thanks :;- https://saravananmanickavasagam.wordpress.com/2025/09/11/
அருந்ததி ராய் ஒரு இந்திய எழுத்தாளர், களப்பணியாளர், அரசியல் விமர்சகர். இந்தியாவில் நிரந்தரமாக வசித்து, மேன் புக்கர் விருதை வென்ற ஒரே இந்தியர். ஒருமுறை மட்டும் வாசித்தால் பலவற்றைத் தவறவிடக்கூடிய செறிவான நாவல்களை எழுதிய, நிர்மல்வர்மா போன்ற வெகுசில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். இது இவர் சமீபத்தில் எழுதிய இவரது அன்னையைக் குறித்த நினைவலைகளின் தொகுப்பு.
Quote from the book:

“The safest place is the most dangerous place.”
Mrs.Roy என்று நூலில் அழைக்கப்படும் இவரது தாயாரின் நிலைமை, மற்ற கிறிஸ்தவப் பெண்களிடம் இருந்து அவர் எப்படி வேறுபட்டிருக்கிறார், அவரது Fighter qualities, அருந்ததியை அருந்ததியாக உருவாக்கியதில் அவரது பங்கு இவற்றை மனதில் வைத்துக் கொண்டு இந்த நூலை வாசிப்பது நலம். அம்மா-மகள் உறவு எப்போதும் Complicated, இதில் இரண்டு Complicated பெண்கள் அம்மா-மகள் ஆகிறார்கள்.
அருந்ததியின் சிறுவயது அறியாமை நூலின் பல இடங்களில் வெளிப்படுகிறது. கேரளாவின் சிற்றூரில் ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது போல், டெல்லியில் இறங்கியதும் பெரியம்மாவின் பெயரைச் சொல்லிக் கேட்பது, கர்ப்பமாகி விட்டோமோ என்று பயப்படுவது, குண்டாக இருக்கும் அம்மாவிடம் பெரியம்மா எப்படி ஒல்லியாக இருக்கிறார் என்று கேட்பது என்பது போல் முதல்பகுதியில் நிறையவே உண்டு.
டெல்லியில் தமிழ்ப்படங்கள் பார்ப்பதாகச் சொல்கையில் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா பற்றிப் பேச்சு வருகிறது. நடிகரும், காதலியும் பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்கள். கேரளாவில் அது போல் நடிகர்கள் வரமுடியாது என்று நாங்கள் சிரித்தோம் என்கிறார். எல்லோரும் சிரிக்கட்டும்.
இரவில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகையில் அருந்ததி பணக்காரர்கள்
வீட்டுப் புல்வெளியில் சிறுநீர் கழிப்பது, அனஸ்தீஸியா இல்லாமலேயே கருச்சிதைவு செய்து கொண்டது, இரண்டு திருமணங்கள், சில உறவுகள் போன்ற அருந்ததியின் அந்தரங்க விஷயங்கள் பல இடம்பெற்ற போதும் இந்த நூல் அவரது அம்மாவிற்கான Tribute. My mother, My gangster என்று இவரது பேட்டிகள் தலைப்பிட்ட போதிலும், அம்மா குறித்த குறைகளையே இந்த நூல் அதிகம் கூறிய போதிலும் அருந்ததி அம்மாவின் மேற்கொண்ட காதல் ஆழமானது. வார்த்தைகள் ஏமாற்றும், உணர்வுகள் ஏமாற்றுவதில்லை.
அருந்ததிக்கு David Godwin போன்ற ஏஜன்ட் தானாகத் தேடி வந்தது அதிருஷ்டம். ஆனால் புக்கருக்கு முழுவதும் தகுதிவாய்ந்த நூலது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மில்லியன் டாலர்கள் டீல் அந்த நாவலுக்கு. தொடரும் ராயல்டி. பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி போன்ற பெருநகரில் இருப்பிடத்திற்கும், உணவுக்கும் சிரமப்பட்ட பெண், பாதுகாப்பான வாழ்க்கையை விட்டு ஏன் போராட்டக்களங்களில் குதிக்க வேண்டும்? புக்கர் பரிசுத் தொகையைக்கூட உறவு, நண்பர்களுக்குப் பிரித்து வழங்கியிருக்கிறார். வெளிநாடுகளில் அருந்ததிக்கு எளிதாகக் குடியுரிமை கிடைத்திருக்கும். அருந்ததியின் கருத்தியலில் நாம் முரண்படலாம். அவரது அம்மாவைப் போலவே தான் நம்புவதே சரி என்று நினைப்பவர் அருந்ததி. அதற்காக தேசத்தை நேசிக்கும் ஒருவரைத் தேசத்துரோகி என்றழைத்தல் பாவம். அருந்ததி இந்த நூலில் அடிக்கடி சொல்வதைத் தான் நாமும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. This is India my dear.

