யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்-

முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய கலைவடிவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுமான நோக்கில், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இசை விழா, கலைகளின் சங்கமம் என்கின்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுடன் இணைந்த மன்றங்கள் ஒருங்கிணைந்து அன்றிலிருந்து இன்று வரை விழாக்கள் அரங்கேறிக்கொண்டே வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2011, 2013 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் “யாழ்ப்பாண இசைவிழா” என்கின்ற பெயரில் இது போன்ற கலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே மற்றும் நோர்வே தூதுவராலயத்துடன் இணைந்து சேவாலங்கா மன்றம் ஏற்பாடு செய்கின்ற இவ்விழாவில் இன, மத, மொழி கடந்த நிலையில் இலங்கைத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடைய பாரம்பரிய கலைவடிவங்களோடு நோர்வே, நேபாளம், இந்தியா, பாலஸ்தீனம், தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளுடைய கலைவடிவங்களும் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தருகின்ற பலதரப்பட்ட மக்கள் இவ்விழாக்களில் பங்கெடுக்கின்றனர். இவர்களுள் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்புப்பெற்ற எனது இவ்விழா தொடர்பான மதிப்பீடு உங்களோடு பரிமாறப்படுகின்றது.

பொதுவாக இவ்விழாவிலே பல தரப்பட்ட இடங்களிலும் இருந்து வந்த கலைஞர்கள் ஒன்றுகூடி தமக்குள் அறிமுகம் செய்து கொள்வதும் தத்தம் ஆற்றுகைகளை நிகழ்த்துவதும் மகிழ்விற்குரிய விடயமே. எனினும் விழா ஒழுங்கமைப்பும் முன்னெடுப்பும் சில முரண்பாடுகளுக்குள் மூழ்கிப் போயிருக்கின்றமையை உணரமுடிகிறது.

மேலும், “கலாசார ரீதியிலான நாட்டுப்புறக் கலை வடிவங்களின் கொண்டாட்டம்” என்ற பெயரில் நடாத்தப்பெற்று வருகின்ற இந்த இசைவிழாக்கள், பாரம்பரிய அரங்க வடிவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருதல் என்னும் நோக்குடன் செயற்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உண்மையில் சமுகத்தில் ஓரம்சமாக செயற்பட்டுவந்த பாரம்பரிய கலை வடிவங்களின் உள்ளார்ந்த அடையாளங்களை சீர் குலைத்து வருகின்றதென்றே கூறமுடியும். காலங்காலமாக, பாரம்பரியமாக ஆற்றுகை செய்யப்பட்டு வரும் குறிப்பிட்ட சமுகத்தினருக்கேயான சொத்து, அவர்களை அறியாமலேயே, அவர்களுடைய அனுமதி பெறாமலேயே நிறுவனங்களின் மேலாதிக்;கத்திற்கு உட்பட்டு ஆற்றுகை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இங்கு நிகழ்த்தப்பெற்ற கலைவடிவங்கள் அனைத்தும் விழாவில் கலந்து கொள்வோருக்கான கண்காட்சிப் பொருள்களாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றமை கவனிப்பிற்குரியது.

பாரம்பரிய அரங்குகள் அடிப்படையில் சமூதாய அரங்குகளாக விளங்கிடும் நிலைமையைப் புறக்கணித்து விட்டு மத்தியதரவர்க்கத்தினர் சிலரின் ஒருபக்கப் பார்வையை ரசனையை மட்டும் கருத்திற்கொண்டு துண்டப்பரிமாணமிகு கண்காட்சிப் பொருள்களாக அமைத்து வருகின்ற விதம் ஆபத்திற்குரியது அனைவரது கவனிப்பிற்குமுரியது.

ஓவ்வொரு அரங்கும் அதனதன் சமுக, பொருளாதார, பண்பாட்டு, நம்பிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகளின் பின்புலத்தில், ஆக்க அளிக்கை நிலைகளில் தமக்கான தனித்துவத்தை கொண்டுள்ளன. தலைமுறைக் கையளிப்பினூடாக இது கடத்தப்பட்டு இயக்கத்திலிருந்து வருகின்றது. உதாரணமாக ஈழத்தமிழர்களது வடமோடிக் கூத்தை எடுத்துக்கொண்டால் இக்கூத்து ஒரு பிரதேசத்தின் பலஊர்களில் ஆடப்பட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக ஆடப்பட்டு வருகின்றமையைக் குறிப்பிடலாம்.

அளிக்கை என்ற நிலையில் பார்த்தால் கூட ஒவ்வொரு கலைவடிவமும் அதனதன் சமுகப் பின்புலத்தில், விமர்சனநோக்கில், விருப்பின்பேரில், தேவையின் நிமிர்த்தம் வௌ;Nறு வடிவில் வெளிப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதுதான் எங்களுக்கான கலைவடிவம் என்பதாக ஒரு பாணியை வசதி கருதிக் காண்பிப்பது, இதேபோல் தமக்குத் தேவையான சில சில பகுதிகளை மட்டும் கோர்வையாக்கி ஒரு முழுவடிவம் என காட்சிப்படுத்துவது இவற்றின் பொருத்தப்பாடுதான் என்ன?

கலைவடிவங்கள் வெறுமனே வடிவங்கள் சார்ந்த பார்வைக்கு மட்டும் உரியவைதானா? அதன் அகமும் புறமும் சூழ்ந்துள்ள அவ்வவ் சமூக நம்பிக்கைகள், விருப்புக்கள், பரஸ்பரபகிர்வுகள், பங்குபற்றல்கள், முரண்பாடுகள், விமர்சன நோக்குகள் போன்ற பலவும் காட்டப்பட வேண்டியவை அல்லவா? அல்லது காட்டுவதற்கான தேவைகளில்லையா? காட்டுவதில் ஏதாவது ஆபத்துக்கள், கஸ்டங்கள் நிரம்பியுள்ளனவா? அல்லது இவைகளுக்கும் அழகியலுக்கும் தொடர்புகளே இல்லையா?

உண்மையில் மக்களை மகிழ்விக்கவும் பாரம்பரிய அரங்குகளின் இருப்பை உறுதி செய்யவும் நோக்கம் கொண்டதாக பறைசாற்றும் அமைப்புக்கள் மேற்படி அடிப்படை நிலைமைகளை மறுப்பதில் உள்ள நியாயம் என்ன? நுகர்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வசதி கருதிச் செயற்படுவதாயினும் கூட, குறித்த அரங்க அளிக்கையை அவ்வவ் நிகழ்த்;துச் சூழலிலே உரிய அழகியல் பரிமாணங்களோடு பார்க்க முயற்சிக்கலாமல்லவா?

அரங்கவிழா ஒழுங்கமைப்பில் அரங்கவடிவங்களுக்குரிய அரங்குகளை அமைப்பதன் மூலம் கலைஞர்களின் சுதந்திரமான பங்குபற்றல்களுக்கும் ஒவ்வொரு ஆற்றுகையையும் அதனதன் அழகியல் நிலையில் பொருத்தமாக புரிந்த கொள்ளவும் வாய்ப்பேற்படும்.உதாரணமாக வடமோடிக்கூத்து வட்டக்களரியிலே ஆடப்படுவது, வட்டக்களரியின் அளிக்கை முறைமை படச்சட்ட மேடையின் அளிக்கை முறைமையிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கின்றது. கூத்தின் நடிப்பில் ஆடல், பாடல் முக்கியமானவை. இங்கு கூத்தர் பாடி ஆடும்போது தன்னைத்தானே சுற்றி களரியையும் சுற்றி ஆடுவர். இது பூமியானது தன்னைத்தானே சுற்றி சூரியiiயும் சுற்றுவதான தத்துவார்த்தத்தை பிரபலிப்பது அல்லது இப்பின்னணியில் வந்தாகக் கூறப்படுவது. வட்டக்களரி என்பது வெறுமனே அமைக்கப்பட்ட அரங்கு மட்டுமல்ல. கூத்து நிகழ்த்தப்படும் நிகழ்த்துகை, சந்தர்ப்பம், அதன் தேவை என்பன சார்ந்து அவற்றோடு தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. உதாரணமாக ஊர்க் கூத்துக்கள் கோயில்சடங்கு, விழாக்கள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவ்வவ் விழாக்கள் சார்ந்து நிகழ்த்தப்படும் கூத்துக்களில் அதன்பண்புகள் வெளிப்பட்டு நிற்கின்றன. எடுத்துக்காட்டாக கோயில் சடங்குகளில் கூத்து நிகழ்த்துகை முறைமையானது, பூஜைக்காக ஆயத்த மணி ஒலிக்கின்ற வேளை, பூஜை, வழிபாடு நோக்கம் கருதி கோயிலின் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கூத்து குறித்த நேரம் வரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி கூத்து நிகழ்கின்ற களமானது கோயில் வீதி, மரங்கள், வெளிகள், அனைத்தும் சேர்ந்த ஒரு பரப்பைக் கொண்டு அரங்கு விஸ்தரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு சுயாதீனமாக, சுதந்திரமாக நடமாடக்கூடிய வெளியாக கூத்தை நிகழ்த்தும் களம் அமைந்துள்ளது.

இத்தகைய பாரம்பரிய அரங்குகள் அதனதன் அமைப்பு அரசியல் அழகியல் நிலைமைகள் கவனிக்கப்படாதவையாய் நவீன நாடக நோக்கில் தகவமைக்கப்படுவதன் மூலம் இதுபோன்ற விடயங்கள் பலவும் தெரியப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.

இவ்விழாக்களில் எல்லா வகையிலும் கவர்ச்சிகரமானதாகவும் கவனத்கை ஈர்ப்பதாகவும் வடிவமைக்கப்படுகின்ற படச்சட்ட மேடையமைப்பைத் தழுவிய மேடையமைப்பின் கவர்ச்சிக்குள்ளும் பிரமாண்டத்தன்மைக்குள்ளும் கலைஞர்கள், கூடியிருந்த ஆர்வலர்கள் ஆற்படவும் தாம் நிகழ்த்திடும் நிகழ்வுகளும் இத்தகைய கவரச்சியும் பிரமாண்டமும் மிக்கவை என்ற பிரமிப்பைத் தரவுமே இது வாய்ப்பை வழங்குகின்றது.

கூத்துக்களை ஒருமுகத் தோற்றத்தில் ஆடும் நோக்கிலே இவ்மேடையமைப்பு வடிவமைக்கப்படுகின்றது. உண்மையைக் கூறினால் பார்வையாளரது வசதிக்கேற்ப கலைஞர்கள் மாற்றப்படுகிறார்களே தவிர கலைஞர்களோ, அவர்களது அரங்க அளிக்கை முறைமைகளோ கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. எடுத்துகாட்டாக, 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி முதல் 27ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை விழாவில் முள்ளியவளை மகிடிக் கூத்தில் கரகம் எடுத்தாடிய 78 வயது நிரம்பிய கலைஞர் இத்தனை வருடம் களரியைச் சுற்றி ஆடிவிட்டு இந்த ஒரு நிகழ்விற்காக மட்டும் தனது ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தமையைக் கண்டு கொள்ள முடிந்தது.

மேலும், மேடையமைப்பு ஒருமுகப் பார்வையாளர்களுக்காக அமைக்கபட்டிருந்தது எனினும் அங்கு ஆடிய கலைஞர்கள் தமது அளிக்கை முறைமையை, பாரம்பரியத்தை மாற்றமுடியாமல் படச்சட்ட மேடையிலேயே நாற்புறமும் சுற்றி ஆடியதைக் காணமுடிந்தது.

உண்மையில் இவ்விழாக்களில் கலந்து கொள்வோரில் பலர் கூத்திற்கான பாரம்பரியத்தை அறிந்திராதோர். இந்நிலையில் கூத்தின் அல்லது கூத்துக்களின் அளிக்கை அழகியல் சார்ந்த தவறான புரிதலை உண்டுபண்ணும் துர்;ப்பார்க்கிய நிலை ஏற்படுத்தப்படுகின்றது. உரிய அரங்கில் ஆடியிருந்தால் கூத்தைப்பற்றி புதிதாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர் அது பற்றிய சரியான அறிமுகத்தினைப் பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இதேபோன்று, எவ்வளவுதான் பொருளாதாரச் சிக்கல்களாயினும் ஊர்களிலே கூத்தர்கள், அச்சமூகத்தினர் தாமாக ஒன்று கூடி பணம் சேர்த்து தமக்கே உரியவகையில் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உரிமையோடு சுதந்திரமாக கூத்தை ஆடும் நிலமைக்கு மாறாக இங்கு இன்னொரு நிறுவனத்திடம் பணம் வேண்டி அவர்களது விருப்புக்கும் விதிகளுக்குமேற்ப செயற்பட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஒரு கலைப்படைப்பாக்கத்தை ஒன்றிணைந்து உருவாக்கும் திறன், உரிமை மறுக்கப்படுவதும் மறக்கப்படச் செய்வதும் நிகழ்வதனூடாக பிறரில் தங்கி வாழவும் வழியேற்படுத்தப்படுகின்றது.

நாகரீகமான இச்சுரண்டல், உழைப்பு “பாரம்பரியக்கலை வடிவங்களைப் பாதுகாக்கிறோம்(ஆவணப்படுத்தல்) கலைஞர்களை ஊக்குவிக்கின்றோம்” எனும் விளம்பரத்தில் நடைபெறுவதுதான் நகைப்புக்குரியது ஆனால் நம் சிந்தையில் உறையாத உண்மையும்கூட. பாரம்பரிய அரங்கு சார்ந்து பாண்டித்தியம் பெற்றவர்களாகவும் அவற்றை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் தம்மைக் கூறிக்கொள்வோருள் சிலரும் இத்தகைய நற்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

நிறுவனங்களும் தூதுவராலயங்களும் ஏற்பாடு செய்கின்ற இவ்விழாக்களில் வெளிநாடுகளிலிருந்து பலரும் கலந்து கொள்கின்றனர் எனும் நிலையில், உள்ள+ர் கலைவடிவங்கள் பற்றி அதுவும் வெறுமனே ஆற்றுகை என்ற நிலையில் பார்த்தால் கூட தவறான அபிப்பிராயத்தையே கொடுத்திருக்கின்றது. இத்தகைய செயற்பாடுகளால் எமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் கூட இக் கலை வடிவங்களை வெறும் இறுவெட்டு நிகழ்வுகளாக மாத்திரம் பார்க்கும் நிலைக்கு பழக்கப்படுத்தப்படும் தீமையான சூழல் உருவாக்கப்படும். உருவாக்கப்படுகின்றது.

ஒரு சமூகத்தின் வாழ்வியலாக, வாழ்வின் ஒரு பகுதியாக இயங்கும் கலைவடிவம் வசதி கருதி வெறும் 25 நிமிடங்களுக்குள் அடக்கிவிடக்கூடிய வெற்றுமேடையில் காட்டிவிடக் கூடிய காட்சிப் பிண்டமாக்கப்படுவது ஏற்கமுடியாதது. பாரம்பரிய அரங்கு அடிப்படையில் சமூதாய அரங்காகச் செயற்படுகிறது. இங்கு அதன் உருவாக்கம் முதல் ஒன்றிணைந்திருக்கும் பலரது உழைப்பும் ஊடாட்டமும் மகிழ்வும் மதிப்பீடும் முக்கியமானவை.

பாரம்பரிய கலைவடிவங்களை பாதுகாப்பது எனும் நோக்கிலும் அவற்றை பிறருக்கு காண்பிப்பது எனும் பேரிலும் கலைகளையும் கலைஞர்களையும் ஓரிடத்தில் குவிப்பது, துண்டக்காட்சிப் பொருளாக்குவது என்பதற்கு மாறாக அவ்வக் கலைவடிவங்களை அவ்வச் சமூக அரங்கத் தன்மைகளுடன் அச்சமூக இயக்கத்தின்பால் முன்னெடுப்பதும், புரிந்து கொள்வதும் முக்கியமானது. பாரம்பரியக் கலைவடிவங்கள் குறிப்பாக அரங்குகள், இவ்விழாவின் பின்னணியில் கூறின் கூத்துக்கள் அவ்வச் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே அவர்களால் கணிக்கப்படுகிறது, கவனிக்கப்படுகிறது என்பதை அறிந்தவர் அறிவர். இந்தப்பின்புலத்தில் இவை பாதுபாக்கப்படவேண்டியவை! பரவலாக்கப்பட வேண்டியவை! என்பதான கரிசனைகள் அவசியமற்றவை. இவ்வாறான தோரணையில், விளம்பரத்தில், பிரமிப்பில் செயற்படுத்தப்படும் நிகழ்வுகள் இருப்பதை இன்னொன்றாக தகவகைப்பதான, உண்மையை மூடி மறைத்து உள்ளதையும் இல்லாமலாக்கிவிடுவதான ஆபத்துக்களை நிகழ்த்தாமலிருப்பது வரவேற்பிற்குரியது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *