லிங்கம் -மாலதி மைத்ரி

 

குழந்தையின் இடுப்பில்
சிறுமணி நாவு
தாயடையாள ஏக்கத்தின்
வீங்கிய மரு
பருவத்தில்
கழிவுநீர் வாய்க்கால்
காதலுறு கலவியில்
தோற்கருவித் துடியிசை
தாம்பத்திய அகலின்
கருகிய திரி
கருவறையில்
புணர்ச்சியின் பிரதிமை
நேர்த்திக்கடன் படையலின்
மாவுப் பிண்டம்
திருநங்கை
வெட்டியெறிந்த உபரித்தசை
மன்மத வக்கிரத்தின்
புரையோடிய கொடிமரம்
காமுகனின் குரூர
நரபலி ஆயுதம்
ஆண் தர்மத்தின் நெற்றியில்
அழுகித் தொங்கும் ஊன்

ஆணின் அனைத்துறுப்புகளும்
லிங்கமாகச் சாபமிடுகிறாள்
விரைத்த குறியைக்
கடித்துத் துப்பியவள்.

 Thanks to -தீராநதியில் வெளிவந்தவை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *