சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் -நூலறிமுகம்-சிவானந்தம் நீலகண்டன்-சிங்கப்பூர்

நுகத்தடிக் கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்களே ஒழிய கயிற்றின் நுனி ஆண்கள் கையில்தான் இருக்கிறது

நாம் வாழும் காலத்தின் சிந்தனைப் போக்குகளை அறிந்துகொள்ள முற்படுவதும் அவற்றில் முடிந்தவரை உணர்வுகளின் உக்கிரத்தைக் குறைத்துகொண்டு தத்தம் நிலைப்பாடுகளைப் பொருத்தி சீர்தூக்கிப் பார்ப்பதும் அதன் வழியாக அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு மாற்றங்களை முயன்றுபார்ப்பதும் நம் எவர்க்குமே ஆகக்கூடிய காரியம்தான். அதற்கான இன்னொரு வாய்ப்பாகக்கூட இந்த நூல் அமையக்கூடும்.

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தியதன் காரணம் இயற்கையிலேயே பெண்கள் படைப்புத்திறன் பெற்றவர்களாக இருப்பதால் எழுந்த பயத்தால்தான் என்ற கருத்தை ஓஷோ தன்னுடைய பல சொற் பொழிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் படித்திருக்கிறேன். இங்கே படைப்புத்திறன் (creative) என்று அவர் குறிப்பிடுவது மனித உயிர்கள், ஆணின் பங்கும் அதில் உண்டு என்றாலும், ஒரு பெண் வழியாக இவ்வுலகிற்கு வருகின்றன என்பதையே.

அவரது கருத்து எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது ஆனால் 03-11-2019 அன்று தேசிய நூலக வாரிய ‘த போட்’ அரங்கில் ‘பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ‘ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு’ நிகழ்வில் சிலமணி நேரத்தைச் செலவிட்டபோது மிகுந்த படைப்புத்திறனுடனும் கருத்தாழத்துடனும் பேசிய பல பெண்களைக் காணமுடிந்தது.

பெண்கள் பொதுவாக தலித்துகளிலும் தலித்துகளாக இருக்கிறார்கள் என்பது திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது. சாதி, வர்க்க பிரச்சனைகள் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவானவை என்றாலும் பெண்கள் எவ்வாறு ஆண்களைக்காட்டிலும் உழைப்புச் சுரண்டல், தேர்ந்தெடுப்பிற்கான சுதந்திரமின்மை, குடும்ப – சமூக வன்முறை ஆகியவற்றால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது விரிவாக கவனப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நூல்தான் ‘சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்’. 33 பெண்களின் நேர்காணல்கள் தொகுப்பான இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் ‘ஊடறு’ றஞ்சி, புதியமாதவி ஆகியோர். பெரும்பாலும் தமிழ்ப்பெண்கள் இடம்பிடித்துள்ள இத்தொகுப்பில் மற்ற மொழிகளைச் சேர்ந்த பெண்களும் உண்டு. 364 பக்கங்களையும் வாசிக்கும்போது பெண்ணிய உரையாடல்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அதற்குள்ளும் பலவிதமான சிந்தனைப் போக்குகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

வ.கீதா குடும்ப அமைப்பின் அடித்தளம் ஆணாதிக்கமும் வன்முறையும் என்று குறிப்பிடும்போதும் இப்போதுள்ள குடும்ப அமைப்பை மேம்படுத்தவேண்டுமேயொழிய குடும்பத்தைக் கைவிடுவது சரியான தீர்வாகாது என்று நிதானமாக முன்மொழிகிறார். ஓரினக்காதல் தொடர்பான ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அது தனிமனிதர்களின் தேர்வாக இருக்கவேண்டுமேயொழிய முற்போக்காகவோ எதிரரசியலாகவோ இருக்கலாகாது என்கிறார். அது மானுட உடலை ஜடப்பொருளாக ஆக்கும் அபாயமான அரசியல் என்கிறார்.

அ.மங்கை தன்னுடைய ஒரு பதிலில் பெண்கள் படிப்பது, வேலைக்குப் போவது, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குவது போன்ற விஷயங்களில் பெரும் மாற்றங்கள் வந்திருந்தாலும் அது ஆண்-பெண் உறவில் அடிப்படையான மாற்றத்தைக் கொணரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், நுகத்தடிக் கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்களே ஒழிய கயிற்றின் நுனி ஆண்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

அம்பை தன் பார்வையில் இலக்கியத்திலும் ஆண் பெண் எழுத்தாளர்களுக்கிடையில் மொழிவேறுபாடு இருப்பதைக் கவனித்திருக்கிறார். மனம் பால் போல் பொங்கியது, உலைநீர் போல் கொதித்தது போன்ற உவமைகள் பெண் எழுத்தாளர்களிடமிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆண் எழுத்தாளர்கள் பெண்களை கனி, பழம் என்று சாப்பிடும் பொருளாக வர்ணித்ததைச் சுட்டுகிறார். மணியன் ஒரு கதையில் திருமணமாகாத பெண்களை ஊசிப்போன பண்டம் என்று எழுதியிருப்பதையும், ஜெயமோகன் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் ஒரு பெண் தனியாக இருக்கும்போது பாலூட்டும் இரு முலைகளையுடையவளாகவும் பல பெண்கள் கூடியிருக்கும்போது பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார். தமிழின் நவீன இலக்கியப் பிரதிகளுக்குப் பெண்ணிய வாசிப்பை அளித்தால் எதுவும் மிஞ்சாதோ என்ற பதட்டத்தை எனக்கு இப்பார்வை அளித்தது உண்மை.

புதியமாதவி இலக்கியத்தில் பெண்ணின் கலாச்சாரம் சார்ந்து எந்த சர்ச்சைக்குரிய விஷயத்தையும்  எழுத இன்று தமிழ்நாட்டில் இடமுள்ளது ஆனால் அவளது  சாதி குறித்த எந்த அடையாளமும் அப்பிரதியில் இருக்கக்கூடாது என்கிறார். அப்படி அடையாளம் இருந்தால் அந்த குறிப்பிட்ட சாதிக்காரர் தன் மனைவியைக் குறித்து எழுதிவிட்டதாகத்தான் அதைப்பார்க்கிறார் என்றும் இல்லாவிட்டாள் எவளோ ஒருத்தி தன்வீட்டுப்பெண் அல்ல என்கிற அளவில் சமாதானத்தை அடைவதாகவும் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்-சாதி-இலக்கியம் இம்மூன்றும் இணையும் சிக்கலான புள்ளியாக இது இருக்கிறது.

இந்த நூலில் நேர்காணல் செய்யப்பட்டுள்ள அனேக பெண்கள் இடதுசாரிப் பின்னணி உள்ளவர்கள் என்பதில் வியப்பில்லை. ஆயினும் சி.கே.ஜானு என்ற கேரள மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண் போராளி இடதுசாரிகளும் எல்லாக் கட்சிகளையும் போலவே மலைவாழ் மக்களை ஓட்டுப்பெட்டிகளாகவும் கோஷம்போடவும் போஸ்டர் ஒட்டவுமே பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. மலைவாழ் மக்களுக்கான நிலம் குறித்தும் நல்வாழ்வு குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறைகொள்ளவில்லை என்பது தெரிந்தபிறகே தான் தனியாக ஆதிவாசிகள் சங்கம் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

‘கருக்கு’ பாமா, ‘கிறிஸ்தவ மடத்தில் சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம். சுதந்திரமா செயல்படலாம்னு நெனச்சு அதில சேர்ந்தேன்’ என்று குறிப்பிட்டு, மூன்று வருட சிஸ்டர் பயிற்சிமுடித்து அதன்பிறகு நான்கு வருடம் அங்கு ஆசிரியராக வேலை செய்தபின்பு  தான் சேர்ந்த நோக்கத்துக்கும் அங்கு நடைபெறும் செயல்களுக்கும் சம்பந்தமில்லை என்று புரிந்துகொண்டதைச் சொல்லியிருக்கிறார். பணக்காரப் பிள்ளைகளை மேலும்மேலும் தூக்கிவிடும் காரியத்தைத்தான் அவர்கள் செய்துவருவதாக வேதனையுடன் கூறுகிறார். சாதாரண வாழ்க்கையும் போய் சிஸ்டராகவும் தொடரமுடியாமல் வாழ்க்கையின்மீதான பிடிமானம் தளர்ந்த சமயத்தில் இலக்கியம் கைகொடுத்ததை விவரித்துள்ளார். தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம் என்று சொல்லும் பாமாவின் கருத்துகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுகின்றன.

பொதுவுடமை இயக்கங்கள் வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் சாதிப்பிரச்சனையைத் தவிர்த்துவிடுவதில் தனக்கு நம்பிக்கையில்லை என்கிறார் பாமா. கோடீஸ்வரராக இருந்தாலும் சாதிய முத்திரை போகவில்லை என்கிறார். இந்த இடத்தில் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு கட்டுரையில் கல்வியும்கூட சாதியை அழித்துவிடவில்லை மாறாக நுட்பமாக்கியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது என் நினைவுக்கு வந்தது. அந்தவகையில் சாதி ஒழிப்புக்கான சமூக மேம்பாட்டு நம்பிக்கைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியுள்ள சூழ்நிலையில் புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. ஒருவேளை அவை  பெண்களிடமிருந்து வரக்கூடும் என்று தோன்றுகிறது.

பெண்களும் வெளியில் பொருளீட்டச் செல்லும் இக்காலத்தில் நவீன சாதனங்கள் அவள் செய்துகொண்டிருந்த வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்ட அளவுக்குக்கூட ஆண்கள் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தை பா.ஜீவசுந்தரி பதிவுசெய்துள்ளார். நியாயமான ஆதங்கம்தான். ஆனால் ‘ஆண் என்னதான் முற்போக்கு பேசினாலும் அவனையறியாமலேயே தன் கருத்திலும் செயலிலும் பேச்சிலும் ஆதிக்க மனோபாவம் மேலோங்கிவிடும்’ என்று இவர் குறிப்பிடுவதில் எனக்கு விமர்சனமிருக்கிறது. ‘அவனையறியாமலேயே’ செய்வதற்கு அவனை எப்படிக் குறைசொல்லமுடியும்? மேலும் பெண்ணியம் என்பது ஆண்களை ஒதுக்கியதாகவோ,  ஆண்கள் மேல் பொதுவான அவநம்பிக்கை கொண்டதாகவோ, ஆண்களுக்கு எதிர்செயல்பாடாகவோ இருக்கக்கூடாது என்பது என் எதிர்பார்ப்பு.

கராத்தே கற்றுப் போராளிகளாகப் பல்லாண்டுகள் வாழ்ந்த ஈழப்பெண்களுக்கு முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு என்ற பெயரில் மணப்பெண் அலங்காரப் பயிற்சி வழங்குவது பொருத்தமில்லாதது என்கிறார் வெற்றிச்செல்வி. பெண்களுக்கென்றால் இவைதான் என்ற பார்வை தவிர்த்து அவரவர் திறன்களுக்கேற்ப மறுவாழ்வை அளித்தால்தான் வாழ்க்கைக்குப் பொருள்கூடும் என்ற இவரது கருத்து கவனிக்கப்படவேண்டும். மேலும் போராளிகள் என்பவர்கள் ஏதோ துப்பாக்கியை மாத்திரம் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு அலைந்தவர்கள் என்ற எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்கிறார். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படும் ‘முன்னாள் போராளி’ என்ற அடையாளத்தை இவரைப் போன்றவர்கள் சுமக்கவேண்டியிருக்கிறது. தன்னளவில் அது சுகமான சுமையே என்கிறார் வெற்றிச்செல்வி.

‘சங்கமி’யின் 33 ஆளுமைகளிலிருந்து 8 பேர்களின் சில கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி அவை எனக்குள் எழுப்பிய சில எண்ணங்களையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன். பெண்ணியமே மூச்சு என்றிருப்பவர்கள்வரை பெண்ணிய ஒவ்வாமை (சில பெண்களுக்கும் இது இருக்கிறது) உள்ளவர்கள்வரை ஒருமுறை வாசித்துப்பார்த்துவிடவேண்டிய கருத்துகள் நிறைந்த  தொகுப்பு சங்கமி என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

நாம் வாழும் காலத்தின் சிந்தனைப் போக்குகளை அறிந்துகொள்ள முற்படுவதும் அவற்றில் முடிந்தவரை உணர்வுகளின் உக்கிரத்தைக் குறைத்துகொண்டு தத்தம் நிலைப்பாடுகளைப் பொருத்தி சீர்தூக்கிப் பார்ப்பதும் அதன் வழியாக அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு மாற்றங்களை முயன்றுபார்ப்பதும் நம் எவர்க்குமே ஆகக்கூடிய காரியம்தான். அதற்கான இன்னொரு வாய்ப்பாகக்கூட இந்த நூல் அமையக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *