தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பார்வையற்ற முதல் பட்டதாரி ….பாத்திமா ஸனூரியா –

தகவல் -சலனி

பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து இன்று சாதித்துக் காட்டியிருக்கின்ற பாத்திமா சனூரியாவை நாமும் வாழ்த்துகின்றோம்.

olu666

இம்முறை நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியாகிய கண்பார்வையற்ற மாணவி பாத்திமா ஸனூரியா.
கண்பார்வையற்ற ஒரு மாணவி பல்கலைக்கழகப் படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறார் என்பது பெரியதொரு சாதனை தான். அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். அவர் இந்த சமூகத்தின் ஒரு சாதனைப் பெண்மணி. அவர் அங்கவீனர்களுக்கு மட்டுமல்ல முழு இளைஞர், யுவதிகளுக்குமான முன்னுதாரணம்.

தந்தை இல்லாத குடும்பத்தில் வளர்ந்த பாத்திமா ஸனூரியாவுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு மாவனல்லை உயன்வத்தை பிரதேசத்தில் பிறந்தவர். கண்பார்வை அற்ற காரணத்தினால் ஆரம்பத்தில் இவரை யாரும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனைய மாணவர்களுக்கு இணையாக இவரால் படிக்க முடியாது என தட்டிக்கழித்து விட்டார்கள். என்றாலும் இரண்டு வருடங்கள் கழித்து தெல்கஹகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு பாத்திமா ஸனூரியாவுக்கு கிடைத்தது.

இவ்வாறு கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைப்பதற்கான காரணம் அப்பாடசாலையில் கற்பித்துக் கொடுத்த ஹபீலா ஆசிரியையின் அர்ப்பணம் மிக்க சேவையாகும். கண்பார்வையற்ற ஸனூரியாவுக்கு இந்த ஆசிரியை 3 வருடங்கள் தனியாகக் கவனமெடுத்து கற்பித்தமைதான் இன்று அவர் பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்கு அடித்தளமாய் அமைந்தது. தனது பல்கலைக்கழக வாழ்க்கை தொடர்பில் மனம் திறக்கும் பாத்திமா ஸனூரியா, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புக்களை ஒருபோதும் மறக்க முடியாதெனவும், இவர்களது பெறுமதியான உதவிகள்தான் தன்னை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

குறிப்பாக பரீட்சைக்குத் தயாராகும்போது நண்பர்கள் பாடக் குறிப்புகளை வாசித்து தனக்கு விளங்கப்படுத்தியமையானது பெரும் உதவியாக அமைந்ததாக நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த ஆசிரியையாக மாற வேண்டும் என்பதை தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பாத்திமா ஸனூரியாஇ நான் கற்ற கல்வியை பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் தன்னால் சாதாரண பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுக்க முடியும் எனவும் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *