பாலின பாகுபாடில்லா வாழ்க்கையைக் காட்டும் “விகல்ப் சன்ஸ்தான்”

-Thanks – siva tamilselva-our Story

சமூகத்தில் மகத்தான மாற்றத்தைச் சாதிக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் இருக்கிறது என்ற வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறது “விகல்ப் சன்ஸ்தான்” (Vikalp Sansthan). ராஜஸ்தானில் உள்ள சமூக சேவகர்களின் அமைப்பான இது பாலினப் பாகுபாட்டால் நடைபெறும் வன்முறைகளை எதிர்த்துப் போராடும் புரட்சிகரப் பணியில் ஈடுபட்டுள்ளது. 2004ல் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த அமைப்பை ஆரம்பித்தனர். அப்போதிருந்து பாலின சமத்துவம், பெண் குழந்தை கல்வி, குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு போன்றவற்றிற்காகப் போராடி வருகிறது. விகல்ப் என்றால் ‘ஒரு மாற்று’ என்று பொருள். பெண்களுக்கெதிரான மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வு, வன்கொடுமைகளை எதிர்த்து, மாற்றத்தைக் காண முயற்சிக்கிறது இந்த அமைப்பு.


 
“ராஜஸ்தான் பாரம்பரியமாகவே ஒரு ஆணாதிக்க சமூகம். இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமில்லாத சடங்கு சம்பிரதாயங்களை இப்போதும் கண்மூடித்தனமாக இங்கு பின்பற்றி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே அந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது” என்கிறார் யோகேஷ். “பெண்களும் இந்தக் கொடுமையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள்” என்று அவர் மேலும் சொல்கிறார்.
 
 

இந்த உணர்வுப் பூர்வமான பிரச்சனைகளை எதிர்த்து விகல்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. “முதலில் மிக முக்கியமாக பெண்களுக்குள்ள உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டங்கள் நடத்துகிறோம், பிரச்சரம் செய்கிறோம்.” என்கிறார் விகல்ப் சன்ஸ்தான் அமைப்பின் திட்ட மேலாளர் யோகேஷ் வைஷ்னவ். “ஒரு குழுவாகக் கிராமங்களுக்குச் சென்று பேசுகிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முதலில் கவனிக்கிறோம். அவர்களில் பெண்ணுரிமைக் கருத்துக்கு யார் ஒத்துப் போகிறார்களோ அவர்களைத் தேர்ந்தெடுப்போம். பிறகு அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம். ஊக்கப்படுத்துவோம். இதன் மூலம் அவர்கள் தாங்கள் சார்ந்த கிராமத்து ஜனங்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.” என விவரிக்கிறார் யோகேஷ். சமூகத்தின் அடித்தட்டு வரையில் இவர்களது பணி எப்படி ஊடுறுவியது என்பது பற்றிக் கூறுகையில், “இளைஞர்களை அதிக அளவில் இந்தப் பணியில் ஈடுபடுத்துவது எங்களுக்கு மிகவும் உதவிகரமாயிருக்கிறது.” என்கிறார் அவர்.

ஆண் பெண் பாலினப் பாகுபாட்டை எதிர்த்துப் போராட்டம்

“ராஜஸ்தான் பாரம்பரியமாகவே ஒரு ஆணாதிக்க சமூகம். இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமில்லாத சடங்கு சம்பிரதாயங்களை இப்போதும் கண்மூடித்தனமாக இங்கு பின்பற்றி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே அந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது” என்கிறார் யோகேஷ். “பெண்களும் இந்தக் கொடுமையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள்” என்று அவர் மேலும் சொல்கிறார்.

பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து கலைப்பது, குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, பர்தா பழக்கம், குடும்ப வன்முறை, விதவைகளுக்கு எதிரான பாகுபாடு என பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ராஜஸ்தானில் அதிகம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறார் விகல்ப். இதற்கு அவர் ஒரு மிகச்சிறந்த முறையைக் கையாள்கிறார். பெண்களின் பிரச்சனை குறித்து இளைஞர்களை உணரச் செய்கிறார். அவர்களையே தனது பணியில் ஈடுபடுத்துகிறார். “பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆண்களை உணரச் செய்து, அவர்களையே எங்களின் திட்டப்பணிகளில் ஈடுபடுத்துகிறோம்” என்று விளக்குகிறார் யோகேஷ். முதலில் வீடுகளில் ஆரம்பிக்கும் மாற்றம் பின்னர் நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறது விகல்ப் சன்ஸ்தான்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக வெற்றிகரமான பிரச்சரத்தை மேற்கொண்டு வருகிறது விகல்ப் சன்ஸ்தான். ‘எங்கள் மகள்களின் உரிமைகள்’ (Our Daughters’ Rights), ‘நமது மகள்களைப் பள்ளிக்கு அனுப்புவோம்’ (Send Our Daughters To School), ‘புன்னகை மகள்கள்’ (Smiling Daughters),’பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவோம்’(We Can End All Violence Against Women) என்பவை அந்தப் பிரச்சாரங்களில் சில.

 
 
 

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்த போராட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல வகை உண்டு. பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து கலைப்பது, பெண் குழந்தைகளை பிறந்த பிறகு கொல்வது, வரதட்சணை கொலைகள், குடும்ப வன்முறை என பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நமது சமூகத்தில் பல வகையில் வெளிப்படுகின்றன. “பெண்களுக்கு எதிரான அத்தனை விதமான வன்முறைகளையும் ஒழித்துக் கட்டுவதே விகல்ப் சன்ஸ்தானின் இலக்கு” என்கிறார் யோகேஷ். “பெண்களுக்கு ஆலோசனைகளையும் (counseling) பாதுகாப்பும் வழங்கும் மையங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். அவர்களுடைய சட்ட உரிமைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கிறோம். அடுத்த அடியை பலமாக எடுத்து வைக்க அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்கிறோம்.” என விவரிக்கிறார் அவர்.

“பெண்கள் முதலில் அவர்களையே மதிப்பதற்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.” புன்னகை மாறாமல் சொல்கிறார் யோகேஷ். “அவர்களுக்கு எதிரான அத்தனை விதமான சுரண்டலையும் எதிர்த்து நிற்க கற்றக் கொடுக்கிறோம்.” என்கிறார் அவர்.

பெண் கல்விக்கான நடவடிக்கைகள்

“பெண் குழந்தைகளின் கல்வியை குடும்பத்தினர் பொதுவாக விரும்புவதில்லை. அவர்களுக்கு ஆகும் கல்விச் செலவைத் தவிர்க்கவே அவர்கள் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். கல்வி கற்க வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை.” என்று கவலைப்படுகிறார் யோகேஷ். “படித்த பெண்களால் வேலைக்குச் சென்று வீட்டின் பொருளாதாரத் தேவைகளை கவனித்துக் கொள்ள முடியும் என்று பெண்குழந்தைகளின் பெற்றோரிடம் நாங்கள் எடுத்துச் சொல்கிறோம். படித்த பெண்களிடம் வீட்டுத் தேவையைக் கவனிப்பதற்கான பொது அறிவும் நல்ல உடல் ஆரோக்கியமும் இருக்கும் என்றும் கூறுகிறோம்” என தங்களின் பணி குறித்து விளக்குகிறார் அவர்.

“எங்கள் மகள்களின் உரிமைகள்”, “எங்கள் மகள்களை பள்ளிக்கு அனுப்புவோம்”, “புன்னகை மகள்கள்” போன்ற எங்கள் பிரச்சார நடவடிக்கைகளில் உள்ளூர் பள்ளிகள், சமூக அமைப்புகள் மற்றும் இல்லத்தரசிகளைக் கூட ஈடுபடுத்துகிறோம் என்கிறார் யோகேஷ். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட பெண் குழந்தைகளுக்கு உதவுவதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர வழி செய்கிறது விகல்ப் சன்ஸ்தான். இதுவரையிலும் இதன் சாதனைக் கதைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 200ஐத் தொட்டிருக்கிறது.

 
 
 

குழந்தைத் திருமணம் எனும் சாபத்தைப் போக்க

குழந்தைத் திருமணம்; ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சீரழிக்கும் முயற்சி. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான். குழந்தைத் திருமணம் ஒரு பெண்ணின் கல்வியைத் தடை செய்கிறது. அவளது உளவியல் வளர்ச்சியைத் தடுக்கிறது. சின்ன வயதிலேயே குழந்தை பெறும் கொடுமையில், அவள் வேறு பல உடல் உபாதைகளையும் அனுபவிக்க நேர்கிறது. பொருளாதார ரீதியில் அந்தப் பெண் ஆணைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவளது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. குடும்ப வன்முறைக்கு அவள் ஆளாகவும் அது காரணமாகிறது.

“பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பது, அவர்களை குழந்தைத் திருமணத்தில் சிக்காமல் காப்பாற்றுகிறது என்பதையே நமது சமூக ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே பெண் கல்வியின் அவசியத்தை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அனைவர் மத்தியிலும் பரப்புவதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது” என்கிறார் யோகேஷ். “பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசி, பெண் குழந்தைகள் தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்வதையும் அவர்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதையும் உறுதி செய்கிறோம்” என்கிறார் அவர். இதுவரையில் 875 பெண் குழந்தைகளை குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது விகல்ப் சன்ஸ்தான்.

நிச்சயமான மாற்றத்திற்கு…

விகல்ப் சன்ஸ்தான் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. ஒரு நிரந்தரமான மாற்றத்தை உறுதி செய்ய, ஆண்கள், கோவில் பூசாரிகள், சாதிக் காவலர்கள், வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் போன்றவர்களால் வரும் தடைகளைப் போக்க இந்த அமைப்பில் உள்ள இளம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களால் முடிந்த வரையில் மணியை உரக்க ஒலிக்கச் செய்கின்றனர். “வீதி நாடகங்கள், சுவரொட்டிகள், விழிப்புணர்வு முகாம்கள் கலந்துரையாடல்கள், பட்டறைகள் போன்றவற்றின் மூலம் பிரச்சாரத்தைக் கொண்டு செல்கிறோம். இந்தப் பிரச்சாரத்தில்தான் எங்களின் இதயமும் ஆன்மாவும் அடங்கியிருக்கிறது.” என்று சொல்லும் யோகேஷ், “நாளை மாற்றம் வரும்” என்கிறார் நம்பிக்கையோடு.

 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *