-சுந்தரிமணியன், புதூர்
வைகறையில் எழுந்த குளிர்ந்த காற்று நர்மதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பனிக்காலத்தில் ஒரு பக்கம் குளிராகவும் ஒரு பக்கம் வெப்பத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவளது கணவன் மணிமாறன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது அருகில் சென்று அவனது தலைமுடிக் கற்றைகளைக் கோதியவள் அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள். சட்டென தூக்கம் கலைந்த மணிமாறன்,
“என்னடா தூங்கும்போது கொஞ்சுற. விடிஞ்ச பிறகு வச்சிக்கலாம்” என்றவுடன்,
“இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. அதான்” என்று முகத்தைத் தோள்பட்டையால் வலித்தாள்.
“இரு உன்னைய எந்திரிச்ச பிறகு வச்சிக்கறேன்” என்றான். அவனை விட்டு நகர்ந்து தோட்டத்துப் பக்கம் வந்தாள். தோட்டத்திலிருந்த பூவரச மரங்களிலும் மாமரங்களிலும் அணில்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு கீச் கீச் சென்று கத்திக்கொண்டும் தவிட்டுக் குருவிகள் ராகமிட்டுக் கொண்டும் பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பிகளில் இரட்டைவால் குருவிகள் அமர்ந்து கொண்டும் அந்த இளங்காலையைப் பொலிவாக்கிக் கொண்டிருந்தன.
நர்மதா இன்னிக்கு என்ன டிபன் செய்யலாம் மாறன் போனவாரமே பூரி கேட்டார். பேசாமல் பூரி செய்து சென்னா மசாலா செய்துவிடலாம்னா சென்னா ஊறப் போடவில்லை. பூரி கிழங்கு செய்துவிடலாம் என்று முடிவுசெய்து அவன் எழுமுன் எல்லாவற்றையும் முடித்துவிடும் நோக்கத்தோடு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்து, கிச்சனுக்குள் நுழைந்தாள். ஒரு மணிநேரத்தில் எல்லாவற்றையும் முடித்து வந்து மணிமாறனை எழுப்பினாள். மாறன் எழுந்து பல்துலக்கி நர்மதாவிடம் வந்தான். அவள் தேநீர் தந்தவுடன் வாங்கி அருந்திவிட்டு,
“என் தங்கமே உன்னைய மாதிரி பொண்டாட்டி கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணினேன்னு தெரியல” என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான். அவள் அகமகிழ்ந்து போய் சிரித்தாள். அவளின் கபடமில்லாத உள்ளத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது.
“நல்லா ஐஸ் வைக்கிறீங்க. எனக்கு ஜலதோசம் வந்துடப் போகுது” என்றவளைப் பார்த்து,
“இல்லப்பா. நிஜமாத்தான் சொல்றேன். இப்ப உள்ள மனைவிங்க வீட்ல இருந்துட்டே புருசனை என்ன வேலை வாங்கலாம்னு யோசிக்கறாங்க. ஆனா நீ வேலைக்குப் போய்ட்டும் ஒரு நாள் கூட என்னை வேலை வாங்குனது இல்ல” என்று அகமகிழ்ந்தான். இவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு கிளிகளும் தோட்டத்திலிருந்து கீச் கீச் என்று கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்தின.
“சரிப்பா குளிச்சிட்டு வாங்க. உங்களுக்குப் பிடிச்ச பூரியும் கிழங்கும் பண்ணியிருக்கேன். சாப்பிடலாம்” என்றதும் பாத்ரூமிற்குள் நுழைந்தான். குளித்து முடித்தவுடன் சாமி கும்பிட்டு, டைனிங் டேபிளுக்கு வந்தான். சுடச்சுட பூரியும் கிழங்கும் நர்மதா பரிமாற ஆவலாக உண்ண ஆரம்பித்தான். சாப்பிட்டு முடித்தவுடன்,
“நல்லா இருக்குடா” என்று மனம் குளிர்ந்து பாராட்டினான். மகிழ்ச்சியோடு சிரித்தவள்,
“சரிப்பா நாளைக்கு எங்க அப்பா அம்மாவ பாத்துட்டு வரலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்றவளைப் பார்த்தவன்,
“சரி சந்தோசமா போய்ட்டு வா” என்றவனிடம்,
“ஏம்பா நானா போக எனக்குத் தெரியாது. நீங்க வந்தீங்கன்னா, அவங்க சந்தோசப்படுவாங்க”
“எனக்கும் வரணும்னு ஆசையாத்தான் இருக்கு. எனக்கு ஒரு வேலையிருக்கே. முடிச்சுட்டு வர மதியம் ஒன்னு ஆகும்” என்றவுடன் அவள் முகம் வாடுவது கண்டு,
“சரி நீ முன்னாடி கிளம்பிப் போ. நான் மதியம் சாப்பாட்டுக்கு வந்திர்றேன்” என்றவுடன் மலர்ந்தவள், “நான் போய் நாளைக்குப் போட டிரஸ் எடுத்து வைக்கிறேன்” என மான்குட்டி மாதிரி துள்ளிக்குதித்து ஓடினாள்.
இப்படியாக நடந்தபோது படக்கென கதவு திறக்கும் சத்தம்கேட்டு கண் விழித்தாள். சே எல்லாம் கனவுதானா? நிஜமில்லையா?
“ஏய் நர்மதா விளக்கு வக்கிற நேரமாச்சு. இன்னுமா தூக்கம்? சோம்பேறி எழுந்து வீடுகூட்டு” என்று ஆங்காரமாய்க் கத்திய மணிமாறன் அவளது இடுப்பில் ஓங்கி மிதித்தான். வலியில் ஆவென அலறியவள் அவனிடமிருந்து கெட்டநாற்றம் வர அவன் குடித்திருக்கிறான் என்பது அறிந்து அதிர்ந்துபோய் அரக்கப் பரக்க எழுந்து துடைப்பத்தைக் கையில் எடுத்தாள். அவன் குடித்திருந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. இன்று கிடைத்த அடி கொஞ்சம்தான். கோபம் அதிகமாக இருந்தால் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வெளுப்பான்.
இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா? மணிமாறன் இந்தக் கனவுல கண்ட மாதிரி என்னிக்குவாது அன்பா இருந்திருக்கானா? அப்பா அம்மாவ பார்த்து எத்தன நாளாச்சு? இந்தக் கனவுல கண்ட மாதிரி மணிமாறன் என்னிக்காவது சந்தோசமாக அப்பா, அம்மாவ பார்க்க விட்ருக்கானா? நம்மளால கனவுல மட்டும்தான் குடிகாரனைக் கட்டுனதுக்கு மகிழ்ச்சியா இருக்க முடியும்போல என்று நினைத்துக்கொண்டாள். கனவின் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்வைத் தர வலியை மறந்து வேலை பார்ப்பதில் மும்முரமானாள் நர்மதா.

