இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை
ஒற்றைக்குடையில் உன்னோடு
ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவே
மழை வர(ம்) வேண்டிய‌
நாட்களும் இருந்தது…
பாதி மழையிலும்
மீதி விழியிலுமென்று நனைய‌
மனதுக்குள் அச்சாரலுக்காகவே
மழைவிரும்பிய நாட்களும் இருந்தது…
அரைமணி நேர அடைமழைக்குப்பின்
அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்
ஆசை குறைந்தே போனது என்
ஆனந்தமான மழைநாட்களில்…
வீதியெங்கும் விலகமுடியா
வாகன நெரிசல்கள்
மீதிவழியை கடக்கமுடியா
மாபெரும் திண்டாட்டங்கள்…

பளிச்சென பள்ளிசெல்லும் மாணாக்கரும்
பாதையிலே செல்லும் மற்றோரும்
பயந்தே பயணிக்கவேண்டியதாயிற்று
சலாரென வீசியடிக்கும்
சேற்றிலிருந்து மீண்டுகொள்ள…

.ஆற்றங்கரையருகிலும்

அடுக்குப்பெட்டி வீடுகளிலும்
அன்றாடங்காய்ச்சிகளின் நிலை
அதோ கதிதான்…
ஏழ்மைக்கூரைகளில்
ஏராளமாய் துளையிடும்
மழைக்கரங்கள்
வீழ்ந்து உயிர்பறிக்கும் மண்மேடுகள்
இரக்கமில்லாது சுறுட்டிக்கொண்டுபோகும்
வெள்ளச் சக்கரங்கள் என‌
வெள்ளை மனதை காயப்படுத்திவிட்டிருந்தது
இந்த மழைக்காலம்….
என் ஒற்றை இதய‌
ஆனந்தத்துக்காய் இறைவா
அதிகமாய் கொடுத்துவிடாதே
அகதிகளாய் போகுமெம் மக்களுக்கு
அதிக இடமில்லை இவ்வையத்தில்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *