இன்னும் வராத சேதி

சீதா (சென்னை, இந்தியா)

 

innum-varatha-sethi-1956ல் யாழ்ப்பாணம் கருப்பம்பனையில் பிறந்த யுவனேஸ்வரி என்ற ஊர்வசி அவர்களின் கவிதைத் தொகுப்பு.

2015 புத்தகத் திருவிழாவில் அட்டைப்படத்தைக் கண்டு வாங்கிய மூன்று புத்தகத்தில் ஒன்று. நான் கவிதை வாசிப்புக்குப் புதிது ஏழெட்டு மாதங்களாகத்தான் எழுத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை ஒருவருக்குப் பரிசளித்த போது அந்தப் பதிவைக் கண்டு  ஊடறு றஞ்சி அவர்கள் வாசிப்பனுபவம் எழுதச் சொல்லி, அவ்வபோது சிறு குறிப்புகள் எடுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். சில கவிதை படித்த நான் இது என்னால் முடியுமாவென முதலில் யோசித்தேன், பின்வாங்கினேன். படிக்க ஆரமித்த பிறகு உணர்ந்தவற்றிலிருந்து வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

யாழ்ப்பாணப் பின்புலத்தில் ஈழத்தைப் பற்றிய அலறல்களும் கோஷங்களும் வெடிச்சத்தமும் அரசியல் துரோகங்களும் கேட்குமென்று புரட்ட ஆரம்பித்தேன். அதிகக் கொள்ளளவுள்ள அடர்த்தியான முன்னுரையைப் பாக்கியநாதன் அகிலன் என்பவர் மூன்றரைப் பக்கத்தில் குறுக்கிக் கொடுத்துள்ளார். அதுவே அதிக பயத்தை ஏற்படுத்தியது. அதை குறித்து எளிதில் விளக்கிவிட முடியாத நிலையால் கவிதைகளுக்குத் தாவும் முன் அவரின் ஒரு பத்தியைப் பகிர்கிறேன்.

‘ அடிப்படையில் ஊர்வசியின் கவிதைகள் பெண்ணென்ற அடையாளத்தின் மீது நடமாடுபவை. சிநேகிதியாக, காதலியாக, சகோதரியாக, போராளியாக, தாயாக என அவரடையாளம் அவரது கவிதைகள் முழுவதிலுமே கட்டப்பட்டுள்ளன என்பதுடன், அவை ஒருங்கே மேற்படி பால் நிலைப்பட்ட அடையாளத்தைப் பேசுமதேவேளைஇ இனத்துவம் சார்ந்த அரசியலையும் அதன் உடன் நிகழ்வாகக் கொண்டவொரு பிரகடனகங்களற்ற பால்நிலை – இனத்துவம் சார்ந்த சிறுபான்மை அரசியலையும் (Minority Politics) அவற்றினூடாக முன்னிறுத்தியுள்ளன’.

மொத்தம் 24 கவிதைகள்.

1981 முதல் 1986 வரை 11 கவிதைகளும், 1998 முதல் 2014 வரை 13 கவிதைகளுமென தொகுத்து வழங்கியிருக்கிறார் கீதா சுகுமாரன் அவர்கள். அந்தந்த காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் இதில் அடக்கம்.

இன்னும் வராத சேதி – ‘அது நம் எல்லோரதும் குரல்தான். எப்போதும் நமக்குள் ஒலிக்க வேண்டிய குரல்’ ஒரு கவிதையின் வரியைக் குறிப்பிட்டுக் காலம் பிந்தியாவது1986லிருந்து 2014 வரை எழுதிய அவரது கவிதைகள் 2014 ல் புத்தகமாக வெளிவந்ததைக் குறித்து மகிழ்ச்சிக்குரியது என்கிறார் எம்.ஏ.நுஃமான் அவர்கள்

கூடுதல் சிறப்பு ஓவியமும் அட்டை வடிவமைப்பும். நான் புத்தகம் வாங்கக் காரணமாக இருந்த அட்டைப் படத்தின் ஓவியர் வைதேகி ராஜா அவர்களுக்கும் மற்றும் அட்டை வடிவமைப்பு செய்த மாயன் அவர்களுக்கும் நன்றிகள்.

கவிதைகள் ஒவ்வொன்றும் இடிமுழக்கங்களாக மனதை உடைக்கிறது உருக்குகிறது.இயற்கையோடு இணைந்த மெல்லிய முள்ளால் ஆழ உழுதது போல் உணரவைத்தது ஒவ்வொரு கவிதையும். சுற்றியிருக்கும் இயற்கையைச் சுரண்டிக் கொண்டிருக்கும் நாம் உணராத அழகியலைப் போர்ப் பின்புலத்தில் இருந்து கொண்டு இயற்கையை காதலித்திருக்கிறார் என்றால் ரசனைகளையும் தேடல்களையும் கனத்த இருதயங்களுக்குள் கடத்த உண்மையான விடுதலை வேட்கையின் ஏக்கம்தான் காரணமாக இருந்திருக்க முடியும். இவர் கொடுத்திருக்கும் இயற்கை உவமைகளின்படி நாம் இயற்கையை ரசித்தால் கடைசி மனிதன் அழியும் வரை உவமைக்குப் பஞ்சமிருக்காது. இரண்டு இணைந்த கோடுகளின் நான்கு முனைகளை முன்னுக்கு பின்னும் மேலிருந்து கீழுமென இணைத்திருக்கும் வரிகளுக்கேற்ப ஒரு காட்சியை உருவகப்படுத்தவே மூன்று முறைக்குமேல் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் படிக்க வேண்டியிருக்கிறது. தனித் தனிக் களங்களுக்குள் ஒரு உணர்வினைப் பலவாறு உணரவைக்கிறது. முக்கியமாகத் தனிமைக் கவிதைகள் அந்தக் காலகட்டங்களின் தனித் தனித் தீவுகளில் நிறைந்த அமானுட நிகழ்வுகளைக் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறது.

பல விதங்களில் தனித்தனியாக எண்ணத்தைக் கொடுக்கிற இவர், பொக்கிஷங்களை, என் எல்லைக்குள் வந்த மன உணர்வுகளை, ஒவ்வொரு விதமாகப் பகிர விரும்புகிறேன்.

இன்னும் வராத சேதியின் முதல் கவிதை – காதல் வரி – 1981

இயற்கையை நமக்கேற்றபடி வடிவமைக்கக் காட்சிகளை காட்டும்
சொற்கோர்வைகளைக் கொடுத்துவிட்டு முடிவில் இரு வேறு படிமங்களை கொடுத்திருக்கிறார். காட்சிகளை நிறுத்தி உள்வாங்கிப் புகுத்த வேண்டியிருக்கிறது.

அடுத்து – வேலி -1981

தொடர்போடு ஒரிரு காட்சிகளை மூளையைச் சுரண்டி சிந்திக்கும்படி உதிர்த்து விட்டு காத்திருத்தலின் வலியைச் சொல்கிறார்

‘பழைய பஞ்சாங்கங்களில் புதிதாய் நம்பிக்கை தருவதாய் ஒரு சொல்லைத் தேடிப் பார்த்தபடி’
இறுதியில் சப்பென்று காற்றும் அறுபடும் படி சொல்லிவிட்டார்.

‘ இரண்டு சிட்டுக் குருவிகளை இங்கே அனுப்பேன் ! அல்லது இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது’

தனிமையை நிரப்ப உன் ஸ்பரிசத்தை இவைகள் மூலமாகவாவது அனுப்பேன் என்று நயம்படக் கூறி வியக்க வைக்கிறார் கவிதாயினி.

‘எல்லாம் ஒன்றாய்
இன்றும் முன்னே இருத்தும்

அவை யாவும் தங்கள் சோபையிழந்தன
அவனது உடனிருப்பில்’

என்ன ஒரு அழகான கணங்களை நொடியில் உணர்த்திவிட்டார்.

மூன்றாவது – அவர்களுடைய இரவு – 1982

அப்பப்பா என்ன ஒரு அழுத்தம். ஈழத்தின் யுத்த நாட்களை பற்றி முன்னமே அறிந்திருந்தாலும் நிழற்படமாய் தோன்றி அருக்கும் அரிவாள் சொல்லாடல். ‘அந்த இரவு அவர்களுடையது’ எத்தனை கனமான வார்த்தை என்ன மன நிலையில் இதை எழுதியிருப்பார்.

நான்காவது – காத்திருப்பு எதற்கு -1983

‘ஆனால் எனது பூமி எனது பொழுதுகள்
எதுவுமே எமக்கு
இல்லையென்றான பின்
இதுபோல் ஒரு பொழுது கிடைக்காமலும் போகலாம்
தொடரும் இரவின் இருளில்
எதுவும் நடக்கலாம்’

சில வரிகளில் பல வலிகள்.எக்கணமும் எதுவும் நிகழுமென இயற்கையை மேற்கோள் காட்டி இருக்கும் இருப்பை நீட்டிக்கும் அழுத்தம் அதீத வலியை தாங்கியிருக்கிறது.

ஐந்தாவது – நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு – 1983

முழு கவிதையிலும் யுத்தத்தில் பிரிந்த உறவுகளின் வலியை உணர்த்திவிட்டு கேட்கிறார் ஒரு கேள்வி. ஊர்வசி அவர்களின் எழுத்தின் ஆற்றல் பசுமரத்தாணியாய் போல் இறங்குகிறது.

‘நீண்ட காலம் நாங்கள் பிரிந்திருக்க வேண்டும் என்பது என்னவோ நிச்சயமானதே
பின்னரும்
ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்
இங்கே இருக்க வேண்டும் ?
என்ன
நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு ?’

ஆறாவது – சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் – 1984

விண்ணப்பமா இது விண் கல் இரண்டு உராய்வதில் எழும் சத்தம் போல உள்ளது. விடுதலை வேட்கையை அணிந்த சித்திரவதைக்கு சுண்டு விரலும் அசையாத மனம் கூரையின் சாளர கையகல துவாரத்தில் பறக்கும் பறவைக்கான செய்தியென கூறுகிறார் இப்படி ‘ ஊனிலும் உணர்விலும் கொண்ட உறுதி தளராதிருக்க அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி இவைகளிடம்தான் உள்ளது ஐயா.’

ஏழாவது – இடையில் ஒரு நாள் – 1985

மாறுவேடமிட்டு வரும் மக்கள் கொடுக்கும் நினைவுகளைஇ பிரிவை சந்தித்த யுத்தத்திற்கு சென்றவனின் காதலி நினைத்து கொண்டே கருக்கலில் கண் சொருகும் வேலையில் முரட்டுத் தனமான கதவுதட்டலுக்குச் செவிகள் விழிக்குமென்றார்

மீதியை அனுமானித்துக் கொள்ளுங்கள். இறுதியாக ‘கூண்டிலிருந்து தவறி விழுந்து விட்ட அணில் குஞ்சைப்போல
நீ போய்விட்டாய்
நாள் தொடர்க்கிறது’ என சுமையைக் கொடுத்து விட்டு முடித்து விட்டார். ஈழ வாழ்வின் வலியை இவர் கவிதைகள் களவு செய்திருக்கிறது.

எட்டாவது – காத்திருப்பின் பின்பாதி – 1985

முன்பாதியை நினைத்துப் பின்பாதி தனிமையை இயற்கையின் எழிலோடு உணர்த்தி விட்டு என்ன காரணமோ ‘ உனக்குள் எதுவோ கிடந்து உழல்வதை எனக்கும் உணர முடிந்தது’ என முடிகிறது அந்த எதுவோ என்பது எதுவாக வேணாலும் இருக்கலாமெனப் பலவற்றைக் கற்பனை செய்யும் மனதை சமாதானப் படுத்த முடியவில்லை.

ஒன்பதாவது – எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும் – 1986

தலைப்பிலே இருக்கிறகிறதென்றாலும் யன்னலுக்கு (ஜன்னல்) அப்பாலிருக்கும் அத்தனை இயற்கையையும் அழுகிற குழந்தைக்குச் சுரக்கிற மார்பை மறுதலித்து வெறுமையைத் தெரு விளக்கை வெறுமனே வியக்கிறாள் கணவனைப் பிரிந்த மனைவி. ஒரு பெண்ணாக உயிர் போகவும் வாய்ப்பிருக்கும் யுத்தத்திற்கு வாழ்வை அனுப்பிவிட்டு எப்படிக் காத்திருக்க முடியும். இயற்கையை வர்ணிக்கிறார் வெறுமைக்கு ஏற்றபடி வாய்ப்பிருந்தால் படித்து கானத்தை உருவாக்குங்கள்.

பத்தாவது – இன்னும் வராத சேதி –  1 -1986

இயற்கை கொடுக்காத காதலென்று ஒன்றுமில்லை ஆனாலும் ‘ நீ சொன்ன சேதியை இன்னும் ஒன்றுமே தரவில்லை காற்றும் கூட ‘ . அனுபவத்தின் வலியாக இதைப் பார்க்கிறேன்.

பதினொன்று – இன்னும் வராத சேதி – 2 – 1986

தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்கத் தோன்றுகிறது ‘மெல்ல அதை அனுப்பு’ என முடிக்கும் வரிகளில் எரிமலையையே வெடிக்க வைக்கும் அழுகை காத்திருக்கிறது.

இரண்டும் அப்போது இதழ்களில் வெளிவந்து விடுதலை வேட்கையிலிருக்கும் தியாகத்தை உலகுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

இன்னும் வராத சேதியோடு ஒன்றிரண்டோடு எழுத்தைக் கைவிட்டுப் போன நிர்மலா அவர்கள் 12 வருங்களுக்கு பிறகு வருகிறார் 12வது கவிதைக்காக – மனதும் மதிலும் – 1998

மீண்டும் மீண்டும் முயன்று மீண்டு விட முடியா மண்ணின் வலிகளைப் பகிரக் கவிதைகளைக் கதவுகளாகப் பயன்படுத்தியிருப்பார் போலும் ஒரு கதவு மூட மறு கதவைத் திறந்திருப்பாரென அனுமானிக்கிறேன். மண்ணுக்காக மும்மதக் குடும்பங்களும் கணவர்களை அனுப்பிவிட்டு இரும்பை காய்ச்சி ஊற்றும் தனிமையை அனுபவிக்கும் மனைவியரின் வலியை விவரிக்கிறார். மண்ணைத் தவிர வேறு எந்தப் பிரிவினையும் இவர்களிடையேயில்லை என உணர முடிகிறது.

பதிமூன்று – கலைந்த பொழுதுகளும் கலையாத துயிலும் – 1999

‘யாரிட்டார் இச்சாபம் ? இந்த விதமாய் எங்கள் இளமை ‘ ?
என்று ஆரம்பிக்கும் கவிதையின் முடிவு ‘கடைசிப் பெருமூச்சும்
உதிரும்வரைக்கும்
உள் ஊற்றுக்கண் உடைந்து
கடல் முழுதும்
ககனப் பெருவெளி முழுவதும்
நம் முன்னோர்
கால் பதித்த நிலம் முழுவதும்
கரையுடைத்துப் பெருகட்டும்’

என்று இரு வேறு மனநிலையில் தத்தளித்தாலும் இடைப்பட்ட வரிகளில் யுத்தத்திற்குச் செல்லும் மகனுக்கு உரமேற்றுகிறார் கவிதாயினி.

பதினான்கு – சூரியன் மறைந்த பிறகு – 1999

இரகசியச் சந்திப்பைச் சொல்லும் முன்பாதியும் பிரிந்த பிறகான பின்பாதியும் இயற்கையின் வர்ணனை மெழுகாக்கி ஒளிரும் மற்றொரு பிரிவின் கனம் பெருகிய கானம்.

பதினைந்து – இன்னொருவனுக்கு – 1999

இந்த இன்னொருவருக்குப் பதில் இன்னொருத்தி என்று இருப்பதே பெரும்பான்மையோர் எதிர்பார்க்கும் நீதி. அதை உடைத்து1999ல் ஒரு மாற்று பார்வை வந்திருப்பது அதிசயம்தான் இன்னும் இங்கு பல உணர்வுகள் ஏற்காத நிலையில் பழைய காதலனை நினைப்பதைச் சொல்ல விட்டு விடுவார்களா என்ன ?

மீண்டும் ஒன்பது வருட இடைவெளியில் பதினாறாவது – பேசப்படாத துயரங்கள் – 2008

இயற்கை ரசனை உணர்வு மூன்றும் சந்திக்கும் புள்ளியை வைக்கும் போது கையை ஆட்டி விட்டால் வரும் கோபத்தை அழகியலில் கலந்து மெல்லியதாய் வருத்தி வருந்தி தேற்றி இறுதியாய் ‘ பெண் பூவுமல்ல; பேயுமல்ல
பெண் தனித்துவங்களுடன் புரிந்து கொள் அவளை
போதும் அது எனக்கு’ என்று புள்ளியை வைக்க அடி எடுக்க வைக்க வைக்கிறார்.

பதினேழு – நுட்பங்கள் பெருகும் இரவு – 2008

மற்றொரு வகை தனிமை வலி இம்முறை மனகுகைக்குள் நடக்கும் பிரளயத்தைக் காட்டி ‘தெரிகிறதா உடைந்து விட்ட அஸ்திரம் ? ‘ கேள்வியாய்த் தொடர்கிறது கவிதையில். நமக்கில்லை பிரச்சனை நகரலாம் நமக்கென்ன ?

பதினெட்டு – கனவும் வெளியும் – 2010

காதல் கவிதையின் சிதறல்களிலும் வேட்கையின் இடி ஆனால் அங்கும் எல்லையற்ற பேரமைதி கேட்கிறார்.

அத்துடன்

‘ எம்மிருவர் முத்தங்கள் மட்டும் பேரொலியாய் வெகுதூரம் எதிரொலிக்கும்
அத்துடன் உன் இதமான இதயமொன்றே போதும்
அதற்கு மேல் வேறொன்றும் இல்லை’

மனதை மிக வசீகரித்தது.

பத்தொன்பது – மழையின் மீதி – 2014

‘அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்’

யாரெனத் தெரியவில்லை என்பதே சுவராசியத்தைக் கூட்டுகிறது. நிறைய முறை படித்து விட்டேன். அனுமானங்கள் புகை மூட்டங்களாய்த் திரிகிறது.

இறுதி வரிகள் – ‘தேடுங்கள் நன்றாக எங்கும்
உங்களிடம் கிடைக்கவே மாட்டார்கள்
ஏனெனில் இப்போது
அவர்களுக்குத் தலைப்பொன்றும் இல்லை’ .

இருபது – பாதைகள் பிரிவதில்லை – 2014

ஐம்பதைக் கடந்தவர் என்றோ நிகழ்ந்துவிட்ட பிரிவை உணர்த்தும் அற்புதமான உவமையுடன் கூறும் வலி நிறைந்த வரிகள்.

இருபத்தியொன்று – காலவெளிப் பயணம் – 2014

வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனையும் கைவிட்ட நிலையில் வரும் வெறுமையை இதை விட அழகான வரிகளாய் விளக்க முடியாது.

‘ காலவெளியைப் பிளந்து
முடிவற்ற நெடும் பயணத்தில்
பஞ்சுப்பொதியாக்கி தேடாது விடுங்கள் என்னை
மேகக் கூட்டத்தில் மிதந்து வர’

இருபத்தியிரண்டு-நேற்று நடந்தது – 2014

நேற்று நடந்ததென்ன ?
வந்த கெட்ட தகவலை உறுதி செய்ய முடியாத அவல நிலையிலும் பூக்களையும் மரங்கங்களையும் எப்படி இணைக்க முடிகிறது. இயற்கையில் கலந்த வாழ்க்கை வரம் பெற்றிருக்க வேண்டும் இந்தக் கவிதாயினி.

இருபத்திமூன்று – கற்றுக்கொள் இதனையும் – 2014

நேற்று கணவனை இழந்த மனைவி இனி சந்திக்கும் பிரச்சனைகளின் சூழலை விவரிக்கிறார். எல்லோரும் எழுதுவதுதானெனினும் இறுதியில் இருக்கிறது இவரின் தனித்துவம்.

‘உன் மகனுள் பூக்கள் விரிவதை
காலம் தன் கணக்கிற்கு
அவனிடம்தான் விடை கேட்கும்’.

இறுதியான இருபத்துநான்காவது – வெற்று நாட்கள் – 2014

வெற்றாய்ப் போன நாட்களில் நான் எதுவாக இருந்தேன் இனி வான் பரப்பை மறைக்கும் ஐந்து பறவைகளோடு நானும் பறப்பேன் ‘ ஒரு மரக்கிளை போதும் இடையிடையே ஒய்வெடுக்க’ என்று முடிப்பவர் இடையில் சொருகி வைத்திருக்கிறார் ஒரு குண்டூசியை.

‘அழகாய் மிக மிக அழகாய்
கோர்த்து வீசிய வார்த்தைகளில்
தொக்கிய உறவுகள் தொலைந்துபோனதா ?’ அசல் உண்மையின் நெடி கேள்வியில் அனலாய் கக்குகிறது.

ஒவ்வொன்றிலும் பிடித்த பாதித்த வரிகளையும் விளக்கங்களையும் என்னால் முடிந்த மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.

கவிதை முழுவதுமே வலி நிறைந்தது ஆனால் சுவாரசியமாக இழுத்துச் செல்வது மொழி நடை அழகியலும், இயற்கையின் கொடையை உருவகப்படுத்திய விதமும்தான். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதுதான் அதனால் நாமிழக்கும் இயற்கை, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு இன்னும் வராத சேதியில் பிணைந்திருக்கும் இயற்கை கலந்த உவமைகளும் விவரணைகளுமே சாட்சி.

அவசியத்திற்குப் பாடுபட்ட வலிகளைச் சுமந்த உண்மைத் தொகுப்பை மூடிவிட்டு அனாவசியத் தேடல் உலகிற்கு திருப்ப வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பை கொடுத்த கவிதாயினி ஊர்வசி அவர்களுக்கு நன்றிகள்.

1 Comment on “இன்னும் வராத சேதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *