23 ஆண்டுகளுக்குப் பிறகும் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை!

ஆக்கம்: SHWETA VITTA தமிழில்: தருண் கார்த்தி -( Thanks -yourstory.com/read/b56dab8624/23)

ஐநா சபை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்த தின விழாவை அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் கொண்டாடியது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர். சமூகத்தில் ஒடுங்கிக்கிடந்த தலித் மக்களின் சமூக அரசியல் விடுதலைக்காகப் பாடுபட்டவர். மற்றவர்களைப் போல தலித் சமூகத்திற்கும் இணையான வாய்ப்புகளைப் பெற்றுத் தர அவர் போராடினார்.

ஒருபக்கத்தில் இதிலொரு முரண் இருக்கிறது. ஐநாவும் இந்திய அரசும் பெரிய அளவில் கொண்டாட்டங்களை திட்டமிட்டிருந்தன. ஆனால் அடுத்த பக்கத்தில் 1.8 லட்சம் மக்கள் கையால் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை இல்லை. அவர்களுடைய கோரிக்கைகள் கேட்கும் திறனற்றவரின் காதில் சங்காக போய்விட்டது.

 

 
 

125வது நாள் பீம் யாத்ரா – இந்திய அரசை விழிப்படைய வைக்கும் முயற்சி

125 நாள் பீம் யாத்ரா நாட்டின் தலைநகரத்தில் முடிந்தது. இந்தியாவின் 30 மாநிலங்களின் 500 மாவட்டங்களைச் சுற்றிய 35 ஆயிரம் கிலோ மீட்டர் பயணமும் நிறைவுற்றது. தங்கள் கைகளால் துப்புரவுப் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களின் முன்னேற்றத்திற்காக இருபது ஆண்டுகளாக போராடிவரும் டெல்லியைச் சேர்ந்த சபாய் கரம்சாரி அந்தோலன் நிறுவனர் பெஸ்வாடாதான் அந்த யாத்ராவை ஏற்பாடு செய்தவர். நாட்டில் சட்டங்கள் அதன் இடத்தில் இருந்தபோதும், துப்புரவுப் பணியாளர்கள் மீதான அக்கறையின்மை, பாகுபாடு, வேறுபாடு காட்டுதல் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பீம் யாத்ரா.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சாக்கடைகளில் கையால் கழிவுகளை அகற்றியபோது 1,268 பேர் மரணம் அடைந்திருந்திருக்கிறார்கள் என்று சபாய் கரம்சாரி அந்தோலன் பதிவு செய்திருக்கிறது. அந்தப் புள்ளிவிவரம் யாருக்கும் கவலையில்லை. எதுவும் நடக்கவில்லை.

துப்புரவுப் பணியாளர்களின் அவலம்

கடந்த 2011 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,80,657 கையால் துப்புரவு பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் 9.6 மில்லியன் உலர் கழிப்பறைகளை சுத்தம் செய்திருக்கிறார்கள். வாரத்தில் ஆறு நாட்களும் காலை 6 மணிக்குத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 11 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். சின்ன தகரத்தை வைத்துக்கொண்ட சாலைகளில் ரயில்வே பாதைகளில் கழிப்பறைகளில் கிடக்கும் மலத்தை வாளிகளில் அள்ளுகிறார்கள்.

 
 
 
 

துப்புரவுப் பணியின் இயல்பை யாராலும் தாங்கி்க்கொள்ளமுடியாது, 90 சதவீத பணியாளர்கள் குடிக்கு தீவிர அடிமையாக உள்ளனர். அந்தப் பழக்கம் அவர்களுடைய உடல்நலத்தைக் கெடுக்கிறது. அவர்களுடைய சம்பாத்தியத்தில் 60 சதவீதத்தை குடிக்கு செலவழிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கொடுமையான வறுமையிலும் சிக்கிக்கொள்கின்றனர். மிகப்பெரிய பாகுபாடும், அக்கறையின்மையும் குடிமக்களால் காட்டப்படுவதோடு அரசும் மிக மோசமாக நடந்துகொள்கிறது.

தமிழகம், திருநெல்வேலியில் கையால் துப்புரவுப் பணி செய்யும் நடுத்தர வயதுள்ள மாரியம்மாள் கூறுகையில்,

எங்கள் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரிய பாகுபாடு இருக்கிறது. நாங்கள் சீருடை அணிந்தால், மக்கள் எங்கள் அருகில்கூட வருவதில்லை. பொதுப் பேருந்துகளில்கூட அருகில் உட்காரமாட்டார்கள். எங்களில் பலரும் துப்புரவுப் பணியை விட்டு விலகி சொந்தமாக தொழில் தொடங்கினார்கள். என் நண்பரின் குடும்பம் அப்படித்தான் கோழிக்கடை ஆரம்பித்தார்கள். ஆனால் ஒருத்தர்கூட கடைக்கு வரவில்லை. ஒரே மாதத்தில் கடையை மூடிவிட்டார்கள். எனவே, அந்தப் பெண் மீண்டும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிக்கே வந்துவிட்டார். அதைவிட கொடுமை அரசு செய்வது – நாம் தலித் என்று சொன்ன அடுத்த நிமிடம் துப்புரவுப் பணியை ஒதுக்கிவிடுகிறார்கள். ஏன்? நாங்கள் எப்போது ஒரு மரியாதைக்குரிய பணியை செய்யப்போகிறோம்- கல்வியும் மதிப்பிற்குரிய வேலையும். எப்போது எங்களுக்கு கிடைக்கும்? நாங்கள் எங்கள் வேலைகளை எப்போது தோ்ந்தெடுக்கப்போகிறோம்?

சட்டங்களும் பலவீனங்களும்

கடந்த 2013 ஆண்டு ‘கையால் துப்புரவுப் பணி செய்யும் பணியாளர்கள் வேலைவாய்ப்புத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம், கையால் துப்புரவுப் பணி செய்யும் பணியாளர்கள் வேலைவாய்ப்புத் தடை மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுமானம் (தடை) சட்டம் 1993 சட்டத்தை விட சீர்திருத்தப்பட்டு கொண்டு வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் பெஸ்வாடா அதை ஒத்துக்கொள்ளாமல் மறுத்தார். அவருடைய எதிர்ப்புக் குரலை அழுத்தமாக பதியவைத்தார், “அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன” என்றார்.

ஏற்கெனவே உள்ள சட்டப்படி, மாவட்ட மாஜிஸ்திரேட் வழக்குகளை தீர்க்கும் அதிகாரம் பெற்றிருந்தார். ஆனால் தற்போதுள்ள சட்டத்தில் அது இல்லை. கையால் துப்புரவு பணி செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அரசு ஊழியர்கள் தம் பணியைச் செய்யவில்லையென்றால் அவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. இந்த சட்டம் பயனற்றதாக இருக்கிறது.”

2013ம் ஆண்டு போடப்பட்ட ஐந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 4,656 கோடி ரூபாய் கையால் துப்புரவுப் பணி செய்யும் பணியாளர்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அது 10 கோடி ரூபாயாக சுருக்கப்பட்டுவிட்டது. ஆனால் மறுபுறத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்துக்கான ஒரே ஆண்டுக்கு 9000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். அரசியல் அதிகாரம் இல்லாமைதான் தலித்துகள் அந்த வேலையைவிட்டு வெளியேறமுடியாத நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

2013ம் ஆண்டு சட்டத்தைப் பற்றி பேசிய அவர், “பணியின்போது துப்புரவுப் பணியாளர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு ஆடையை அணியவேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. ஆனால் அது செயல்பாட்டில் இல்லை. பாதுகாப்பு ஆடைகள் இருக்கிறதோ இல்லையோ, ஏன் திறந்தவெளி சாக்கடைகளில் இறங்கும்போது யாருமே தடை செய்வதில்லை?” என்று கேட்கிறார்.

மரணங்கள், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு

“நாங்கள் 70,000 கையால் துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் இழப்பீடு கேட்டும் சமூகநீதி அமைச்சரவையில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளோம். இந்த நடைமுறை 1994 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை” என்கிறார்.

மார்ச் 2014 ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தது. துப்புரவுப் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் பெஸ்வாடா மேலும் பேசுகையில்,

வெளிப்படையான உண்மை என்னவெனில், இழப்பீடு கொடுக்கச் சொல்லும் விதிமுறையை பார்க்கும்போது, கையால் துப்புரவுப் பணி செய்யும் முறையை முடிவுக்கு கொண்டுவர அரசு விரும்புவதில்லே  என்றே தெரிகிறது. எங்களுடைய பீம் யாத்ரா, இந்த உயிரிழப்புகளை அரசு தடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

 
 
 

பெஸ்வாடாவின் பீம் யாத்ரா

நியூ டெல்லியில்தான் பீம் யாத்ரா நிறைவு பெற்றது. பெஸ்வாடாவுடன் அவருடைய சக தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்புரவுப் பணியின் மூலம் இழந்த 125 குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். இன்னும்கூட அவர்கள் இழப்பீடு வாங்கவில்லை. இதுதொடர்பான நான்கு கோரிக்கைகள் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்தார்கள். அதில் – வரலாற்றுரீதியாக நீதி மறுக்கப்படுவதற்கு தேசிய அளவில் மன்னிப்பு கேட்கப்படவேண்டும், மலத் தொட்டிகளை நவீனப்படுத்தவேண்டும், சாக்கடைகளை கையால் சுத்தம் செய்யும் பணியை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கையால் துப்புரவுப் பணி செய்வதற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டு 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்றுவரை என்ன மாற்றம் நடந்தது? 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *