ஒப்பனை இல்லா காணி ஒரு சாணும் வேணாம்…..

ஸ்ரீ- -லுணுகலை

இந்த ஆசைத்தேவையின் ஆயுளானது – ஆண்டுகள்
இருநூரை தாண்டிக் கடந்தது.
குருத்திலே கொய்து கொய்து வைப்பதால், மரமெனும்
குலம்விட்டு, நிஜம்தொலைத்து போயிற்று- இந்த
தேயிலைகள் ஒப்பவே எங்கள் தேவைகளும்…

மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளின் விளிம்புகளிலும்
பாடுபட்டுழைக்குமென்றன் பாட்டாளி மக்களின்
பசிக்கு அடுத்தப்படியாய் படிந்த தேவை
இதுவன்றி வேறெதுவிருக்க முடியும்..?

ஆங்கிலேயேன் கொடியனாயின் அவனைத் துரத்தி,- தொடர்ந்த
அனைத்தரசர்களும் கொடியவரே..

லயங்களைத் தானே லயன்களாக்கினீர்..?
உழைப்பின் திறத்தில் புறவியை மிஞ்சிய புஜமுடையோராயின்
திணையில் நாங்கள் அஃறினை ஆவோமா…?

“இரண்டாயிரமாண்டில் யாவருக்கும் இருப்பிடம்”
சர்வதேசம் நுவன்றும்,
கல்லிட்டு கடல் நிரப்பி- வான் எட்டும்
இல்லங்களமைக்கும் வல்லமைமிகு நாட்டினிலேதான்
இல்லாமல் இருக்கிறது எமக்கான இல்லங்கள் மட்டும்..
முப்பத்தேழாயிரம் ஹெக்டர் நிலம் தரிசாய் நீண்டு படர்ந்த போதும்..

கண்டுப்பிடித்தவன் எவனோவாகலாம்- இந்த மண்ணை
கழனிச் செய்தவனென் முப்பாட்டனாவான்..
இந்தச் சிகரமின்று சிறப்பதெல்லாம்
அகரமறியாவென் ஆன்றோர் சிந்திய சிரத்தையினாலாகும்

நாகரிகம் வளர்ச்சிக் கொண்டது
நதிக்கரைகளில் என்கிறது சரித்திரம்..
நாகரிகம் நாகரிகமற்று எங்கள்
நதிக்கரைகளில் கிடப்பதென்ன தரித்திரம்..?
வந்தவர் கெதிதான் இஃதென்றால்- இங்கு நின்ற
முந்திய குடிக்கும் அஃதே.

பொறிகள் ஐந்தும் புரிகின்றன பிழை
அறிவை தலைமைக்கு அழை.
ஆணும் பெண்ணுமற்ற அலியின் கொடுமையாய்
இலங்கை- இந்தியா இரண்டிலும் உரித்தில்லா
எங்கள் தரித்திரம் உடை.

மலையொன்று வீழ்ந்து குடியெல்லாம் மூழ்கியபின்
கொடுபடும் ஒப்பு
மலைபோல் வாழும் மலைகளுக்காகவே வாழும்
மலைமக்கள் யாவருக்கும் உரித்து..
ஓர்மத்தில் கூவு உரத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *