முடிகிறது.

. . .

ஓவியக்கண்காட்சியை அமைத்தவர்கள்: Vedmund Sand and Eimund Sand
இடம்: Frognerseteren, Oslo
காலம்: 2020, May til 2021 May
படங்கள்: Kavitha Laxmi (Mobile)

http://www.roseslottet.no

Thanks https://kavithalaxmi.com/
https://kavithalaxmi.com/2021/03/27/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/?fbclid=IwAR2NeKj7ilACXfccgh3lNIkVq9Hl7RWWpGIPJ4PbNVpn4_Wx-eh-PodtD4I
https://kavithalaxmi.com/2021/03/27/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/?fbclid=IwAR2NeKj7ilACXfccgh3lNIkVq9Hl7RWWpGIPJ4PbNVpn4_Wx-eh-PodtD4I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *