மெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?

– மாலதி மைத்ரி-

  jallikattu2

malathy 17

சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை அடையாளப்படுத்துவதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் ஒட்டுமொத்த இந்தியர்- தமிழரின் விளையாட்டாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது, இதற்கான சமூக-உளவியல் பற்றிய வினா முன்னே நிற்கிறது. சாதியைப் பிறப்பின் வழி ஏற்று அதனைக் காப்பாற்றும் அகமணம் புரிந்த தோழர்களும் அத்திருமணங்களில் விருந்துண்டு சிறப்பிக்கும் தோழர்களும் சல்லிக்கட்டில் மட்டும் திடீரென சாதி ஒழிப்புப் பற்றிப் பேசுவது வேறு வகை உள்நோக்கம் கொண்டதாக மாறிவிடுகிறது.  சல்லிக்கட்டை தமிழர் பாரம்பரியமாகவோ பண்பாடாகவோ அடையாளமாகவோ முன்னிறுத்துவது எவ்வளவு ஆதிக்கத் தன்மை கொண்டதோ அதேயளவு ஆதிக்கத் திமிர் கொண்ட ஒரு நடவடிக்கைதான் அதை விளையாடவே கூடாது என்று எதிர்ப்பதிலும் இருக்கிறது. சமூகத்தில் சாதி அழியும் வரை அந்தந்த சமூகங்களின் பாரம்பரியத் தொழில் சார்ந்த விளையாட்டுகளை அங்கீகரிப்பதுதான் சனநாயகம். விருப்பமில்லாத ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை இவ்விளையாட்டுக்கு சேவை செய்யவும்இ உடலுழைப்புத் தரவும் கட்டாயப்படுத்தினால் அது சாதியச் சுரண்டல், அத்துடன் ஒடுக்குமுறையும்கூட. அது போன்ற இடங்களில் அரசியல் தலையீடு தேவை, அதனை வலிந்து செய்யும் இடங்களில் தடை கோரி போரடலாம்இ இதனைச் செய்வது எதிர்ப்பு அரசியல் களம்.

மாட்டை வளர்ப்பவர்கள் மாட்டைப் பிடிக்கிறார்கள், வீரமென்று அதனைத் துரத்துகின்றனர், மாடுமுட்டி குடல் சரிந்துச் சாகின்றனர். அது அவர்கள் பாடேன்று நாம் வேடிக்கை பார்க்கலாம். சல்லிக்கட்டில் காளையின் திமிலை அணைத்து ஆடுகிறார்கள். இதற்கு காளையின் கொம்புகள் ஏன் கூர்த் தீட்டப்படுகின்றன. மனிதன் தனது உடல் பலத்தை உபயோகிப்பது போல் மாடும் தனது உடல் பலத்தை மட்டுமே பிரயோகிக்க பழக்க வேண்டும்இ அதன் ஆயுதத்தை அல்ல. ஆயுதமற்ற மனிதனுடன் கூர்த் தீட்டப்பட்ட இரண்டு ஆயுதங்களுடன் மாட்டை மோதவிடுவது மனித வதை.

வேளாண்மையே அழிந்துக் கொண்டிருக்கும் சூழலில் இன்னும் பத்திருபது ஆண்டுகளில் சல்லிக்கட்டு வழக்கொழிந்துகூட போகலாம். அல்லது அந்தச் சமூக இளைஞர்கள் படித்து வேலை தேடி இடம்பெயர்ந்து சென்றுவிடலாம். எப்படியும் சல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க வாய்ப்பில்லை. சல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் பண்பாடுஇ நாங்களும் எங்கள் குழந்தைகளும்இ பேரன் பேத்திகளும் காலம்காலமாக பார்த்து ரசிக்கவேண்டும் என்று சொல்லும் ‘திரை டமிலர்கள்’ ‘சிலிக்கன் வேலி’ டமிலர்கள் கிராமத்துக்குச் சென்று தாங்களே காளை வளர்த்து மாடுப்பிடிக்கப் பழகி டாமில் பண்பாட்டை நூற்றாண்டுகள் கடந்தும் காக்க முன்வரலாம்.  ஐரோப்பிய ஸ்பானிஸ் ‘புல் பைட்’ எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நடக்கும். அதை ஒரு விளையாட்டுக் கலையாக மாற்றியுள்ளனர். அதில் பங்குபெற முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களும் பயிற்சி பெற்றுகளத்தில்  இருக்கிறார்கள். சல்லிக்கட்டில் மாடுபிடிக்கும் இளைஞன் எந்த சிறப்பு பள்ளியிலும் பயிற்சி எடுத்துவிட்டு வருவதில்லை. மாட்டுடன் பழகும் மாட்டை பராமரிக்கும் இளைஞர்கள் பங்கெடுக்கும் விளையாட்டு இது. வருங்காலத்தில் இளைஞர்கள் கால்நடைப் பராமரிப்பிலிருந்து விலகும்போது சல்லிக்கட்டின் ஆயுளும் முடிந்துவிடும். கால்நடை வளர்ப்பு வீட்டிலிருக்கும் பெண்களின் வயதானவர்களின் தொழிலாகவும் மாறும்இ சற்று விரிவடைந்து கூட்டுப் பண்ணையாக மாறும் வாய்ப்பு உண்டு.
பால் அரசியல்இ நாட்டு மாடு அரசியலுக்குள்ளெல்லாம் போகவில்லை. சல்லிக்கட்டை காப்பாற்றித்தான் இவைகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியமில்லை. தன் மண் சார்ந்தஇ தன் உணவு சார்ந்த அக்கறையும் உணர்வுமிக்க விவசாயிகள் பன்னாட்டுச் சந்தைஇ கார்ப்ரேட் அரசியலை பசுமை புரட்சி காலத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.

தலித்கள் ஊர் தெருவில் செருப்புப் போட்டு நடக்கறாங்களா, கோயிலுக்குள் நுழையிறாங்களா, கிணற்றில் தண்ணி எடுக்கறாங்களா, தீண்டாமை சுவரைத் தாண்டிட்டாங்களா, படித்து வேலைக்குப் போய் தலை நிமிர்ந்துட்டாங்கள, பளிச்சுன்னு உடுத்துறாங்களாஇ காதலிக்கறாங்களாஇ பொதுப்பாதையில் பாடையோட போறாங்களான்னு கண்காணித்து சக தமிழர்களை வெட்டியவர்கள் ஆண்ட பரம்பரை என்று தங்களைச் சொல்லிக்கொண்டனர். பெண்களின் பிறப்புறுப்பில் சுயசாதிப் பெருமையைத் தேடுவதுதான் ஆண்ட பரம்பரையின் அடையாளமென இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் தக்க வைப்பதுதான் அரசியல் என வாழ்ந்த சாதித் தமிழர்கள் சுதந்திர இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை ஆண்டு அனுபவித்து கார்ப்ரேட்களை உள்ளே நுழையவிட்டு அடிமை சேவகம் செய்து தன் தலையிலேயே கொள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்று மண் போச்சுஇ நிலம் போச்சுஇ நிலத்தடி நீர் போச்சுஇ ஆறு போச்சு மலை போச்சுஇ மழை போச்சுஇ விவசாயம் போச்சுஇ காளை போச்சென ஒரு முழக் கயிற்றையும் பாலிடால் டின்னையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதாவது விவசாயிகள் விழித்துக்கொண்டு தங்களின் கோபத்தையும் வீரத்தையும் மத்தியஇ மாநில அரசிடமும் அரசு அனுமதிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களிடமும் காட்ட வேண்டும்.

மெரினா எழுச்சி அல்லது தமிழகம் தழுவிய மக்கள் போராட்டம் என்பது சல்லிக்கட்டு தடையை நீக்க கோரிதானே முன்னெடுக்கப்பட்டது. ஆதிக்கச் சாதிய கலாச்சாரத்துக்கு அடி என்னும்போது கூட்டப்பட்ட கூட்டமல்லவா? இக்கூட்டத்தை எப்படி புரட்சிகர கூட்டமென அடையாளப்படுத்துவது? திருவிழாவுக்கும் விருந்துக் கொண்டாட்டத்துக்கும் பிக்னிக்குக்கும் கூடும் கூட்டம்தான் என வாதங்கள் கட்டப்பட்டன. “ப்ரி செக்ஸ்ன்னு சொன்னாகூட ஆயிரக்கணக்கில் கூடுவாங்க” எனச் சிலர் ஆபாசத்தை உமிழ்ந்தார்கள்.

அரசால் தொடந்து ஒடுக்கப்படும் வஞ்சிக்கப்படும் சமூகத்தின் உணர்வுகள் கோபமாக ஒரு கட்டத்தில் பீறிட்டு எழும். என்னதான் ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் அதிலுள்ள பெரும்பான்மை மக்கள் உழைக்கும் ஏழை எளிய மக்களே. அவர்களின் சாதியத் தலைமைகள் அதிகாரத்தில் அமர்ந்து இவர்களையும் சேர்ந்துதான் சுரண்டிக் கொழுத்தார்கள். தம்மை ஆளும்-ஆண்ட அரசால் தொடர்ந்து வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு ஏமாற்றத்தில் சுரக்கும் கொதிப்புஇ துயரம்இ கோபத்தை வெளிப்படுத்த சல்லிக்கட்டு என்ற குறீயீட்டை மையப் புள்ளியாக்கப் பயன்படுத்திக் கொண்டனர் மக்கள்.

‘அரசியல் பேசுவதை தவிர்க்கவும்’ என்ற பொதுப்புத்தி வழி கருத்துரிமைஇ பேச்சுரிமை குரலை நெரித்த அரசை எதிர்த்து பொதுமக்கள் பேசவும், கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முன்வந்தனர். அரசை எதிர்த்துப் போராடுவது குற்றம் என்ற பொய்யை மெரினா, கோயம்பத்தூர், மதுரை எனத் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜனவரி 17லிருந்து 23வரை கூடிய மக்கள் உடைத்தெரிந்தனர். தலைமையற்ற, கொள்கையற்ற போராட்டமென இது சுட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான அரசை எதிர்ப்பதுதான் தம் கொள்கையென தெளிவான திட்டத்துடன்தான் மக்கள் முழக்கமிட்டார்கள். முழக்கங்களில் ஆணாதிக்கமிருந்ததுஇ ஆபாசமிருந்தது என்ற குற்றச்சாட்டுகளும் உண்மையானவை. தமிழக அரசியல் கட்சி மேடைகளில் நட்சத்திர ஆபாசப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டவர்கள் அல்லது நமது அரசியல் கட்சி தலைவர்கள் பெண் தலைவர்களை பேசும் பேச்சை ரசித்து மகிழ்ந்து ஓட்டுப் போட்ட தலைமுறையை சார்ந்தவர்கள் வாழும் தமிழ் நாட்டில் இப்படியான முழக்கங்கள் வந்ததில் ஆச்சரியமில்லை.  தமிழ்ச் சமூகமே பிற்போக்குத்தனம் கொண்ட சாதிவெறி ஆணாத்திக்க வெறிப்பிடித்த சமூகம். இவர்களில் இருந்து கொள்கையால் வழி நடத்தப்படாமல் சிலர் கூடும்போது பேச்சு மொழியில் சில முழக்கங்கள் வெளிப்பட்டன. ஒருசிலர் முன் வைத்த முழக்கங்களில் இருந்த பெண் இழிவுஇ சாதிப் பெருமை கருத்துகளைப் பொதுமைப்படுத்தி போராட்டத்தின் நோக்கத்தை புறந்தள்ள முனைவது நியாமற்ற நிலைப்பாடு.

jalluzkattu

 

“ஒடச்சக்கல்ல ஒடச்சக்கல்ல
ஓபிஎஸ் ஒரு எச்சகல்ல”

“ஒடச்சக்கல்ல ஒடச்சக்கல்ல
மோடி ஒரு எச்சகல்ல”
“ஐஞ்சு ரூபா லேசு
மோடி ஒரு லூசு”
“சின்னம்மா சின்னம்மா
ஓபிஎஸ் எங்கம்மா”
“ஜானி ஜானி எஸ் பாப்பா
மோடி எங்கே எஸ்கேப்பா”
“மண்ணெண்ண வௌக்கெண்ண வேப்பெண்ண
காளையை அடக்குனா உனக்கென்னெ”
“பெப்சியும் வேண்டாம்
பீட்டாவும் வேண்டாம்”
“காளையும் வேண்டும்
காவிரியும் வேண்டும்”

இது போன்ற குரல்கள் சாமான்ய மனிதர்கள் அரசு மீது கொட்டிய கோபத்தின் வெளிப்பாடு. நான் இவைகளை ரசித்தேன். மாட்டிறச்சி சாப்பிட்டதற்காக கொல்லப்படும் நாட்டில் மத்திய மாநில அரசுக்கெதிரான மக்களின் கோபம் எவ்வளவு ஆக்கப்பூர்வமானது. இந்தப் புள்ளியிலிருந்து முற்போக்குச் சக்திகள் மக்களிடம் மக்கள் அரசியலைக் கொண்டுச் செல்ல வேண்டும். மக்களுக்கு அரசு இயந்திரத்தின் மீதான அச்சம் தகர்ந்திருக்கிறது. இப்போதுள்ள சமூக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கொள்கைகளும் கொடுக்கத் தவறிய கூட்டு உளவியல் மாற்றம் தன்னெழுச்சியாக நிகழ்ந்திருக்கிறது. சாதியாக, மதமாகப் பிரிந்திருந்த தமிழர் உளவியல் இன்று தமிழ் அடையாளத் திசை நோக்கி ஒரு அடி நகர்ந்திருக்கிறது. இது கூறுபோடும் சாதியரசியலுக்குஇ மத அரசியலுக்கு எதிராகத் தன்னை தகவகமைத்துக் கொள்ளும் ஆற்றலை உட்செலுத்தியிருக்கிறது.  விடுதலை அரசியலைச் செவிக்கொடுக்க மறுத்தவர்கள் காதை மட்டுமல்ல மனதையும் திறக்க தயார்படுத்தியிருக்கிறது. வீதிகளில் நின்று துண்டறிக்கை கொடுத்தால் பார்க்காமலே கசக்கியெறியும் மகாஜனங்களிடம் அதில் என்னவுள்ளது என அறியும் அக்கறையைத் இது தூண்டியிருக்கிறது. சாதியைக் கடைபிடிப்பவர்கள்தான் சாதியை ஒழிக்க முடியும். சாதியத் தனிமனிதர் பொதுமனிதராகப் போராட்டத்தால் மட்டுமே உருமாற முடியும். மெரினா எழுச்சி ‘சாதியவாதிகளை’ ‘தமிழராக’ அடையாளம் காண உதவியிருக்கிறது. இந்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாம் மக்கள் அரசியலுக்கான உரையாடலைத் தொடர முடியும். உரையாடல் வெளிக்குள் நுழைவதற்கு இருந்த தடைகளில் சில உடைபட்டிருக்கின்றனஇ பொது உரையாடல் வெளி ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் அவர்களின் வெளிப்பாட்டு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் தமிழகமெங்கும் உரத்து ஒலித்த அழகிய காட்சியை இந்நாட்களில் காண முடிந்தது. பெண் மீதான தமிழ் கலாச்சார சனாதன மதிப்பீடுகளை இங்கு பெண்கள் தகர்த்தெறிந்தார்கள். பெண்கள் தலைமையேற்ற குழுக்களில் பொது மக்கள் முழக்கமிட்டார்கள். பெண்கள் பாடினார்கள்இ ஆடினார்கள் தாங்கள் கற்ற வீரக் கலைகளை நிகழ்த்திக் காட்டினார்கள்.
மெரினாவியல் கம்பு சுற்றிய முஸ்லீம் சகோதரி இன்று பெண்களின் விடுதலை உணர்வின் குறியீடாக மாறியிருக்கிறாள். இதுதான் ஒரு சமூகத்துக்கு தேவை. தனது மரபான ஒடுக்குமுறை வடிவத்தை களைந்துகொள்ள, மாற்றிக்கொள்ள நவீனமான சமூகமாக தன்னை புதுப்பித்துக்கொள்ள இந்நிகழ்வுகள்தான் உந்து சக்தியாகவும் கூட்டு நினைவாகவும் இருக்கும். இவை சமூகத்தில் கதையாக கலையாக இலக்கியமாக சாகசமாக பகிர்ந்துக் கொள்ளப்படும். இதனால்தான் மெரினா எழுச்சி கால அடையாளம் கொண்ட நிகழ்வாக அடையாளம் பெறுகிறது.

அடக்குமுறைக் கருவிகளை ஏவி மக்களை அச்சத்திற்குள் ஆழ்த்தி ஆள்வதுதான் அரச நிர்வாகம் என வரலாறு நமக்கு கற்பித்திருக்கிறது. சனநாயக முறையில் நான்கு பேர் கூடுவதையே தடுக்கும் அரசு ஆயிரக்கணக்கில் கூடுவதை எப்படி அனுமதித்தது இதற்கு பின்னணியில் அரசுக்கு வேறேதோ சதித்திட்டமிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இருந்திருக்கலாம் எப்படியாயினும் அரசுக்கு மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள்.  இந்த விஷத்தை விழுங்க அரசு தயாராக இல்லை. அரசை எதிர்த்து வென்றோம் என்ற முன்னுதாரணத்தை கூட்டு நினைவை கொண்டாட்டத்தை அரசு வரலாற்றுக்கு வழங்கத் தயாராகயில்லை. ஈவுவிரக்கமின்றி ரத்தக் களறியில் காவல்துறை வன்முறையால் போராட்டத்தின் களம் நொறுக்கப்பட்டது. ஜனவரி 22 இரவு வரை உலகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சக் கணக்கான தமிழர்கள் ஈடுப்பட்ட அறப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரத் தனது வழக்கமான சதியை பயன்படுத்தியது அரசு. திட்டமிட்டு வதந்திகள் ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டன. பிரிவினைவாதிகள், தேசவிரோத சக்திகள்இ சமுக விரோத சக்திகள் உள் நுழைந்தவிட்டனர் கலைந்து செல்லுங்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. ஜனவரி 23 அதிகாலை ஊடகங்கள் அனைத்தையும் களத்திலிருந்து அப்புறப்படுத்தி 7000 காவலர்களை குவித்து காவலர்களே தீ வைத்து காவலர்களே வாகனங்களை உடைத்து மாணவர்களின் மீனவர்களின் தலித்துகளின் முஸ்லிம்களின் மண்டைகளை உடைத்து மெரினா கரையை ரத்தக்களறியாக்கி ஒரு வரலாற்றுத் தன்னெழுச்சியை முடித்து வைத்தனர்.

காக்கிச்சட்டை நடத்திய அரச பயங்கரவாத வன்முறைகளை மக்கள் தங்கள் கைபேசி மூலம் பிடித்த படங்களின் வழியாக உண்மையை உலகத்திற்கு உண்மைகளைக் கொண்டு சென்றனர். மக்களே ஊடகமாகச் செயல்பட்டனர். இதுவும் மெரினா எழுச்சியின் குறியீட்டு வெற்றி. பல போராட்டங்களில் மக்கள் மீதான அரச பயங்கரவாத வன்முறைகளுக்கு சாட்சியமற்று நிரூபிக்க முடியாமல் மக்கள் தோற்றகடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் இந்தமுறை தோற்பதாக இல்லை.

அரசு பலவீனமுறும் காலங்களுக்காக மக்கள் தலைமுறைத் தலைமுறையாகக் காத்திருக்கிறார்கள். அதன் மர்மத் திறப்புகளை அதி ரகசியமாகக் கண்டுணர்ந்துத் தன்னெழுச்சி அடைகிறது மனம். அத்தருணம்தான் போராட்டத்தின் மூலத்தீ. அது சல்லிக்கட்டு என்னும் பந்தலில் விழுந்தது. தன்னெழுச்சி மக்களை வழிநடத்தியது. மக்கள் தன்னெழுச்சியை வழிநடத்தினார்கள். காலம் மக்களை வழிநடத்தியது. மக்கள் காலத்தை வழிநடத்தினார்கள் மக்கள் போராட்டத்தை வழி நடத்தினார்கள். போராட்டம் மக்களை வழி நடத்தியது. மக்கள் போரட்டத்தைக் கற்றனர். போராட்டங்கள் மக்களை கற்றன. போராட்டத்தை கற்பிக்கும் பயிற்சிப் பட்டறையாக ஒருவாரக் காலம் தன் குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தது மெரினா. இந்தி எதிர்ப்பு போராட்டக் களம் பல தலைவர்களை உருவாக்கித் தந்தது. தலைமையற்ற கொள்கையற்ற மெரினா போராட்டமும் பல தலைவர்களை உருவாக்கி காலத்திற்கு தந்திருக்கிறது. இனி வரும் போராட்டங்களின் வழியாக இந்த வரலாறு தன்னை மேலும் நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *