DONT LOOK UP -தேவா ஹெரொல்ட்(ஜேர்மனி )


ஆழமாக சிந்திக்க வேண்டாம்.
மேலே ஆங்கில தலைப்பு கொண்ட திரைப்படத்துக்கு அதை பார்த்தபின் இப்படி பொருள்படல் பொருந்தலாம் என கருதுகிறேன். சராசரி கதை சொல்லலிருந்து வேறுபட்ட இத்திரைப்படம் நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது தற்போதய உலகளாவிய அரசியலை பேசும் படம். ஜனநாயகஅரசு என்று சொல்லப்படுவதற்கு, சிலாகிக்கப்படுவதற்கு பின்னால் நிகழும் சம்பவங்கள் எத்தனை குரூரமாய் இருக்கின்றன என்பதை விபரிக்கிறது இத்திரைப்படம்.உண்மைகள் பரிகசிக்கப்படுகின்றன சுயநலங்கள் ஆளும்வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன.

ஒரு பெண் விண்வெளிஆராய்ச்சியாளர் தற்செயலாக பூமியை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருக்கும் பெரும் விண்வெளிக் கல்லொன்றை கண்டுபிடிக்கின்றார். தனது சக ஆராய்ச்சிகளிடம் அக்கல்லின் வலிமை பற்றி விவாதிக்கின்றார். அந்த விண்கல் உலகுடன் மோதினால் எமது பூமி அழிந்துவிடும் என்பதை விளங்கிக்கொள்ளும் ஆராய்ச்சியாளர் மூவரும் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பூமிக்கு நேரவிருக்கும் பேராபத்தை அவர் மூலம் தடுக்க வழியிருக்கலாம் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதி மாளிகைக்கு வந்து சேர்கின்றனர். எத்தனையோ சிரமங்களின் பின் அரசுஅதிபரை சந்தித்த போது அவரின் அறிவுரை: மக்களிடம் இது விடயத்தை பரப்பவேண்டாம். “இத்தோடு அவ்விடத்திலேயே விடயம் நின்றுவிடுகின்றது”. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மீடியா மூலமாக மக்களிடத்தில் தமது கண்டுபிடிப்பையும் பேராபத்தையும் விளக்க முற்படுகின்றனர்.பொதுமக்களிடம் விடயம் கசிந்துவிட்டதை அறியும் அரசு வேறுவழியின்றி ஆறுமாத காலத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அக்கல்லை உடைக்க ஒரு பெரும் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்புகிறது.ஆனால் அது பாதிவழியிலே திருப்பி விடப்படுகின்றது. அதற்கு அரசோடு ஒட்டியிருக்கும் ஒருதொழில்அ திபரின் கூற்று தான் காரணமாகிறது.


அந்த விண்கல்லில் மனிதகுலத்துக்கு தேவையான- இன்றைய தொழில்நு ட்பகாலத்துக்கு மிகமிக தேவையான கனிமங்கள் இருக்கலாம். அதனை கல் வரும்பாதையிலே உடைத்து சிதைத்து நம் உலகுக்கு கொண்டுவந்து சேர்த்துவிடலாம். இயந்திரயுகத்துக்கு தேவையான இந்த கனிமங்கள் கிடைத்தால் இந்த உலகில் வறுமை அழிந்துவிடும். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து வசதியாய் வாழலாம் என்கிறது இக்கருத்து . ஆனால் விண்கல்லை தகர்க்கும் முயற்சி தோல்வியடைகிறது. அரசு அதிபரும்,தொழில் அதிபரும், தாம் மக்களுக்கு பதில் கூறமுடியாத நிலைமைக்கு தள்ளப்படுவதை அறிந்து பத்திரிகை மாநாட்டிலிருந்து மெதுவாக தம்மிடத்தைவிட்டு நழுவுகின்றனர். பின்னர் உலகம் அழிகின்றது.
இதற்கு பின்னாலும் காட்சிகள் வருகின்றன.அவைகளை கணக்கில் எடுக்காமல் திரைப்படம் கூறவரும் விடயத்துக்கு வருவோம்.

உண்மையை நம்ப விரும்பாத அரசும், லாபத்தை மட்டுமே குறியாய் வைத்து அரசை ஆட்டிவைக்கும் பெரும் தொழில்நிறுவனங்களின் பங்கு, மக்கள்சுதந்திரம், ஜனநாயகம் என பீற்றுகின்ற அரசின் நடைமுறை எப்படி இருக்கிறது. தம் லாபத்தை மட்டுமே குறியாக கொண்ட தொழில்நிறுவனங்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் எவ்வாறு பறிபோயிருக்கிறது. முதலாளித்துவத்தின் சக்தி எப்படி வேலை செய்கிறது. ஆகியவைகளை வெளிப்படையாக்கியுள்ளது.
மேலும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை அள்ளிவழங்கும் தொலைக்காட்சிகளின் கேலிக்கூத்தை நுகர்வோரை எப்படி இவை ஜனரஞ்சகமான விடயங்களுக்குள் பொத்தி வைக்கிறன என்ற விபரங்களை முன்வைக்கிற திரைப்படம் இது.
Leonardo Dicarpio, Meryl Streep போன்ற பல ஹோலிவூட்டின் பிரபலங்களை வைத்து எடுத்திருப்பதால் படமும் பிரபலமடையும் என்ற நோக்கம் தயாரிப்பாளர்களுக்கு இருந்திருக்கலாம்.அதனால் ஹோலிவூட் பட ங்களுக்கே உரிய வழமையான சங்கதிகள் Dont look up ல் புகுத்தப்பட்டிருக்கின்றன. மறுப்பதற்கில்லை.ஆனாலும் திரைப்படம் நிகழக்கூடிய உண்மைகளை நிகழ்த்திகாட்டியுள்ளது.
உண்மையை கண்டுபிடிப்பது சாத்தியமானதே.

ஆனால் அதை நம்பவைப்பது முதல் கடினமான பணி. பின் அதை நம்பமறுப்பவர்களை நம்பவைக்க முனைவது இன்னும் கடினமான பணி.நம்பினாலும் அதை நம்ப மறுப்பவர்களை மறுத்து ஒதுக்கமுடியுமா. இங்குதான் உண்மைக்கும், உண்மையற்றதுக்கான போட்டி உண்டாகிறது. இந்த இழுபறியில் மக்கள் நலன் கிடந்து அல்லாடுகிறது. “சொந்த நலன் தான் உண்மையானது. தேவையானது.” இதுநலத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புக்களை- ஆம் நாம் நிஜமாக அனுபவிப்பதை படம் எதிரொலிக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *