பாலியல் ஆயுதம்!!!

http://thulabaaram.com/2017/08/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

SRI LANKA-UNREST-FUNERALமறக்க நினைத்த போதும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் என் மனதிற்குள் வந்து போயின. என்னைப் பற்றியல்லாத, என் உயிர்த்தோழிகளைப் பற்றியல்லாத, என் உயிரினுள் கலந்துவிட்ட என் இரத்த உறவுகளைப் பற்றியல்லாத ஒரு விடயம் என்னை இவ்வளவு அதிகமாய் பாதிக்கின்றதே என்பதை நினைக்கும் போது எனக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. என்னுடைய தொழிலின் நிமித்தமாகத்தான் அந்த வழக்கை நான் வாசித்தேன். அது இராணுவத்தினரால் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர் பிரிந்த ஒரு தமிழ் சகோதரியின் வழக்கு. வாசித்த நொடி முதல் தற்போது வரை அந்த வழக்கின் சம்பவங்கள் நெஞ்சுக்குள் நிழலாடி என் கண்ணீரைச் செலவழிக்கச் செய்துக் கொண்ருக்கின்றன. முகமறியாத அந்தச் சகோதரி அனுபவித்த வேதனைகளை எண்ணும் போது எனக்கு மூச்செடுப்பது சிரமமாகின்றது. கடந்த ஒரு வாரமாக இந்த காட்சிகள் கனவிலும் வந்து என்னை அதிகமாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை, என்னை கலங்கப் படுத்த வேண்டாம் என நான் இராணுவத்தினர் கால் பிடிப்பதாய் ஒரு கனவு. பதறி எழுந்து விட்டேன். என் கன்னங்களில் கண்ணீர் வடிந்திருப்பதை உணர்கின்றேன். ஓ!!! என்னால் கனவில் கூட சகித்து கொள்ள முடியாத அந்த கொடுமைகளை எல்லாம் அந்தச் சகோதரி எப்படி நிஜத்தில் தாங்கினாள்? இந்த கற்பனையிலே அன்றைய என் இரவு கண்ணீரில் கரைந்தது.

என்னுடைய மனநிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை அறியாது என்னை குருணாகலிற்கு சென்று 10 நாட்கள் தங்கி ஒரு ஆய்வறிக்கை தயாரித்துக் கொண்டு வரும்படி கூறிய என்னுடைய உயரதிகாரிகள் மீது எனக்கு கோபம் வருகின்றது. ஆனால் இந்தப் பயணம் மனதிற்கு நல்லதொரு மாறுதலாய் அமையும் என அம்மா கூறியதைக் கேட்டு கிளம்பியாயிற்று. பயணத்தின் காற்பங்கு தூரமும் அந்த சகோதரியின் நினைவுகளுடனேயே கழிந்து போயிற்று. ஜன்னலின் வெளியே பார்க்கின்றேன். குளிர்ந்த நிலவு பாதியாய் தேய்ந்து போய் உலாவிக் கொண்டிருக்கின்றது. நிலவின் அந்தத் தேய்வினை கூட என் மனதுள் ஆழமாகப் பதிந்து விட்ட அந்த சகோதரியின் வாழ்வில் இடம்பெற்றுவிட்ட பொறுக்க முடியா அநியாயங்களுக்கான ஒரு இரங்கலாகத்தான் நினைக்கத் தோன்றுகின்றது. வேதனையிலே உழன்று கொண்டிருந்த மனதிலே திடீரென அனல் கக்கத் தொடங்கியது. இத்தனை கொடூரங்களையும் செய்துவிட்ட இராணுவத்தினர் மீது சொல்லொணாக் கோபம் வந்தது.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. எத்தனைச் சம்பவங்கள்!! ஈழத்து யுத்தத்திலே இராணுவம் பாவித்த மகவும் பயங்கரமான, மிகவும் கேவலமான ஆயுதம் பாலியல் துஷ்பிரயோகம் தான். வயது வித்தியாசம் இல்லாமல் பெண் என்ற அடையாளத்தை மட்டும் அளவுகோலாகக் கொண்டு அத்துமீறி நடத்தப்பட்ட அந்த பாலியல் போரிலே பரிதவித்து இறந்த பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர். இயல்பிலேயே மென்மையாகப் படைக்கப்பட்டவள் பெண். அவளின் உணர்வுகள் மென்மையானவை.

நிறைமாத கர்ப்பிணிப் போல பயணிக்கும் அந்தி நேர பேரூந்துகளில் சில பார்வைகளின் வன்மத்தினை கூட தாங்க முடியாமல் இடைநடுவில் இறங்கி ஆட்டோ பிடித்து போன சம்பவங்கள் எனக்கு ஞாபகம் வந்தன. அப்படித் தான் அவர்களும் மெல்லிய உணர்வு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள். எப்போதோ படித்த ஒரு கவிதை வரி நினைவுக்கு வந்து என் வேதைனையையும் அதன் விளைவாய் பிறந்த கோபத்தையும் அதிகப்படுத்தியது.

“துப்பாக்கிகளுக்கு மட்டும் விந்து பாய்ச்சும் சக்தி இருந்திருந்தால்

இந்நேரம் ஈழத்தில் பல்லாயிரம் துப்பாக்கி குழந்தைகள் பூத்திருக்கும்”

ஒரு இனத்திற்கு எதிராகப் புரியப்பட்ட சதியிலே முக்கிய பாத்திரம் வகித்த இராணுவத்தினர் மீது கோபம் பிறந்தது. என் கோபத்தின் விஸ்தீரணம் அவர்களுடைய குடும்பங்களையும் சுட்டது. அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களைப் பொறுப்பாக்குவதற்கு கூட வக்கற்றவர்களாக இருக்கும் தமிழினத்தின் மீது கோபம் வந்தது. கோபத்தின் உச்சியில், எதுவுமே செய்ய முடியாது என்ற ஆற்றாமையில் மீண்டும் அழுகை வந்தது. இப்படியாய் நினைவுகளிலே உழன்று உழன்று நான் செய்த இந்த நீண்ட பயணம் நிறைவுற்றது.

நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காய் எனது அலுவலகம் செய்திருந்த ஏற்பாட்டை மறுத்துவிட்டு குருணாகலில் இருக்கும் என் தோழி வீட்டிற்குச் சென்றேன். அவளுடைய கணவன் வெளியூரில் என்பதால் பத்து மாத கைக்குழந்தையுடன் தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாள். சில காயங்களுக்கு நட்புதான் நல்ல மருந்து. எனக்கும் அது தேவைப்பட்டது. அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் என் மனதிற்குள் இருந்த பாரங்கள் எல்லாம் காற்றிலே கரைந்து மனசு இலேசாகிப் போனதை உணர்ந்தேன். என் தோழியின் குழந்தையின் பிஞ்சுக் கரங்களின் ஸ்பரிசமும், அவளுடைய கள்ளங்கபடமற்ற பார்வையும், மழலைச்சிரிப்பும் என் மனதில் அமைதியை ஏற்படுத்தியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. நானும் என் தோழியும் கல்லூரி நாட்களின் இனிமையான அனுபவங்களை மீட்டிப்பார்த்தபடியே சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் நான் அவளை முதன்முதலாகப் பார்த்தேன்.

“அக்கே..ஹால் பொட்டக் தெனவத? எட்ட அரங் தென்னங்” (அக்கா..அரிசி கொஞ்சம் தாரிங்களா? நாளைக்கு வாங்கி தாரேன்)

என்ற படி வீட்ற்குள் வந்தாள்.

சினிமாக்களின் கதாநாயகி போல அழகான ஒரு இளம்பெண். அவளுடைய அகன்ற கண்களும், நீண்ட கூந்தலும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தன. என்னுடைய தோழி புன்னகையாலே அந்த பெண்ணை வரவேற்று விட்டு அரிசி அளப்பதில் மும்முரமானாள். அந்தப் பெண் என்னை நன்றாக உற்றுப் பார்த்தாள். நானும் அவளைப் பார்த்தேன். அழகுக்கு மறுபெயராக அவள் நின்றாள். ஆனால் அவளுடைய கண்களில் கவலையும், பயமும் சமவிகிதத்தில் தெரிந்தன. அப்போது தான் பார்த்தேன். அவளுடைய பாவாடைக்கு பின்னால் விரல் சூப்பிக் கொண்டு நின்றன இரண்டு வாண்டுகள். இரட்டைக் குழந்தைகள். வறுமையின் சாயல் அக்குந்தைகளின் முகத்திலிருந்த அழகைக் கொஞ்சம் குறைத்து விட்டிருந்தது. மற்றையபடி அவர்களும் தாயின் அழகுக்கு நிகரான இரண்டு குட்டி அழகு தேவதைகள்தான். அரிசியை வாங்கிக் கொண்ட அந்த இளம்பெண் நன்றி கூறி விட்டு சென்று விட்டாள்.

“யாரடி இது?” என்றேன்.

“இளம் விதவை. இராணுவ வீரனொருவனின் மனைவி. அவன் கடைசி யுத்தத்தில் செத்துப் போனான்”

இராணுவத்தினர் மீது நான் கொண்டிருந்த கோபத்தை என் தோழி அறிந்திருந்ததாலோ என்னவோ அதற்கு மேல் அவளைப் பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் எனக்குள் பல கேள்விகள். அவள் முகத்தில் இருந்த சோகம் காதல் கணவனை இழந்ததால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பயம்?? இரண்டு பெண் குழந்தைகளை எப்படி வாழ வைக்கப்போகிறோம் என்ற எதிர்கால அச்சமாக இருக்கலாம் என எண்ணினேன். ஆனால் மனதுக்குள் ஏதோ உறுத்தியது.

அவள் ஒரு இராணுவ வீரனின் மனைவி! அவளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்களால் எங்களுடைய எத்தனை தமிழ்ப் பெண்கள் பற்றைக் காடுகளுக்குள் உயிர் வலிக்க வலிக்க உயிர் பிரிந்தார்கள் என்று நினைத்து அவளுடைய நினைவை புறந்தள்ளினேன். ஆனால் ஏனோ அவளும் அவளுடைய அழகான இரட்டைக் குழந்தைகளும் அடிக்கடி ஞாபகத்திரையில் வந்து போனார்கள். அடுத்த மூன்று நாட்கள் அலுவலக வேலைகளில் மூழ்கிப் போன நான் இவர்களை மொத்தமாய் மறந்துவிட்டேன். அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையினை ஓரளவு தயார் செய்து முடித்த திருப்தியுடன் நான் படுக்கைக்கு செல்லும் போது கிட்டத்தட்ட விடிந்திருந்தது.

இரவு நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்துவிட்டு படுத்த என்னுடைய நித்திரையை பல கூக்குரல்கள் இடையூறு செய்துக் கொண்டிருந்தன. அக்கம்பக்கம் வீடுகளில் சண்டை போல என நினைத்து அந்த கூக்குரல்களைப் புறக்கணித்து விட்டு தூங்க எத்தனித்த என்னுடைய தூக்கத்தை தோழியின் குழந்தையின் அழுகை முற்றாய் துரத்தியது. எழுந்து சென்று குழந்தையைத் தூக்கினேன். தோழி வீட்டில் இல்லை. குழந்தையை விட்டுவிட்டு எங்கே போனாள் என கோபம் வந்தது. வழமையாகத் தெருச் சண்டைகளை வேடிக்கைப் பார்க்கப் போகும் பழக்கமுடையவளல்லவே என்று சிந்தித்த படியே கூக்குரல் கேட்ட ஒலியை நோக்கிச் சென்றேன்.

பொலிஸார், அம்புலன்ஸ் என்று அந்த இடம் மிகவும் கலவரமாகக் காணப்பட்டது. அந்த வீட்டிலிருந்து அந்த இளம்பெண்ணும் அவளுடைய இரட்டைக் குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். வார்த்தைகளில் வடித்து விட முடியாத ஒரு சோகம் என்னுள் அப்பிக் கொண்டது. அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன். என் தோழி மயங்கிவிட்டாள். அந்த நரக நிமிடங்கள் நகர்ந்து போயின.

அழுதழுது என் தோழியின் கண்கள் வீங்கியிருந்தன. அவளுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் நீண்ட நாள் பழக்கம் போல என நான் நினைத்துக் கொண்டேன். அவள் என் மடியில் தலைவைத்து விம்மிக் கொண்டிருந்தாள். விசும்பல்கள் கொஞ்சம் நின்றதும் நான் மெல்லக் கேட்டேன்.

“ஏன் செத்துப் போனா?”

“அவளுக்கு எய்ட்ஸ். நேத்து தான் தெரிஞ்சுதாம்”

“எப்படி?……”

அந்த அப்பாவி முகம் கண்முன் வந்து போனதால் நடத்தை சரியில்லாதவளா என கேட்க நா எழவில்லை.

“அவள் காதலிச்சு கல்யாணம் பன்னிகிட்டா. பெத்தவங்க இவங்க இரண்டு பேரயும் ஒதுக்கி வைச்சுட்டாங்க. புருஷன் யுத்தத்துல செத்த பிறகு அவ அரசாங்கத்தால கொடுக்கிற உதவித்தொகைய நம்பித் தான் வாழ்ந்தா! ஒவ்வொரு முறை உதவித்தொகைக்காக, சன்மானத்துக்காக, ஓய்வூதியத்துக்காக போய் நிக்கறப்பவும் ஒவ்வொருத்தரும் அவ அழகை விலை கேட்டாங்க. அவ மறுத்துகிட்டு தான் இருந்தா. ஆனால் ஒரு கட்டத்தில மேலதிகாரிகளின்ர பலாத்காரம் அதிகமாயிடுச்சி. இவ மனு கொடுக்கப் போனா. மனுவை வாங்கின அதிகாரியே…”

அவள் விம்மினாள்..

“எனக்குத் தெரியும். அவ தன் குழந்தைகளோட ஒழுக்கமா வாழனும்னு நினைச்சா..ஆனால் பாலியல் இலஞ்சம் கேட்டு, பாலியல் பலாத்காரம் செய்து அவளை ஒரு பாலியல் தொழிலாளியா மாத்திட்டாங்க.. கடைசியில இப்படி எய்ட்ஸ் வந்து”

மீண்டும் விம்மினாள்.

யுத்தத்தில் பாலியல் பலாத்காரம் தமிழ்ப்பெண்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாய் இருந்தது. யுத்தத்தின் பின்னர் பாலியல் பலாத்காரமும், பாலியல் இலஞ்சமும் யுத்தத்தால் விதவையான இராணுவ வீரார்களின் மனைவிகளுக்கெதிரான ஆயுதமாய் இருக்கிறது. எனக்குள் ஏதோ உறைத்தது. குற்ற உணர்வு என்னைக் கொன்றது.

ஒரு இராணுவ வீரரின் மனைவியாக அவளைப் பார்க்காமல் ஒரு பெண்ணாகப் பார்த்து அன்றே அவளுடைய பிரச்சினையைக் கேட்டிருந்தால் மூன்று மரணங்களைத் தடுத்திருக்கலாமோ எனத் தோன்றியது. அந்தக் குழந்தைகளையாவது மீட்டு மறுவாழ்வளிக்கும் நிலையம் ஒன்றில் சேர்த்திருக்கலாம் என தோன்றியது. கண் முன் அந்த இரட்டைக் குழந்தைகள் அழகாய் தோன்றி மறைந்தன. மனசில் மீண்டும் பாரமேறிக் கொண்டது. வீடு நோக்கி விரைகிறேன். அவசரமாய் அம்மாவின் மடியில் கொஞ்சம் தலை சாய வேண்டும்.

குறிப்பு: இலங்கையிலே அதிகளவான இளம் விதவைகளாகிய இராணுவ வீரார்களின் மனைவிமார் வாழும் மாவட்டமான குருணாகல் மாவட்டத்தில் அத்தகைய இளம் விதவைகளிடம் மேலதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கேட்பதும், அவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதும் கற்பனை அல்ல. அவை வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்.

 

1 Comment on “பாலியல் ஆயுதம்!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *