மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        முல்லை தாரிணிmullai tharini

பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது .

“சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை என் காதில் விழுந்த அடுத்த நொடியே நான் இன்றே தப்பியாக வேண்டும் எனும் எண்ணம் வேரூன்றிக்கொண்டது. நான் வீட்டிலிருந்து வரும்போது அணிந்துவந்த ஆடையை மீண்டும் எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்கும் வாளியுடன் சென்றேன். ஒழுங்காக பயிற்சி கொடுத்து முடியவில்லை என்று வலியுறுத்திய நம் பொறுப்பாளரின் முடிவை, ஆட்கள் தட்டுப்பாடு எனும் காரணம் எங்களை இவ்வளவு வேகமாக சண்டைக்களத்தில் இறக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது ஆடையை கைகளுக்குள் அடக்கிய படி ஒவ்வொரு தென்னை மரமாக ஒளிந்து ஒளிந்து இருள் சூழ்ந்த வீதியை அடைந்தேன். பயமும், கவலையும் சேர்ந்து என்னை ஆக்கிரமித்தது. பயிற்சிமுகாமிற்கு அருகில் மக்கள் எவருமில்லை என்பதும் அவ்வாறும் தங்கள் வீடுகளுக்கு ஓடிச்சென்றவர்களை வீட்டிலிருந்து போராளிகள் மீட்டும் பயிற்சி முகாமில் ஒப்படைப்பதும் ஒருவர் ஓடிவிட்டால் ஏனைய இயக்க பேஸ்களுக்கு தகவலை அறிவிப்பதும் வழமையாக நடக்கும் விடையமே.

இன்று என்னைக் காணவில்லையென அறிவித்திருப்பார்கள் என்பதும் எனைத் தேடி வருவார்கள் என்பதையும் சிந்தித்தபடி நடந்தவேளை ஒரு லைற் வெளிச்சம் எனை நோக்கி வருவதை உணர்ந்து மறைந்து கொண்டேன். ஏழு போராளிகள் வெளிச்சத்தை பின்தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை கண்டதும் பயம் நெஞ்சை அடைத்து எதுவித அசைவுமின்றி பனைவடலியாக மாறி நின்றேன். வெளிச்சம் சில நொடிகள் அதே இடத்தில் நின்றுவிட்டு எனைத் தாண்டி நகர்ந்து சென்ற பின்பே மீன்டும் என்னுயிர் என்னை வந்து சேர்ந்தது. நான் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள போராளிகளின் பேஸ்களின்; மின்விளக்குகள் எல்லாம் ஒளியைப்பரப்பி ஒளிந்திருந்த எனைத்தேடுவது போல் காணப்பட்டன. அவ்விடத்திலேயே எனது உடைகளை மாற்றியதுடன் எத்திசை போவது? மாத்தளன் எனும் இடம் எத்திசையில் உள்ளது? என்பது கூட தெரியவில்லையே என யோசித்தபடி இருந்தவேளை என் காதுகளுக்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து கதைக்கும் சத்தம் கேட்டதும் என் மனதிற்கு சிறு நம்பிக்கை பிறந்தது. இவ்விரவு வேளையில் ஆண் போராளியும் பெண் போராளியும் சந்தித்து கதைப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவே யாரோ குடும்பத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டேன். மெதுவாக சத்தம் கேட்ட வீட்டினருகே நின்ற தென்னை மரத்தின் பின்னே நின்று அவர்களின் கதைகளை செவிமடுத்தேன்.

 “இவங்கள் ஏன்தான் பிள்ளைகளின்ற விருப்பமின்றி பிடித்துவாறானுகள் இந்த செல்லடியில் அம்மா அப்பாவ பிரிஞ்சு எவ்வவளவு கவலைப்படுங்கள்…” என கதை நீண்டு செல்வதைக்கண்டு அவர்கள் முன் போய் நின்று அழத்தொடங்கினேன். என் அழுகைiயை நிறுத்தும்படி கூறியதுடன் நடந்ததை அறிந்துகொண்டனர். போராளிகளின்; தலைமுடி கட்டப்படும் முறையில் காணப்பட்ட எனது பின்னலை அவிழ்த்து ஒற்றைப்பின்னலில் தளர்வாகக் கட்டச் சொல்லியதுடன் ஒரு தட்டில் வெள்ளைமா பிட்டும் கோழியிறச்சி சொதியும் தந்து சாப்பிடச் சொன்னார்கள் இப்பகுதியில் தாங்கள் மட்டும் இருப்பதாகவும் யாரும் ஓடிவிட்டால் அவங்கள் தேடிவருவதாகவும் கூறினார்கள். அப்படி தேடிவந்தால் நானாகவே வந்து பதுங்கு குழியில் இருந்ததாக அவர்களிடம் கூறும்படியும் சொல்லி என்னை அவர்களுடைய பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பதுங்குகழியில் இருக்குமாறு கூறினார்கள். காலைப்பொழுது முடிவதற்கு முன் போராளிகளின் கண்னில் படாமல் போகும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள். என்னை மீண்டும் பிடித்துவிடுவார்களா என பலமுறை எழுந்த கேள்வியையும் தாண்டி என்மனம் நினைவலைகளை முன்நோக்கி நகர்த்திச்சென்றது.

– – – – – –mullai tharini.jpg 1

சண்டை தொடங்கி இராணுவம் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார், வெள்ளாங்குளம், மல்லாவி, பூனகரி, கிளிநொச்சி என ஒவ்வொரு இடமாக கைப்பற்றிய வண்ணம் உள்ளது. வன்னி மக்கள் ஒவ்வொரு இடமாக கைகளில் பைகளுடன் உறவுகளை உயிர்த்தப்பவைக்கும் முயற்சியில் இடம்விட்டு இடம் மாறுகின்றனர். 06.02.2009 எங்களுடைய கிராமம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றது. 5 ஏக்கர் காணியில் ஒரு வீடு என இருந்த காணிகள் எல்லாம் எண்ணிலடங்கமுடியா தற்காலிக வீடுகளாக நிரம்புகின்றன. குண்டுகளின் சத்தத்துடன் மக்கள் கூட்டத்தின் சத்தமும் இணைந்து ஏதோ பேரவலம் நிகழப்போகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அதுவரை நாங்கள் இடம்பெயரும் நிலை வராது என்ற எண்ணமும் நம்பிக்கையும் எனக்குமட்டுமல்ல எங்கள் ஊர்மக்களுக்கும் இருந்தது இவ்வாறு எங்கள் காணியில் வந்து குடியிருந்தவர்கள் அனைவருக்கும் முதல் நாள் உணவு கொடுப்பதும், மக்களை பார்வையிடுவதும்;;;, அவர்களுடன் கதைப்பதும் என ஓர் இனம்புரியாத சந்தோசம் எனக்கும் சகோதரர்களுக்கும் இருந்தது. புடவைக்காரர்களும் அவர்களுள் இருந்தமையால் அம்மாவிடம் அடம்பிடித்து பல உடைகள் வாங்கினோம்.

 சில நாட்களில் விடுதலைப்புலிகள் கொண்டுவந்து குவிக்கப்பட்டார்கள். அடுத்து எங்கள் இடத்தில்தான் சண்டை நடக்கப்போகிறது என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை அப்படையணியில் எனது அக்காவும் காணப்பட்டார். இதை அறிந்த அப்பா பல சோடாப் போத்தல்கள், விஸ்கட் என வேண்டிக் கொடுத்ததுடன் அக்காவை ஓடிவரும்படியும் யாருக்கும் தெரியாமல் கேட்டுக் கொண்டார். அக்காவும் ஆம் என சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். அப்பாவோ அக்கா வருவார் இடம்பெயரவேண்டி வந்தாலும் நாங்கள் போகாமல் இருட்டுமடு வழியாக ஆமியிடம் தஞ்சம் புகுவோம் என எங்களிடம் கூறினார்;. எங்களின் கற்பனையில் தோன்றியிருந்த இராணுவம் என்றால் பயங்கரமான மிருகம் எனும் எண்ணம் பயத்தையே ஏற்படுத்தியது. அப்பா எங்களைக் குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல மண்மூட்டைகளை வைத்து பங்கர் அமைத்தார். இராணுவம் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறது என அறிந்த மக்கள் ஓடத்தொடங்கினர். செல்கள் அருகருகே விழத்தொடங்கின எங்களுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை அக்காவும் வரவில்லை, இராணுவத்திடம் சரணடையவும் முடியவில்லை, எனவே எங்களையும் காணியில் இருந்த பலரையும் ரெக்டரில் ஏற்றியபடி அப்பா நகர்ந்தார். சிறிது தூரம் சென்றதும் வாகனங்கள் நகரமுடியா அளவிற்கு வாகனநெரிசலும், சனநெரிசலும் காணப்பட்டது எனவே எங்களை சிறிதுதூரம் நடந்து அம்மன் கோவிலில் இருக்குமாறு கூறிவிட்டு சிலவேளை அக்கா வந்து தேடுவார் என அப்பா மீண்டும் வீடுநோக்கி நடந்தார். காயப்பட்ட போராளிகளை ஏற்றும் வாகனம் மாறி மாறி ஓடியபடி காணப்பட்டது. அதில் ஒரு வாகனத்தில் அப்பாவின் அண்ணன் மகனும் சாரதியாக இருந்தார். அவரும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர். காயப்பட்ட அனைவரையும் ஏற்றுவது கிடையாதாம் இலகுவில் காப்பாற்றகூடிய போராளிகளை மட்டுமே ஏற்றுவார்களாம். மருத்துவமனையின் இடவசதியின்மை, மருந்துகளின் தட்டுப்பாடு போன்றனவே இதற்கு காரணமாகக் காணப்பட்டது.

 காயப்பட்டோர் வாகனம் சனநெருசலின் மத்தியில் வந்து கொண்டிருக்கிறது. இன்னாரின் மகளிற்கு காயமாம் எனும் செய்தி அப்பாவின் காதுகளிற்கு வாகனம் வருவதற்கு முன்னே வந்து சேர்கிறது. அப்பா தற்காலிகமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையை நோக்கி நாங்கள் இருந்த அம்மன் கோவிலையும் தாண்டி அழுதுபுலம்பியபடி ஓடிக்கொண்டிருந்தார். எங்களுக்கோ எதுவும் புரியவில்லை நாங்களும் அழுதபடி அப்பாவின் பின்னே ஒடினோம். அக்கா மயங்கிய நிலையில் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் கிடத்தப்பட்டுள்ளார். அப்பா என்ன செய்வதென்று தெரியாது அக்காவை சுற்றி ஒடியபடி அழுகிறார்;, அம்மா தரையில் விழுந்து அழுகிறார்… நாங்களும் அழுதபடியே நின்றோம்.

 நெஞ்சின் கீழ்ப்பகுதியில் காயம் பட்டு இனி உயிர் பிழைக்க முடியாது எனும் நிலையில் போடப்பட்ட அக்காவை தனது தங்கை என பல தடவை கேட்டே தூக்கிக் கொண்டு வந்ததாக அண்ணா சொன்னதும் கடவுளின் கருணைதான் அக்கா உயிர் பிழைப்பதற்கு காரணம் என உணர்ந்து கொண்டேன். ஒரு வீட்டில் ஒருவர் இணைய வேண்டும் என்ற புலிகளின் கட்டாயத்தின் மத்தியிலேயே அக்கா இணைந்து கொண்டார். இவ்வாறு அக்கா இருந்த போராளிகளின் மருத்துவமனை இடம்பெயரவும் நாங்களும் அதன் பின்னே ஒவ்வொரு இடமாக தற்காலிக குடில்கள் அமைத்து நகர்ந்து கொண்டிருந்தோம்;. மாத்தளன் எனும் இடத்தில் இருந்தபோது இளம் வயதினர் தடுமாறி ஓடிக்கொண்டிருந்தனர். வீட்டினில் இரண்டாவது நபரும் இணைய வேண்டுமாம்… இல்லையேல் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதற்காக வருகிறார்கள் என்பதையும் கூறிச்சென்றனர். சண்டையில் பலர் வீரமரணமடைந்தனர். எனவே முன்னோக்கிவரும் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் வகையிலான நடவடிக்கைகளுக்கு போராளிகளின் தேவையை நிவர்த்திசெய்யும் முகமாக இவ்வாறான திட்டம் அமுல்படுத்தப்பட்டது

அம்மாவை அக்காவின் பிரிவு வெகுவாக பாதித்திருந்தது. எனவே கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தார். ஆண்கள் ஐவர் பெண்கள் நால்வர் என போராளிகள் ஆயதங்களுடன் எமது குடிலை சூழ்ந்து கொண்டனர். எந்தப்பயமும் இன்றி அப்பா இருக்கிறார் என்ற துணிவில் நாங்கள் எங்கும் ஓடவில்லை அப்பாவைச் சுற்றி இருந்தோம். அப்பாவிடம் ஒருவரை தங்களிடம் இணைக்குமாறு கூறினர். அப்பாவோ முடியாது என கூறியதும். போராளிகள் எங்களில் ஒருவரை பிடிப்பதற்கு மும்முரமாக செயற்பட்டனர். ஆண் போராளிகள் அப்பாவை பிடித்தவாறு காணப்பட்டனர். அம்மா அனைவரின் காலிலும் விழுந்து அழுது புலம்பினார். “நாட்டிற்காக போராடிய பிள்ளை காயப்பட்டு கிடக்குது அதற்குள் இன்னொரு பிள்ளையா விட்டுவிடுங்கள் என் பிள்ளைகளை பிடிக்காதீர்கள”; என மன்றாடினார். நாங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் இறுக்கப் பிடித்துக் கொண்டோம். (அப்பா) தனது பிள்ளைகளைப் பலவந்தமாகப் பிடித்து இழுப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபத்துடன் பிடித்திருந்தவர்களை தள்ளியபடி குனிந்து கத்தியை எடுத்து வெட்டத் தொடங்கியதும் வந்திருந்த போராளிகள் ஆயதங்களை கீழே போட்டபடி ஓடத்தொடங்கினர். சிறிது தூரம் ஓடியபின் வோக்கியில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் தங்கள் நிலவரத்தை தெரிவித்ததும், அவர்களின் வேலைக்கு இடையூறாக இருக்கும் எம் அப்பாவை சுடும்படி ஓடர் வந்தது. மீண்டும் எமை நோக்கி வந்து அப்பாவை சுடுவதற்கு துவக்கை நீட்டி லோட் பண்ணினர். அப்பாவோ தான்போட்டிருந்த சேட்டை கிழித்தெறிந்து தன் நெஞ்சில் சுடுமாறும் அதன் பின் தன்பிள்ளைகளை பிடிக்குமாறும் கூறியபடி நெஞ்சை நிமிர்த்திய படி நின்றார். இதை எதிர்பார்க்காத நாங்களும், அம்மாவும் அப்பாவை சுற்றிவழைத்து கட்டிப்பிடித்து கத்தினோம். எதுவும் செய்ய முடியாமல் நீங்களாகவே ஒருவரை இணையுங்கள் என கூறிவிட்டச் சென்று விட்டனர். இவ்வாறான சம்பவங்கள் எல்லாக் குடும்பங்களுக்கும் நிகழ்ந்த ஒன்றாகவே காணப்பட்டன .

***************

 யாராவது ஒருவர் இணையவேண்டும் என்ற சூழ்நிலையில் எங்களது வீட்டிலும் ஒருவரை ஒருவர் தடுத்தும் தாங்களே போவதாகவும் மாறி மாறி முடிவுகள் எடுத்தனா.; நீங்கள் யாரும் போகத் தேவையில்லை நான் போகிறேன் என என் முடிவைக் கூறினேன். அம்மா தலையில் கையை வைத்து அழத்தொடங்கினார். அப்பாவும் கண்கலங்கத் தொடங்கினார். சகோதரர்கள் தாங்கள் போவதாக விடாப்பிடியாக நின்றார்கள். எனக்கு மூத்தவர்கள் இரட்டையர்கள், ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்காதவர்கள், எனவேதான் அவர்களை பிரிக்கக்கூடாது என்பதிலும், எங்களிற்கு ஒரே ஒரு ஆண் சகோதரன் எனவே அவனையும் அனுப்பக்கூடாது என்பதிலும் முடிவாக இருந்தேன்;. எனது குடும்பத்தினரை சமாதானப்படுத்திவிட்டு பிடித்துச்செல்லும் வாகனம் இருக்கும் இடத்தை நெருங்கினேன். என்னைக் கண்டதும் “எங்களை வெட்டியவரின் மகள்” எனக் கூறினார்கள். அவர்களின் பொறுப்பாளர் என்னை வேறுவாகனமொன்றில் ஏற்றச் சொன்னார். பிடிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் அழுதவண்ணம் உள்ளே இருந்தனர்.

 எனக்கோ குடும்பத்தின் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வைத் தந்தது. நான் சாதாரணமாக பயந்த சுபாவம் கொண்டவள். இரவு என்றாலே பயம் துணைக்கு அம்மாவை அழைப்பேன் இன்று என் குடும்பத்தவர் மீதான அன்பே பயத்தை மறந்து அந்த முடிவை எடுக்கவைத்தது. முரண்பாடுகளின்றி இணைக்கப்பட்ட பிள்ளைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். பின்னால் எங்களை ஏற்றிய சிறிய வேன் புறப்பட்டது. வெளியே காணப்பட்ட சூழலை வெறித்துப்பார்த்தபடி இருந்தேன். கடற்கரையால் சூழப்பட்ட கிராமம், ஆங்காங்கே அடர்த்தியற்று காணப்பட்ட தென்னைமரங்கள், நிலப்பரப்பை மறைக்குமளவிற்கு காணப்பட்ட தற்காலிக குடில்கள், அதனிடையே சிறுவர்களும் வயதானவர்களும் நடமாடியவண்ணம் காணப்பட்டனர். மீண்டும் நாங்கள் ஓடிவராமல் இருப்பதற்காக ஒரே இடத்தையே மீண்டும் மீண்டும் வாகனம் சுற்றுவதைக் கண்டு சுதாகரித்துக் கொண்டேன். ஏதோ ஓர் இடத்தில் கொண்டு சென்று இறக்கினார்கள். அதிகாரத் தொணியில் உள்ளே போங்கள் எனக் கூறியதும் நாங்கள் பயந்தபடி உள்ளே சென்றோம்.

அங்கே கிட்டத்தட்ட ஐம்பது பெண்பிள்ளைகள் அழுதபடி இருந்தார்கள். அவ் அழுகைச்; சங்கத்தில் நாங்களும் இணைந்து கொண்டோம். பல பெண்போராளிகள் வந்து “ஏனடி அழுறீங்க?, நாங்களும் தானே இருக்கிறம்?”, “நீங்களெல்லாம் போராடாட்டி எப்படி உங்கட குடும்பம் உயிரோட இருக்கும்?”; என கதைத்துவிட்டு ஒரு பிள்ளையை எழுப்பி உணவை தட்டில் போட்டுக் கொடுக்குமாறு கூறிவிட்டுச் சென்றனர்.

 இரண்டாவது நாள் எங்களுக்கு இயக்கப்பெயர் வைப்பதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றது. பெயர்கள் எழுதப்பட்ட தாள்;களுடன் குண்டான உருவத்தையுடைய ஒரு பொறுப்பதிகாரி உள்ளே சென்று எங்களை ஒவ்வொருவராக வருமாறு அழைத்தார். எதற்கெனத்தெரியாது உள்ளே போனதும் “உன் பெயர் என்ன? இனிமேல் ‘புகழோசை’ என்றுதான் கூப்பிடுவார்கள். என்ன பெயர் பிடித்திருக்குத்தானே?” எனக் குரலை உயர்த்திக் கேட்டதும் பயத்துடன் ஆமென தலையசைவினுடாகப் பதிலளித்தேன்.

அன்று ஒரு போராளியக்கா எனது பெயரைச் சொல்லி அழைத்தார். நான் பயத்துடன் எழுந்து அவரிடம் சென்றபோது எனது அப்பாவின் பெயரைச் சொல்லி உங்களுடைய அப்பாவா அவர் எனக்கேட்டார். “ஏனக்கா அவர் என்னோட அப்பாதான்” எனக்கூறியதும் எனது கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழியத்தொடங்கியது. என்னை சமாதானப்படுத்தி விட்டு “உங்கட அப்பா எப்போவோ இருந்து முன் காணியிலதான் இருக்கிறார். நீங்க வெளியே வருவீங்க என்று” எனக் கூறியதுடன், முடிந்தால் இன்று இரவு எதிரே உள்ள காணிக்குள் அப்பாவிடம் சென்றுவிடுங்கள். எனக்கூறி விட்டு உடனே சென்றுவிட்டார்.

அப்பாவின் நினைவுடன் நாமிருந்த இருப்பிடத்தின் வெளியே பார்த்தேன். பல கரிய உருவங்கள் கரும் இருட்டில் குந்தியிருப்பதைப் பார்த்தும் இன்னும் பயம் தொற்றிக்கொண்டது. என்னால் வெளியே செல்லமுடியாது. அதற்கான துணிவு என்னிடம் இல்லை. அப்பாவோ நான் வருவேன் எனும் நம்பிக்கையில் காத்திருப்பாரே என நினைத்து அழுதபடியே தூங்கிவிட்டேன்.

நாங்கள் ஓடினால் பிடிப்பதற்கு இலகுவான முறையில் முடிகளை வெட்டுவதற்கான மெசினுடன் சில போராளிகள் வந்தனர். மீண்டும் வரிசையில் நிற்கச்சொன்னார்கள். “நாங்கள் ஓடமாட்டோம் எங்களின் முடிகளை வெட்ட வேண்டாம்” எனக் கெஞ்சினோம். ஆனால் அதனைப் பொருட்படுத்தாது இரு பிள்ளைகளின் முடியை மொட்டையாக வெட்டினார்கள். அவர்களின் உருவமே மாறிக்காணப்பட்டது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் துணிச்சலான ஒரு பிள்ளை கிளாசை உடைத்து தன் கைகளை கிழித்துக் கொண்டது. இதனால் முடிவெட்டும் பிரச்சினை ஒரு முடிவு கண்டது. அவளின் காயத்துக்காக கவலைப்பட்டதுடன் நன்றியும் தெரிவித்துக் கொண்டேன். சில நாட்களில் நாமிருந்த இடத்திற்கு குண்டுத்தாக்குதல்கள் வரத்தொடங்கின. செல்லுக்குப் பயத்தில் ஓடும் சாக்கில் திக்குத்திக்கான திசையில் ஓடி நிலத்தில் கிடந்தோம். அடுத்தகட்டம் முள்ளுக்கம்பி வேலியை தாண்ட வேண்டும். இரு பிள்ளைகள் கிடந்தபடியே கீழ்ப்பகுதியால் செல்வதைக் கண்ட பொறுப்பாளர் உடனே ஓரிடத்திற்கு வரும்படி விசில் ஊதினார். அனைவரும் எல்லோருடைய முகத்தையும் தேடினோம்.

பெரிய வாகனம் ஒன்று வந்ததும் எல்லோரையும் ஏறச்சொல்லி பயிற்சி முகாமிற்கு கொண்டு போனார்கள். அங்கே எங்களைப்போல கிட்டத்தட்ட பத்துமடங்கான பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களின் உடை மினுமினுப்பாக இரவிலும் மின்னும் தன்மை கொண்டதாக இருந்தது. அவ் உடையை எங்களிற்கும் தந்தார்கள். உடையை மாற்றியதும் வீட்டிலிருந்து போட்டுவந்த உடைகளை ஒரு பையினுள் போடும்படி சொன்னார்கள். நான் எனது ஆடையை அதனுள் போடாது கவனமாக வைத்துக்கொண்டேன். அன்றிலிருந்து உடலை வலிமைப்படுத்துவதற்கான பயிற்சிகளும், மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான உரைகளும் ஆற்றப்பட்டன. சுமார் 500 பிள்ளைகளும் ஒன்றாக நின்று உடற்பயிற்சி செய்வதை சில கணம் நான் ரசித்துப் பார்த்ததுண்டு. உரைகளில் “இராணுவத்தினர் அருகிலே உள்ளார்கள் நீங்கள் திசைதெரியாது ஒடினால் இராணுவத்திடமே மாட்டிக்கொள்வீர்கள்” என அழுத்தமாக பலதடவைகள் தெரிவித்தார்கள்.

 நாம் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து எமக்கான கடமைகளை முடித்ததும் சுமார் 5 மணிக்கெல்லாம் பயிற்சி தொடங்கி காலை, மதிய, இரவு உணவு வேளைகளுடன் இரவு 12 மணிக்குத்தான் பயிற்சிகள் முடியும.; சில வேளை இருவர் இருவராக 5 ஏக்கர் காணியில் பதுங்கு குழிகள் அமைக்கச்சொல்வார்கள். காவலுக்கு யாராவது ஒருவர் இருந்தால் வெரது தலை மறையும் வரைக்கும் வெட்டியபின் அதற்குள்ளேயே மண்வெட்டியை வைத்துவிட்டுத் தேங்காயை உரித்து பசியைத் தீர்த்துக்கொள்வோம். எங்கள் ஊரைச்சேர்ந்த மீன் விற்கும் அண்ணன் ஒருவரின் மகளும் எங்களுடன் இருந்தாள். துணிச்சல் குணமுடைய அவளுடன் சேர்ந்தே வேலைகளில் ஈடுபடுவேன். ஊரில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடமுடியாது. அவ்வளவு சாதிக்கொடுமை காணப்பட்டது. விடுதலைப்புலிகள் அதனை ஒழிப்பதற்கு எவ்வளவோ பாடுபட்டும் மறைமுகமான ஆதிக்கம் காணப்பட்டது. இங்கு நிலைமை மாற்றப்பட்டு எல்லோரும் தமிழர்கள், அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரின் இழப்பிற்காகவும் வருந்தினார்கள். உதவிகளைச் செய்தார்கள். நானும் அவளும் ஒரே தட்டிலேயே உணவு உண்டோம். ஒருவருக்கொருவர் ஆதரவாகக் காணப்பட்டோம்.

 பயிற்சி முகாமிலிருந்து நான்கு பிள்ளைகள் ஓடிவிட்டார்கள். அவர்கள் இராணுவத்திடமே சிக்கியிருப்பார்கள் எனவும் கூறினார்கள். அதன் பின் சாப்பாடு எடுக்கச்சென்ற ஆறு பிள்ளைகளும் ஓடிவிட்டார்கள். எனவே 10 உறுப்பினர் கொண்ட அணியாக பிரித்துவிட்டார்கள். இரவு வேளையில் ஒருவர் அரைமணித்தியாளம் சென்றியைப் பார்க்க வேண்டும். அவ்வாறு சென்றியை பார்த்த ஒருவரை இராணுவம் கொண்டு சென்றுவிட்டதாகவும், நீங்கள் யாராவது ஒருவர் நித்திரை கொண்டால் பத்துப்பேரும் பாதிக்கப்படுவீர்கள் எனவும் கூறினார்கள். நான் நித்திரை கொள்ளக்கூடாது என விழித்திருந்தாலும் தென்னைமரத்தில் சாய்திருந்தபடி உறங்கிவிடுவேன். விழித்ததும் முதலில் எல்லோரும் இருக்கிறார்களா என எண்ணிப்பார்த்த பின்னரே எனது தவறை நினைத்து வருந்தும் சமயங்களும் உண்டு. என் மீதுள்ள நம்பிக்கையில் தூங்கும் ஒன்பது பேரையும் பார்த்து கவலைப்படுவதுமுண்டு. அதிகாலைப்பொழுது விடியவில்லை என நினைத்து வேறு அணியில் இருந்து ஐந்துபேர் தடதடவென ஓடினார்கள். ஓடும் சத்தம் சென்றியிலிருந்த என் காதுகளிலும் விழுந்தது. இவர்கள் ஓடுவதை அறிந்து பொறுப்பாளர்கள் மேல்வெடி வைத்தனர். தங்களை சுடுகிறார்கள் என நினைத்து கீழேவிழுந்து படுத்தவர்களை பிடித்துவந்த பொறுப்பாளர்கள் தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் தலைமுடியை வரிவரியாக கட்டையாக வெட்டினர். அன்று பூராகவும் உணவின்றி கட்டிவைத்ததுடன் அடுத்தநாள் அனைவரிடமும் வந்து ஓடுவது தப்பு என கூறினார்கள். அதைப்பார்த்து மனம் கலங்கிப்போனோம். ஏன் இறைவா துன்பப்படுத்துகிறீர்கள் என்று கடவுளை கோபித்துக்கொண்டோம். அன்று கிபீர் எங்களிடத்தை குறிவைத்ததுபோல் குண்டுகளை சரமாரியாகப் பொழிந்தது. நாங்கள் பதுங்குகுழியில் பதுங்கிக்கொண்டோம். அந்த இடமே அதிர்ந்தது. அழுகுரல்கள் கேட்டது. பதுங்குகுழிக்கு மேலே வைக்கப்பட்ட மண்மூட்டையில் இருந்து மண் கொட்டியவண்ணம் இருந்தது. மண்மூட்டையில் செல்வந்து செருகியுள்ளது அதுதான் மண்கொட்டுகிறது என எங்களில் ஒருத்தி கூறியதும் பயத்தால் உடல் நடுங்கியது.

 

பத்துப்பேரும் பங்கருக்குள் காற்றுக்கூடப் புகமுடியாத வண்ணம் நெருங்கியபடி மூச்சுத்தட்ட இருந்தோம். சத்தம் குறைந்தது மெதுவாக வெளியே எட்டிப்பார்த்தோம். முனகல் சத்தத்துடன் இரு போராளிகள் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர். ஒரு போராளி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இருவரையும் ஓர் வாகனம் வந்து ஏற்றிச்சென்றது. தண்டனை வழங்கிய போராளியே மரணமடைந்தார் என அறிந்ததும் அவரிற்காகவும் வருந்தினோம். எங்களுடைய ஜீன்ஸ் கால்கள் நனைந்து காணப்பட்டது. எங்கள் அணியில் ஒருவர் பயத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டு தயக்கத்துடன் காணப்பட்டாள். ஆவளைச் சமாதானப்படுத்தி அது ஒரு பிரச்சனையே இல்லை என தெளிவுபடுத்தினோம்.

…. இவ்வாறாக எல்லாவற்றையும் அசைபோட்டபடி விடியலை எதிர்பார்த்திருந்த எனது விழிகள் இறுக மூடிக்கொண்டது……

– – – – – – – –

யாரோ ஒருவர் என்னைத் தட்டுவதை உணர்ந்து விழித்துக்கொண்டேன். அந்த வீட்டு அம்மா “ஏன் பிள்ளை காலையில எழுந்து போகல்லையா?, இனி எப்பிடி போகப்போறீர்?” எனக் கேள்விக்கணைகளை தொடுத்தபடி தேனீர் கோப்பையுடன் சில பலகாரங்களையும் நீட்டினார். அதைவாங்கி இரண்டு மிடர் குடிப்பதற்குள் பலர்வரும் சத்தத்தை உணர்ந்து கொண்டேன.; போராளிகள் அந்த வீட்டுக்காரரிடம் அவர்களை வீட்டைவிட்டு போகும்படியும், இராணுவம் கிட்டவந்துவிட்டார்கள் எனவும், தாங்கள் தற்காலிக வைத்தியசாலைக்கு அவர்களின் வீட்டினையே பயன்படுத்தப் போவதாகவும், இன்று மாலை வேளைக்குள் அவர்கள் வீட்டை விட்டு எழும்பியே ஆகவேண்டும் எனக்கூறியபடி இருந்த சமயம் குண்டுகள் சரமாரியாக அருகில் வந்து விழத்தொடங்கின. போராளிகள் நான் இருக்கும் பங்கருக்குள் வரப்போகிறார்கள் என்பதை உணர்ந்த அவ்வீட்டு அம்மா அவர்களினை முந்திக்கொண்டுவந்து என்னை வளைவுப்பகுதிக்குள் இருக்கச்சொல்லி மறைத்தபடி தான் அமர்ந்துகொண்டார். குண்டு விழுவது குறையத் தொடங்கியதும் போராளிகள் சென்றுவிட்டனர். அவர்கள் போனபின்பும் என்னைப் போன்றே அந்த அம்மாவும் நடுக்கத்துடன் காணப்பட்டார்

மதியம் 11.00 மணியளவில் “நாங்கள் முள்ளிவாய்க்கால் போகப்போறம், நீங்கள் எப்படி மாத்தளனுக்கு போகப்போறீங்க? நாங்கள் மட்டும்தான் இருக்கிறம் எல்லாச்சனமும் போற்றினம்” என கூறி யோசித்தபடி அக்குடும்பத்தினர் இருந்தவேளை பல குண்டுகள் ஒன்றாக தொடர்ந்து வெடித்தன. அச்சத்தம் புலிகளின் ஆயதக்கிடங்கில் செல்விழுந்ததாலே ஏற்பட்டது. ஆயுதக்கிடங்கு வெடித்து சில கணங்களில் மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சரணடைய பதுங்கி இருந்துவிட்டு ஆயுதக்கிடங்கு வெடிக்கும் சத்தத்தில் பயந்து ஓடத்தொடங்கினர். இதைப்பார்த்தபடி நின்ற என்னை இவர்களுடன் சேர்ந்து ஓடினால் பிடிக்கமாட்டார்கள் என அந்த வீட்டு அம்மா கூறியதும் செருப்பும் கூடப்போடாமல் சுட்டெரிக்கும் வெயிலில், சுடமணலில் கால் புதைய ஓடினேன்.

ஒவ்வொரு குடும்பமாக நடந்து கொண்டிருந்தார்கள் அதில் ஒரு அப்பா சைக்கிளில் மூட்டைகளை வைத்து தள்ளியபடி மனைவி மகளுடன் சென்றுகொன்டிருந்தார். அவரிடம் எனது கதைகளை சொல்லி அழுதேன். தான் வேறு இடம் போவதாகவும் அதுவரையும் தன்னுடன் வரச்சொன்னதும், அவரின் மனைவி கோபத்துடன் “உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை?, இந்தப்பிள்ளையை கூட்டிவந்தால் எங்கட பிள்ளையையும் பிடிச்சிருசாங்கள், நீங்க விட்டிற்று வாங்க” என்றதும் அழுதபடி நின்ற என்னைப்பார்த்து “நான் என்ற பிள்ளையை கூட்டிற்று வாறன் – நீ உன்ர பிள்ளையை கூட்டிற்று முன்னுக்கு போ” என அந்த அப்பா சொன்னதும் அவரிட காலில் விழுந்து அழனும்போல இருந்தது. மணலில் தள்ளிச் செல்வதற்கு கஷ்;டப்பட்ட அந்த அப்பாவின் சைக்கிளை பின்னால் தள்ளியபடி சென்று கொண்டிருந்தேன். அவ் வழியில் ஒரு உயரமான அண்ணன் மூட்டைகளுடன் கூடிய மோட்டார் பைக்குடன் நின்றபடி யாருடனோ மாத்தளன் போவதாக கதைத்தபடி நின்றார். அதைக்கேட்டதும் ஓடிச்சென்று எனது கதையைக் கூறியதுடன் நானும் மாத்தளன் போக வேண்டும் என அழுதேன்.

“நான் இந்த மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த அப்பாவுடன் வாருங்கள்” என சிறு நம்பிக்கை தந்துவிட்டு சென்றார். அந்த அப்பா போகவேண்டிய பாதையும், நான் போகவேண்டிய பாதையும் வேறுவேறாக பிரியும் இடம் வந்ததும் என்னை முன்னால் போனவர்களுடன் சேர்ந்து போகும்படி கூறினார். நானும் அவர்களின் பின்னே சென்று மாத்தளன் பிரதான வீதியை சென்றடையும்போது அந்த அண்ணா என்னைத் தேடி வந்தார். அதேநேரம் அவ்விடத்திற்கு அவரின் அப்பாவும் பொருட்களை சுமந்தபடி வந்தார். தன்னைக் கூட்டிச்சென்று தாங்கள் இருக்கப் போகும் இடத்தைக் காட்டுமாறு கூறினார். ஆந்த அண்ணா என்னை வீதியின் எதிரே உள்ள வீட்டினுள் இருக்குமாறும், தனது அப்பாவை விட்டுவிட்டு வருவதாகவும் கூறிச்சென்றார்.

எதிரே காணப்பட்ட வீட்டினருகே சென்று அம்மா அம்மா என நான் அழைத்த சத்தம் கேட்டு வெளியே வந்தவரிடம் அண்ணா வரும்வரை இங்கே சிறிது நேரம் இருக்க இடம் தரும்படி கேட்டேன். நீ வெளியே! போ! நீ வந்தால் என் பிள்ளைகளையும் பிடித்து விடுவார்கள் என அவர் கடுமையான தொனியில் கூறினார். என்ன செய்வதென்றே தெரியவில்லை பிடிக்கும் வேலையை செய்யும் பொலிஸ் அதிகாரிகளும் சிறிது தூரத்திலேயே நின்றார்கள். மேலும் நடக்க முடியாது. கண்டால் பிடித்துவிடுவார்கள். அந்த அண்ணனும் இங்குதான் வருவதாகவும் கூறினார். என யோசித்தபடி அருகே நின்ற லொறியின் சில்லிற்கு பின்னால் மனதளவிலும் உடலளவிலுமான வேதனையில் ஒடுங்கி, குறுகி, உட்கார்ந்து வீதியை பார்த்தபடி இருந்தேன். நான் ஒளிந்திருக்கும் நிலையைக் கண்டாலே பிடித்து விடுவார்கள் என்பதையும் நினைத்தபடி இருந்த போது ஓர் உருவத்தைக் கண்டேன். கடவுளே என்னிடம் அனுப்பியதுபோல் இருந்தது. கலங்கிய கண்களுடன், சோர்ந்து போன உடலுடன், முகத்தில் ஏக்கம் மேலிடப் பார்வையை சிதறவிட்டபடி எனக்கு முன்னே காணப்பட்ட வீதியில் வந்துகொண்டிருக்கிறார். அவர் வேறுயாருமல்ல எனது அப்பா எனைத் தேடி அலைந்து வருகிறார். சந்தோசம் தாங்க முடியவில்லை அது வீதி, ஆள் பிடிப்பவர்கள் அருகில் நிற்கிறார்கள் என்பதைக்கூட மறந்து ஓடிச்சென்று இறுகக் கட்டிப்பிடித்து கதறத் தொடங்கினேன். இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத அப்பா எனை சமாதானப்படுத்தியபடி நின்றவேளை, அந்த அண்ணா எனைத் தேடிவந்தார். அவரிடம் அப்பாவை அறிமுகப்படுத்தி அவரின் நல்ல மனதிற்கு நன்றி கூறி விடைபெற்றுச்சென்றேன்.

நான் அந்த அண்ணனின் உறவினரும் கிடையாது, முன்னர் அறிந்தவரும் கிடையாது, உயிர்குடிக்கும் செல்லடிகள் மத்தியில் எனைத்தேடிய அவரின் மனிதபிமானம், அன்பு, இரக்கம் என்பன எல்லோர் மனதிலும் குடிகொண்டால் எப்பிரச்சனையும் எச்சமூகத்திடையேயும் ஏற்பட என்றும் இடமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *