மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

mubeen 2 முபீன் சாதிகா( கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு)

mubeen

நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் சென்றிருக்கலாம். என்னை இங்கு கொண்டுவந்து விட்டிருக்கலாம். நான் இங்கு தனியாக வந்திருக்கமாட்டேன். ஒவ்வொரு வாரமும் இங்கு ஒருவன் வருகிறான். அவனால் இங்கு நான் வந்திருந்தால் அவனுக்கு நன்றி. அவன் இல்லை என்கிறான். எனக்கு பணம் கொடுத்துவிட்டு நான் எழுதுவதை எடுத்துச் செல்கிறான். எத்தனை பக்கம் எழுதுகிறேனோ அத்தனை பணம். ஆம் இப்போது நான் வேலை செய்கிறேன், எனக்கு தெரிந்த வகையில், ஆனால் எனக்கு வேலை செய்யத் தெரியாது. அது பெரிய ஒன்றல்ல. இப்போது நான் என்ன விரும்புகிறேன் என்றால் விடுபட்டவற்றைச் சொல்லிவிட்டு, விடைபெறுதல்களுடன் மரணத்தை முடிக்கவேண்டும். அவர்களுக்கு அது தேவை இல்லை. ஆம், ஒன்றுக்கும் மேல் ஒன்று இருக்கிறது. ஆனால் எப்போதும் வருவது அதேதான். நீ நன்றாக செய்வாய் என்கிறான் அவன்.

நல்லது. என்னிடம் அதிகம் விடுபட்டது எதுவும் இல்லை என்பதே உண்மை. அவன் புதிதான பக்கங்களுக்காக வரும் போது முந்தைய வாரத்தின் பக்கங்களை எடுத்து வருகிறான். அவற்றில் எனக்குப் புரியாத அடையாளங்கள் இடப்பட்டிருக்கின்றன. எப்படியாயினும் அவற்றை நான் படிப்பதில்லை. நான் எதுவும் செய்யாத போது அவன் எனக்கு எதுவும் தருவதில்லை, என்னைத் திட்டுகிறான். இருப்பினும் நான் பணத்திற்காக வேலை செய்வதில்லை. பிறகு வேறு எதற்கு? எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவெனில் எனக்கு அதிகம் தெரியாது. உதாரணமாக, என் தாயின் மரணம். நான் இங்கு வந்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டளா? அல்லது அதன் பிறகுதான் அவள் இறந்தாளா? அதாவது புதைக்கும் அளவுக்கு என்ற பொருளில். எனக்குத் தெரியவில்லை. ஒருகால், அவர்கள் அவளை இன்னும் புதைக்காமல் இருக்கலாம். எப்படியாயினும் எனக்கு அவளுடைய அறை கிடைத்துவிட்டது.

நான் அவள் படுக்கையில் தூங்குகிறேன். அவளுடைய கழிப்பறையில் மல, ஜலம் கழிக்கிறேன். நான் அவள் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டேன். நான் அவளைப் போலவே இருக்கவேண்டும். இப்போது எனக்குத் தேவைப்படுவது எல்லாம் ஒரு மகன். ஒருவேளை எங்காவது ஒரு மகன் இருக்கலாம். ஆனால் இல்லை என்றே நினைக்கிறேன். அவனுக்கு இப்போது வயதாகி இருக்கலாம், கிட்டத்தட்ட என் வயதாகியிருக்கும். அது ஒரு சிறிய பணிப்பெண்ணுடன். அது உண்மையான காதல் இல்லை. உண்மையான காதல் வேறொருத்தியுடன். அது பற்றி வருவோம். அவள் பெயர்? அதை மறுபடியும் மறந்துவிட்டேன். எனக்கு என் மகனைத் தெரியும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது, அவனுக்கு நான் உதவியிருக்கிறேன். அதன் பின் நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன், அது சாத்தியமில்லை. நான் யாருக்காவது உதவியிருப்பேன் என்பது சாத்தியமில்லை. நான் எப்படி உச்சரிப்பது என்பதையும் பாதி சொற்களையும் மறந்துவிட்டேன். அது ஒரு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். நல்லது. என்னை சந்திக்க வருபவன் எந்த பயனும் இல்லாதவன். உண்மையில் அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருகிறான். மற்ற நாட்களில் அவன் ஓய்வாக இல்லை. அவன் எப்போதுமே தாகம் கொண்டவனாக இருக்கிறான். அவன்தான் நான் எல்லாமே தவறாகத் தொடங்கியதாகவும், நான் எல்லாவற்றையும் வித்தியாசமாகத் தொடங்கியிருக்கவேண்டும் என்றும் கூறினான். அவன் சொல்வது சரியாக இருக்கலாம். நான் தொடக்கத்தில் பழைய பீஜத்தைப் போல் தொடங்கினேன். உங்களால் அதை கற்பனை செய்ய முடிகிறதா? இதுதான் என் தொடக்கம். ஏனெனில் அவர்கள் அதை உண்மையாக வைத்திருக்கிறார்கள். நான் அதில் பல சிக்கல்களைச் செய்தேன். இதுதான் அது. அது எனக்கு பல தொல்லைகளைக் கொடுத்தது. அது தான் தொடக்கம். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் இப்போது இறுதிக்கு வந்துவிட்டது. இப்போது நான் செய்வது கொஞ்சம் நன்றாக இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. அது வேறொரு அம்சம். இதுதான் என் தொடக்கம். அது ஒரு பொருளைத் தரவேண்டும் அல்லது அவர்கள் அதை வைத்துக் கொள்ளமாட்டார்கள். அது இதுதான்.

mubeen 2

என் திட்டத்தை நான் துல்லியமாக்கிய போது என் சைக்கிள் ஒரு நாயின் மீது ஏறிவிட்டது, அப்படித்தான் தோன்றியது, மன்னிக்க முடியாத திறமையின்மையுடன் கீழே விழும் போது, கழுத்தில் பட்டை அணிந்த நாயைப் போல் சாலையில் அல்லாமல் நடைபாதையில் அதன் பெண் உரிமையாளரின் காலடியில் அந்த நாய் பவ்யமாய்க் கிடந்தது. முன்னெச்சரிக்கைகள், முடிவுகளைப் போல் முன்னெச்சரிக்கையுடன் எடுக்கப்படவேண்டியவை…நான் அந்த சிக்கலை அதிகமாக்க அங்கிருந்து ஓடிப்போனேன். நான் உடனடியாக ரத்தவெறி கொண்ட பெரிய கும்பலால் ஆட்கொள்ளப்பட்டேன்…என்னை அவர்கள் துண்டுத்துண்டாக கூறாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது அந்த பெண் தலையிட்டாள்…இந்த வயதானவரை விட்டுவிடுங்கள்…அவர் டெட்டியை கொன்றுவிட்டார், அதை நான் என் குழந்தையைப் போல் நேசித்தேன் என்பதை உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது ஒரு பெரிய காரியமாகக் கருதமுடியாது, அதை நான் ஒரு மிருக வைத்தியரிடம் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது நடந்திருக்கிறது, அதனால் அதன் வலியிலிருந்து இந்த சம்பவம் அதை விடுவித்திருக்கிறது. டெட்டி வயதாகி, பார்வையற்று, கேட்கும் திறனற்று, முடக்குவாதத்தால் முடங்கி, மல,ஜலம் வெளியேற்ற முடியாமல், இரவிலும் பகலிலும் உள்ளேயும் வெளியேயும் அலைந்துகொண்டிருந்தது. என்னை ஒரு வலிமிக்க வேலையிலிருந்து காப்பாற்றிய இந்த வயதான மனிதருக்கு நன்றி சொல்லவேண்டும், இதற்காக ஆகப்போகும் செலவு பற்றி சொல்லவே வேண்டாம், அதை நான் ஏற்றிருக்கவே முடியாது… ஏனெனில் பாதுகாப்பு படையில் வேலை செய்து இறந்து போன என் கணவரின் ஓய்வூதியம் மட்டுமே எனக்கு ஆதரவாக உள்ளது. அந்த கும்பல் கலைந்து போகத் தொடங்கியது…அங்கிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த பெண் திருமதி லாய், இப்போது சொல்லும் பெயர்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறேன், அல்லது லோஸ், கிறித்துவ பெயர், சோஃபி என்பது போல் ஏதோ ஒன்று, என் கோட்டின் பின் புறத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள், நான் முதல் முறையாகக் கேட்ட சொற்களைப் போன்று ஒலிக்கும் சொற்களைப் பேசினாள், கனவானே, நீங்கள் எனக்குத் தேவைப்படுகிறீர்கள். என்னை எப்போதும் கைவிடும் என் பாவனையை அவள் பார்த்ததிலிருந்து, அவள் எனக்கு புரியவைத்துவிட்டாள் என்பது போல இருந்தது, இதைப் புரிந்து கொண்டால் அவர் எதையும் புரிந்துகொள்வார் என்பது போல அவள் சொன்னாள்….ஆஹ் ஆம் எனக்கும் அவள் தேவை என்று தோன்றியது. அந்த நாயைப் புதைக்க அவளுக்கு நான் தேவை, எனக்கு அவள் எதற்காக தேவை என்பதை மறந்துவிட்டேன்..

ஒரு பெண் என்னை என் தாய் நோக்கி நான் தள்ளப்பட்டதிலிருந்து தடுத்திருப்பாளா? இருக்கலாம். நல்லதுதான் இருந்தாலும், அது போன்ற ஒரு நிகழ்வு எனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் சாத்தியமாகியிருக்குமா? ஆண்கள் சிலருடன் போராடியிருக்கிறேன், ஆனால் பெண்கள்? ஓ நல்லது, இந்த நேரத்தில் நான் உண்மையைச் ஒத்துக்கொள்ளவேண்டும், நான் ஒரு முறை ஒரு பெண்ணுடன் இழைந்திருக்கிறேன். நான் என் தாயைக் குறிப்பிடவில்லை. நான் அவளுடன் இழைந்தது தவிர இன்னும் பலவற்றைச் செய்திருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என் தாயை இவற்றிலிருந்தெல்லாம் விடுவித்துவிடலாம். ஆனால் மற்றொரு பெண், என் தாய் ஆகக்கூடியவர், என்னைப் பொறுத்தவரை வாய்ப்பிருந்திருந்தால் என் பாட்டியும் கூட ஆகக்கூடியவர். வாய்ப்பு பற்றி இப்போது அவன் பேசுவதை கவனியுங்கள். அவள்தான் எனக்கு காதலுக்கு நெருக்கமாக்கினவள். அவள் அமைதியின் பெயரான ரூத் என்று அழைக்கப்பட்டாள் என்று நினைக்கிறேன், எனக்கு சரியாக நினைவில்லை. அந்த பெயர் எடித் என்றிருக்கலாம். அவள் கால்களுக்கு இடையில் ஒரு துளை இருந்தது, நான் எப்போதுமே கற்பனை செய்வது போல் குப்பிகளில் போடப்படும் துளை போன்றதல்ல, ஒரு துவாரம், அதில்தான் அவள் சொல்வது போல் வீரியமிக்க என் குறியை, என்னை நுழைப்பேன், அல்லது அவள் நுழைத்துக் கொள்வாள், கொஞ்சமும் சிரமப்படாமல், நான் திண்டாடி திணறி வெளியேற்றும் வரை, அல்லது முயற்சியை நிறுத்தும் வரை, அல்லது அவள் போதும் என்று மன்றாடும் வரை…

நான் இந்த காட்டில் சில பேரைப் பார்த்திருக்கிறேன், வேறு எங்குதான் இப்படி நடக்கவில்லை, ஆனால் குறிப்பிடும்படியாக எதுவும் நடந்ததில்லை. நான் ஒரு நிலக்கரி எரிக்கும் ஒருவரை சந்தித்தது குறிப்பிடத்தக்க ஒன்று., நான் எழுபது வயது குறைவாக இருந்திருந்தால் நான் அவனை நேசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. அப்படி இருப்பின் அவனும் அதே அளவு மிகவும் இளமையாக இருந்திருப்பான், அந்த அளவு இல்லை என்றாலும் இளமையாகத்தான் இருந்திருப்பான். ஆனால் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நேசம் என்னிடம் இல்லை, நான் சிறிய வயதாக இருக்கும் போது, என்னிடம் ஒரு சிறு அளவு இருந்தது, அது முதுமையில் முடிந்த அளவு போய்விட்டது. ஒரு சிலரை நேசிக்கலாம் என்று நினைக்கிறேன், ஓ உண்மையான காதல் அல்ல, இல்லை, மூதாட்டி மீதான காதல் போல் அல்ல, நான் மீண்டும் அந்த பெண்ணின் பெயரை மறந்துவிட்டேன், ரோஸ், இல்லை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று, எப்படிச் சொல்வது, நல்ல நிலையில் இருக்க விரும்புபவர்கள் மென்மையாகக் கையாளப்படுவது போலத்தான். நான் வயதுக்கு மீறிய அறிவுத்திறனை உடைய குழந்தை அதன் பின் அறிவில் முதிர்ச்சி அடைந்த மனிதன். ஆனால் எல்லோரும் எனக்கு முதிர்ந்த, முதரிச்சி அடையாத பழங்களை கிளைகளிலிருந்து தருகிறார்கள். அவன் என் மீது படர்ந்தான், நீங்கள் நம்பினால் நம்புங்கள், அவனுடைய குடிசையைப் பகிர்ந்து கொள்ள கெஞ்சினான். அவன் அரிதானவனாக இருந்தான். தனிமையில் இருப்பது அவனுக்கு நோய்மையாக இருந்திருக்கலாம். நான் அவனை நிலக்கரி எரிப்பவனாக சொல்கிறேன், ஆனால் எனக்குத் தெரியாது. நான் அங்கு எங்கோ புகையைக் கண்டேன். புகை என்னிடமிருந்து எப்போதும் தப்புவதில்லை. ஒரு நீண்ட பேச்சு, முனகல்களுடன் நடந்தது. அவனிடம் என் நினைவில் இப்போது கூட இல்லாத என் ஊரின் பெயரையும் என்னுடைய ஊருக்கான வழியையும் கேட்க முடியவில்லை. அவனிடம் அருகிலிருக்கும் ஊரின் வழியைச் சொல்லும்படிக் கேட்டேன். எனக்குத் தேவையான சொற்களையும் உச்சரிப்புகளையும் கண்டுகொண்டேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் காட்டில் பிறந்து அங்கேயே முழு வாழ்வையும் கழித்திருக்கலாம். அவனிடம் காட்டிலிருந்து வெளியேறும் அருகிலிருக்கும் வழியைக் கேட்டேன். நான் நன்றாக பேசும் அளவுக்கு மாறினேன். அவன் பதில் மிகவும் குழப்பமாக இருந்தது. நான் அவன் பேசுவதில் ஒரு சொல்லைக் கூடப் புரிந்துகொள்ளவில்லை அல்லது நான் பேசுவதில் ஒரு சொல்லைக் கூட அவன் புரிந்துகொள்ளவில்லை, அல்லது அவனுக்கு எதுவுமே தெரியவில்லை, அல்லது அவன் என்னை அருகில் வைத்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். நான் போக முனையும் போது அவன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான் அப்போது  அந்த நான்காவது கருதுகோளைத்தான் அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் நான் அறிந்தேன். அதனால் நான் என் ஊன்றுகோலில் ஒன்றைத் தேர்ச்சியுடன் எடுத்து அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டேன். அது அவனை அமைதி ஆக்கியது. முதிய அழுக்கான முட்டாள். நான் எழுந்து நடந்தேன்.

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. நான் அமைதியாக இருக்கிறேன். எல்லோரும் தூங்குகிறார்கள். இருந்தாலும் நான் எழுந்து என் மேஜை அருகில் செல்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. என் விளக்கு மென்மையான தொடர்ச்சியான ஒளியைப் பாய்ச்சுகிறது. அதை குறைத்தேன். அது காலை வரை எரியும். நான் ஆந்தைகள் கத்துவதைக் கேட்கிறேன். என்ன ஒரு போராட்டத்தின் ஓலம்! நான் அதை ஓரிடத்தில் நின்று கேட்கிறேன். என் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தூங்கட்டும். அவனும் தூங்கமுடியாத இரவுகள் வரும், அப்போது அவன் மேஜைக்கருகில் எழுந்து செல்வான். நான் மறக்கப்பட்டிருப்பேன்.

என் அறிக்கை நீளமானது. என்னால் முடிக்க முடியாமல் இருக்கலாம். என் பெயர் மோரான், ஜேக்கஸ். இந்தப் பெயரால்தான் நான் அறியப்பட்டிருக்கிறேன். என்னுடையது முடிந்துவிட்டது. என் மகனுடையது கூட முடிந்துவிட்டது. எல்லாமே சந்தேகமற. அவன் உண்மையான வாழ்க்கையின் இறுதியில் இருப்பதாக அவன் நினைக்கவேண்டும். அவன் அங்குதான் இருக்கிறான். என் பெயரைப் போல, அவன் பெயர் ஜேக்கஸ். இது குழப்பத்திற்குக் காரணமாக இருக்கக்கூடாது…

மோலாயைத் தேடச் சொல்லி எனக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நாளை என்னால் மறக்க முடியாது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை…ஒரு மனிதன் தோட்டத்தில் நுழைந்து என்னை நோக்கி நடந்து வந்தான். அவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனை எனக்கு நன்றாகத் தெரியும்…இந்த மனிதன் எனது அண்டை வீட்டுக்காரன் அல்ல, இவனுடனான எனது போக்குவரத்துகள் எல்லாமே வேலை சார்ந்தவை, அவன் மிகவும் தூரத்திலிருந்து பயணித்து என்னை தொல்லை செய்ய வந்திருந்தான்.

அன்னை மோலாய் அல்லது மோலோஸ் நான் முற்றிலும் அறியாதவர் அல்ல என்று தோன்றியது. ஆனால் அவருடைய மகனை விட குறைவாகத்தான் உயிரோடிருக்கிறார் என்று கடவுள் தூரத்திலிருந்து அறிந்திருப்பார்…

அவனைப் பற்றி முற்றுமாக அறிந்திருக்கவில்லை என்றாலும் எனக்கு மோலாயைத் தெரியும். ஏதோ சுருக்கமாக தெரிந்திருந்தது என்று நான் சொல்லலாம். நான் மோலாயைப் பற்றிய அறிய, ஒன்றுமே தெரியாத இடைவெளியைப் பற்றி அறியும் கவனத்தைக் கொடுத்திருக்கிறேன்.

நாங்கள் பல நாட்கள் தனிப்பாதைகளில் நடந்தோம். முக்கிய சாலைகளில் நான் தென்படுவதை விரும்பவில்லை…

கிளைகளைக் கொண்டு போக்கிடம் அமைப்பதை என் மகனுக்குக் கற்றுக் கொடுத்தேன். அவன் சாரணர் இயக்கத்தில் இருந்தும் அவனுக்கு எதுவும் தெரியவில்லை…

மாலையாகிவிட்டதால் நான் தீ மூட்டிவிட்டு அது பற்றிக் கொள்ளக் காத்திருந்த போது ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன். எனக்கு மிக அருகில் ஓர் ஆணுடைய குரல் என்னை அதிரச் செய்தது…

நான் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா?அவன் கேட்டான். நான் போக்கிடம் அருகில் செல்லும் போது என் காலை எடுத்து வைக்க முடியாமல் அவன் என் பாதையை மறித்தான். உன்னுடைய நாக்கு உன் தலையில் உள்ளதா? அவன் கேட்டான். உன்னை எனக்குத் தெரியாது என்றேன். நான் சிரித்தேன். நான் நகைச்சுவையான உள்நோக்கம் கொண்டிருக்கவேண்டாம் என்று நினைத்தேன்…அவன் என் அருகில் வந்தான். என் வழியிலிருந்து அகன்று விடு என்றேன். இப்போது சிரிப்பது அவன் முறை. நீ பதில் சொல்ல மறுக்கிறாய்? அவன் சொன்னான்…உனக்கு என்ன தெரியவேண்டும்?நான் கேட்டேன்…சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்த வழியாகக் கடந்து சென்ற கையில் தடி வைத்திருந்த ஒரு வயதான நபரை நான் பார்த்தேனா என்று கேட்டான். இல்லை என்றேன். இல்லை என்றால் என்ன பொருள்?என்றான். நான் யாரையும் பார்க்கவில்லை என்றேன்…அவன் என் மீது கையால் குத்தினான். அவனை என் வழியிலிருந்து அகன்றுவிடச் சொன்னதாக நினைவு. வெள்ளையான கை மூடியும் விரிந்தும் என்னை நோக்கி வந்ததை என்னால் இன்னும் கூட மறக்க முடியவில்லை. தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டது போல. அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, இல்லை அதிக நேரம் கழித்து அவன் நிலத்தின் மீது படர்ந்து கூழாய் வீழ்ந்திருந்தான்…

இப்போது நான் முடிக்க முயல்கிறேன்…

யூதி ஆணையிட்டது போல் நான் வீடு வந்துவிட்டேன்…

அவனுக்கு அறிக்கை தேவைப்பட்டது. அவனுக்கு அறிக்கை கிடைத்துவிடும்.

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. அது நள்ளிரவு. மழை பெய்யவில்லை.

 

*********

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *