பிங்க்

ஓவியா

taapsee-pannu-as-miss-arora-in-movie-pink

பிங்க் என்ற இந்தி திரைப்படம். நம்பவே முடியவில்லை. இதை இயக்கியவர் ஓர் ஆண் இயக்குநர்தான். கதையும் ஆண் எழுத்தாளருடையதுதான். அனிருத் ராய் சவுத்ரி இயக்குனர். ரித்தேஷ் ஷா எழுதியவர். இவர்களுக்கு பெண்கள் சார்பில் இருகரம் கூப்பி நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படம் சரியான விசயத்தை சொல்கிறது என்பதை விட இநத காலகட்டத்தில் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்கிறது என்பதுதான் முக்கியம். அன்றைய தலைவர்கள் எழுப்பிய பெண் விடுதலைக் குரல்கள் எல்லாம் வீட்டின் கொல்லைப் பக்கத்தில் ஒடுங்கி நின்று கொண்டிருந்த ஏதுமறியா அபலைப் பெண்களுக்கு. (பெரியார் மட்டுமே இன்றும் இனியும் உருவாகப் போகும் பெண்களுக்கான குரலை அன்றே எழுப்பிய ஒரே தலைவர்.) ஆனால் படித்த பெண் வேலைக்கு போகும் பெண் தனது வாழ்க்கையை தான் வாழ முற்படும்போது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேச இந்த சமுதாயத்திடம் மொழியே இல்லை. அவள் குடித்திருந்தாள்….. பசங்களோட சுத்தறா…..சட்டென பெண்கள் உரிமைக்காக பேசிக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு மவுனம் கவிகிறது. ஏதோ ஒரு தடை… ஓர் அஜீரணம்… விவாதம் குடிக்கலாமா கூடாதா என்று திரும்புகிறது….. பெண் படிப்பதற்காக போராடலாம் வேலைக்கு போகலாம் அதுக்காக கண்டவனோட சினிமாவுக்கு போகலாமா…… அட சினிமாவுக்கு தனியாதான் போகலாமா…. சினிமாவை விடுங்க உணவு விடுதிக்கு….. தனியா போய் தானா வாங்கி சாப்பிடலாமா…..சில தினங்களுக்கு முன்பு நானும் பியுலாவும் சேலத்தில் ஓர் உணவு விடுதிக்கு சென்றோம். சின்ன இடம்தான். சர்வரிடமிருந்து வந்த முதல் கேள்வி இரண்டு பேர் மட்டுமா இன்னும் யாராவது வர்றாங்களா நான் இல்ல இரண்டு பேர்தான் என்றேன். சர்வர் நகர்ந்த்தும் பியுலா சிரித்துக் கொண்டே அவர் பில் கொடுக்க ஓர் ஆம்பிளையை எதிர்பார்க்கிறார் என்றார். நானும் தனியா ஓட்டலுக்கு போகும் போது எதிர்பட்டிருக்கும் வித்தியாசமான கேள்விகளையெல்லாம் நினைத்து சிரித்தேன். ஒவ்வொரு முறையும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படும்போதும் கொலை செய்யப்படும்போதும் மட்டும் அலறும் இந்த சமுதாயம் அப்போதும் கூட எங்கள் சராசரி வாழ்க்கைக்கு உலை வைப்பது போல்தான் பேசித் தொலைக்கிறது. பலாத்காரம் என்ற பெயரில் ஒரு பக்கம் அடி. பாதுகாப்பு என்ற பெயரில் மறுபக்கம் அடி. நாங்கள் ஒரு கன்னத்தில் வாங்கினால் மறு கன்னத்தை காட்ட வேண்டும். அப்போதுதான் பெண்ணுரிமை பேசுவதற்கு லைசென்சு கொடுக்கப் படும்.


இந்த நேரத்தில் பிங்க் படத்தின் தாக்கம் ஒரு புதிய பரிணாமத்தை பெண் விடுதலைக்கு தந்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. இயல்பாக பழகிய வயதுக்குரிய உற்சாகத்துடனிருந்த இளம் பெண்களின் அந்த சுதந்திரத்தை தனது இச்சைகளுக்கு சாதகமாக பார்க்கின்ற பொதுவான ஆண் புத்தி, அவ்வாறு நடக்காமல் அப்பெண் தன்னை தாக்கி விட்டு தப்பித்து விட்டாள் என்றதும், ஆண் அதுவும் பணமும் செல்வாக்கும் படைத்த வீட்டு ஆண் பிள்ளைக்கு வருகின்ற சீற்றம், அப்பெண்ணை தொடர்ந்து சித்ரவதைக்காளாக்கியது மட்டுமல்லாமல் அவள் என்னோடிருக்க பணம் கேட்டாள் தர மறுத்த்தால் என்னை தாக்கி விட்டாள் என்று அவள் மீது கொலை முயற்சி வழக்கு போடும் அளவுக்கு போகிறது. இதில் இயக்குனரின் வெற்றிகரமான செயல் என்னவென்றால் அந்த பெண் அந்த இளைஞனை தாக்குவதிலிருந்துதான் கதை துவங்குகிறது. என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்வி ஒன்று பார்வையாளர் மனதில் கதையுடன் சேர்ந்து நகர்கிறது. என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் கோர்ட் அறையிலிருக்கும் பார்வையாளர்களைப் போலவே திரையரங்கில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களும் வழக்கின் வாதங்களை வைத்தே கதையை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இதுவரை இந்திய நீதிமன்றங்கள் சந்தித்திராத புதிய வெளிச்சம் அமிதாப்பின் கண்களில். ஆம் அந்தப் பெண்கள் அந்தப் பையன்களுடன் ரெஸ்ட்டாரெண்டுக்குப் போனார்கள். குடித்திருந்தார்கள்… ஏ ஜோக் சொல்லி சிரித்தார்கள்…. எனி கிராஸ் கொஸ்டின்ஸ் ….??? நோ யுவர் ஆனர்….!!!!

pink

அவன் வற்புறுத்திய பெண்ணின் பெயர் மினல். அவனைத் தாக்கிய பெண் மினல். அவளுடன் சென்ற இரண்டு தோழியரில் ஒரு பெண் எதிர்க்கட்சி வழக்கறிஞரின் அத்து மீறிய தனி மனித தோண்டலைப் பொறுக்க முடியாமல் ஆமாம் நான் பணம் வாங்கினேன். ஆனால் அதற்கு மினல் எப்படி பொறுப்பாவாள் என்று கத்தி விட்டு நீதிபதியைப் பார்த்து சட்டம் என்ன சொல்கிறது என்று சொல்லுங்கள் என்று கதறி அழும் போது அமிதாப் சற்று நேரம் திணறிப் போவது போல் காட்சி. நமக்கும் கூட பதாளத்தில் விழுந்து விட்டது போல் உணர்வு. ஆனால் அமிதாப் மினலிடம் கேட்கிறார். அந்தப் பையன் உன்னிடம் அத்து மீற முயற்சித்த போது நீ என்ன சொன்னாய் மினல்? நான் ‘நோ, டோண்ட் டு தட்’ என்று சொன்னேன். ‘சத்தமாகச் சொல், எல்லோருக்கும் கேட்கும் விதமாகச் சொல்’ அதட்டுகிறார் அந்த முதிய மனிதர். துன்பம் சூழ நின்றிருந்த அந்த இளம் பெண் கண்களில் உண்மையின் ஒளி மட்டுமே துணையிருக்க ‘நோ சொன்னேன்’ என்கிறாள். அந்த வயதான வழக்கறிஞர் அறத்தின் குரலில் கறாராகச் சொல்கிறார் நீதிபதியிடம் நோ மீன்ஸ் நோ யுவர் ஆனர். நோ இஸ் நாட் எ வோர்டு இட் இஸ் கம்ப்ளீட் சென்டென்ஸ் என்கிறார். நீதிமன்ற அறையில் காவலுக்கிருந்த பெண் காவலர் விறைப்பான காவலர் உடையில் அதே மிடுக்கு களையாமல் நிற்க அவரது கண்களும் உதடுகளும் அவரது கட்டுப்பாட்டை மீறி கலங்கித் துடிக்கின்றன. நமது நிலையும் அதுதான்.
அவள் கன்னியா, கற்புள்ளவளா, குடித்திருந்தாளா, பேசினாளா, சிரித்தாளா என்ன உடையணிந்திருந்தாள்………அவள் மனைவியா விலைமகளா ……. இவையெல்லாம் கேள்விகளல்ல ..அவள் நோ சொன்னால் நீ அதன்பின் முயற்சிக்கக் கூடாது…. அத்து மீறக் கூடாது… நோ இஸ் நோ…. இதை பையன்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துங்கள். இந்த குற்றங்களிலிருந்து பையன்களை காப்பாற்றுங்கள். அதன்பின் நமது பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்…..இவ்வாறு சொல்லி முடிகிறது படம்.

தேசமே கொண்டாட வேண்டிய படம். கல்லுரிகளில் பாடமாக வைக்க வேண்டிய படம். இந்த படத்தின் வெற்றி மக்கள் மாற்றத்தை ஒத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *