விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ்

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி வெளிப்படும் சொற்கள் இவ் புத்தகத்தில் கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன. தான் வாழும் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதும் மனத்தோடு தொடர்புடைய உணர்வுகளை நேசம்,மதம், மனிதநேயம், மொழி,இழப்புகள், வேதனைகள் என புதைந்து கிடக்கும் அனைத்தையும் உள்ளடக்கி   கறைகழுவி நிற்கும் அட்டைப்படத்தோடு என் கைகளுக்கு கிடைத்த டிலோஜினியின் விண்ணதிர் பரணி

‘உணர்மூலம்.’ ‘துயர் பற்றிப் பேசும்  கவிதை வரிகள் “ஆத்மாவின் ஆதங்கம் “

நான் தான் ஆவி கதைக்கிறன்
அரசியல் கைதியின்ர
ஆத்மா நாயகி
ஆன்மாவா மாறி
சுத்தி இருந்து கத்தி
ஓப்பாரி வைக்குற
ஒருத்தருக்கும் கேக்கேல்ல
கத்தி நான் புலம்புறது…

அரசியல் கைதியா
கம்பிக்குள்ள போனவர்
ஆயள் கைதியா
அடைபட்டு போகையில
அங்கலாய்ச்சு காத்திருந்தன்
இண்டைக்கோ நாளைக்கோ
திரும்பி வருவாரெண்டு…

பல ஆண்டுகளுக்கு முன்….. இன்று வரை  தொடரும் அவலம்….இவ்வலத்தை காணாமல் போனோர் பட்டியலில்  முதல் இடத்தில் அவள் கணவனின் பெயர் வந்து விடுமோ என இருக்கும் கணவனையிழந்த பெண்களின், சிறைகளில் அடைபட்டு சித்ரவதை அனுபவிக்கும் உறவுகள் பற்றிய அவலங்களையும் தத்ரூபமாக தனக்கேயுரித்தான கவிதை மொழியில் சொல்கிறார் டிலோஜினி ஆத்மாவின் ஆதங்கம் ” கவிதை வரிகள் அவ்வலிகளை சொல்லி நிற்கின்றன.

ஒரு பெண் என்பவள் சமூகத்தால் தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்கு நேரிடுவதால் வேறு வேறு  துயரங்களின் நிஜ நிகழ்வின் பதிவுகள் இவை

“வாசமுத்தம் என்ற கவிதையில்”

இவரது மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால் கட்டமைந்திருப்பதுமாகும்.

கடமைகளால் நகர்ந்த
விடியலின் மடியில்
பிடித்த உடையோடு
வேகமாய் நடக்கிறேன்.
உலராத கோசத்தை
அள்ளி முiடிந்தபடி
ஏகாந்தமாய்
இருண் தெரு
அழகாகி விட
காற்று முழக்க

பூக்களின் வாசம்
நெற்றியில் மோதிய
வண்ணத்துப்பச்சி
சிலிர்க்க வைத்துப்போனது
மனதையும் உடலையும்

இவரது மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால் கட்டமைந்திருப்பதுமாகும்.

“மதங்களைத் துறத்தல்” கவிதையில்”

அன்பை போதித்த
மதங்களின் பெயரால்
மரணித்த
காதல்களில்
எங்களின் காதலே
கடைசியாகட்டும்

பாவம்
எம் காதலும்
மதம் நாறும் தெருக்களில்
அநாதையாய் அலைகிறது.

மதம் என்ற பெயரில் பொய்யான வாழ்க்கை மலிந்துகிடக்கிறது. இதற்குள்  உண்மைகள் மட்டும் பொசுங்கித் துடிக்கிறது.. மதம் என்ற போலி முகங்களை ஒப்பனை செய்து அழகாக பொருத்தியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.  அழகாக மதங்களைத் துறத்தல் என்ற கவிதை எடுத்தியம்புகிறது.

“அருவருப்பின் பானம் “

மரணத்தை நிரப்பி
கோப்பபையில் கொடுங்கள்
சாதியும் சமயமுமாய்
கலந்து கொடுத்த
அருவருப்பின் பானத்தை
குடித்தேனல்லவா
சாவு ஒன்றும் கசப்பானதல்ல
நீங்கள் கொடுத்த
சாக்கடை நாறும்
பானங்களை விடவும்…

சாதி வெறியை மதபேதங்களை சொல்லிநிற்கும் ஆழமான வெளிப்பாடாய் மனதைப் பிழியும் கவிதை.

நிகழ்கால போக்குகளை ஒரு நிம்மதிப் பெருமூச்சின் அதிர்வுக்குள் பல அர்த்தங்களை அடக்கி விட்டிருக்கின்றன  இக்கவிதைகள்.. தன்னுள் அடங்கிக்கொண்டிருக்கும் சோகம்  போர் ஏற்படுத்திய தாக்கம், இனம், காதல், மதம், சாதி, சமூகம், சிறையில் அடைக்கப்படவர்களின் உயிர் வலி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தடை போன்றவற்றை அவருக்கே உரித்தான வார்த்தைகளால் முகத்தில் அறைவது போல் அவரது சொற்கள்  இறுக்கத்துடன் கவிதைகளாக வெளிவந்துள்ளன.,

மனித உணர்வும், மனித நேயமும் அற்ற ஒரு சமூகத்தின் மீதான கோபங்களை ஒரு படைப்பாக கவிதைகளாக அவரின் மொழியில் வெளிப்படுத்தியுள்ளார் டிலோஜினி

விண்ணதிர் பரணி 42 கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன 

டிலோஜினியின் படைப்பின் மீதான கருத்துக்களும் விமர்சனங்களும் தான் முக்கியமே தவிர பாராட்டுகளல்ல.விமர்சனங்கள் தான்  படைப்பின் மீது வாசகர் கவனத்தை ஈர்க்க முடியும் என நம்புவள் நான் 

அந்த வகையில் சுய அனுபவம் சார்ந்த சித்தரிப்புகளாக  டிலோஜினியின் கவிதைகள் உள்ளன.அவர் மேலும் பல கவிதைகள் எழுத  என் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *