ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

http://arunmozhivarman.com/

 

 

 

தழும்புஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய காலங்களில் பண்பாட்டுப் படையெடுப்பானது மிக வேகமாக எம்மை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வட இந்தியப் பாணிகளையும், பண்பாட்டு முறைகளையும் எமது சடங்குகளில் இணைத்துவிடும் போக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது. 

கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் திருமண வீடு அல்லது திருமணச் சடங்கு என்பது மிகப் பெரும் சந்தையாக மாறி உள்ளது.  இது போன்ற சந்தைகளில் இறைக்கப்படும் பணம் எங்கே சென்று முடிகின்றது என்பதை நாம் அவதானிக்கவேண்டும்.  இவற்றிற்குச் செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பங்கு – கல்யாண வீடு மாத்திரமல்லாமல், அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளையும் சேலை வாங்க என்றும், அலங்கார சோடனைப்பொருட்கள் வாங்க என்றும் இந்தியாவில் இருக்கக்கூடிய வியாபார வலைப்பின்னல்களுக்குள்ளேயே சென்று சங்கமிக்கின்றது.  அதுவும் அரங்கேற்றம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் இந்த சேலை உள்ளிட்டவற்றை இந்தியா சென்று வாங்க என்று குருவுவிற்கும், குருவின் கணவன்/மனைவிக்கும் சில சமயங்களில் உதவியாளர்களுக்கும் கூட விமானச் செலவுகளையும் கூட சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பெடுக்கவேண்டி இருக்கின்றது.  தவிர நட்டுவாங்கம் உள்ளிட்ட கலைஞர்களையும், சமயங்களில் அறிவிப்பாளர்கள், குருமாரின் குருமார் போன்றவர்களையும் விமான டிக்கெற்றும் அன்பளிப்பும் கொடுத்து வழங்கும் மரபும் இருக்கின்றது.  இவற்றில் தெளிவான பார்வை கொண்ட ஒருவர் இவ்வாறு வாறி இறைக்கப்படும் பணத்தினைப் பற்றிய கேள்விகளை உசாவ வேண்டும்.  போரால் பாதிக்கப்பட்ட எமது மண்ணில் இந்தப் பணமோ அல்லது இதன் சிறுபகுதியோ சென்றால் அது அங்கே உள்கட்டுமானப் பணிகளுக்கும், சிதைந்துபோன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் கூட பெரும் உதவி புரியும்.  இந்தப் பின்னணியுடனேயே எம் மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை அணுகவேண்டியுள்ளது.  இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் மிகப்பெரும் பங்கு திரைப்படங்களினூடாகவும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் ஊடாகவும், வெகுஜன பத்திரிகைகள் ஊடாகவும் நிகழ்த்தப்படுகின்றது.

 

வெகுசன ஊடகம் என்பது எப்போதும் மிக முக்கியமானது.  மக்களுடனான உரையாடல்களைப்  பேண அதுவே மிகப் பொருத்தமான சாதனம்.  துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் சீரிய / தீவிர கலைவடிவங்களில் கவனம் செலுத்தினோமே அல்லாமல் வெகுசன முயற்சிகளில் கவனம் செலுத்தவில்லை.  அவ்வாறு முயன்றபோதெல்லாம் இந்தியாவில் இருந்து வருகின்ற ஊடகங்கள் போன்றவற்றுக்கு மாற்றாக எம்மை முன்வைக்காமல் நாமும் அவர்கள் செய்யும் விடயங்களை அப்படியே போலச் செய்தோம்.  மிகக் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து வெளிவருகின்ற மிக மோசமான பிற்போக்குச் சிந்தனைகளையும் ஆணாதிக்கச் சிந்தனைகளையும் கொண்ட திரைப்படங்களைப் பார்த்து அவற்றைப் போலச் செய்ய முயன்று அதைவிட மோசமான திரைப்படங்களையும் தயாரித்தோம்.    அதுவும் எம்மால் இத்துறைகளில் முன்னேறவோ அல்லது தனித்துவத்தைப் பேணவோ முடியாமல் போகவும் காரணமாக அமைந்தது.  இன்னொருபுறத்தில் எமக்கான அரச நிறுவனங்களின் உதவியும் பெரிதளவு கிடைக்கவில்லை.

ஒரு உதாரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நிதர்சனம் ஊடாக முன்னெடுத்த திரைப்பட முயற்சிகள் பற்றி இங்கே பேசவேண்டியிருக்கின்றது.  புலிகள் தமது காலம் முழுவதும் திரைப்படங்களையும், பிரசாரத்திற்குரிய படங்களையும் தயாரித்து வந்தனர்.  இந்தத் திரைப்படங்கள் ஊடாக எமக்கான தனித்துவமான திரைமொழி ஒன்றினை உருவாக்கின்ற முயற்சியும் ஓரளவு சாத்தியமானது.  அந்தப் படங்கள் யாவும் அனேகம் போர்க்கால வாழ்வையும், போருக்கான பிரசாரத்தையும் முன்னெடுப்பவை.  குறிப்பாக 93 ஆம் ஆண்டளவில் தமிழகத்துத் திரைப்படங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டபோதும் தொடர்ச்சியாக உள்ளூரில் தயாரான திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.  மாணவர்கள் மத்தியில் அவற்றுக்கு ஓரளவு ஆதரவும் இருந்தே வந்தது.  இந்த இடத்தில் புலிகள் இயக்கத்தினர் தமது கடுமையான தணிக்கை விதிகள் காரணமாக பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திரைப்படங்கள் உருவாகும் வாய்ப்பை இல்லாது ஒழித்தார்கள் என்ற விமர்சனத்தை முன்வைக்கலாம் என்றாலும், இந்தியாவின் பண்பாட்டு ரீதியான படையெடுப்பைத் தடுக்கவேண்டும் என்பதிலும், எமக்கான தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்கள் என்பதுடன் பொதுமக்களுடன் தமது பிரசாரங்களை மேற்கொள்ள திரைப்படங்கள் மிகச்சிறப்பான ஊடகங்கள் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.  (மிக அவலமான முரண்நகையாக விடுதலைப்புலிகளின் காலத்திலும், அவர்களுக்குப் பிந்தைய காலங்களிலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளுகின்ற நிகழ்வுகளில் தென்னிந்திய திரைப்படக்கலைஞர்கள் முக்கிய, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதையும், சீமான் போன்றவர்கள் புலிகளின் தொடர்ச்சியாக (மிகக் குறைந்த அளவு மக்களால் என்றாலும் கூட) கட்டமைக்கப்படுவதையும் கூறலாம்) 2013ம் ஆண்டு ரொரன்றோவில் இடம்பெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்கிற கருத்தரங்கில் த. அகிலன் வாசித்த கட்டுரை இவ்விடயத்தில் முக்கியமானது.

இந்தப் புரிதலுடன் எமக்கான கலைவடிவங்களை தனித்துவமாக பேணுதல், வளர்த்தல், பரப்புதல் பற்றிய அக்கறையுடனேயே எனது சிறு குறிப்பினை ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒருங்கமைத்திருந்த டிசம்பர் 2015 நிகழ்வில் பேசி இருந்தேன்.  அண்மைக்காலமாக ஈழத்தில் ஒரு இயக்கம் போல குறும்படங்களின் உருவாக்கம் நடந்து வருகின்றது.  ஊடகக் கலை, காண்பியக் கலை தொடர்பாக மேற்கல்வி கற்கும் இளையோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.  இந்த இளைஞர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பவன் என்ற வகையில், வெவ்வேறு குழுவினர் ஒன்றிணைந்து இயங்குவதும், உரையாடுவதும், தொடர்ச்சியான குறும்பட முயற்சிகளில் ஈடுபடுவதும் மிகுந்த மதிப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.  மிகக் குறைந்த நிதியுடன், நண்பர்கள் ஒன்றிணைந்து பெரும்பாலும் இலவசமாகவே நடித்து தொழினுட்பக் கலைஞர்களுக்கு மாத்திரம் சிறு ஊதியம் வழங்கப்பட்டு, மாறி மாறி ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் உணவுப் பொட்டலங்களைக் கொண்டுவந்து பகிர்ந்துண்டே இந்த முயற்சிகள் யாவும் நடைபெறுகின்றன.

இங்கும் வழமைபோல தென்னிந்திய பாணி படங்களாகவோ குறும்படம் என்பதை சிறிய நீளத்தைக் கொண்ட திரைப்படம் என்கிறதான புரிதலுடனோ, அல்லது 80 களில் சுஜாதா போன்றவர்கள் பிரபலப்படுத்திய மெல்லிய திருப்பத்துடன் ஆன முடிவைக்கொண்ட சிறுகதைகளை ஒத்த குறும்படங்களோ அனேகம் உள்ளதையும் காணலாம்.  அதே நேரம் காத்திரமான இன்னொரு பிரிவினரையும் அவதானிக்க முடிகின்றது.  குறிப்பாக ஈழத்தில் இன்று இயங்கும் கலைஞர்களில் மதி சுதா, சன்சிகன், சிவராஜ் போன்றவர்கள் நான் அறிந்தவரை முக்கியமானவர்கள்.  இவர்களது அனேக குறும்படங்கள் யூ ட்யூப்பில் இலவசமாகக் காணக் கிடைக்கின்றன.  அவற்றைப் பார்த்தவர்கள் குழுவாக அது பற்றிய ஒரு கலந்துரையாடலைச் செய்வது ஆக்கபூர்வமான அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *