என்றும் நமக்கே தானோ தடை? – சுசீந்திரா

 Thanks  to http://maattru.com/

maxresdefault-1மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்காக பெண்களைப் போற்றியோ அல்லது பெண்களின் விடுதலை பற்றியோ தமிழ் சினிமாப் பாடல்களை தொகுக்கலாம் என யோசித்து கடைசியில் 50 வருட சினிமாப் பாடல்களை கேட்டால், நமக்கு வெறுப்பும் சலிப்பும் மட்டுமே மிஞ்சுகிறது. நம் கவிஞர்களுக்கு பெண்மை என்றால் பூ, மலர், காற்று, நதி, புயுல், தென்றல், நிலவு எல்லாவற்றிக்கும் மேலாக தெய்வம் போன்ற இயல்புக்கு மாறானதைத் தவிர; அதாவது அவளும் மனிதப் பிறவியே என்பதைத் தவிர வேறெதுவும் சிந்தையில் உதிக்கவில்லை போல. ஆனால், அதே சமயம் பாகவதர் காலம் தொட்டு தனுஷ் காலம் வரை பெண் என்றால் வெட்கம், பொறுமை, அடக்கம் கொண்டிருக்க வேண்டும் என்ற மனோபாவம் மட்டும் நம் கவிஞர்களிடத்தில் இன்றும் மாறவில்லை. இல்லை என்றால் அடிடா அவள வெட்றா அவள, ஒய் திஸ் கொலவறியும், பீப் சாங்குகளும் மாஸ் ஹிட் ஆக எப்படி வாய்ப்பு இருக்கும்? சரி போகட்டும் என படங்களை பற்றி யோசிக்கையில், பெண்ணுரிமைப் படமா?? என்ற பெருமூச்சிறைத்து பாலுமகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா படங்களைக் காணலாம் என்ற ஆலோசனையும் தீவிர விவாதத்தையே கிளப்பியது. அங்கும் ‘பெண் கதாப்பாத்திரம்’ ஆணால் உருவாக்கப்படுவதாலோ என்னவோ; இவர்களது படங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் பெண் தியாகியாக மாறிடும் சித்தரிப்பும் இருக்கத்தான் செய்கிறது. வெகு சில சொற்ப படங்களே பெண்களின் உரிமை பற்றி பேசியுள்ளதாக என் அனுபவம். ஆனால், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் கூட பெண்கள் தேவை, உணர்வு பற்றி பேசிய படங்கள் மிகக் குறைவே.

 

இங்கு மிக எளிதாக ஒரு ஆணை மையமாகக் கருதி படமும் பாடல்களும் எழுதி விட முடிகிறது. ஆனால், ‘பெண்’ என்ற வரையறை கொண்டு சமரசமில்லாமல் ஒரு படத்தை அத்தனை சுலபத்தில் உருவாக்கம் செய்ய முடியவில்லை; பெரும்பாலானோருக்கு துணிவும் இருப்பதில்லை. ஒரு இறைவியும், பிங்க்கும், டங்கலும் வர நாம் எத்தனை முறை சத்திய சோதனைகளுக்கு உள்ளாகி இருப்போம் என்பதும் படத்துடன் சேர்த்து பார்க்க வேண்டிய விஷயம். சினிமா என்ற தொழிலிலும் கூட பெண் என்ற ‘பொருள்’ எல்லை கடந்தும் மொழி கடந்தும் எல்லாவற்றிற்க்கும் தேவைப்படுகிறது. உணர்விற்க்கும் மேலாக ‘பெண் ஒரு பண்டமே’.அதனால் தான் 100 இயக்குநர்கள் உருவாகும் களத்தில் 1 பெண் இயக்குநரின் உருவாக்கம் பல போராட்டங்களுக்கு பிறகே சாத்தியமாகிறது.

ஆம். நம்மைப் பற்றி நாமாவது பேசுவோமே என்ற தேவையில், ஒரு பெண் இயக்குநர் பெண் சார்ந்த கதைக் கருக்களை உருவாக்கினால் அது நம் சமூகத்தில் பெரும் பாவம் ஆகி விடுகிறது. இல்லையெனில், பெண்கள் 1000 ‘Item’ பாடல்கள் எனப்படும் ஆபாச பாடல்களில் காட்சிப் பொருளாக்கப்படலாம். ஆனால், அவள் பாலின கேள்விகளை எழுப்பும் விதமாக ஒரு காட்சியில் கூட பேசியோ நடித்தோ விடக் கூடாது. அது இந்திய  கலாச்சாரத்தின் அகராதியில் ஆபாசத்தின் அடையாளம் ஆகிவிடுவதே நாம் உண்மையில்  ‘அடைந்துள்ள நாகரிகம்’ . அந்த நாகரிகத்தை மேம்படுத்த, நம் இந்திய தணிக்கைத் துறை இப்படம் ‘மிகவும் பெண்ணியம் பேசுகிறது காலாச்சாரத்திற்கு கலங்கம் விளைவிக்கிறது. குறிப்பிட்ட மதத்தை இழிவு செய்கிறது ’ என “லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா”(Lipstick Under My Burkha) படத்தை தடை செய்துள்ளது. ஒரு பெண், பிறக்கும் போது உடற்கூறினால் பெண் பாலாக பிறக்கிறாள் அவளுடன் சேர்ந்து அந்த பாலுக்குறிய உணர்வுகளும் உடலில் உருவாகிறது இது இயற்கை என்னும் அறிவியல் உண்மை. ஆனால், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவை இந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. அதுவும் புனிதம் என்னும் முலாம் பூசி பெண்ணை இங்கு அடிமையும் ஆதிக்கமும் வன்முறையும்  செய்தே இச்சமூகம் இருந்துவருகிறது. இதில் ‘என் துணை என் விருப்பம் என்றோ; என் உடல் என் தேவை’ என்றோ ஒரு பெண் சினிமாவிலும் கூட பேசிவிட கூடாது என்பதில் இச்சமூக கட்டமைப்புகள் மிகவும் உறுதியுடன் இருப்பதன் கூறு தான் இப்படத்தின் மீதான தடையும். 4 பெண்கள் மதம், வயது, அடையாளாம் கடந்து தங்களின் உடல் எப்படி/என்னவாக இருக்க வேண்டும் என நிர்ணியிக்கும் அதிகாரத்தையும் அதன் தேவையையும் ஒரு பெண் இயக்குனர் படம் எடுப்பதா? என்ற ஆதிக்கமே இந்திய சமுதாயத்தின் கலாச்சார அடையாளம் போலும். அதனை உடைப்பதிலே தான் பெண் சமத்துவம் தழைக்க முடியும்.

பெண்ணை விரட்டி, துறத்தி, கடைசியில் பணிய வைத்து ‘’ஆண்மையை நிரூபிப்பது ஹீரோயிஸம்’’. அது நம் கலாச்சாரத்தின் பெருமைமிகு அடையாளாமோ? காதலும், காமமும் ஆணுக்கு உரியவை. அது பற்றி பெண் தீர்மானிக்க எந்த உரிமையும் இல்லை என்ற கொடூரமான பிற்போக்குத்தனங்களில் இருந்து எப்போது நாம் மீளப் போகிறோம்? என்ற கேள்விகளுக்கு இது போன்ற படங்களே விடைகள். ஆதலால்   தான்  ‘ஸ்பிரிட் ஆப் ஏசியா’ (Spirit of Asia) விருதை டோக்கியோ சர்வதேச சினிமா விருது விழாவிலும், மும்பை தேசிய திரைப்பட விழாவில் “ஆக்ஸ்ஃபாம் (Oxfam) விருதும்” பாலின சமத்துவத்தை பேசிய சிறந்த படம் என்ற பிரிவின் அடிப்படையில் இப்படம் பெற்றுள்ளது.  படத்தின் இயக்குநர் அலங்க்ரிதா  ஷ்ரீவஸ்தவா படத்தின் மீதான தடை குறித்து தொலைக்காட்சியில் பேசுகையில், “நமது நாட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் பெண் என்பவள் பிறர் என்ற பார்வையிலும் பொருள் என்ற பார்வையிலும் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கருதும் எவரும் இப்படத்தையும் என்னையும் ஆதரிக்க தேவையில்லை” எனக் கூறினார். இப்படத்தின் மீதான எதிர்ப்பும் எதிர்ப்பார்ப்பும் உரைக்கும் உண்மை இதுவே.

 –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *