பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள், சிறுமிகள் – லிடியா காச்சோ

Journalist and human rights campaigner Lydia Cacho.– தம்பி அசுரன் -http://www.vinavu.com

மேலை நாடுகளின் நவீனமயமாக்கம், உலகமயமாக்கம், சட்டங்கள், சந்தைப் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்ப புரட்சி அனைத்தும் சேர்ந்து, ஆதிகாலத்திலிருந்து இணைய காலத்திற்கு மாறியிருக்கும் பாலியல் தொழிலில் வலியுடன் பேசுகிறது இந்நூல். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக சுரண்டப்படுவதை இந்த ஆய்வு நூல் அதிர்ச்சியுடன் விவரிக்கிறது. நூலாசிரியர் லிடியா காச்சோ தனது புலனாய்வின் மூலம் முதலாளித்துவ அமைப்பின் பாலியல் துறை பயங்கர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்

“சந்தைப்பொருளாதாரம்” பெண்களையும், குழந்தைகளையும் நுகர்வுக்கான பண்டமாக மாற்றியுள்ளது. இயல்பான காமத்தை வெறியுடன் தூண்டுவதோடு, நுகரத் துடிக்கும் கேளிக்கை தூண்டும் விசையாகவும் செயல்படுகிறது.vidiyal-lydia book

துருக்கி மத நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாடு. ஆனால் இங்கு அரசே தொழிலை விடுதியை நடத்துகிறது, சட்டத்திற்க்கு புறம்பான வழிகளிலும் நடத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளை வைத்தும் பாலியல் வியாபாரம் நடை பெறுவதை அம்பலபடுத்தியுள்ளார் லிடியா. பெண்களையும், குழந்தைகளையும் பொருளாக விற்கும் இந்த சந்தையில் மாஃபியாக்களின் சர்வதேச வலைப்பின்னல், அரசுகளின் கபட நாடகம், அதிகாரிகளின் இலஞ்ச ஊழல், அதிகாரம் பெற்றவர்களின் இரட்டைவேடம் அத்தனையும் நூலில் அம்பலமாகியுள்ளன. இந்த வியாபாரத்தில் இராணுவம், போலிஸ் துறையினரே அதிக வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது நாட்டையும் மக்களையும் காப்பதாக கூறுபவர்களின் இலட்சணத்தை அம்பலப்படுத்துகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்து யுத்தம் நடைபெறும் சூழலில் பாலஸ்தீனன் ஒருவன் தனது இரு பெண் குழந்தைகளையும் பாலியல் தொழில் தரகனுக்கு விற்று விடுகிறகிறான். பின்னர் அவர்கள் விபச்சார விடுதில் வைத்து போலீசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்காகிறது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் “இரு பெண்களும் அவர்களது தந்தையால் விற்பக்கப்பட்டதால் கவுரவமானவர்களாக இல்லை, அதனால் அந்த பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கிய தரகர்கள் இருவரும் திருமணம் செய்யலாம்” என்று நீதி வழங்கினர். வன்புணர்ந்தவனே தாலி கட்டும் கொடூரங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலகெங்கும் இருக்கிறது. குற்றவாளிகளே பெண்களை காக்கும் நீதி எப்படி இருக்கும்? இஸ்ரேலில் விபச்சாரத்திற்க்காக வெளிநாடுகளிலிருந்து பெண்களை கடத்தி வரப்படுவதையும், உடல் உறுப்புக்களுக்காக ஆள் கடத்தல் நடப்பதையும்ம் நூலாசிரியல் வெளிக் கொணர்ந்துள்ளார்.

vidiyal-lydia bookமுசுலீம் சமூகத்தில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் இதே கதைதான். எதற்க்கெடுத்தாலும் நமது படித்த அறிவாளிகள் ஜப்பானைப் பார் எவ்வளவு முன்னேற்றம், கடுமையான உழைப்பு, வளர்ச்சி என்று வானளாவ புகழ்வர். அப்பேற்பட்ட ஜப்பானின் யோக்கியதை என்ன? வட அமெரிக்க பெண் சாராவுக்கு ஜப்பானில் ஏற்பட்ட அனுபவம் பாலியல் கொடூரத்தின் உச்சம். அத்தோடு ஜப்பானிய போலீசின் பாராமுகத்தையும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையும் ஆசிரியர் அறியத் தருகிறார்.

முன்னைய சோசலிச நாடுகளில் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம், சுதந்திரம் என்பது கிடையாது என்று புலம்பும் அறிஞர்களின் குரலை இன்று வரை கேட்கிறோம். உண்மையில் அந்நாடுகளில் மக்களுக்கு சுதந்திரம் மக்களுக்கு எதிரானவர்களுக்கு கட்டுப்பாடு என்பதையே இவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட அமெரிக்க இளம்பெண் சாரா தனது வாக்குமூலத்தில் “கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியது, ஆபத்து மிக்கது…” என்று வெளிப்படையாகக் கூறுகிறார். அதாவது முதலாளித்துவ வர்க்கத்திற்குரிய சுதந்திரமே உலகில் விபச்சாரத்திற்காக கோடிக்கணக்கான பெண்களை, குழந்தைகளை வதைத்துக் கொல்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்காகவே கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் வேண்டும் என்கிறார் சாரா.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும என்பதையே கலகத்தின் தத்துவமாக முன் வைக்கும் அறிஞர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமானால் இந்த நூல் விவரிக்கும் இரத்த சாட்சியங்களை பார்த்து தற்கொலை செய்து கொள்ளும். விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து முறைப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கும் என்.ஜி.வோக்கள் உலகமெங்கும் கொடூரமாக கடத்தப்பட்டு வதைக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லுவார்கள்? கடத்துவதையும் முறைப்படுத்தி கடத்த வேண்டும் என்றா? விபச்சாரத்தை தடை செய்வதை விடுத்து, சட்டபூர்வமாகவோ இல்லை சட்ட விரோதமாகவோ அதை அங்கீகரிக்கும் அரசுகளுக்கு என்.ஜி.ஓக்கள் இன்னுமொரு தூதராகவே உள்ளனர்.

மதம், பண்பாடு போன்ற ‘புனிதமான’ வழிகளின் மூலமும் பெண்களை மனமாற்றம் செய்து விபச்சாரத்திற்க்கு பயன்படுத்தும் போக்கை இந்நூல் விவரிக்கிறது.

அண்மைய வரவான இணையத்தின் மூலம் விபச்சாரம் எவ்வாறு கொடிட்டிப் பறக்கிறது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார். இணையத்தை பயன்படுத்துவதில் விபச்சார மாஃபியாக்கள் அரசுகளுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். இணையத்தில் பெண்களையும், குழந்தைகளையும் ஆபாச படங்களில் காட்டுவது அதாவது போர்னோ வியாபாரம் மிகமிக அதிகரித்துள்ளது. பல நாடுகளில் இந்த ஆபாசத்தை தடை செய்யுமாறு மக்கள் கோரினாலும் எந்த அரசும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. நமது `மங்கிபாத்` பிரதமரும் சமீபத்தில் ஆபாச இணையதளங்களை தடை என்று உத்தரவு போட்டார் ஆனால் உத்தரவு மை காயு முன்னே உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. பெண்களை தாயாக ‘பார்க்கும்’ இந்துத்வா அரசின் இலட்சணம் இதுதான்.

இராணுவமும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே தங்களது வீரர்களுக்கு பாலியல் தொழிலை ஒரு அடிப்படை வசதியாகவே சப்ளை செய்கிறது. இதுபோக பாலியல் வன்முறையை தங்களுக்கு தோன்றும் இடங்களில் செயல்படுத்துவதும் இராணுவத்தின் அடிப்படை உரிமையாக உள்ளது. அடாவடி அமெரிக்கா வியாடநாம் மீது போர் தொடுத்த போது நான்கு லட்சம் தாய்லாந்து பெண்கள் அமெரிக்க வீரர்களுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் வில்லியம் புல்பிரைட் “தாய்லாந்து ஆசியாவின் அமெரிக்க விபச்சார விடுதி” ஆக ஆனதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன்தான் பொறுப்பு என்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவத்துக்கு தேவையான பெண்களை பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா, வியட்நாம், மலேசியா, தைவான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து கடத்தி வந்தது ஜப்பானிய அரசு. இப்பெண்கள் `சுகம் தரும் பெண்கள்` எனப்பட்டனர். இந்த போரில் அமெரிக்காவும், ஜப்பானும் எதிராக மோதிக் கொண்டன. ஆனால் ஜப்பானிய மண்ணில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்திற்க்கு தேவையான பெண்களை ஜப்பான் அரசே சப்பளை செய்தது. அந்நியர்கள் மூலம் தங்களது இனத்தில் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலையில் ஜப்பான் அரசு தெளிவாக செயல்பட்டது. ஈராக்கிலும்,ஆப்கனிலும் அமெரிக்கா செய்த பாலியல் வன்புணர்ச்சி உலகறிந்தது.

lydia's bookஇன்று தொழில் துறைக்கு தேவையான ஆட்களை அவுட்சோர்ஸிங் முறையில் செயல்படுத்துவது இந்த உலமயம் மூலமாக நடைபெறுகிறது. அதே போல் அமெரிக்க ராணுவத்திற்க்கு தேவையான பெண்களை தனியார் மூலம் அவுட்சோர்ஸிங் செய்வதை லிடியா தன்னுடைய ஆய்வு நூலில் விவரிக்கிறார். தனது உயிரைப் பணயம் வைத்து அவர் திரட்டியிருக்கும் விவரங்கள் மிகுந்த வேதனை அளிப்பவை.

நூலிலிருந்து….

“…..ஒரு நாளைக்கு 12 தடவைகளுக்கும் மேல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் இளம் பெண்; வாடிக்கையாளர்களின் பார்வைக்காக சின்ன கண்ணாடிக் கூண்டுகளுக்குள் செல்லப் பிராணிகளைப் போல் அடைத்து வைக்கப்படும் அடிமைச் சிறுமிகள்; விபச்சார விடுதியில் இருந்து தப்பிய சிறுமியை வெட்டிச் சமைத்து கறியை மற்றப் பெண்களுக்குக் கொடுத்து எச்சரிக்கும் கொடூர எசமானி; இரவெல்லாம் விபச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு பகலெல்லாம் தெருத் தெருவாக பிச்சை எடுக்க விரட்டப்படும் அடிமைச் சிறுமிகள்; வக்கிரம் பிடித்த மாஃபியாக்களிடம் இருந்து தப்பி முழு நிர்வாணமாக நடு ரோட்டில் ஓடி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்கும் இளம் பெண்; அடிமைச் சிறுமிகளின் மேல் மூத்திரம் கழிந்தும், காறி துப்பியும் சுகம் காணும் ஒரு வக்கிரக் கிழம்; சூட்டுக் கோலால் அடிமை அடையாளக் குறியிடப்பட்ட இந்தியப் பெண்கள் ……”

“….உலகில் இன்றைய தேதியில் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் அடிமைகள் இருப்பதாகவும்; உலகளவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்காகவும், 19 சதவீதம் கட்டாய உடலுழைப்புக்காகவுமாக உள்ளதாகவும் மற்றும் சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் சட்டவிரோத வர்த்தகம் ஆண்டுக்கு $32 பில்லியன் அளவுக்கு இலாபம் குவிப்பதாகத் தெரிய வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எதோ இதெல்லாம் கம்போடியாவிலும், கொலம்பியாவிலும் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.; கூடவும் கூடாது. நம்மூரில், நம்ம தெருவில் கூட பெண்களைத் தொடரும் அந்த ‘பணம் தின்னிப் பிசாசுகள்.’ இருக்கலாம்; எந்த உருவத்திலும், எந்த ஒரு உறவுமுறையிலும் இருக்கலாம்”

யாரும் பார்க்க விரும்பாத இந்த உலகம்தான் நமது நாகரீக உலகின் உண்மையான முகம். இந்த முகத்தை அறியத் தந்த நூலாசிரியருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நூலை மொழிபெயர்த்த விஜயசாய் மற்றும் வெளியிட்ட விடியல் பதிப்பகத்தாருக்கும் நமது நன்றிகள்.

சில இஸ்லாமிய நாடுகளில் விபச்சாரத்திற்கு மரணதண்டணை வழங்கப்படுகிறது. இதன் பொருள் அந்நாடுகளில் பணக்காரர்கள், அதிகாரிகள், மன்னர் குல ஷேக்குகளுக்கு மட்டும் விபச்சார வசதியும், வன்புணர்ச்சியும் உண்டு என்பதே. சமீபத்தில் புதுதில்லியில் நேபாள பெண்களை வன்புணர்ச்சி செய்த சவுதி தூதரக அதிகாரி விசாரணை, கைது இன்றி பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பட்டதை நினைவு கூரலாம். இதற்கு மாறாக வளர்ந்த நாடுகள் சில விபச்சாரத்தை சட்டப்படியே அனுமதிக்கின்ற. இங்கு சட்டபூர்வம், விரோதம் என இருமுறைகளிலும் இந்த ‘தொழில்’ கொடிகட்டிப் பறக்கிறது.

ஆக எந்த வழிவகைகளிலும் விபச்சாரத்தை இவர்களால் ஒழிக்க முடியவில்லை. ஆனால் ரசியாவில் சோசலிச புரட்சி இருந்த காலங்களில் சட்டத்தின் மூலம் மட்டுமல்லாமல் எதார்த்தமாகவும் சமூகம் மாற்றம் கண்டது. அனைவருக்கும் கல்வி, வேலை,மருத்துவம்,வீடு, பாதுகாப்பு, நிலம் போன்ற அனைத்தும் அரசால் உத்திரவாதப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விபச்சாரமும் ஒழிக்கப்பட்டது. ரசியாவைத் தொடர்ந்து சீனா, மற்ற பிற சோசலிச புரட்சி நடந்த நாடுகளிலும் விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. இந்த உலகம் முதலாளித்துவ நாடுகளாக இருக்கும் வரையிலும் விபச்சாரம் எனும் இந்த கொடூரம் இருக்கவே செய்யும்.

“…. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும்போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் – அதாவது பகிரங்கப் பொது விபச்சாரமும் இரகசியத் தனி விபச்சாரமும் – கூடவே ஒழிந்தே ஆக வேண்டும் என்பது தெளிவு.”

காரல் மார்க்ஸ், பிரடரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை…

 

  • நூல்: பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்.
  • ஆசிரியர்: லிடியா காச்சோ.
  • தமிழில்: விஜயசாய்.
  • வெளியீடு:
    விடியல் பதிப்பகம்,
    23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
    உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,தொலைபேசி – 0422-2576772, 9789457941
    மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org
  • பக்கம்-460, விலை,350.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *