சில்லாட்டை – சுந்தரிமணியன், இந்தியா

அந்திமாலையின் அடங்கலில் பறவைகள் தங்களது கூட்டைத்தேடிப் பறந்து கொண்டிருந்தன. வீட்டின் பின்னாலிருந்த ஆலமரத்தில் பறவையினங்களின் இரைச்சல் மிகுதியாகி காதைப் பிளந்துகொண்டிருந்தது.  புழக்கடையில் தவளைகள் கத்திக் கொண்டிருந்தன. தவளைகள் அதிகமானால் பாம்புகள் இருப்பிடமாக மாறும் அபாயம் இருப்பதால் கமலிகா புழக்கடையைச் சுத்தம் செய்யவேண்டும் என உள்மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

தனது கணவன் மதியழகன் காலையில் போனவன் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதை வீட்டிற்குள் நுழைந்தவுடன் அறிந்துகொண்டாள். கமலிகா டிகிரி முடித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலையில் இருக்கிறாள். அவளது கணவன் மதியழகன் எந்த வேலையும் செய்யாது சுற்றிக் கொண்டிருப்பவன். வீட்டிலும் வேலைபார்த்து வெளியிலும் வேலைபார்த்துக் கொண்டு குடும்பச்சுமையைச் சுமப்பவள் அவள். தனது பையன் தமிழினியன் பள்ளியிலிருந்து திரும்பியதை அவனது லஞ்ச் பேக்கை வைத்தும், பையை வைத்தும் தெரிந்து கொண்டாள்.  

வீட்டைச் சுத்தம் செய்து பக்கத்தில் போய் இரவுச் சாப்பாட்டிற்கு மாவு வாங்கி வந்து, தோசைக்குச் சாம்பார் இருந்தாலும் இந்த மனுசன் திங்கமாட்டார் என நினைத்துக் கொண்டே தக்காளிச் சட்னிக்கும் தேங்காய் சட்னிக்கும் தயார் செய்து வைத்தாள். மதியழகனுக்கு வேலை பார்க்காவிட்டாலும் வேளா வேளைக்கு வகையான சாப்பாடு வேண்டும். ஒரு நாளைக்கு உடம்புக்கு முடியவில்லையென சாம்பாரையே தோசைக்கு வைத்தால் இரவு சாப்பிடமாட்டான்.

“ஏன் சட்னி அரைக்கல? உனக்கு அதுக்கும் மேல்வலிக்குதா?” என்று பேசுவது மட்டுமல்லாது இரவுச் சாப்பாடும் சாப்பிடாது மறுநாளும் முரண்டு செய்வான்.

“இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுங்க மதி. எனக்கு உடம்புக்கு முடியல” என்று எவ்வளவு கெஞ்சினாலும் கேட்கமாட்டான். மறுநாளும் ஆக்கிய சோறைத் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். மாவை இவளே காலிசெய்தாக வேண்டும்.

ஆனால் இவ்வளவு சண்டைகளுக்கு மத்தியில் செலவுக்குக் காசு கேட்காமல் விடமாட்டான். தினம் ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் ஆபிசிற்கு வண்டியில் கொண்டுபோய் விடுவான். இல்லாவிட்டால் தெண்டமாய் நூத்தம்பது ரூபாய் ஆட்டோவிற்கும் அழவேண்டும். வேறு வழியில்லாமல் அவன் கேட்ட ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு, போகும்போது வண்டியில் பெட்ரோல் போடவேண்டும் என்று அதற்கு நூறுரூபாய் கேட்பான். கொடுக்காமல் இருக்கமுடியாது என்றாலும் ஒரு நாளைக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது கமலிகாவின் கையில் இருக்கவேண்டும்.

நாள் ஆக, ஆக மதியழகனுக்குக் கொடுக்கும் ரூபாயும் போதவில்லை. கமலிகா செய்யும் சமையலும் போதவில்லை. வாரத்திற்கு இரண்டு நாள் நான்வெஜ் சாப்பிட்டாலும் போதாமல்,

“நீ என்ன விருந்துச் சாப்பாடா போடுற? அந்த உருப்படாத காய்கறியத்தான சமைக்கிற?” என்று மதி கேட்கும்போது,

“இது உனக்கே நல்லாயிருக்கா? மதி. கல்யாணம் ஆன நாளையிலிருந்து நீ வேலைக்குப் போறதில்ல. நான் வேலைக்குப் போய் பொங்கிப் போடுறேன். அதுலயும் குத்தம் சொல்லிட்டே இருக்க? தெனம் நான்வெஜ் சமைக்க நான் எங்க போறது? கொள்ளைதான் அடிக்கணும்”  என்ற கமலிகாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“நீ என்னைத்தான் குத்தம் சொல்லுவேன்னு எனக்குத் தெரியாதா? புள்ளைய நான் பார்த்துக்கணும். போதாதுக்கு வீட்டையும் பார்த்துக்கணும்” என்று மதியழகன் பதிலிறுத்தான். கமலிகாவின் உள்மனதுக்குத் தெரியும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தவுடன் தமிழினியனுக்கு மூன்று வயதாகும்போது,

 “குழந்தைய நான் பார்த்துக்கறேன். நீ வேலைக்குப் போ” என்று மதி சொல்லும்போது தனது நிலையை நினைத்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை. கல்யாணத்திற்கு முன் மதியழகன்மேல் வைத்த காதல் சீக்கிரமாகவே மழைக்குப் பின்னால் இருக்கும் நீர்போல வடிந்துபோனது. திருமணத்திற்கு முன்னால் மதியழகனுக்குக் குடிப்பழக்கம் இருப்பது தெரிந்தாலும் கிடைத்த வேலையை எல்லாம் பார்ப்பவன், ரொம்ப சுறுசுறுப்பானவன் என்று மாமியார் சொன்னதை அப்படியே நம்பியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தெரியவருகையில் தன்னையே நொந்துகொள்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கமலிகா வெகுளித்தனமான பெண். யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்புகிற ஜாதி. பக்கத்துவீட்டில் வசித்த தனது மாமியாரின் மேல் திருமணத்திற்கு முன்பே மிகவும் படித்தவர், பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்த்திருக்கிறார் என்ற நப்பாசையில் அவரது பிள்ளையும் நல்லவர் என்று நினைத்து மதியழகனை விரும்பியதும் நம்பியதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது திருமணமான ஒரு வாரத்திலேயே தெரியவருகையில் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள். தனது பிறந்தகத்தில் சொன்னால் நீதானே விரும்பிக் கல்யாணம் செய்தாய்? என திட்டுதான் கிடைத்தது.

மதியழகனைத் திருத்த எண்ணி, காசு கொடுக்காமல் இருந்தால் கம்பெனியிலிருந்து வருவதற்குள் வீட்டிலுள்ள டிவி, விலையுயர்ந்த புடவைகள், கேஸ் சிலிண்டர் என அவள் அம்மா வீட்டில் கொடுத்த முக்கால்வாசிப் பொருள்கள் காணாமல் போயிருந்தன. பாத்திர பண்டங்கள், குத்து விளக்கு உள்ளிட்டவையும்தான். அவர் அம்மாவிடம் சொன்னபோது,

“அவன் திருந்தப் போவதில்லை. எப்படியோ செத்து ஒழியட்டும். விட்டுட்டு உன் வீட்டுக்குப் போ” என்று சொன்னபோது, தன் மாமியாரிடமிருந்தே மதி சாகட்டும் என்ற வார்த்தை வந்தது அவளை வேதனைப்படுத்தியது. எத்தனைதான் இருந்தாலும் தனது காதல் கணவனைச் சாகவிடவோ, அப்படியே விட்டுவிட்டுப் போகவோ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. மதியழகனும் கமலிகாவும் திருமணம் செய்தபோது, ‘இதுங்க என்னத்த ஒண்ணா வாழப்போகுது’ என்று உறவினர்களே பேசுகையில் இரண்டுபேரும் ஒன்றாக வாழ்ந்து சாதிக்கவேண்டும் என்று நினைத்தவள் கமலிகா. நிலைமை எவ்வளவு மோசமானாலும் மதியை விட்டுப் போகப் பலரும் புத்தி சொன்னாலும் அவள் மனது அதை ஏற்கவில்லை. அவள் மாஸ்டர் டிகிரி முடித்திருந்தாலும் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்பது அவளது வேதம்.

கமலிகாவின் தோழிகள் பலரும் அவளுக்கு உறுதுணையாக இல்லாத, சம்பாத்தியம் பண்ணாத, அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத துணையை விட்டு விலகி வா என்று எவ்வளவு சொன்னாலும் அவள் கேட்கவில்லை. மதியழகன் மேல் கொண்ட காதல் உணர்வும் என்றாவது திருந்துவான் தனது வாழ்க்கையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள். பனைமரத்திலிருந்து தொங்கும் சில்லாட்டை போல மதியழகனிடம் சிக்கிய அவளது வாழ்க்கை விடுபடமுடியாமல்.. ஊசலாடிக் கொண்டுதான் இன்னும் இருக்கிறது.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதியழகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. குடிப்பழக்கத்தைக் கைவிட்டான். கமலிகாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியாயிருந்தது. இனிமேலாவது வேலைக்குப் போவான் தனது சுமை குறையும் என்று எண்ணினாள். அவள் நினைத்ததற்கு மாறாக மதியழகன் காலையிலேயே கிளம்பி தனது அம்மாவிற்கும் அண்ணன் பிள்ளைகளுக்கும் உதவி செய்வதும் தன்மேல் மற்றவர்கள் குறைகூறாதிருக்க கமலிகா சரியாகச் சமைப்பதில்லை, விருப்பம்போல் சுற்றுகிறாள் என்று அவளைப் பற்றி தனது அம்மாவிடமும் உறவினர்களிடமும் குறைகூறுவதும் வழக்கமாயிருந்தது. அவனது பேச்சை உண்மையென நம்பும் மாமியார் கமலிகாவைத் திட்ட ஆரம்பித்தாள். ஒரு நாள் கமலிகா,

“இன்னும் ஏன் மதி வேலைக்குப் போகணும்னு நெனைக்க மாட்டேங்கற?” என்று கேட்க,

“இனிமேல் என்னால எல்லாம் வேலைக்குப் போகமுடியாது. முன்னாடி மாதிரியில்ல இப்ப எனக்கு உடம்புக்கு முடியல. நான் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்காத. குடும்பத்த நீதான் பாத்துக்கணும்”

என்று பதில் சொல்லவும் தலையில் இடியிறங்கியதுபோல் துடித்துப் போனாள் கமலிகா. தனது நம்பிக்கையெல்லாம் பாழாகிப் போன நிலையில் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

வேறு வழியில்லாமல் அவனை விவாகாரத்து செய்துவிட்டு தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்துகாட்ட முடிவுசெய்தாள். தனது காதல் வாழ்க்கை தோற்றுப்போன துயரம் மனதை இறுகச்செய்தாலும்  சமூகத்தின் பேச்சுகளையும் அண்டை அயலார் பேச்சுகளையும் தூக்கி எறிந்து, வாழ்க்கையின் துயரங்களை மறந்து தன் மகனுக்கான வசந்த வாசல்களைத் திறக்கச் செய்யப் புறப்பட்டாள் கமலிகா.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *