வைகறையின் குளிர்ந்த காற்றில் இருவாச்சி பூக்களும் மைசூர் மல்லிகையின் நறுமணமும் நாசியில் வந்து வசுந்தராவின் மனதை வசீகரித்தன. வசுந்தரா அதிகாலையிலேயே குளித்து செவ்வந்திப் பூக்களைப் பறித்து, தனது அப்பா, அம்மாவின் படங்களுக்கும் மாமனார், மாமியாரின் படங்களுக்கும் சூட்டி வணங்கிவிட்டு வந்து கணவனை எழுப்பினாள். வாசலில்,“அண்ணே அண்ணே” என்ற ஆறுமுகத்தின் குரல் ஒலிக்கவும், ஆகா மணி ஆறாச்சு போல இருக்குதே, ஆறுமுகம் வந்து கத்தி காலையிலேயே இந்த மனுசன டென்சனாக்க வந்துட்டான் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டாள் வசுந்தரா. வெளியில் வந்து எட்டிப்பார்த்த வசுவிடம் “அண்ணே இருக்காங்களா” என்றவனிடம், “இரு வரேன்” என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்குச் சென்று ஆதித்தனை எழுப்பினாள்.
“எந்திரிங்கப்பா. ஆறுமுகம் உங்களைப் பார்க்க வந்திருக்கான்” என்றவுடன்,
“அவனுக்கு வேற வேலையில்லை. காலங்கார்த்தால வந்துட்டானா” என்று சலித்துக் கொண்டே வீட்டின் முன்பகுதியில் உள்ள பால்கனிக்குச் சென்று வெளியில் நிற்கும் ஆறுமுகத்தை எட்டிப் பார்த்தான்.
“அண்ணே எனக்கு இன்னிக்கு லீவு வேணும். குலதெய்வக் கோவிலுக்குப் போறோம்” என்றான்.
“உனக்கு வேற வேலையில்ல. வேலைக்கு வராம இருக்க, சாக்குப் போக்கு வேற. இரு வாரேன்” என்று உள்ளே போய் சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொண்ட ஆறுமுகம் புன்னகையுடன்,“வரேண்ணே” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
ஆதித்தன் இவனுக்கு ஓயாம இதே வேலையாப்போச்சு. வாரத்தில் இரண்டு நாள்காளாவது லீவு போட்டுவிடுவான். எதுக்குத்தான் போடுவானோ? வாங்குற காசையும் பொண்டாட்டிக்கிட்ட கொடுக்குறதில்ல என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
ஆதித்தன் காண்ட்ராக்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வருபவன். புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எலட்க்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்து கனெக்சன் கொடுக்கும் தொழில் நடத்தி வந்தான். இவனுக்குக் கீழ் பத்துபேர் வேலை செய்கின்றனர். இவர்களில் இந்த ஆறுமுகமும் ஒருவன். வேலையில் மிகவும் கெட்டிக்காரன்தான். ஆனால் வாரத்திற்கு ஒரு நாளாவது லீவு போட்டுவிடுவான்.
இப்படி இருந்தால் எப்படி வேலை நடக்கும் என ஆதித்தன் சலிப்படைவது உண்டு. இவன் லீவு போடுவதைப் பார்த்து மற்றவர்களும் தேவையில்லாமல் லீவு போடும்போது, ஆதித்தன் தனது வார்த்தைச் சாட்டையால் விளாசுவான். பயந்துபோய் யாரும் லீவு கேட்பதில்லை. ஆனால் இந்த ஆறுமுகம் மட்டும் விதிவிலக்கு. என்ன திட்டினாலும் உதிர்த்து விட்டு மறுநாள் வந்து லீவு கேட்பதை வழக்கமாக வைத்திருந்தான். அடிக்கடி திட்டிக் கோபப்படும் ஆதித்தன் சலித்துப் போய் இவன் இப்படித்தான் என்று இவனைக் கண்டுகொள்வதில்லை.
ஆறுமுகத்திற்கு மனைவியும் பதினெட்டு வயதில் மகளும் இருபத்தியோரு வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகனுக்குப் படிப்பு சரியாக வராததால் கூலி வேலைக்குச் செல்கின்றான். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில்தான் ஆறுமுகம் வேலை பார்த்த கூலியை வாங்கிக் கொண்டு போய் தினமும் குடிக்க ஆரம்பித்தான். நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகரித்திருந்தது. வீட்டில் இதனால் ஆறுமுகத்திற்கும் அவன் மனைவி லட்சுமிக்கும் தினந்தோறும் சண்டை அதிகரித்திருந்தது.
இந்த நிலையில்தான் ஒரு நாள் அதிகாலையில் ஆதித்தனுக்கு போன் வந்தது. ஆறுமுகம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி ஆதித்தனுக்கும் வசுந்தராவுக்கும் பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. என்ன காரணம் என்பது இருவருக்கும் ஓரளவு ஊகிக்க முடிந்தது.
“ஆறுமுகம் அதிகமாக குடிச்சதால அவன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா அதுவாதான் இருக்கும். இருந்தாலும் இவன் இப்படி செஞ்சிருக்கக்கூடாது” என்று சொல்லிய ஆதித்தன் இறப்புச் சடங்கிற்குப் போய்விட்டு, அவன் மனைவியை விசாரித்துவிட்டு, செலவுக்குக் கையில் காசு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.
வந்தவனை வசுந்தரா மறித்து, “என்னாச்சுங்க ஆறுமுகம் ஏன் இப்படிச் செஞ்சானாம்? ஏதாவது தெரிந்ததா?” என்று விசாரித்தாள“என்னத்த சொல்லச் சொல்ற, அவன் பொண்டாட்டி அதிகமாகக் குடிக்கிறான்னு சண்டை போட்ருக்கு. அதனால கோவிச்சிக்கிட்டு அவனுக்குத்தான் பக்கத்து, பக்கத்துல இரண்டு வீடு இருக்குல்ல, இன்னொரு வீட்ல போய் படுத்திருக்கான். காலையில சரியாப் போகும்னு அவன் பொண்டாட்டி எப்பவும் இருக்கற வீட்ல படுத்திருச்சு. காலையில பாத்தா தூக்குல தொங்கிருக்கான். என்னதான் இருந்தாலும் அவன் பொண்டாட்டி வேற வீட்ல படுக்க விட்டிருக்கூடாது” என்று சொல்லவும்,
“ஆமாம்பா. இந்த ஆறுமுகம் சின்ன நொள்ளை பாருங்க. இவன அவ கண்காணிச்சிட்டே இருக்க. நாற்பது வயசுக்கு மேலாச்சு. கொழுப்பெடுத்துப் போய் குடிக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கெல்லாம் செத்திருக்கான்னா, இவன் இருக்கறத விட சாகுறதே மேல். இதுல அவன் பொண்டாட்டிய குற்றம் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது?” என்றாள்.
சுருக்கென்றது ஆதித்தனுக்கு. உண்மைதான் இவன் இந்த உப்புப் பெறாத விசயத்துக்காக செத்திருக்கக்கூடாது என்பதை மூளை ஏற்றுக்கொண்டாலும் பெண்களைக் குறை சொல்வதை எளிமையாகச் செய்கின்ற ஆண் புத்தி அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
“என்னதான் இருந்தாலும் அவன் பொண்டாட்டி அவனை விட்ருக்கக்கூடாது” என்று நொண்டிச் சாக்குச் சொல்லி லட்சுமியின் மீது மற்ற ஊர்க்காரர்கள் போல குற்றம் சுமத்தினான்.
“சொல்லுவீங்கப்பா. இதே செயல அந்தப் பொண்ணு லட்சுமி செஞ்சிருந்தா என்ன சொல்லியிருப்பீங்க? ஊர்ல, உலகத்துல நடக்காததையா ஆறுமுகம் பண்ணிட்டான்? இவ ஒண்ணுமில்லாத விசயத்துக்கு புருசனையும் புள்ளைகளையும் விட்டுட்டுப் போயிருக்கா? என்று அவளைத்தான் குத்தம் சொல்லியிருப்பீங்க? உங்களையும் இந்த ஊரையும் திருத்தவே முடியாது” என்று முடித்தாள் வசுந்தரா.
இந்தச் சமயத்தில்தான் ஆறுமுகம் இறந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் லட்சுமி வசுந்தராவைப் பார்க்க ஒரு நாள் வந்திருந்தாள். வந்தவள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த அவரை, மொச்சைக்காய் என பலவற்றையும் எடுத்து வந்தவள் வசுந்தராவின் கையில் கொடுத்தாள்.
“வாங்க” என்ற வசுந்தரா, “ எப்படி இருக்கீங்க? பிள்ளைகல்லாம் நல்லா இருக்கா?” என்றாள். லேசாகப் புன்னகைத்த லட்சுமி “நல்லா இருக்கோம். பாப்பாவ கட்டிக் கொடுத்தாச்சு. தம்பி வேலை பார்க்கிறான். அவரு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றாள் ஏக்கப்பெருமூச்சுடன்,
“விடுங்க. அவருக்கு விதி அவ்வளவுதான். சங்கடப்படாதீங்க, பிள்ளைகளப் பாருங்க. நல்லா சாப்பிடுங்க. ஊரு உலகத்த நினைச்சு வருத்தப்படாதீங்க” என்றாள் ஆறுதலாய்.
“அவருக்கு குடி மட்டும்னா பரவாயில்ல. தெற்குத் தெருவுல ஒரு கூத்தியாளையும் வச்சிருந்தாரு. அத என்னால தாங்கமுடியல. அதான் இருந்தா ஒழுங்கா இரு. இல்ல வீட்டை விட்டுப் போன்னு சொல்லிட்டேன். நாஞ் செஞ்சது தப்பா? நீங்களே சொல்லுங்க?” என்றாள்.
“எந்த பொண்ணும் இத தாங்கிக்க மாட்டா, விடு நடந்தது நடந்துபோச்சு” என்று தேற்றிய வசுந்தராவிடம், “இத மனசோட வச்சிக்கங்க. வேற யாருகிட்டயும் சொல்லவேண்டாம். நீங்க என் உணர்வ புரிஞ்சிப்பீங்கனுதான் உங்களிடம் சொன்னேன். இறந்த பிறகு யாரும் அவர தப்பாப் பேசவேண்டாம்” என்று கூறி விடைபெற்ற லட்சுமியை நினைத்து வியந்துபோனாள் வசுந்தரா.
ஆறுமுகத்தை யாரும் தப்பாப் பேசக்கூடாதுன்னு நீ நினைக்கிற, ஆனா இந்த ஊருசனம்பூரா என் புருசன் உட்பட நீ கொலை செஞ்ச மாதிரி பாக்குறாங்களே என்ன சொல்ல என்று நினைத்துக்கொண்டாள் வசுந்தரா.

