பெண் சக்தி: தலைநகரின் போராட்ட குரல்கள்!

http://m.tamil.thehindu.com

 

நாட்டின் நவீன சிந்தனை மையங்களின் ஊற்றாக இருக்கும் ஜே.என்.யு.வில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர்கள் யார் தெரியுமா? பெண்கள், அறிவார்ந்த பெண்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சிந்தனைப் போர் தொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். இந்தியா, தேசியவாதம், தேசப்பற்று என்றால் என்ன தெள்ளத் தெளிவாக வரையறுக்கிறார்கள், உத்வேகமூட்டுகிறார்கள், செயல்படத் தூண்டுகிறார்கள்.கடைக்கோடி மனிதனின் துயரை உணர்ந்துகொள்ளும் தன்மையைப் பற்றி பெண்களுக்குப் புதிதாகப் பாடம் எடுக்க வேண்டியதில்லை. ஜே.என்.யுவுக்கு வழிகாட்டும் மூன்று பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

 

ஆசிரியர்களின் முகம் | ஆயிஷா கித்வாய்

கன்னையா குமார் கைது செய்யப்பட்டதையடுத்து ஜே.என்.யு. ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவாகவும், கன்னையா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடுமையான போராட்டத்தில் இறங்கியது. அதில் ஆசிரியர் சங்கத்தின் முகமாக இருந்தவர் ஆயிஷா கித்வாய். பல்கலைக்கழக வளாகங்களில் ஜாதியம், பாலின ஒடுக்குமுறை, மத ரீதியிலான பிளவை வலுப்படுத்தும் செயல்களை கடுமையாக எதிர்த்து வருபவர்.

தற்போது ஜே.என்.யுவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்களின் பின்னணியில் “பேராசிரியர்கள் என்ற வகையில் கல்விப்புலத்தின் சுதந்திரம் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் பெரிதும் மதிக்கும் பல்வேறு கல்வித் துறைகள் வழியாகக் கற்றுக்கொடுப்பதையும் கற்றுக்கொள்வதையும் விமர்சனரீதியாக, கேள்வி கேட்கும் முகமாக, புலனாய்வு செய்யும் வகையில் தொடர்வோம். பெரிய அண்ணன் (அரசு) எங்களை நன்றாகக் கண்காணிக்கலாம். அவர் திரும்பப் போகும்போது நன்றாகப் பாடம் கற்றுக்கொண்டிருப்பார் என்று நம்புகிறோம்” என்று தனக்கே உரிய அங்கதச் சுவையுடன் ஆயிஷா கித்வாய் பேசியிருக்கிறார்.

ஜே.என்.யு. மொழியியல் மையத்தின் மொழி, இலக்கியம், பண்பாட்டு ஆராய்ச்சிப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் இவர். நாடு முழுக்க இருக்கும் கல்லூரிகளில் பாலின சமத்துவத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய, பல்கலைக்கழக மானியக் குழு அமைத்த ‘சாக்ஷம் குழு’வின் உறுப்பினரும்கூட.

 

 

அரசியல் சிந்தனையாளர் | நிவேதிதா

“மக்களை வேட்டையாடுவது ஒரு நாடல்ல; ஒவ்வொரு நாளும் மக்கள் வெளிப்படுத்தும் கருத்துகளைப் புரிந்துகொள்வதே ஒரு நாடாக இருக்க முடியும்” என்று அரசின் இயக்கத்தை வரையறுக்கும் நிவேதிதா மேனன், ஜே.என்.யு. போராட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகப் புதிய சிந்தனைகளை முன்வைத்துவருபவர். நாட்டின் தேர்ந்த அரசியல் சிந்தனையாளர்.

முன்னணி பெண்ணிய ஆராய்ச்சியாளரான நிவேதிதா, ஜே.என்.யுவில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். பாலின அரசியல் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் எழுதியுள்ள ‘ரெகவரிங் சப்வெர்ஷன்’, ‘சீயிங் லைக் எ ஃபெமினிஸ்ட்’, பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் பாலின சமத்துவம் குறித்த அடிப்படை புத்தகங்களாக மதிக்கப்படுகின்றன.

 

முன்னாள் மாணவி | கவிதா கிருஷ்ணன்

சமீபத்திய ஜே.என்.யு. போராட்டங்களின்போது அங்கே பேசப் போயிருந்த ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைச் செயலாளரான கவிதா கிருஷ்ணனுக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் மைக் தர மறுத்துவிட்டது. ஆனால் களப் போராளியான கவிதா, தன் வாதங்களை உரத்த குரலில் முழங்கினார். எதிர்க்குரல்களை நசுக்க முயலும் அரசின் முயற்சிகளை வீழ்த்த அழைப்பு விடுத்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை-யின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ள கவிதா கிருஷ்ணன், இதற்கு முன்பாகப் பல்வேறு பிரச்சினைகளைக் கவனப்படுத்தியுள்ளார். ‘மகள்களுடன் செல்ஃபி’ என்ற திட்டத்துக்காகப் பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்ததை விமர்சித்தபோது அவர் கவனம் பெற்றிருந்தார். 1997-ல் ஜே.என்.யு. மாணவர் சந்திரச் சேகர ஆசாத் கொல்லப்பட்டபோது தொடங்கப்பட்ட தேசிய அளவிலான இயக்கத்தில் அவர் பங்காற்றினார். டிசம்பர் 2012-ல் நிர்பயா பாலியல் வன்முறை சம்பவத்துக்குப் பிந்தைய எழுச்சிக்குத் தனது பேச்சால் உத்வேகமூட்டியவர் கவிதா கிருஷ்ணன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *