நாட்டின் நிமிர்வுக்காய் தலைகுனிந்து வாழும் தோட்டப்புற மகளிருக்குச் சமர்ப்பணம்…

 ஜெஸீமா ஹமீட் -(மாத்தளை)

h3-1

 

 

 

 

 

கூடையும் கூலியும்
ஒரு சமூகத்தின் வலி
வரலாறாய்த் தொடர்கிறது…
கூலிக்காய் மாறடித்தும்
கூடையின் துயரம் குறையாமலிருக்கிறது….

நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்
ஆமாம்
நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்தான்
அதுதான்
அட்டைகளுக்கும்கூட பைண்டு பைண்டாய்
இரத்தம் கொடுக்கிறோம்…

பச்சை நிறத்தில்
மெத்தை விரித்தாற்போல‌
பசுமை பூக்கும் தேயிலைச் செடிகள்
அதிகாலைச் சூரியனில்
அற்புதமாய் மின்னும்
அதன்மேல் பனித்துளிகள்….
ஆஹா அற்புதம் அற்புதம்
அப்படியே
பசுமைப் புரட்சி செய்யும்
எங்களைப் பாருங்கள்
கந்தல் உடையும் தலையில் கூடையும்
செருப்பில்லா கால்களும்
செழிப்பில்லா முகங்களுமாய்
என்னமாய் வாழ்கிறோம்….?

சிரியப் பெண்களைப் போலவே
எங்கள் சிரிப்பும் துயரம் சுமந்ததுதான்….
அவர்கள் ஆக்கிரமிப்பில் இழந்தவர்கள்
நாங்கள் ஆதிக்கத்தில் இழந்தவர்கள்…..
சுகம் என்பதைக்கூட அப்பப்போ நாங்கள்
சோகங்களுக்குள்ளிருந்துதான்
சுவைத்துக் கொள்கிறோம்…
நிதம் சேற்றில் புதையும் எங்கள் கால்களும்
கொழுந்து பறித்தே கரை படிந்துபோன கைகளும்
மேடைப் பேச்சுக்கென்னவோ
உழைக்கும் கரங்கள்தான்
மிச்ச நேரமெல்லாம் வெறுமையின் குரல்களே
எங்கள் வேர்களை வாசிக்கின்றன…

கூலிக்கு குரல் கொடுத்தே ஊழி கடந்துபோனது
உயிரே போனாலும் உழைக்காமல் விடமாட்டோம்
எங்கள் வெற்றியைத்தான்…
கொழுந்து கூடைக்கு மட்டுமே
குனியும் எங்கள் தலைகள்
கூழைக் கும்பிடுபோட இனியும் குனியாது
பண முதலைகளாய்
எங்கள் உழைப்பை விழுங்கும் எஜமானர்களே
நாங்கள் கேட்பதெல்லாம்
வெறும் அன்றாடக் கூலியைத்தான்…
காலங்காலமாய் கூடைக்குள்ளேயே காணாமல் போன
எங்கள் உரிமையின் குரல்கள்
இனிக் கனலாய் வெடித்துச் சிதறும்
கூடையும் பெண்களும் அடிமைச் சின்னமல்ல‌
அது உழைப்பின் சின்னமென‌
இனி வரலாறு பேசட்டும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *