அண்டவெளியில் “அவளின்” பாடல்

– ஆதிலட்சுமி

உங்களிடம் ஒன்று சொல்வேன்.
கடைவாய்கள் இற்றுப்போகும்வரை
நன்றாகப் புலம்புங்கள்.
எனக்கொன்றும் கவலையில்லை.
உங்கள் புலம்பல்கள் எவையும்
என்னை குறுக்கீடு செய்யப்போவதுமில்லை.
என்னைச் சுற்றிப்படர்ந்து நெரித்த
வலிகளின் பிடியிலிருந்து மீண்டு நான்
புதியதாக பலம் கொண்டுள்ளேன்.
அண்டவெளியில் மிதக்கின்றன நான்
அடைகாத்த பாடல் பாடல்வரிகள்.
காற்று காவித்திரியும் என்பாடல் வரிகள்
உம்காதிலும் வந்துவிழக் கூடும்;.
அப்போது உங்கள்
உறக்கம் கலைக்கப்பட்டதாய் நீங்கள்
சினந்தெழுந்து சீறலாம்..
என்நிலம் என் காற்று என் கனவுகள்
என் குழந்தைகள் என் உதிரத்துளிகள் என
எல்லாவற்றையும் விலையாக கொடுத்தவள் நான்.
என் தோள்சுமக்கும் துயரங்களின் எடையை
என் உடலறியும்.
வன்முறையின் அங்கமென என்
சுவாசக்காற்றில் இரசாயனத்தை தூவியபின்
என்னை வலிந்தழைக்கும் மரணத்திடம்
நான் சவால்விட்டிருக்கிறேன்.
என் அனுமதியின்றி என்னுடலின்
ஓர் அணுவைக்கூட அசைக்கமுடியாதென.
கர்வம் நிறைந்தவள் என என்னை நீங்கள்
கணக்குப்போடலாம்.
கணக்குகளைப் போட்டுப்போட்டே உங்கள்
காலத்தை நகர்த்தியவர்கள் நீங்கள்.
கைகளைத்தட்டுவதிலும் காலத்திற்கேற்ப
கணக்குகளை கூட்டிக்கழிப்பதிலும்
நம்பிக்கையற்றவள் நான்.
கொடுத்த விலைக்கான வரலாற்றை
மீட்டெடுக்கும்வரை
வெட்டிச்சாய்க்கப்பட்ட வனாந்தரத்தில்
இரைக்காய் அலையும் உயிரியென
தேசமெங்கும் திரிகிறதென் மூச்சு.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *