ஒரு தொழில்முனைவோர் தொழிற்சங்கவாதியுடன்…புதியமாதவி



இந்த இரு முகங்களும் இன்றைய நாணயத்தின்-பொருளாதரத்தின் இரு பக்கங்கள். தொழில் முனைவோரின்றி தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். இன்னொரு மொழியில் சொல்வதானால் தொழில்முனைவோருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவு நிலையை உரையாடலை நடத்திக் கொண்டே இருப்பதுதான் தொழிற்சங்கம். இந்த இருவேறு பிரதிகளையும் ஒரே மேடையில் இருத்தி அவரவர் கருத்துகளை எவ்வித தடங்கலுமின்றி சொல்வதற்கான வாய்ப்பையும் கொடுத்து ஒரு சிந்தனைவெளியைத் திறந்து வைத்ததில் ஊடறுவின் சிங்கை கருத்தரங்கின் இந்த முதல் நாள் முதல் நிகழ்வு முக்கியத்துவமானது. முதல் அமர்வு -பொருளியல் வளர்ச்சி,வர்த்தகம்,மற்றும் தொழில் முனைப்பு தொழிற்சங்க செயற்பாட்டில் பெண்கள் – சிவரஞ்சனி மாணிக்கம் -மலேசியா தொழில் முனைப்பில் பெண்கள் -விஜி

ஜெகதீஷ்- சிங்கப்பூர் இன்றைய உலகமயமாதல் சூழலில் தனியார்மயமாதலின்பொருளாதர வர்த்தகத்தில் அரசு பொருளாதரத்தின் முகமாக மாறி இருக்கிறார்கள் தொழில் முனைவோர்கள். ஒரு வகையில் சொல்லப்போனால் இவர்களின் அதீத வளர்ச்சி என்பது அரசு அதிகாரத்தின் இன்னொரு முகமாக இவர்கள் இருப்பார்கள் என்பதில் தான் முடியும். இப்புரிதலுடன் தான் இந்த முதல் அமர்வில் நானும் இவர்கள் உரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாக தொழிற்சங்கம் என்றாலே அவை தொழில் முனைவோருக்கு எதிரானதாகவும் எப்போதும் தொழில் முனைவோரை தொழிலாளர்களின் விரோதிகளாகவும் சித்தரிக்கும் வெகுஜனப் பொதுப்புத்தியில் இருந்து நகர்ந்து இன்னொரு தளத்திற்கு நகர்த்தியதில் இந்த அமர்வு கவனத்திற்குரியதானது. இருவரையும் ஒரே அமர்வில் இருத்தி பேச வைத்ததன் மூலம் அரிதான இப்புள்ளியை சாத்தியப்படுத்தி இருக்கிறது இந்த அமர்வு. இவர்கள் இருவரும் தான் பொருளாதர வளர்ச்சியில் வர்த்தகத்தில் தொழில் முனைப்பில் தங்கு தடையின்றி பயணிக்க தொழில் முனைவோரும்

தொழிலாளர்களும் தண்டவாளங்களாக இருக்கிறார்கள் என்பதை உணர வைத்திருக்கிறார்கள். இங்கே பேசிய இருவரும் இத்துறையில் பெண்களை முன்வைத்து தங்கள் கருத்துகளைப் பேசுகிறார்கள். தொழில் முனைவோர் தன் உரையை ஆரம்பிக்கும் போதே “வெள்ளத்தனைய மலர் நீட்டம்..” என்று சொல்லி என் போன்றவர்களை நிமர்ந்து உட்கார வைத்தார். பெண்ணியம் வர்க்க சிந்தனை இவை பற்றிய எந்த ஒரு புரிதலோ அல்லது அதற்கான தேவையோ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். வீடு தான் என் உலகம் என்பதிலிருந்து ஆரம்பித்த விஜி ஜெகதீஷ் தமிழர்களை தொழில் முனைவோர்களாக்குவது என் நோக்கம், என் கனவு, தமிழனிடம் என்ன இல்லை,!அதிலும் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் எப்போதும் பன்முக ஆளுமைமிக்கவர்கள்.பெண்களுக்கு மட்டும் தான் எதையும் செய்வதற்கு வயது ஒரு தடையாக இல்லை. ஓய்வு பெறுதல் என்பது பெண்ணின் சிந்தனையில் இல்லவே இல்லை” இவை அனைத்தும் பெண் தொழில் முனைவோராவதற்கான காரணிகளாக இருக்கும், எதை எல்லாம் ஒரு தொழில் முனைவோருக்கான காரணிகள் என்று சொல்கிறார்களோ அவை எல்லாமே பெண்களுக்கு இயல்பாகவே அவள் செயல் திறனாக இருக்கின்றன. அதனால் தான் பெண் என்பவள் மிகச் சிறந்த தொழில் முனைவோராக இருக்க முடியும்” என்று மென்மையான குரலில் வலிமையான கருத்தை முன் வைத்தார் விஜி ஜெகதீஷ். “நான் என்னை யாராக பார்க்கிறேன் என்பது ரொம்பவும் முக்கியம்”

எத்தனை காலத்திற்கு தான் பிழைக்கப்போன இட த்தில் தமிழ்ச் சமூகம் கை கட்டி வாய்ப்பொத்தி உழைத்து ஓடாகித் தேய்ந்து கொண்டே இருப்பது..! 100 பேருக்கு வாழ்க்கையைக் கொடுக்கும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் மாற வேண்டும்.. என்பது பெருமைக்குரிய கனவு தான்.. கனவுகள் மெய்ப்பட வேண்டும்… தோழர் சிவரஞ்சனி.. .களத்தில் நிற்பவர். கூகுள் கட் பேஸ்ட் பேச்சல்ல அவர் பேச்சு. கள நிலவரம் என்னவாக இருக்கிறது.. என்பதை அவரைப் போன்று களத்தில் நிற்பவர்கள் தான் பேச முடியும்.. எனக்கு அவர் மீது எப்போதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. மலேசியாவிலிருந்து வந்திருந்த சிவரஞ்சனி மலேசிய கள நிலவரத்தை முன்வைத்தே பேசினார் என்றாலும் அப்பேச்சின் பல்வேறு கூறுகள் இந்திய எல்லை வரைக்கும் நீள்பவை. 1940களில் இருந்த தொழிற்சங்க வீரியம் இன்று இல்லை .உலகம் முழுவதும் இதே நிலைதான். எங்கள் மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.. என்றார்.(எங்கள் இந்தியாவும் தான்… நான்) இன்றைய உழைக்கும் வர்க்கம் தொழிற்சங்கத்தில் சேர்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று வருத்தப்பட்டார். (எனக்கும் அதே வருத்தம் தான் ) அப்படி சேர்ந்திருப்பதிலும் பெண்கள் எண்ணிக்கை என்பது சொற்பம். அந்த சிறுபான்மை பெண்களை வைத்துக் கொண்டு தொழிற்சங்க செயல்பாட்டில் பெண்கள் என்பதைப் பற்றிய ஒரு முழு சித்திரத்தைக் கொடுக்க முடியுமா என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.உழைக்கும் பெண்களுக்குப் பிரச்சனைகளே இல்லையா ? அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். அவர்கள் தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள் புலம்பிக்கொண்டு திரிவதால் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் தொழிற்சங்கத்தில் சேர்வதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. அவர்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்ல அவர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது களப்பணியாளருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.

அவர்கள் இருக்கும் இட த்தைத் தேடிச் செல்வதன் அவசியத்தையும் அதனூடாகவே ஆணாதிக்க சிந்தனை அவர்களை நாலு சுவர்களுக்கு நடுவில் பாதுகாப்பு என்ற பெயரில் வைத்திருப்பதும் பெண் தொழிலாளர்கள் வர்க்க சிந்தனையுடன் ஒன்றிணைவதைத் தடுப்பதையும் விளக்கமாக தன் அனுபவங்களின் வழி முன்வைத்தார். தொழிற்சங்கவாதி… களப்பணியாளர் .. பெண்களே வர்க்கமாக ஒன்று கூடுங்கள், உங்கள் உரிமை எங்கள் களம்.. என்று சொல்ல.. பெண்கள்.. இயற்கையிலேயே பன்முக ஆளுமை மிக்கவர்கள்.தொழில் முனைவோருக்கான அனைத்து இயல்புகளும் பெண்ணுக்கு உண்டு.. வாருங்கள்… ஒன்று கூடுவோம்.. தொழில் முனைவோர் என்றால் உழைப்பைச் சுரண்டுபவர் அல்ல.தொழில் முனைவோர் என்றால் அதிகாரத்தின் முகம் அல்ல தொழில் முனைவோர் என்றால் பொருளாதரத்தின் வர்த்தகத்தின் முகம். பெண்கள் பொருளாதரத்தின் முகமாக மாற வேண்டும்..இப்படியாக..இருவேறு உலகமும்.. எங்கள் கண்முன்னால் ..அவரவர்களுக்கான பார்வையுடனும் கனவுகளுடனும் நியாயங்களுடனும்.. விரிந்த து… நான் அந்த அமர்வில் இரட்டைக் குதிரைப் பூட்டிய சாரட் வண்டியில் பயணிப்பது போல.. உணர்ந்தேன். இந்தியாவின் வர்த்தக பெரு நகரம் மும்பை தண்டவாளங்களில்.. ஓடிக்கொண்டிருப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்… சிவரஞ்சனிகளும் விஜி ஜெகதீஷ் களும்.. கை அசைக்கிறார்கள். வாழ்த்துகள் தோழியரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *