உலக மகளிர் நாளில்..மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்.. “பெண்களை மலமள்ளும்” அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்! .. மதுரையில்..ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை

இழிவொழிப்பு
மகளிர் மாநாடு
“””””””””””””””””””””””


தாய் நாடு..
தாய்த் திருநாடு எனப் பெண்களை பெரிய அளவில் போற்றிப் புகழும் இம் மண்ணில்..

athi1பெண்களின் தலையில் “மனிதன் கழித்த மலத்தை” சுமக்க வைப்பது தாய்நாட்டிற்கே அவமானம்” இல்லையா?

மலமள்ளி இழிவைச் சுமக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 80.சதத்திற்கும் மேலானவர்கள் பெண்கள்தான் என்பது கேவலத்திலும் கேவலம் இல்லையா?

சகப் பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது, பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா?

‘பீப்’ பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் “பீயை” சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா?

இழிவென்று தெரிந்தும் இதை ஏன்? செய்கிறார்கள் என்று, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா?

இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா?
என அலட்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும்.. கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் “விரும்பி செய்தால்” விட்டுவைக்குமா?

தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும்,மீத்தேனும், பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா?

இவர்கள் செய்யவில்லை என்றால், இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய உள் நோக்கமா?

தூய்மை இந்தியா, மேக் இந்தியா என படம் போடும் மோடி அரசு, எந்திரங்களை வாங்கி இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வராதது ஏன்?

உச்சநீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல், சென்னை பெரு மழை வெள்ளத்திற்கும், கும்பகோண மகாமகத்திற்கும், கோவில் விழாக்களுக்கும், இவர்களை விலங்குகளை விட கேவலமாக இழுத்து செல்வதுதான் “அம்மா” பட்டத்தை சுமக்கும் தமிழக அரசின் தாய்மை குணமா?

இது கேள்விகள் அல்ல..


ஆயிரமாயிரம் தலைமுறைகளாக.. தீண்டாமைக் வன்கொடுமைகளோடு இழிவையும் சேர்த்தே சுமக்கும் கடைக்கோடி மனிதனின் மன வலி,

இதில் நியாயம் இருந்தால், இது ஒழிக்கப்பட வேண்டும் என கருதினால்.. நாங்கள் எடுக்கும் தொடர் முயற்சிக்கு கரம் கோருங்கள்..

இழிவைச் சுமக்கும் இவர்கள் மட்டும் விடுதலையானால் போதாது!
இனி எந்த மனிதனும் இதை செய்ய அனுமதிக்கவே கூடாது!!
என்பதே எமது இலக்கு.

மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்..
“பெண்களை மலமள்ளும்” அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்!
____________________
மாற்றத்தைக் காண மக்களை உசுப்புவோம்!
நாற்றத்தை சுமத்திய மனுநீதியை பொசுக்குவோம்!!
“”””””””””””””””””””””””””””.
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *