வானம் ஏன் மேலே போனது? :- ஒரு விமர்சனம்

எஸ்.அர்ஷியா –நன்றி : திண்ணை

jayalaxmy book front pagesசில கவிதைகளையும் கதைகளையும் படிக்கும் போது அவை நம் அகத்தில் துயிலும் உணர்வுகளைத் தூசித்தட்டித்  எம் சுயத்தை தரிசிக்க வைக்கின்றன. மாயா அஞ்சலுவின் கவிதை வரிகளும் அப்படியே.  சமூக ஒடுக்குமுறையை உடைக்கும் சிறுபொறிகளாக பெண்களின் ஆக்கங்கள் பிரவகிக்கும் போது “எனக்குத் தெரியும்  ஏன் கூண்டுப் பறவைகள் பாடுகின்றன“ என்ற  கவிதையில்   வரும்.  “சிறகுகள் துண்டிக்கப்பட்டும் கால்கள் கட்டப்பட்டும் இருக்கும் அவர்கள் தன் குரல்வளையை பாடுவதற்காக உபயோகிக்கிறார்கள்.  அவர்கள் தம்மிடம் விடையிருப்பதால் பாடுவதில்லை. தம்மிடம் பாடல்கள் உள்ளதாலே பாடுகிறார்கள்”   என்ற அவரது இவ்வரிகள்  பெண்களுடன்அவர்களது வாழ்வுடன், அவர்களது ஒடுக்கு நிலையுடன்  அடையாளப்படுத்தி நிற்கின்றன. அதுபோலவே விஜயலக்சுமியின்  “வானம் ஏன் மேலே போனது?“ என்ற சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் போது தவிர்க்கமுடியாமல் இவ்வரிகள் என் ஞாபகத்தை தட்டிச் சென்றது. பெண்களுக்கும் கூண்டுப் பறவைகளுக்கும் தொடர்புள்ளதென்பதை கிருஷ்ணப்பிரியாவின் முகப்போவியமும் எமக்கு  மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது.

சமூகக்கட்டுமானங்கள், கலாசாரம்  என்பவை பெண்கள்மீது திணிக்கும் ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக தன் அனுபவங்களினுடாகவும், தன் சமூகத்தின்  மற்றைய பெண்களின் மனங்களில் மறைந்திருக்கும் துயரங்களின் மொழிபெயர்ப்புகளையும்;  தனது  சிறுகதைகளில் வடித்திருக்கிறார் விஜயலக்சுமி.

பிரபஞ்சத்தின் பல சூனியப் பிரதேசங்களுக்கு
நான் சொந்தக்காரியாய் இருந்தேன்…

வாயில்லாக் காற்றுடன் பேசினேன்.
நட்சத்திரக்கூட்டத்தின் ஏணி தொலைத்தேன்.
காற்றில் தடம் பதித்தேன்
காற்றில் கிறுக்கினேன்.
காற்றுண்டேன்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பொதுவாய் பெருவெளியில்
நான் மட்டும்… நான் மட்டும்…
தனிமையாய் சிறகு விரித்தேன்.
அலைந்தேன்…

ஒரு நாள் காலங்களுடன் மோதினேனோ,
கவிதைகளுடன் மோதினேனோ . .
நல்விபத்தாய் என் சிறகுகள் இறக்கப்பட்டன
கால் முளைத்த காற்றுகளின்
கரம் இணைத்தேன்.
சும்மா கிடந்த மூங்கில்கள்
செப்பனிடப்பட்டன.
நானும் புல்லாங்குழலானேன்.
என் தடங்கள் பதிக்கப்பட்டன.
எழுத்துகளானது.
எனக்குள் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டது“

என்ற அழகான கவிதை வரிகளினூடாகத்  தன் முன்னுரையில் தான் தொலைத்த தனக்கு அன்னியமாக்கப்பட்ட வாழ்வின் அடிமுடி தேடும் முயற்சியில் தன்னுள் புதைந்திருந்த வீரியத்தின் விதைகளை   இனங்கண்டு அவற்றை  வாழ்பனுபவங்களோடு பதனிட்டு  எழுத்துகாளாக தூவுகையில் தனக்குள் இருந்த இடைவெளி  குறைந்துவிட்டதாக கூறுகிறார். “வானம் ஏன் மேலே போனது? என்ற சிறுகதைத் தொகுப்பில்  பெண் ஒடுக்கு முறையின் பல்வேறு பரிமாணங்கள் 15 சிறுகதைகளாக பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன.  இதில் இடம்பெற்றுள்ள  கதைகள் இலங்கையில் நிலவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குடும்பங்களில் தோற்றம் பெற்ற  மாற்றங்கள் அவற்றின் பாதிப்புகள் என்பவற்றைப் பேசும் அதேசமயம் அடிப்படையாக எமது சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளால் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளையும் பேசிநிற்கின்றன.

காலகாலமாக ஒரு பெண்ணிடம் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் விம்பத்தை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட  பொய்யான சாத்திரங்;கள், உருவகிக்கப்பட்ட  ஒருதலைபட்ச கலாச்சாரங்கள், சமூகக் கட்டுமானங்கள் என்பவற்றை காப்பாற்ற ஒரு பெண் எடுக்கும் பிரயத்தனைகளை மறைமுகமாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது  இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெற்றுள்ள  “வலி” என்ற சிறுகதை. இக்கதையின் கதைசொல்லி தனது காயத்திற்கு மருந்து போடுவதை விடுத்து தான் காயப்பட்டதை மறைக்கவும் மற்றவர்கள அதை பார்க்காதிருக்கவும் எடுக்கும் எத்தனங்களே அதிகமாகவேயுள்ளது. இக்கதையில் புரையோடி யிருக்கும் யதார்த்தத்தை ஒவ்வொரு பெண்ணினது வாழ்கையுடனும் பொருத்திப் பார்க்கலாம்.  பிறரைப் பற்றி யோசித்து எமது வாழ்வைக் கோட்டை விடுவது தானே எமது வாழ்வு. குடும்ப கௌரவத்திற்காக எம்மில் எத்தனைப் பெண்கள் தம் வலிகளைச் சகித்துக் கொண்டு ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

இக்கதையின் பாத்திரத்தை மறுதலித்து மறுமொழியாக வந்து விழுந்திருக்கிறது “வானம் ஏன் மேலே போனது” என்ற சிறுகதை. இதில் வரும் பொன்னம்மா கிழவி தன்னால் இனிமேலும் குனிய ஏலாது என்று வானத்திற்கு ஒங்கி அறைந்ததால் கீழே பதிந்திருந்த வானம் மேலே செல்கிறது.  பொன்னம்மா கிழவியால் நிமிர முடிகிறது. அடிக்கு மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள். ஆனால் அந்த முதல் அடி தான் பிரச்சினை.  பெண்கள் மீது ஏற்றப்பட்ட அடக்குமுறைச் சுமைகளைச் சுமந்து  அடங்கி வாழ்வை உடைத்தெறியும் துணிவைத் தருகிறது இந்த உருவகக்கதை. பொன்னம்மாக்கிழவி  கொடுத்த குத்தின் அதிர்வினால் ஏற்பட்ட மாற்றங்களையாவது எம்மில் எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம். இன்றும் எத்தனை பெண்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டிருக்கிறார்கள்.

போரின் அழுத்தம் ஒரு சமூகம் மீது விழும் போது  அதன் சில படிமங்கள் மாற்றம் பெறச் செய்தாலும் எமது சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்பு பெண்களின் சுமையை, வேதனையை இரட்டிப்பாக்கிவிடுகிறது. போரில் ஆண் அங்கத்தவர்களை இழந்த பெண்கள்   அக்குடும்பத்தின்  பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டாலும் அவள் மீதான கலச்சாரத்தடைகள்  நீக்கப்படுவதில்லை. பொருளாதாரக் காரணங்களால் வெளிநாடுகளிற்குச் சென்ற பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நியாயம், மௌனமாகக் கரையும் மேகங்கள், கண்ணாடி வாழ்க்கை ஆகிய கதைகள் சித்தரிக்கின்றன.

மேரி மக்தலீனா மீது எறியப்பட்ட சிறு கற்கள்  பாறைகளாகி இன்று  அடிப்படைவாதமாகவும் மதக்கோட்பாடுகளாகவும் அவற்றை விழுங்கிய கலாச்சாரங்களாக பெண்ணை கொல்கிறது.  நியாயம் என்ற கதையில்  படைக்கப்பட்டிருக்கும் பெண்  தனித்து வாழும் போது அவள் சமூகத்தைச் சேந்தவர்களால்  இடையூறுகளைச் சந்திக்கிறாள். அதன்பிறகு அவள் வெளிநாடு சென்று  பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருந்தாலும் அவள்  ஆண்களின் இச்சைக்கு இணங்காத பட்சத்தில்  அதே சமூகத்தால்  அவள் மேல் அவதூறுகள்  மொழியப்பட்டு அவளது உடமைகள் பறிக்கப்படுகின்றன. அவள் பெண்ணாகவிருப்பதால்  எளிதில் தாங்கக் கூடியவளாக Soft targetஆக  இருக்கின்றாள் என்ற யதார்த்திற்கு ஒரு உதாரணம் இக்கதை. வெளிநாட்டிற்கு பெண்கள் செல்வதால் பெண்கள் வெறும் உழைக்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு, அவளது குழந்தைகள் அவளிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர். என்பதை சொல்கிறது மௌனமாகக் கரையும் மேகங்கள்,கண்ணாடி வாழ்க்கை எனும் சிறுகதையில் ஒரு பெண் மீது  கணவன் எவ்வாறு   ஏகபோக உரிமையை கொண்டாடுகிறான் என்பதுவும் அவன் தேவையேறபடும் போதெல்லாம் அடிக்கவும் கொல்லவும் பெண்ணின் உடல் எப்படி பாதுகாப்பற்றதாக வுள்ளது என்ற நிஜத்தை எம்முன் வைக்கிறது.

எமது தேசத்தில் பெண்மீதான வன்முறைகள் அதிகரிக்கும் அதே விகிதத்தில் சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த உண்மை பெரும்பாலும் வெளியில் வராத விடயங்களாக மறைக்கப்படுகின்றன. இதன் கொடுமை என்னவென்றால் இதை மறைக்கும் பொறுப்பும் பெரும்பாலும் குடும்ப கௌரவம் என்ற பெயரில் பெண்ணிடமேஒப்படைக்கப்படுகின்றது.  கணவனை அல்லது மகனைக் காப்பாற்ற தம் பிள்ளைகளை தம் பிள்ளைகளாக காட்டிய எத்தனை தாய்மார்கள் எம் சமூகத்தில் இருக்கிறார்கள். இத்ததைய சிறுவர்கள் மீதான வன்முறைகள் தாய்மார்கள் அற்று தந்தையரின் அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்பில் உள்ள பெண் குழந்தைகள் மீது  இலகுவில் பிரயோகிக்கமுடிகிறது.

இச்சிறுவர் மீதான வன்முறைகளின் எதிரொலிகளை மொட்டுகள் மலரட்டும்” 1, 2 என இருகதைகளாக பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர். இக்கதைகளிற்கு மொட்டுகள் மலரட்டும் என்று ஏன் தலைப்பிட்டார் என்று எனது வாசிப்பிற்கு புரியவில்லை மலர்தல் என்பது அன்னியமாகவும் கருகுதல் அல்லது கசக்குதல் என்ற படிமங்க ளுடாகவே என்னால்  இச்சிறுமியரின் வாழ்வை பார்க்க முடிகிறது. பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட சிறுவர்களின் மனநிலையின் பாதிப்பானது  அவர்கள் வாழ்வைப் பாதிக்கும் பாரியவிடயமாக நிலைகொள்வதென்பது கொடுரமானது. அவர்கள் நிஜவாழ்வு சிதைக்கப்ப்பட்டு அவர்கள் மனநோயாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். முதற் கதையில் ஒரு தாயிடமிருந்து  அவளது மகள்  அவளது கட்டுப்பாட்டையும் மீறி ஒரு ஆணினால் கடத்திச் செல்லப்படுகிறாள். அந்தச் சமயத்தில் அவளைக் காப்பாற்ற முடியாதவாறு நிர்க்கதியாக நிற்கிறாள். இறுதியில் அவள் தேடிச் செல்கையில்  அவளது மகளின் நிக்கரை ஒரு நிக்கர் குவியலிற்குள் கண்டெடுக்கிறாள் என்பது அவள்  காணும்  கெட்ட கனவாக காட்டப்பட்டுள்ளது. இது நிஜமாகிப்போன கனவு.

உலகின் எல்லாப்பாகங்களிலும் அன்றாட நிகழ்வாகிப்போன உண்மையின் கொடுரம். சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி.  டெல்லியில் அமைந்துள்ள நொய்ட என்ற கிராமத்தில் இடம்பெற்ற 38 சிறுவர் சிறுமிகளின் கொலைகள் மௌனமாக புதைக்கப்படும்  அநீதிகளிற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு தாயின் ஆழ்மனதில் தன் குழந்தையைப் பறிகொடுக்கப் போகிறேன் என்ற பயம் எவ்வாறு ஒட்டிக்கொண்டுள்ள தென்பது இக்கதையில் அழகாகச சித்திரிக்கப்பட்டுள்ளது. இக்கதையில் நிகழ்வுகள் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டிருப்பது, வாசிப்பவர்களின் மனதை ஒரு கணம் கசியவைக்கிறது. இச்சிறுவர் மீதான பலாத்காரத்தின் தொடர்ச்சியாக பார்க்க கூடிய விடயமாகவே இளம் பெண்களைக் காதலித்து ஏமாற்றி குழந்தை  உருவானவுடன் நிர்க்கதியாக்கும் நிலை யுமுள்ளது. கருகும் நாளை என்ற சிறுகதை இந்த உண்மையின் �’ரு பதிவு

இத்தொகுப்பில்  இடம்பெற்றுள்ள எல்லாகதைகளும் பெண்கள் சமூகத்தில் படும் அவலங்கள், அவள்மீதான சமூகத்தின் பாரபட்சம் என்ற வரையறையிற்கு உட்பட்டதாகவேயுள்ளது. ஒவ்வொரு கதையும் ஒடுக்குமுறையின்  கனத்தை அநீதி என்ற தராசிலிருந்து எம்முன் இறக்கி வைக்கின்றதென்று சொல்வது இத்தொகுப்பிற்கு சாலப்பொருந்தும். சில விடயங்கள் சித்தரிப்புகளாக, ஆங்கங்களாக, கோபங்களாக வெளிப் பட்டிருக்கின்றன.  பெண்ணும ஆணும் சரிநிகர் சமானமாக… என்ற கதையில்  எம் சமூகம்; கலாசாரம், சம்பிரதாயம் என்பவற்றின் பாரபட்சமான முகத்தை  கேள்விக்குட்படுத்துகிறது.  ஒரு அன்றாட நிகழ்ச்சி மூலம்; ஒரு பெண் சேலை உடுப்பதால் இவளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் இக்கதையில் வடிக்கப்பட்டுள்ளது. அன்றாட  அசௌகரி யங்களை நிவர்த்தி செய்ய ஆண்களின் உடைகள் மாற்றப்பட்டாலும் பெண்மட்டும் கலாச்சார போர்வைக்குள்போர்த்தப்பட்டு  சேலை கட்டி துகிலுரிய வேண்டியுள்ளது. அவளுக்கென்று என்ற கதையை எடுத்துக் கொண்டால் அதில் வரும் பாத்திரமான அருந்ததி தன் கணவனுடன் வாழும் சந்தேகம் நிறைந்த வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். இங்கே காலகாலத்தின் மௌனங்கள் உடைகின்றன.

சமூகத்திற்கு அடிபணிய  புறப்பட்டால் புலி வாலை பிடித்த மாதிரி தான். சுத்தி சுத்தி ஒ’ரு வட்டத்திற்குள் நிற்கவேண்டியது தான். வெளியேவர ஒரு அடி எடுத்து வைத்தால்  அடுத்தக்கட்டமாக பதுங்குகுழி எம்மை நோக்கி வெட்டப்படும். இந்த சவாலைப் பெண் விடுதலை என்று மூச்சு விடத் தொடங்கும் எந்தப் பெண்ணும் உணரக் கூடியது. அவை அவமானங்களாக, அவதூறுகளாக, பயமுறுத்தல்களாக, பழிவாங்கல்களாக எம்மை துரத்தித் துரத்தியே வரும். தீக்குள் தீ என்ற கதையில் வரும் பாத்திரத்தின் நிலையும் இதுதான்.

இக்தொகுப்பில்  அமைந்துள்ள இறுதிக்கதை சமூகம் பெண்கள் மீது காட்டும் கோரமுகத்தின் இன்னொரு பரிணாமத்தை தொட்டு நிற்கிறது. ஒரு பெண் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டப்பட்டு தன் குழந்தையைத் தொடும் உரிமை கூட அவளிடமிருந்து பறிக்கப்படுகின்றது. அவள் குழந்தையை மீட்டு வந்தாலும் தாகம் என்ற மனிதனின் அத்தியாவசியத் தேவை கூட அவளுக்கு நிராகரிக்கப்பட்டு அவள் மரணத்தை தழுவுகிறாள். எமது சமூகத்தில்  இன்னும் கொஞ்சம் ஈரம்  ஒ’ட்டிக்கொண்டிருக்கிறது என்பதை காட்ட பூரணையின்   பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவனை எம் சமூகம் புத்தி சுயாதீனமற்ற ஒருவனாகப் பார்ப்பதும்   யதார்த்தத்தின் அவலம்தான்.

விஜயலக்சுமியின்  கதைகள் யாவும் ஆணாதிக்க விந்துகளால் பெண் என்ற  படிமத்தில் உருவாக்கப்பட்ட கருக்கள் தான். அவர் கால காலமாகப் பெண்கள் சுமக்கும் சுமைகளை  இறக்க முடியாவிட்டாலும் முயற்சித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கதைகளின் உள்ளடக்கத்திலுள்ள கனதியின் நிறை அவற்றின் வடிவமைப்பு மேலுள்ள குறையை நிவர்த்தி செய்தாலும், சில விடயங்களை அவர் தனது இனிவரும் படைப்புகளில் கருத்தில் எடுத்தல் அவசியமாகும் என்றே நினைக்கிறேன்.

இவரது  கதைகள் பெரும்பாலும் ஒரு கதைசொல்லி மூலமே சொல்லப்படுகின்றன. ரோம் எரியும் போது   பெண்களால் நீரோ போல் வீணை வாசித்துக் கொண்டிருக்கமுடியாது. அவள் பல சமயங்களில் தன் இருப்பை தக்கவைக்க வெடிக்க வேண்டியுள்ளது. நிறையவே கதைக்க வேண்டியுள்ளது.  சிறுகதை எப்படித் தான் சொல்லப்படவேண்டும் என்ற மரபைக் கடைபிடிக்கவிட்டாலும்  நாம் சொல்லும் விடயத்தை பட்டென்று வாசகர்கள் மனதில்  ஏற்றிவிட வேண்டும். விஜயலக்சுமியன் பல கதைகளில் கதைசொல்லி தொடர்ந்து தன் அபிப்பிராயத்தை சொல்ல முனைவதால் கதையும் தொலைந்து நாமும் தொலைந்து விடுகிறோம். கதைகள் கட்டுரை வடிவத்தை எட்டுகின்றன. நான் முன்பு குறிப்பிட்ட   வானம் ஏன் மேலே போனது, மொட்டுக்கள் மலரட்டும் போன்ற கதைகளில்  அவர் மனதில் சொல்லவந்த விடயத்தை அப்படியெ எம்மனதிலும்  படியவைத்திருக்கிறார்.  இந்தத் தன்மையை பல கதைகளில் காண முடியாதுள்ளது. பாத்திரப்படைப்பாலும்  காட்சிகளின் வடிவமைப் பாலும் கருவைப் புரியவைப்பது  ஒரு சுயாதீனமான வாசிப்பிற்கு வழிவகுக்கும். எமது கருத்துக்களைச் சொல்வது அவசியம்  என்ற போதும் அவை தமது அளவை மீறா வண்ணம் பார்ப்பது அவசியமாகும்.

எல்லாவற்றையும் எல்லாப் படைப்பகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. ஒ’வ்வொரு எழுத்தாளருக்கும் அவருக்கென்ற ஒரு கதை சொல்லும் பாங்குள்ளது. விஜயலக்சுமியின் கதைகள் பற்றின எனது வாசிப்பின்படி அவர் பாத்திர வடிவமைப்பில் Characterbilding  ல் அதிக கவனம் செலுத்தவில்லை. பாமாவின் பொண்ணுத் தாயாக அல்லது சங்கதியில் வரும் கேப்பங்கூழை பிளால்கில் கொண்டு செல்லும் பாட்டி போல் பொன்னம்மாக் கிழவியை மட்டுமே உலவவிட்டிருக்கிறார். நாம் ஒ’ரு பாத்திரத்தை நேர்த்தியாக வடிவமைக்கும் போது அந்த பாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் அநீதியின் குரலாக அல்லது எதிர்ப்பின் குரலாக மாறி வாசிப்பவர்களின் மனங்களில் பதிந்துவிடுகிறார்கள்.

பெண்மொழி என்று ஒன்று உள்ளதா? அது  வலி குரலா என்ற கேள்விகள் எமை நோக்கி வருகின்றன. சமூகக் கட்டப்பாடுகளை உடைத்து அகவிடுதலை  நோக்கி நாம் எடுக்கும் அடிகளில் பெண்ணின் உடல் பற்றியதும் பெண்ணின் பாத்திரம் பற்றியுதுமான பாராம்பரிய விம்பத்தை நீக்கி  சுயாதீனமான ஆனதும் தனித்துவமானப் படைப்புக்களை வெளிக்கொணரும் போது அவை ஆணாதிக்கச் சாயல் கொண்ட அனைத்து இலக்கியங்களிலிருந்தும் மாறுபட்டு புதியதொரு தளத்தில் தடம் பதிக்கின்றன. விஜயலக்சுமியின் வானம் ஏன் மேலே போனது என்ற சிறுகதைத் தொகுப்பும் பெண்ணிய படைப்பிலக்கியத்திற்கு சிறு பலம்.

 “சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்” மட்டக்களப்பு, இலங்கை  பெண்ணிலக்கிய வெளியீட்டாளர் “பனிக்குடம்” பதிப்பகம் இணைந்து “வானம் ஏன் மேலலே போனது” என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது.

arshiyaas@rediffmail.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *