யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் ##


jaffna
no_violence_logoபல்கலைக் கழகத்திற்குள் உள்நுழைவது எங்களுடைய 13 வருட படிப்பின் கனவாக இருந்தது. எங்களில் பாதிப்பேர் யுத்தத்தின் வடுக்களை நன்கு அறிந்திருந்தனர். விடுதலை பற்றிய கனவுகளை விழிகளில் சுமந்திருந்தனர். ஆனால் மீதிப்பேரோ நாகரிக அடிமைகளாய் இருப்பதற்கு விரும்பினர். பல்கலைக் கழகத்தின் முதல் நாள் பதட்டத்துடன் கைலாசபதி கேட்போர் கூடத்தின் மூன்றாம் நிரலில் 4 ஆம் இருக்காய் வரிசையில் அமர்ந்திருந்தேன். சுற்றி வர உள்ளவர்களை கழுத்தை வளைத்து திரும்பிப் பார்த்தேன் பெரும்பாலும் கண்ணிற்பட்டவர்கள் பெண்கள். இடையிடையே ஆண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டனர். அனைவர் விழிகளிலும் அச்சத்தின் அவசரத் தந்தியடிப்பைப் பார்த்தேன்.
நாட்கள் உருண்டோடின. உலகத்தில் ஒரே காலநிலை ஒரே அதிகாரம் நிலைத்திருப்பதில்லை என்றொரு வரியை என் பதின்மப்பருவத்தில் படித்திருந்தேன். அது ஒரு ஆண்மையவாத கருத்து என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நாள் வந்தது. காலம் காலமாக ஆண் என்னும் மனித உயிரி பெண் என்னும் சக மனித உயிரியை தன அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதை படித்த மேல்நிலைச் சிந்தனை விளையும் பல்கலைக் கழகம் போன்ற இடத்தில் கண்ணுற்றபோது என் வேதனை மேலும் வெடித்துச் சிதறியது.
பெண்களின் பால்நிலைச் சமத்துவத்திற்கு இரண்டு இடையூறுகள் இருப்பதைக் கண்ணுற்றேன்.
1. ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட ஆண்கள்
2. ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட பெண்கள்.
அநேகமான நேரங்களில் என் நண்பர்களுடன் கற்தூணில் அமர்ந்து சமூகம் சார் விடயங்களைப் பற்றி மணிக்கணக்காய் பேசுவேன். அப்போதெல்லாம் அநேகமான பெண்களின் தேடல் அழகியலை நோக்கியதாக இருப்பதை காண்பேன். பெண் விடுதலைக்காய் கருத்து முழங்கிய பாரதி அன்று
“பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை ஆற்றிடும் காணீர்” என்றுரைத்தான். அறிவை வளர்க்கும் பெண்கள் அந்த அறிவை சரியான விதத்தில் பயன்படுத்துகின்றனரா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரி விடயத்திற்கு வருவோம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பெரும்பான்மையாக பெண்மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால் எத்தனை பேர் சமூகப் பிரக்ஞ்சையோடு இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒரு விடயமே. குறைந்தபட்ச உரிமைகளைக் கேட்பதற்கே தயக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அண்மைக் காலமாக பெண்கள் மீதான வன்முறைகள் , துஸ்பிரயோகங்கள் அதிகரித்த நிலையில் அதற்கான சட்டத் தீர்வுகளும் இழுபறி நிலையில் காணப்படும் வேளை சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் சுதாகரித்துக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இதை படித்த வர்க்கத்திடமிருந்து தொடக்க வேண்டிய கடப்பாடில் உள்ளோம்.எனில் படித்த பெண்கள் அல்லது படித்துக் கொண்டிருக்கும் பெண்கள் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் நிலை என்பது மிகவும் வருந்தத் தக்கது. யாழ் பலகலைக் கழகத்தின் மாணவர் அதிகாரம் என்பது முற்று முழுதாக ஆண்களின் கையிலேயே உள்ளது. புராண கால நிலைமை போல் பெண்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று பொறுத்துக் கொண்டு பட்டம் எடுத்தால் போதும் என்னும் நிலையே அங்கு நிலவி வருகின்றது. மாணவர் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் பெண்களுடன் கலந்துரையாடுவது மிக அரிது. இந் நிலையில் பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை யாரிடம் முறையிடுவது? முறையிட்டாலும் அதற்கான தீர்வென்பது ஆணிற்கு சார்பாகவே எடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பல்கலைக் கழகத்தில் பெண்கள் அமைப்பு ஏதேனும் உண்டா? உண்டு எனில் அனைவருக்கும் அது தெரியாமல் இருப்பது ஏன்? இல்லையெனில் இனி அதைப் பற்றி யோசிக்கும் நிலை வந்துவிட்டது.
இந்த விடயத்தில் பலகலைக் கழக பெண்கள் எவ்வளவு தூரம் விழிப்போடு இருக்கின்றார்கள் என்பதை எடுத்து நோக்கினால் அநேகமான பெண்கள் நிர்வாகம் தொடர்பில் ஏதும் அறியாமலும் பெண்களின் உரிமை தொடர்பில் எந்த நம்பிக்கை அற்றவர்களாகவுமே இருக்கின்றனர். இப்போது பல்கலைக் கழகத்தை சூழவும் பல அழகியல் சாதன விற்பனை மையங்கள் குவிந்துவிட்டன. தினம் தோறும் ஒரு கடை புதிதாய் முளைப்பதை காணலாம். உணவு, உடை பற்றிய அறிவை விசாலித்து உரிமையை முற்று முழுதும் மறக்கச் செய்யும் வர்த்தக நிலையங்களை நாடிய பெண்களின் தேடலில் அறிவை நோக்கிய நூலகத்திற்கான பயணம் எத்தனை வீதம் அருகிப் போயிருக்கின்றது என்பதை பல்கலை மரங்களும் உரைக்கும்.
மாற்றத்துக்கான பெண்களாய் மாற வேண்டியவர்கள் பல்கலைக் கழகப் பெண்கள். அவர்களில் பலருடை சுதந்திரமும் கட்டுக்கடங்காமல் தான் இருக்கின்றது. ஆனால் எத்தனை பேர் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகின்றனர்? அதிகாரம் கொண்ட ஆண்களின் அதிகாரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு குறுகிய மனப்பாங்கு உடையவர்களாக வெறும் பாடத் திட்டங்களிற்குள் மூழ்கி ஒப்படைகளில் மட்டும் திறமையைக் காட்டும் இயந்திரங்களாக எத்தனை காலம் இருப்பது? இது பலகளைப் பெண்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம்.
அண்மையில் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆடை நடைமுறையைக் கொண்டுவந்தனர். அதாவது பெண்கள் வெள்ளிக் கிழமைகளில் சேலை அணிந்து வர வேண்டும் என்று. பல்கலை நிர்வாகம் அந்த திட்டத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் மாணவர் ஒன்றியம் அதனைக் கையில் எடுத்தது. கவனிக்க. இதில் மாணவர் ஒன்றியத்தில் இருப்பவர்கள் ஆண்களே. பெண் பிரதிநிதிகள் வெறும் கைப்பாவைகள் போல் இயங்குவது கண்கூடு. பல்கலை படித்து முடிந்த பின் வேலைக்கு செல்லும்போது பெண்கள் சேலை அணிந்துதான் செல்ல வேண்டும். ஆதலால் இங்கிருந்தே அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது என்ற கருத்தை முன்வைத்தனர். அவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். பலகலை படித்து முடிந்ததும் பல பெண்கள் முக்கியமான நிர்வாக பொறுப்பதிகாரிகளாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் நிர்வாகத்தையும்தான் இங்கிருந்தே கற்றுக் கொள்ளவேண்டும். பல்கலைக் கழகம் அதைக் கற்றுக் கொடுக்குமா? பல்கலை நிர்வாகத்தில் பெண்களுக்கும் இடமளிக்கப்படுமா?
கலாச்சாரத்தின் நலிந்த பகுதிகளை பெண் மீது சுமத்திவிட்டு கலாச்சாரக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் ஆண்களும் அந்த ஆண்களுக்கு சார்பாகக் கருத்தமைக்கும் பெண்களும் தங்கள் மன நிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் பல்கலைக் கழகம் விருத்தியடையும் . சமூகம் பயன்பெறும். மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட பால்நிலைச் சமத்துவம் மிகவும் அவசியம். ஊருக்குத்தான் உபதேசம் என்று மேடையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக முழங்கிவிட்டு பெண்கள் மீது அதிகாரத்தைத் திணிக்கும் நிலைமை தொடர்ந்தும் நிலவினால் அதைப் பெண்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் அதற்கெதிராய் வீறு கொண்டு எழப் பெண்கள் துணிவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *