தாய்மையின் மறுபக்கம்

புதியமாதவி , மும்பை.

march2011 3

women-strugleஉயிரினங்களின் இனவிருத்தி என்பது இயற்கையானது.ஆனால் மனித சமூகத்தில் மட்டுமே இனவிருத்தி என்பது தெய்வீகமானதாகவும் புனிதமானதாகவும் மாறி தாய்மையின் மீது சுமத்தப்பட்டு சொத்துடமை ஆணாதிக்க சமூகம் தம் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.சொத்துடமை சமூகம் தான் தாய்மையை பிற உயிரினங்களின் இனவிருத்தியிலிருந்து முழுமையாக வேறுபடுத்தியது.இந்த மனித வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் மொழியும் மொழிவழிச் சிந்தனைகளும் அதன் வழி உருவாகும் கலை இலக்கியமாகட்டும் அரசியல் அதிகாரமாகட்டும் தாய்மையைக் கொண்டாடுகின்றன. இப்படி கொண்டாடும் மனநிலை பிள்ளைப்பேற்றின் மொத்த பொறுப்பையும் பெண்ணுக்கு உரியதாக மட்டுமே மாற்றிவிடும் எதிர்வினையையும் சேர்த்தே செய்திருக்கிறது. தெய்வீகமும் புனிதமும் பெண்ணின் தலையில் முள் கீரிடமாக சுமத்தப்பட்டிருக்கின்றன.அதை அப்படியே பேணுவதிலும் தொடர்வதிலும் ஆணாதிக்கமும் அவர்கள் படைப்புகளும் மிகவும் கவனமாகவே செயல்படுகின்றன. அதாவது மகப்பேறு உடல்சார்ந்த நிலையில் பெண் உடலுக்கானது என்பதுடன் மட்டுமே தொடர்புடைய இயற்கையான செயல், மகப்பேறுக்கு பின் தொடரும் குழந்தை வளர்ப்பு, குழந்தை வளர்ப்புக்கு பொறுப்பு , தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.. இப்படியாக மகப்பேறுக்குப் பிறகும் ,- ஏன் ஒருபெண் சுடுகாடு போகும்வரை – பிள்ளைகளை அவளுக்கான பொறுப்பாக மாற்றி இருப்பதில் குடும்பம் என்ற நிறுவனம் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறது.

குடும்பம் என்ற நிறுவனம், சமூக அமைப்பு முறை தவறா? சரியா? என்பதல்ல நம்கேள்வி. இனவிருத்தி என்ற இயற்கையில் செயல் முழுக்கவும் பெண்பால் சம்ப்ந்தப்பட்டதாக மாற்றிய தன்மூலம் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை இச்சமூகத்திற்கு உணர்த்துவது மட்டும்தான். ஒருகுழந்தைக்கு அக்குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் (வாடகைத்தாய்மார்கள்தவிர்த்து) பெண்மட்டும்தான்பொறுப்பா? ஆணுக்கு பொறுப்பில்லையா? இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களில் நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை இம்மாதிரி பலநிகழ்வுகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. அந்நிகழ்வுகளில்தன்பிரச்சனைகளுடன் வரும்

பெண்கள் திருமண உறவுகளுக்கு அப்பால் ஏற்படும் உறவுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது பொருந்தாத திருமணமாகவே இருக்கிறது. அப்பொருந்தாத திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையை விட்டு விடுவது என்பது ஒரு பெண்ணுக்கு இழுக்காக வேசித்தரிக்கப்படுகிறது. தாய்மையைப் புனிதமாக்கி இருக்கும் சமூககட்டமைப்பில் அப்பெண் பெரும் குற்றவாளி ஆகிறாள் நம்பார்வையில். அதேஅந்தப்பெண்ணிடம் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியே எழுவதில்லை. திருமணம் என்றவாழ்க்கை ஒப்பந்தமே இன விருத்திக்கானது என்பதும் அதற்கான உடலுறவை ஒரு பெண்ம றுப்பது தாம்பத்ய வாழ்க்கையில் குற்றமாகவும் கருதப்படுகிறது. மணவாழ்க்கை இனவிருத்திக்கானதும் தான். ஆனால் இனவிருத்திக்கு மட்டுமல்ல ஆண் பெண் இணைந்து வாழும் வாழ்க்கையில், . அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கும் இன்றைய கணினி யுகத்தில் இனவிருத்தியை விலக்கிய ஆண் பெண்பாலுறவு இன்பம் சாத்தியமாகி இருக்கும் நிலையில், குழந்தையை முழுக்கவும் பெண்ணின் பொறுப்பாகவும் கடமையாகவும் கட்டமைத்திருக்கும் சமூகத்தில் , இன்று வரை தாய்மை அடைவதற்கான பெண்ணின் விருப்பம்

ஏன் முதல் நிலையாவதில்லை? பிரச்சனைகளுடன் மேற்சொன்ன தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு வரும் பெண்களை நோக்கி நிகழ்ச்சியை நடுத்துபவர்கள் வைக்கும் கேள்வி..”உனக்கு வெட்கமா இல்லை… உன் குழந்தைக்கு நீபொறுப்பில்லையா..நீ விட்டு விட்டா உன்குழந்தைகளின் கதி.. உன் அப்பா போன பிறகு உன் அம்மாவும் இந்தமாதிரி உங்களை விட்டு விட்டு இன்னொரு ஆண் சுகம்தேடி இருந்தால் நீ இன்றைக்கு என்னவாகி இருப்பாய்..”இப்படியான கேள்விகளும் உரையாடல்களும் அறிவுரைகளாக ஒலிக்கின்றன அதைப்பார்ப்பவர்களுக்கும்கேட்பவர்களுக்கும் அந்த அறிவுரைகள் நியாயமானதாக மட்டுமே தெரிகின்றன. ஆனால் அந்த அறிவுரைகளை வழங்கும் சமூகக்காவலர்கள் அதுவும் பெண்களாகவே இருக்கும் அவர்கள் எதிரில் இருக்கும் இன்னொரு பெண்சார்ந்த பிரச்சனையை அதற்கான அடிப்படைக் காரணத்தை வீரியத்துடன் ஏன் அணுகுவதில்லை.? குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் மறுப்பதுமானஉரிமை எதிரில் இருக்கும் பெண்ணுக்கு இருந்ததா? என்ற ஆரம்ப புள்ளியிலிருந்து அல்லவா இதற்கான தீர்வுகள் பேசப்பட வேண்டும்? மேற்கண் டபிரச்சனைகள் பெரும்பாலும் வர்க்கநிலையில் பின்தங்கிய பெண்களின் குடும்பம் சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது என்றால் இப்பிரச்சனையின் இன்னொருவடிவமாக இன்றைய படித்த மேல் தட்டு வர்க்கம் சார்ந்த பெண்களை இன்னொரு வகையில் பாதிக்கிறது. மகப்பேறுவுக்குப்பின் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இன்றைய பெண்களை அச்சுறுத்துகின்றன.
தன் உடல் மீது தனக்கே ஏற்படும் வெறுப்பு , எதிர்காலம் கருதிய அச்சம் அனைத்தும் சேர்ந்து அப்பெண்ணை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கின்றன. நடிகையாக இருந்தால் அவளுக்கான கதாநாயகி அந்தஸ்த்து போய்விடுகிறது. அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் பெண்ணுக்குபெருத்த முலைகளும் இடுப்பும் அவளுடைய மிடுக்கான தோற்றத்தை மீட்டெடுக்க முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் தான் பிரசவத்திற்குப் பின்

images malyakam

இன்றைய பெண்கள் அதீத உணர்வுகளால் பாதிக்கப்பட்டு எரிச்சல் அடைவதும் சிறுசிறு பிரச்சனைகளைப் பெரிதாக்குவதும் இனம் புரியாத அச்சம் கொள்வதும் ஏற்படுகின்றன.அப்பெண்ணின் மனநிலையைப்புரிந்து கொள்ளவேண்டிய பொறுப்பு இன்று அவளுடைய கணவனுக்கும் இருபக்க உறவுகளுக்கும் இருக்கிறது. அப்புரிதல் இல்லை என்றால் உறவுகள் விரிசடைவதும் ஆண்பெண் உறவுகள் கசப்பதும் நிகழ்ந்து விடுகின்றன.இன விருத்தி என்ற இயற்கையான நிகழ்வை அதற்கான இயற்கையான நிகழ்வாக மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் மனித சமூகத்தில் அதன்பின் விளைவுகள் மட்டும் பெரும்பாலும் பெண்ணுக்கானதாக மட்டுமே கட்டமைக்கப்பட்டிருப்பது தான் இப்பிரச்சனைகளின் மையப்புள்ளி. எனவே,

ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு முன் ஆண் பெண் இருவரின் பொறுப்பும் இருவரின் விருப்பமும் சேர்ந்தே செயல்படவேண்டிய திட்டமிடலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆண் பெண் உறவில் பெரும்பான்மையான பிரச்சனைகளை இத் திட்டமிடல் தவிர்க்கும்.

 

உன் மூச்சுக்காற்றின் புணர்ச்சியை விலக்கி

என்னில் கருக் கொள்ளும் மனிதப்பூக்கள்

போர்த்தொடுக்கும் போர்க்களத்தில்

உன் கால்களுக்கு நடுவில்

காலம் காலமாய்

அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்

என் தளைகள் உடைபடும் நாளில்

உனக்கும்வசப்படும்விடுதலையின்வானம்.

 

என்னைக் கைதியாக்கியதில்

நீயும் கைதியானதை

அறியாமலேயே

காத்திருக்கிறாய் சிறைவாசலில்

உள்ளே நானும் வெளியே நீயுமாய்

ஒரே அறையில் பூட்டப்பட்டிருக்கிறோம்

என் விடுதலைப் போரின் விடுதலைப் பரிசாக

காதலனே

உன் கனவுகளுக்கும் கொடுப்பேன்

கட்டுகள் அறுத்து பறப்பதன் சுகத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *