பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் )

jeeva5?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்?

இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு வயது முதலே ஏராளம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கும் அன்றாட நிகழ்வாகவே ஆனது. எனக்கென்று தனியாக சிறுவர் இதழ்களான ‘கோகுலம்’, அம்புலிமாமா, காமிக்ஸ் புத்தகங்களுடன், ருஷ்ய மொழிபெயர்ப்பு குழந்தைகள் நூல்கள் அனைத்தும் ஏராளமாக வாங்கிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் டாம் சாயர், லிட்டில் ப்ரின்ஸ் போன்ற நூல்களும் அடக்கம். அப்பா, அம்மா இருவருமே அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை எனக்கு. புத்தகங்களை வைத்துக் கொள்வதற்கென்று தனியாக எனக்கு ஒரு அலமாரியே ஒதுக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி, கண்ணாடி அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் அப்பாவின் புத்தகங்கள் மீது என் கவனம் திரும்பியது இயல்பானது. புத்தகங்களை அடுக்கி வைப்பது என் வேலை. அப்படித்தான் அவற்றையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன், திடீரென்று எங்கள் குடும்பம் சூறைக்காற்றில் அகப்பட்ட குடிசையைப் போல பிய்த்தெறியப்பட்டது. ஆளுக்கொருவராக ஒவ்வொரு திசையில் பிரிந்து உறவினர் வீடுகளில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோதுதான் புத்தகங்களைக் கண்ணில் பார்க்கவும் முடியாத ஒரு நிலையை நோக்கித் தள்ளப்பட்டேன்.

 கிராமத்தில் சிறிய தாத்தா வீட்டில் ஓராண்டுக்கும் மேல் தங்க நேர்ந்த சூழலில், என் மாமா ஒருவர் மட்டுமே நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிப்பார். அதை நானும் படிப்பேன். ஆனால், வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்த பின் இரவு நேரத்தில்தான் படிக்க முடியும். லைட்டை எரிய விட்டால் திட்டுவார்கள் என்பதால், சிம்னி விளக்கைப் பற்றவைத்துக் கொண்டு படிப்பேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகமானதால் அதைக் குறிப்பிட்ட நாளைக்குள் கொடுக்க வேண்டுமென்பதால் அப்படி படித்து முடிக்க வேண்டியிருந்தது.

 ஒருமுறை எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித்தீ’ நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். அந்த நாவல் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுநூல்காரர்கள் என்ற பட்டு நெசவாளிகளான சௌராஷ்டிரர்கள் வாழ்க்கையைப் பேசும் நூல். பகட்டான பட்டு நெய்பவர்களின் வாழ்க்கை எவ்வள்வு அவலம் நிறைந்தது என்பதை அற்புதமாகச் சொல்லும் நூல். அதனால் மிகவும் ஆர்வத்துடன் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். கிராமம் என்பதால் விவசாயம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும். நெல் அவித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கையால் அடுப்பை எரிய விட்டுக்கொண்டே அதைப் படித்துக் கொண்டிருந்தேன். நாவலின் சுவாரஸ்யத்தில் அடுப்பு அணைந்து போனதை கவனிக்கவில்லை. அடுத்தநாள் அந்தப் புத்தகம் லைப்ரரியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசரமும் அதில் கலந்திருந்தது. அதை கவனித்த என் மாமி, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை என் கையிலிருந்து பிடுங்கி, சட்டென்று அடுப்புக்குள் வீசியெறிந்து விட்டார். ஒரு நொடியில் அது புகைந்து எரிந்து போய்விட்டது. நெல் அவித்து முடித்து அந்த அடுப்பு அணைக்கப்பட்டு விட்டபோதும், என் நெஞ்சில் மூண்டெழுந்த கனல் மட்டும் அணையவேயில்லை. அதன் பின் அந்த நாவலை நான் தேடிப் படிக்க பத்தாண்டுகளானது. அந்த ஓராண்டு முழுதும் புத்தகங்கள் படிப்பதால், ஒளித்து வைக்கப்பட்டு, அல்லது கிழிக்கப்பட்டு ஏராளம் மனக்கசப்புகள். ஆனால், மீண்டும் என் வீட்டுக்கு நான் வந்தபின் பழையபடி புத்தகங்கள் என் வாழ்க்கையில் வசந்தத்தை வீசி அர்த்தமுள்ளதாக்கின. ஆனால், இன்று வரை’ வேள்வித்தீ’ ஏற்படுத்திய கனலின் கதகதப்பு என் மனதை விட்டு நீங்கவில்லை.

ஆனால், அதன் பிறகு எப்போதுமே புத்தகங்களுடன் இணைந்ததுதான் என் வாழ்க்கை. அப்பா வீட்டில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் நான் சேமித்து வைத்திருந்தவற்றையும் சில் நண்பர்களின் வீடுகளில் அலங்காரமாக அடுக்கி வைத்திருந்த நூல்களையும் கேட்டுப் பெற்று தென்னங்கீற்று வேயப்பட்ட ஒரு சிறிய அறையில் 2500 நூல்களுடன் ‘பாரதி நூலகம்’ என ஒரு நூலகத்தைத் தொடங்கினேன், சில நண்பர்களும் அதற்கு உதவி செய்தார்கள். நன்கொடையாகப் பலரிடமும் பெற்ற தொகைக்கு நூல்கள் வாங்கிய பில்களை அவரவருக்கே அனுப்பி விடுவேன். பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் அங்கு வந்து புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். பள்ளி மாணவர்கள் அங்கேயே அமர்ந்து படிப்பதும் உண்டு. அதில் ஏராளமானவர்கள் நல்ல வாசகர்களாக, புத்தகக் காதலர்களாக, தீவிர இலக்கிய வாசிப்பாளர்களாக உருவானார்கள் என்பதைப் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கிறேன். இரண்டாண்டுகள் மிகுந்த சிரமத்துடன், எந்த வருமான நோக்கமும் இன்றி அதை நடத்தினேன். அதன் பின் தொடர்ந்து நடத்த என் பத்திரிகையாளப் பணிச்சூழல் அனுமதிக்கவில்லை. இப்போதும் புத்தகங்கள் சூழவே வாழ்க்கை நகர்கிறது

?.இன்றைய காலச்சூழலில் ஆண்களுக்கு நிகராய்பெண்களும் சமமமான போட்டிகளில் இருப்பதாகச் சொல்லப்படுகையில் அவர்களுக்கான இலக்கை அவர்கள் எட்டிவிட்டதாக கருதுகிறீர்களா? உங்கள்பார்வை என்ன

இருவரையும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக நான் கருதுவதில்லை. இருவரும் சமமானவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள். ஆனால், முழுவதும் ஆண்கள் அளவுக்கு எந்த இடத்தையும் எட்டிப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. எந்த ஒரு அலுவலகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் – அது அரசு சார்ந்ததோ, தனியாருக்குச் சொந்தமானதோ – ஆண்கள் எண்ணிக்கைதான் அதிகம். பெண்கள் சதவீதம் இன்னமும் 50/50 என்ற நிலையை எட்டவில்லை. பெண்களின் கல்வியே இன்னமும் இங்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது எப்படி அவர்களைச் சரி சமமானவர்களாகக் கருத முடியும்? எனக்குத் தெரிந்து அரசின் தடயவியல் துறையில் 90 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள். அந்த ஒரே ஒரு துறையில் மட்டும்தான் பெண்கள் பங்களிப்பு அதிகம். பெண்கள் பயந்தாங்கொள்ளிகள், கரப்பான்பூச்சி, பல்லி இவற்றுக்கே பயந்து அலறுபவர்கள் என்ற கூற்றையும் இதன் மூலம் அவர்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்.

 ?.சுதந்திரப்போராட்டக்களத்தில்தீவிரமாகபோராடியபெண்களின்வீரமானது, இன்றைக்குஅதேதீரத்துடன்பெண்களுக்கெதிரானபோராட்டகளத்தில்  வலுசேர்த்துவருவதாக  கருதுகிறீர்களா?

 சுதந்திரப் போரில் பங்கெடுக்க வேண்டிய தேவை இருந்தபோது பெண்கள் தீவிரமாகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள். நாடு விடுதலை பெற்ற பின், போராட்டக் காரர்கள் அனைவரும் அரசியலில் பங்கு பெறவில்லை. ஒரு சிலர் மட்டுமே அந்தப் பணியை ஏற்றார்கள். மற்ற பெண்கள் மீண்டும் வீடுகளை நோக்கித் திரும்பினார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் முழுவதுமே அந்த நிலைதான். நம் கண்ணெதிரில் நாம் பார்த்த .ஈழப்போர் ஒரு முக்கிய சாட்சி. விடுதலைப்புலிகள் படையின் பெண் புலிகள் மிகத் தீவிரமாக அதில் பங்கேற்றார்கள். ஆனால், போருக்குப் பிந்தைய அவர்களின் வாழ்க்கை என்னவாயிற்று? பலரும் அடையாளங்கள் ஏதுமின்றி வீட்டுக்குள்தானே முடங்கியிருக்கிறார்கள்.

இப்போதும் பெண்கள் பங்கெடுக்கும் எந்தப் போராட்டங்களும் தோற்பதில்லை. பல பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பெண்கள் அமைப்புகள் பல இருந்தாலும், இடதுசாரி பெண்கள் அமைப்புகள் மட்டுமே தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகத் திரளுதல் என அவர்களின் பங்களிப்பு இப்போதும் வலுவாகத்தான் இருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் முன்பை விட மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கும் காலம் இது. அதனால் பெண்களும் தங்கள் போராட்டங்களைப் பல விதங்களில் வீரியமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் உரிமைகளுக்காகத் தாங்களே போராட வேண்டும் என்ற தன் முனைப்பும் அதிகரித்திருக்கிறது. பெண்ணியம் சார்ந்த கருத்தாடல்களும் பரவலாகிக் கொண்டிருப்பதால், சென்ற தலைமுறை பெண்கள் அனுபவிக்காத பல துன்பங்களையும் இக்காலப் பெண்கள் மிக அதிகமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. இன்று வீட்டு வாசற்படியைத் தாண்டிச் செல்லும் ஒரு பெண், பாதுகாப்பாக வீடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் நிறையவே இருக்கிறது. அப்போது தனக்கான பாதுகாப்பைத் தானே தேடிக் கொள்ள அவள் தயாராகவே இருக்கிறாள். கல்வியறிவும், சுதந்திரப் போராட்டக் காலத்தை விட தற்போது அதிகம். கல்வி அளித்திருக்கும் துணிச்சல் அவர்களை வழி நடத்துகிறது. ஆனால், இரண்டு போராட்டங்களையும் ஒப்பிடுவதே தவறு என்பதுதான் என் ஆணித்தரமான கருத்து..

 ?.இலக்கியமாகட்டும், பொதுமேடைப்  பேச்சாகட்டும் பெண்கள் பொதுவெளியில்வருவது அரிதாகவே இருக்கிறது. இதுமறைமுகஅடக்குமுறையா? அடங்கிப் போதலா? அடக்கமுடைமையா? எப்படிஎடுத்துக்கொள்வது?

 இரண்டிலும் பெண்கள் இப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அடக்குமுறை என்பதையெல்லாம் கடந்து, திறமை உள்ளவர்கள் நிச்சயம் வெளியில் வருவார்கள். பின் சொன்ன இரண்டும் காலாவதியாகிக் கொண்டிருக்கும் சொற்கள். எதையும் உடைக்கும் நிலையை நோக்கிப் பெண்கள் நகரத் துவங்கி விட்டார்கள். ஆனால், ஆண் மனது பெண் எப்போதும் அடக்கமானவளாக, தனக்கு அடங்கிப் போகின்றவளாக இருக்க வேண்டும் என்று தனக்கு சாதகமான நிலையை எப்போதும் முன் வைப்பதாகவே நான் பார்க்கிறேன். பெண்களும் தங்களுக்குச் சமமானவர்கள் என்ற இலகுவான மனநிலையை நோக்கி நகர்ந்துவிட்டால், இந்தப் பேச்சுக்கே இடமிருக்காது.

 ?.இன்றைக்கு பெண்களுக்கான அங்கீகாரங்களாகத் தென்படுவதெல்லாம் இளைப்பாறுதலா? ஏற்றமா? எப்படி புரிந்து கொள்வது?

 ஏற்றம்தான், முன்பே சொன்னது போல் திறமையுள்ளவர்கள் கண்டிப்பாக அங்கீகாரம் பெறுவார்கள். இளைப்பாறுதலாக இருந்தால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.

 ?.பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைய வேண்டுமானால் தீர்ப்புகள் சாட்டையடிகளாகஇருக்கவேண்டும். அது மட்டும்தான் பெண்சமூகத்துக்கானவாளாக இருக்க முடியும் என்ற பெருத்த எதிர்பார்ப்புக்கு  உங்கள்பதிலை என்னவாக வைக்கவிரும்புகிறீர்கள்?

 சட்டம் எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. அதற்கு ஏராளமான தீர்ப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். வரதட்சணைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. மக்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனால், நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நிர்பயா பாலியல் குற்ற வழக்குக்குப் பின்னால், வர்மா கமிஷன் அறிக்கை பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது. தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டன. அப்படியானால் நிர்பயாவுக்குப் பின் பாலியல் குற்றங்களே நிகழாமல் இருந்திருக்க வேண்டுமே? கொலைக்குற்றமும் அப்படித்தான். எல்லாக் குற்றங்களுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பல பிரிவுகளில் தண்டனைகள் வகுத்திருக்கிறது. குற்றங்கள் குறையவேயில்லையே. வளைகுடா நாடுகளைப் போல ’கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்’ என்ற தண்டனை முறைகளை இங்கு கொண்டு வர முடியாது. அது முறையுமல்ல. குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், மக்களின் மன நிலையில்தான் மாற்றங்கள் நிகழ வேண்டும். அது ஒன்றுதான் வழி.

?.பெண் பிறப்பு குற்றமானதல்ல. செயற்கையான கட்டுமானங்களால் பெண்கள் வளர்க்கப்படுவதால் இன்றைய ஆணாதிக்கச் சமூகத்துக்குள் வரும் போது பெண் மிரள்கிறாள் என்று ஓர் இடத்தில் வாசித்தேன். கட்டுப்பாடுகளைமீறியபெண்களுக்கானஎல்லைக்கோட்டைப்பெண்தாண்டலாமா? அதுஅவளுக்கு பாதுகாப்புத்தானா?

 ஆணோ பெண்ணோ பிறப்பு எப்படி குற்றமாகும்? யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. அது தானாகவே நிகழ்கிறது. சமூகம் இப்போதுதான் ஆணாதிக்கத்தின் கீழ் இருக்கிறதா? காலம் காலமாகவே ஆண்கள்தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள். அந்த அதிகாரத்தையும் மீறி காலம் காலமாகவே பெண்களும் தங்கள் பங்களிப்பை இந்தச் சமூகத்துக்கு வழங்கி வந்திருக்கிறார்கள். சாதித்தும் காண்பித்திருக்கிறார்கள். அப்போது பெண் சாதனையாளர் சதவீதம் குறைவாக இருந்தது; இப்போது அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கல்வி விகிதத்துடன், ஆண்களின் ஒத்துழைப்பும் ஒருசேரக் கிடைக்கும்போது, பெண்ணின் சாதனை வீச்சு வானை எட்டும் என்பதில் எனக்கு

எந்த அய்யமும் இல்லை. பெண்ணுக்கான எல்லைக்கோட்டை வகுப்பவர்கள் யார்? ஆணுக்கும் கட்டுப்பாடுகளும் எல்லைக்கோடுகளும் இருக்கத்தானே செய்கின்றன. அவரவருக்கும் அவரவர் எல்லைகள் தெரியும். யாரும் யாருக்கும் விதிகளை ஏற்படுத்த வேண்டாம். இயல்பாக நடமாட விட்டாலே பல முன்னேற்றங்களைப் பெண்கள் அடைய முடியும். சமூகத்தில் மோசமான நிகழ்வுகள் ஏற்படும்போது, அதனைக் காரணம் காட்டியே பெண்களை முடக்கும் நடைமுறைகளும் தற்போது குறைந்து வருகின்றன. இந்த உலகில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். அப்படியானால் மாற்றப்பட வேண்டியது மோசமான நடைமுறைகள்தானே தவிர, பெண்களை மீண்டும் உள்ளுக்குள் முடக்குவதல்ல என்ற புரிதல் இருந்தால் அனைத்தும் சரியாகும். வீட்டுக்குள் வைப்பதால் மட்டும் பெண் பாதுகாப்பாக இருந்து விட முடியுமா? நான்கு சுவர்களுக்குள் உலகம் இல்லை, வெளியில்தான் இருக்கிறது. வெளியுலகம்தான் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள்தான் வாழ முடியும். துணையும் பாதுகாப்பும் எப்போதும் உடன் வராது. சக மனிதர்களை நம்பித்தான் வாழ வேண்டும்.

?.அலுவலகங்களைத் தவிர்த்து பெண்களுக்கு என்று வழங்கப்பட்ட உரிமைகளை எடுத்துச் செய்யாமல் கணவன், மகன் என்று ஆண்களிடம் விட்டுவிலகும் பெண்களால்தான் அவர்களது பலம்வீணடிக்கப்படுகிறது என்றுகூறுகிறேன். இதற்கு உங்களின் விளக்கம் என்ன?

அலுவலகப் பணிகளில் திறமையாகப் பெண்கள் செயல்படுகிறார்கள் என்று ஏற்றுக் . கொள்கிறீர்கள்தானே, அலுவலகங்களில் ஆண்கள் பல நேரங்கள் இருக்கைகளில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் பெண்கள், வேலை நேரத்தை வீணடிக்காமல் திறமையாகச் செயல்படுபவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு சில பெண்கள் திறமையற்றவர்களாக இருக்கலாம், ஒட்டுமொத்தப் பெண்களையும் குற்றம் சாட்டுவது சரியாகத் தெரியவில்லை. அத்துடன், நீங்கள் குறிப்பிடும் உரிமைகள் பற்றிய கேள்வி தெளிவாக இல்லை. உள்ளாட்சியில் தேர்வு செய்யப்படும் பெண்களைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அதிகாரம் என்று வரும்போது, ஆண்கள்தான் பெண்களுக்கு முட்டுக்கட்டைகளாகப் பெரும்பாலும் இருக்கிறார்கள். பஞ்சாயத்து ராஜ் தொடர்பான பல கருத்தரங்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டு, தங்களை சுயமாக இயங்க அனுமதிப்பதில்லை என்பதுதான். பெண்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் குடும்பத்து ஆண்கள், அவர்களுக்கு முதல் எதிரி என்று நான் அழுத்தமாகச் சொல்வேன். குடும்ப வாழ்க்கையில் இடையூறு வந்து விடக்கூடாது என்பதாலேயே பல பெண்கள் இவற்றை அமைதியாகக் கடந்து போய் விடுகிறார்கள்.

 ?.பெண்ணிய எழுத்தாளர்கள் வலிந்து திணித்து பெண்களுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள் என்றகுற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. இந்த குற்றச்சாட்டு சரியானதுதானா? இல்லை வலிந்து திணிக்கப்பட்ட வழக்குதானா?

 பொதுவாகவே இங்கு பெண் எதிர்ப்பு மனநிலை நிலவுவதாகவே தோன்றுகிறது. பெண்கள் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பது தவறானதா என்பது புரியவில்லை. பெண்கள் பெருவாரியாக எழுத வந்திருப்பது சில பத்தாண்டுகளுக்குள்ளாகத்தான். பெண்களின் பிரச்சனைகளை, அவர்களின் பாடுகளை இன்னமும் ஆண்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதில் உளவியல் சிக்கல்களும் இருக்கின்றன. காலம்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த பெண், தனக்கான உரிமைகளை இன்னமும் முழுமையாகப் பெறவில்லை. பெண் கல்வி கற்க ஆரம்பித்திருந்தாலும், பாதியில் கல்வி பறிக்கட்டு வீட்டுக்குள் முடக்கப்படுவதும், திருமண பந்தத்துக்குள் அடைக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் பெண்கள் மீது கரிசனத்துடன் எழுதுவதும் பேசுவதும் தவறில்லை என்றே நினைக்கிறேன். பெண் பற்றிய பார்வைகள் மாற்றிக் கொள்ளப்பட வேண்டும்.

?.இன்றைக்கு எல்லா பெண்களும் வேலைக்குச் செல்வதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களும் ஏதோபெருமைக்காக பணிக்குச்செல்பவர்கள் அல்ல. அதிலும் அதிக சம்பளம் வாங்கும் பெண்கள் என்பதுகுறைவு. வயிற்றுப்பிழைப்பிற்காகவே பணிக்குச் செல்லும் சூழலில், எங்கு சமையலறை ஒழிகிறதோ அங்குதான் உண்மையான பெண்விடுதலை இருக்கும்  என்பதான தங்களின் கருத்துகள் இன்றைய மரபைமீறி எப்படி விடுதலையைத்தரும்? அடுக்களை என்பது அகற்ற வேண்டியபொருளா?

 அடுக்களை என்பது பெண்ணுக்கு மட்டுமேயானதல்ல, ஆணும் சமைக்கலாம். வீட்டுப் பணிகளை ஆண்களும் பகிர்ந்து கொள்ளும்போது பெண் ஊதியம் பெறும் வேலையை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்தானே? பெரும்பாலான வீடுகளில் பெண்தான் சமைக்கிறாள். மிகவும் அவசியமான பணி அது, ஆனால், சலிப்பூட்டும் வேலையும் கூட. ஒவ்வொரு வீட்டிலும் காலையில் பெண்தான் வீட்டு வேலைகளை செய்யத் துவங்குகிறாள். அதிலும் பணிக்குச் செல்லும் பெண்ணுக்கு இரட்டிப்புச் சுமையாக வீட்டுப்பணிகள் அவள் தோள்களை அழுத்துகின்றன. மாலையில் வீடு திரும்பிய பின்னும் அவள்தான் சமையலை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஆணுக்கு அப்படியான நிர்பந்தங்கள் ஏதுமில்லை. இந்த விஷயம் பற்றி கனிவுடன் நோக்கினால், இந்தக் கேள்வியே எழாது. வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அடுக்களை ஒழிய வேண்டிய அவசியமும் இருக்காது. சென்ற நூற்றாண்டுப் பெண்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். அனைத்து வேலைகளையும் செய்தார்கள். உடல் உழைப்பை அதிகமாகச் செலுத்தினார்கள். பெண் வெளியில் பொருளீட்டச் செல்லும்போது, அவள் வேலைகளை நவீன சாதனங்கள் பகிர்ந்து கொண்ட அளவு கூட

ஆண்கள் பகிர்ந்து கொள்ளவில்லையே. அதையும் வீட்டிலிருக்கும் வேறு பெண்கள்தானே செய்தார்கள். ஒரே ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும். சாப்பிடுவது அனைவரும், ஆனால், சமைப்பது மட்டும் ஒருவர். இங்கு வேலைப்பங்கீடு பற்றி ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்தத் தலைமுறையைச் சார்ந்த பல இளைஞர்கள், சமையல் உட்பட வேலைகளைப் பகிர்கிறார்கள். சென்ற தலைமுறை ஆண், ஆதிக்க மனோபாவத்துடன், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் நடந்து கொள்கிறான். இப்போது சமையலறை தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவள் பெண்தான். பெண் அனைத்தையும் பொறுத்துக் கொண்டதால்தான், விவாகரத்துகள் குறைவாக இருந்தன. காலம் மாறுகிறது. நாமும் அதற்கேற்ப மாறாவிடில் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதுதான்.

 வீட்டிலிருந்து கொண்டு, நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்துதானே, ‘அவர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்’ என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறோம். பெண்களே கூட தங்களைப் பற்றி அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். காரணம், அவர்கள் உழைப்பின் மதிப்பு பற்றி அவர்களுக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை. இலவசமாக அந்த உழைப்பு செலுத்தப்படுவதே அதற்குக் காரணம். இதையே வெளியில் சென்று வேறொரு வீட்டுப் பணியாகச் செய்யும் பெண் குறைந்தபட்சம் மாதம் 2000 முதல் 5000 வரை ஊதியமாகப் பெறுகிறார். அங்கு அவரது உழைப்பு மதிக்கப்படுகிறதே. அப்போது உங்கள் வீட்டில் நாள் முழுதும் உழைக்கும் பெண்ணுக்கு ஊதியம் கொடுக்கும் நிலை வந்தால் உங்களுக்குக் கட்டுப்படியாகுமா?

?.குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை வளர்ப்பு என்பதும் அவளைச்சார்ந்துதானே இருக்கிறது. தாய்ப்பால்தரும்பெரும்பங்குஅவளுக்குவழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் தகப்பனைவிட அதிகஅருகாமையை விரும்புவது தாயிடம்தான் அப்படியிருக்கையில் குழந்தை வளர்ப்பு பெண்ணுக்கானதுஎ ன்பது இங்கு எழுதப்படாத சட்டம் என்றவாசகம் தங்கள் கட்டுரை ஒன்றில்இருக்கிறது. பெண் அதிலிருந்து விலகவேண்டும் என்கிறீர்களா-?

 ஆம், எல்லா வேலைகளையும் பெண்தான் இங்கு செய்து வருகிறாள். தாய்ப்பால் தருவதும் பெண்தான். ஆனால், குழந்தைகளுக்கான பிற தேவைகளை ஆணும் செய்ய முடியும், கவனித்துக் கொள்ள முடியும். இது வறட்டுத்தனமாகத் தோன்றலாம். வீட்டுப்பணி, குழந்தை வளர்ப்பு இதிலெல்லாம் ஆண்களும் பங்கு பெற முடியும் என்பதுதான் உண்மை. ’குழந்தைவளர்ப்புபெண்ணுக்கானதுஎன்பதுஇங்குஎழுதப்படாதசட்டம்’ என்பதாக இருப்பதால்தான் இப்படியான கேள்விகளும் எழுகின்றன. பெண் அதிலிருந்து விலக வேண்டும் என்பதை விட, ஆணுக்கும் குழந்தை வளர்ப்பில் பங்கிருக்கிறது என்பதையே அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.

 ?.ஒருசமூகத்தின் பெருமை குடும்பத்தின் பெருமைஅதுபெண்ணின் கையில்தான் இருக்கிறது என்ற  கூற்றில் பிற்போக்குச் சிந்தனை மேலோங்கிநிற்பதாக நினைக்கிறீர்களா?

 ஆம்.

 ?.ஆண்களின் பெண்ணியச் சிந்தனைப் பார்வைக்கும் பெண்களின் பெண்ணியப் பார்வைக்குமான கருத்தாடல்களில் வேறுபாடு உள்ளதாயார்கருத்தில்?

 நிச்சயம் வேறுபாடு உள்ளது. ஆண் என்னதான் முற்போக்கு பேசினாலும், அவனையறியாமலே தன் கருத்திலும் செயலிலும் பேச்சிலும் ஆதிக்க மனோபாவம் மேலோங்கி விடும்.

?.சமீபத்திய திரைப்படக் காட்சியொன்றில் பெண் என்பது குறில், ஆண் என்றசொல்  நெடில் ஆண் என்றச் சொல்லின் உச்சரிப்பே பலமானதாக உள்ளது. அதனால் அவள் அடங்கிப்போக வேண்டியவள் என்றபுரிதல் ஒன்றுநெருக்கமான காட்சியொன்றில் வைக்கப்பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திரையுலகின் அத்துமீறல் ஏற்புடையதுதானா?

 அந்தத் திரைப்படம் முற்றிலுமே ஆணின் பார்வையிலான படம் என்கிறபோது, ஒரு காட்சி, ஒரு வசனம் பற்றி மட்டும் என்ன சொல்ல? அந்த இயக்குநர் பெண்களுக்கு சார்பாகப் படம் எடுப்பதாகச் சொன்னாலும், அவரை அறியாமலே தன் போக்கில் எல்லாம் நிகழ்கிறது.

 ?.பெண்களுக்கெதிரான வன்முறைச்சட்டம் & இதுபெண்ணினத்திற்கு எதிரான குற்றத்தை தடுப்பதற்கானது பொதுவெளிக்கு வருவது. திருமண வல்லுறவுக்கு எதிரானச் சட்டம் & குடும்ப அமைப்பை கேள்வி கேட்பதாக உள்ளது இவை இரண்டையும் எப்படி இணைக்கிறீர்கள்?

 எந்த அமைப்பாக இருந்தாலும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதுதான். குடும்பம் என்பதாலேயே அங்கு நிகழ்பவை அனைத்தும் நியாயம் என்று ஆகி விடாது. முதலில் நம் குடும்பங்களில் ஜனநாயகம் இருக்கிறதா? திருமணம் செய்து கொண்டு விட்டதாலேயே சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆணுக்கு சொந்தமாகி விடாது. பரஸ்பரம் இணக்கம் இருந்தால் மட்டுமே ஆண் பெண் உறவு இனிமையானதாக இருக்க முடியும். வெறுப்பு மீதூற பெண் இருந்தாளென்றால், அந்த வாழ்க்கைநீடிக்காது.பெண் வேண்டாம் என மறுக்கும்போதுஅதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் எங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகள் சொல்லும் உண்மைகள் முகத்தில் அறைபவை. பெண் உடல் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் அதை உறுதி செய்கின்றன. சிகரெட் நுனியால் சுடப்பட்ட காயங்கள், பிளேடுக்ளைக் கொண்டு கீறப்பட்ட காயங்கள், வெறி நாய்களைப் போல் உடலெங்கும் கடித்துக் குதறப்பட்டவை, பற்குறிகள், அதன் விளைவாக சீழ் பிடித்த புண்கள், வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைக்கப்பட்டவை என ஏராளம் உண்டு. எத்தனை திருமணங்கள் முதல் இரவோடு விவாகரத்து நோக்கி நகர்கின்றன? காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வது போல ஏன் அப்படி அலைய வேண்டும்? இவையெல்லாம் காதலில் சேர்த்தியா? அப்படியாவது பெண்ணுடலை பலி கொடுக்க வேண்டுமா? இந்தக் குடும்ப அமைப்பு உடைந்து சிதறினால்தான் என்ன?

 ?.இன்றைக்கு பெண்பிள்ளைகள், கல்லூரி, பள்ளி மாணவிகள் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பது போன்று ஊடகச்செய்திகள் அரசியலுக்காக சித்தரிக்கப்படுவது அல்லது திணிக்கப்பட்டச் சித்தரிப்பாக காட்டப்பட்டது. பெண் அழகியலுக்கு மட்டுமல்ல அவமானத்துக்கும் காட்சிப்படுத்தப்படும் சூழலை எப்படிபார்க்கிறீர்கள்?

 விதி விலக்குகளைப் பொதுவில் வைக்காமல், எத்தனை சதவீதம் பெண்கள் குடிக்கிறார்கள் என்பதைத் தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடும் பெண்கள் குடியின் குரூரத்தையும், கொடுமையையும் நன்கு உணர்ந்தவர்கள். அதனாலேயே தங்கள் வீட்டு ஆண்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று விரும்புகிறார்கள். குடித்து விட்டுத் தெருவில் விழுந்து கிடப்பவனை, வீட்டுக்கு வந்து மனைவி, மக்களை அடித்து மிதிப்பவனை, வருமானத்தில் பாதியை அல்லது முழுவதையும் குடியில் அழித்து, குடும்பத்தை நட்டாற்றில் விட்டவனை, குடித்த பின் பிற பெண்களைச் சீரழிப்பவனை, சில குடும்பங்களில் பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்தவனை எல்லாம் இந்தச் சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எந்தப் பெண்ணாவது இப்படி எல்லாம் நடந்து கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்களிலும் மனிதக் கழிவகற்றும் பணி செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், குப்பை அகற்றுபவர்கள் என கடுமையான உடலுழைப்பைச் செலுத்துபவர்கள் குடிக்கிறார்கள். இவ்வளவு அருவறுப்பு மிக்க தொழிலைச் செய்பவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களையாவது இந்த அரசு வழங்கியிருக்கிறதா? அவர்களைக் கருணையோடு பார்க்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாகவே வைக்கிறேன்.

 ?.அன்றையகாலச்சூழலில் இருந்துமாறுபட்டு நவீன கலாச்சாரஆடைகள்தான் பெண்கள்மீது அதிகஈர்ப்பை உருவாக்கி ஆண்களைச்சலனப்படுத்தி அத்துமீறல்களுக்கு காரணமாக்குகிறது என்று ஒரு சாரார் வாதிடுகையில், பெண்கள் லெகின்ஸ் என்ற இறுக்கமான உடையணிவதை நீங்கள் வரவேற்று கட்டுரை வடித்திருக்கிறீர்கள். உங்கள்பதில்என்ன?

 ஆரம்ப நிலையில்ஆபாசம் என்றும் அருவெறுப்பாகவும் வரையறுக்கப்படும்ஒரு விசயம்கால ஓட்டத்தில்பண்பாடாகமாறி விடுகிறது.  பெண்கள் நைட்டி அணிய ஆரம்பித்தபோதும் இப்படித்தான் எகிறிக் குதித்தார்கள். இன்றுஅதை யாரும்ஆராய்ச்சி செய்கிறார்களா? பெண்களைஓர் நுகர்வுப்பொருளாகப்பார்ப்பதும் அவர்களைஅடக்கியாளவேண்டுமென்றுநினைப்பதும்ஆணாதிக்கச்சமூகத்தின்வெளிப்பாடு.  ஒரு பெண்பொதுவெளியில் நிர்வாணமாகநிற்பதுஆபாசமல்ல,அவளை  நிர்வாணப்படுத்துவதுதான்ஆபாசம். இந்தியராணுவத்தின்அத்துமீறலைக் கண்டித்து  மணிப்பூரில் நூற்றுக்கணக்கானபெண்கள் நிர்வாணப்போராட்டம் நடத்தினார்களே.இங்கு நிர்வாணம்என்பதுஆபாசமா? ஆயுதமா? எதைஎப்படிக்கையாள வேண்டும்என்பதுபெண்களுக்குத் தெரியும்,அவர்கள் எல்லாம் உலகம் அறியாக் குழந்தைகள் அல்ல. எந்த உடை என்றபோதும் சலனப்படாமல் இருக்க முதலில் ஆண்கள் கற்றுக் கொள்ளட்டும். ’ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், அதனால் பெண்கள் பர்தா அணிந்து கொள்ளட்டும் என்பதாக இருக்கிறது உங்கள் கேள்வி. உடை என்பது அவரவர் உரிமை. பார்வையிலும் கண்ணியம் இருக்கட்டும் என்பது எப்படி தவறாகும்?   

 ?.ஆடைக்கலாசாரம் தான் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு அதிகம் காரணம் என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த ஒருசிறுமிப ள்ளிச்சீருடையில் தானேஇருந்தாள். அப்படியானால் ஆடைஎன்பது ஒருபொருட்டல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

 உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டாள். 3 வயது ரித்திகாவுக்கும் அதேதான் நடந்தது. ஆண் மன வக்கிரங்களுக்கு வயது பேதம் ஏதுமில்லை. சேலை, சுடிதார், லெகின்ஸ் என எதுவாக இருந்தாலும் பெண் இங்கு பலியாவாள். பாலியல் கல்வி இல்லாததும், பெண் உடல் காமப் பண்டமாகப் பார்க்கப்படுவதும் தான் இதற்குக் காரணம். சிறு வயது முதலே ஆண் பெண் வித்தியாசங்களும், அது குறித்த புரிந்துணர்வு இல்லாமையுமே இதற்கெல்லாம் காரணங்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் படங்கள், செக்ஸ் என்றால் என்னவென்று புரியாத நிலை அனைத்தும்தான் காரணமே தவிர பெண்ணின் உடையல்ல. பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப் போல சக உயிர் என்ற எண்ண ஓட்டம் இல்லாததும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளாவிடில், சீரழியப் போவது சம்பந்தப்பட்ட ஆண்களும் அவர்களின் குடும்பங்களும்தான்.

 ?.பெண்களின் அழகைவசீகரத்தை பயன்படுத்திக் கொள்ளும் தொழிற்துறை அங்கீகாரத்தை மட்டும் அதிகம் அளிப்பதில்லையே இதற்கு யார்காரணம்? பெண்களின் பின்வாங்கும் குணத்தினால் தானா?

 எந்த நிறுவனமும் அழகை மட்டுமே முதன்மைப்படுத்துவது இல்லை. திறமையைத்தான் அனைவருமே ஏற்பார்கள். திரைத்துறை வேண்டுமானால் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். அங்கும் நிலைமை மாறி விட்டது. பெண்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை. அவர்கள் திறமையை வளர்த்தெடுக்காதது அவர்களின் பெற்றோரின் குற்றமாகத்தான் இருக்கும்.

 ?.பெண்ணைச் சார்ந்த புனிதமே அவளுக்கெதிரான துன்பத்துக்கும் பாதை போடுகிறது. ஆணாதிக்கச் சமூதாயத்தில் பெண்களின் ஒழுக்கம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அவள் கற்புநிலை சோதனையிடப்படுகிறது. உச்சக்கட்டமாக பெண் உறுப்புக்குப் பூட்டுப் போட்டசெயலைக் கூட, படித்துவிட்டோம். இதன் காரணமாகப் பெண்வாழ்க்கை சிதறடிக்கப்படுவதை எப்படிபார்க்கிறீர்கள்?(சமீபத்தில்மகராஷ்ட்ராவில்  முதலிரவுஅறைக்குவெளியே பஞ்சாயத்தார்கள் காத்திருந்துஅவளது கற்பு  நிலைஅடையாளம் தரவில்லை என்று விவாகரத்துக்குஅ னுமதிதந்தது. அவளுக்கு முதல் திருமணம் ஆனால் அவனுக்கு அது இரண்டாவது திருமணம் & என்னிடம்கட்டுரைஉள்ளது)

 ஆப்பிரிக்கப்பெண்களின் மீதுஅரைக்கச்சைஎன்றபெயரில்பிறப்புறுப்பின் மீதுகட்டுப்பாடுவிதிக்கப்படுகிறது. மிகக்கொடூரமானமுறையில்உயிரிழப்பைஏற்படுத்தும் வகையில்அந்தஅறுவைசிகிச்சைஅப்பெண்களுக்குச்செய்யப்படுகிறது. பெண்ணுடல் மீதும், தன் இணையைத் தேர்வு செய்யும் பெண்ணின்உரிமை மீதும்செலுத்தப்படும்பெரும்வன்முறைஅது. அங்கே, அறுவைசிகிச்சை மூலம்செய்கிறஅவ்வன்முறைக்குச்சற்றும்குறைந்ததல்ல,இங்கு நிகழ்த்தப்படும் ’கற்பு’ என்ற சொல்லாடல் வன்முறை. ’கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ இதை நான் சொல்லவில்லை. வள்ளுவரே சொல்லி விட்டுப் போய் விட்டார். ’கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ இதையும் முண்டாசுக் கவிதான் பாடி வைத்திருக்கிறான். இதற்கு மேல் நான் என்ன சொல்ல? பெண்ணிடம் ஒழுக்க நெறிகளை எதிர்பார்க்கும் மனமும் குணமும், தன் மனதிலும் முதுகிலும் இருக்கும் கறையைப் பார்க்க மறுப்பதுதானே இங்கு நியதி. இப்போதெல்லாம் பெண்கள் காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி வீசுவது போல், விவாகரத்து செய்து விட்டு அடுத்த திருமணம் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நட்டமடையப் போவது ஆண்களும், சந்தேகப் பேர்வழிகளும்தான். ஆண்களுக்கே இப்போது இதெல்லாம் புரிந்து விட்டது, தாங்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று.

 ?.பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெண்கள் தங்களால் இயன்றதைச் சிறப்பாகச் செய்தாலே  அதுஅவர்களுக்கான முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக அமையும். இப்போது பெண்ணியம் பேசவேண்டிய அவசியம்இருக்காதே?

 பெண்ணியம் என்பது ஒரு கோட்பாடு. அதைக் கண்டு ஏன் இவ்வளவு மிரள்கிறீர்கள்? உண்மையில்ஆண்களின்போதாமையைத்தான்இது காண்பிக்கிறது. பெண்களைமதிக்காதஅவலட்சணமானபோக்கைக்காட்டுகிறது. பெண்ணைசகமனுஷியாகஏற்றுக் கொள்வதால்என்னகெட்டுப் போகிறதுஎன்று ஆண்களும்கொஞ்சம் யோசிக்கலாம். ஆண்களைத்தான் நாம்கேள்வி கேட்க வேண்டிஇருக்கிறது. ‘உனக்கென்னபி ரச்சனை? ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்? கலவரப்பட வேண்டும்’ என்றுகேட்க வேண்டும். ஆண்களின் போதாமை, பெண்களை மாண்போடு நடத்துவதில்அவர்களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணம்.

 

?.அரசுத்துறைப் பெண்களின் பேறுகாலவிடுப்பு ஆறுமாதத்திலிருந்து ஒன்பதுமாதங்களாக அதிகரித்திருக்கும் செய்திபொது வெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தாவிட்டாலும்,அரசுத்துறை ஆண்கள்மத்தியில் ஒரு குறுகுறுப்பைத்தந்துள்ளது தெரிகிறது. இது ஒரு தேவையற்ற விடுப்பு? வாக்கு அரசியலின் வழிபாடு இது என்பதான ஒருகூற்றையும் கேட்கமுடிகிறது? உங்கள் பார்வை என்ன?

 ஆண்கள்வயிற்றில்குழந்தையைச்சுமக்கப் போவதில்லை. உடல்ரீதியாகத்துன்பப்படப்போவதில்லை. இவற்றைப்பகுத்தறிவோடுபுரிந்து கொள்வதற்கானபண்பாடுநம்மிடம்இல்லை. ஓராண்டு காலம் வரை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்கிறது  குழந்தை மருத்துவ அறிவியல். பெண்கள்தான் குழந்தையைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதையும் ஆண்கள்தான் சொல்கிறார்கள். பின்னர், அவர்கள் பிரசவ கால விடுப்பில் செல்வதும் ஆண்களை பாதிக்கிறது என்கிறார்கள். வாக்கு அரசியலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆண்களின் மனநிலையில் கோளாறு இருப்பதாகப்படுகிறது. பெண் என்ன சுமை தாங்கியா? எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள?  

?.ஆண்களைச் சாடுவதே பொதுவாகப் பெண்ணியம் பேசுவதுஎன்பது போன்ற தோற்றம் நிலவுகையில்ஆடைக் குறைப்புக்கும், பெண் உடலியல் குறித்து எழுதுவதற்கும் பெண்ணியத்தை ஒருகருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் உள்ளது? தங்கள் கருத்துஎன்ன?

 பரபரப்பாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கு மட்டுமே ஒருவெளி உருவாகி இருக்கிறது.. இந்தப்பரபரப்புக்கெல்லாம் இடையில் நாம்வேறொரு விஷயத்திலிருந்துதொடங்க வேண்டிஇருக்கிறது. ஆண்களைச் சாடுவதுதான் பெண்ணியம் என்று பேசிக் கொண்டிருப்பதையெல்லாம் தாண்டியும்வேறுபல விஷயங்கள் இருக்கின்றன. உழைக்கும்பெண்கள், தலித்பெண்கள், வெளிநாட்டில்பணிப்பெண்ணாகஇருந்துகஷ்டப்படும்பெண்களின்பிரச்சனைகள்எனஎவற்றையாவதுஇங்கு பேசமுடிகிறதா? ஆண்கள்தான் பெண்ணின் உடலை அங்கம் அங்கமாக வர்ணித்து எழுதி வந்திருக்கிறார்கள். அதை எளிதாக ஏற்றுக் கொண்டவர்களால், பெண்கள் தங்கள் உடலின் பாடுகளை, மாதாந்திர வலிகளை, அவர்கள் உடல்ரீதியாக அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி எழுதுவதை மட்டும் ஏற்க முடியாதா? பெண்ணுடல் கிளுகிளுப்பானது மட்டுமல்ல, வலியும் வேதனைகளும் நிரம்பியது என்பதையும் உணர வேண்டும். இங்குதான் ஆண் பார்வையும் பெண் பார்வையும் வேறுபடுகிறது. பாலியல் பண்டமான பெண்ணுடலை ரத்தச்சகதி நிறைந்ததாய்ப் பார்க்க ஆண் மனம் மறுக்கிறது.

 ?.தாங்கள் கடந்து வந்தவாழ்க்கை அனுபவத்திலிருந்து ஏதாவது நிறைவாகச் சொல்ல விரும்புகிறீர்களா?

 மிகுந்த சலிப்புதான் மேலோங்குகிறது. கேள்விகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதை ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் பார்வையாகவே எதிர்கொள்கிறேன். பெண்களுடையமனமும்வாழ்க்கையும்மாறியது போலஆண்களுடையதுமாறவில்லை. அவர்கள்இன்னமும்பழங்காலத்திலேயேஇருக்கின்றனர். அவர்கள்குழப்பத்தில்இருக்கின்றனர். பெண்களின்வாழ்க்கைமாறிவிட்டவேகத்துக்குஅவர்களால்ஈடு கொடுக்கமுடியவில்லை. ஒருவேளை, வித்தியாசமாகச்சிந்திக்கநினைத்தால்கூடஆண்அறிவாளி  உலகமும், ஆண்ஆதிக்கஉலகமும்அதைப்பண்பாட்டளவில்அனுமதிப்பதில்லை. வித்தியாசமானஆண்களுக்கும்கூடஇதுபெரியசங்கடம்தான். சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே, படித்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதியிலேயே இப்படியான கேள்விகள் எழும்போது, சாதாரணமானவர்கள் எவ்வாறு பெண்களை நோக்குகிறார்கள் என்பதை உணர முடிகிறது. பெண் என்பவள் ஒரு பாலியல் பண்டமாக, வெறும் உடலாக, சுமைதாங்கியாக, வீட்டுப்பணி, அலுவலகப்பணி என்று எந்த நேரமும் அதிலேயே உழலக்கூடியவளாக மட்டுமே இருக்க வேண்டும் என சமூகம் விரும்புகிறதோ எனத் தோன்றுகிறது. பெண்கள் கடந்த நூற்றண்டை விட தற்போது கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால், அதே நேரம் முன்பிருந்ததைப் போலவே அவள் தன் வாழ் நிலையைக் கைக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதை எப்போது உணரப் போகிறார்கள்.

 மீண்டும் மீண்டும் நான் சொல்வது, பெண் கால மாறுபாட்டுக்கும் நாகரிகத்துக்கும் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், ஆண் மனமோ பெண் பற்றிய சென்ற தலைமுறை பார்வையையே மாறாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. தன் மனைவியிடம் பிடிவாதமாக இருக்கும் ஆண், தன் மகளிடம் அதைக் கொண்டு செலுத்துவதில்லை. அப்போது பாசம் அதை ஆமோதிக்கிறது. அதையே அனைவரிடமும் செலுத்தட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் தேவை, காலங்கள் தோறும்.

 

 

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *