வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும்

சை. கிங்ஸ்லி கோமஸ்

News Paper Registrations

பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் ஏற்பாடு செய்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனுக்கான அஞ்சலி நிகழ்வு 2015. 02. 01 கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைப்பெற்றப் போது வாசிக்கப்பட்ட கட்டுரை
இன்றைய பகிர்வினை இரண்டு பாகங்களாக பிரித்து ஆராய்தல் தகும் எனக் கருதி கீழ்கண்டவாறு வகுக்கப்பட்டுள்ளது.

1. படைப்பாளி சாரல் தொடர்பாக பத்திரிகைகள் கூறியவற்றினையும்

2. பத்திரிகைகள் தொடர்பாக எழுத்தாளர் சாரல் கூறியவற்றினையும் இதனோடு சேர்த்து சில இலக்கிய பெருந்தகைகள் எழுத்தாளர் சாரல் தொடர்பாக கூறியவற்றினையும் பகிர்தல் சாலச் சிறந்ததெனக் கருதி கட்டுரை பகிரப்படுகின்றது.
ஆய்வாளரும் மலையகத்தின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமையுமான சாரல் நாடன் அவர்களின் நூலுறு பெற்ற படைப்புக்கள் அநேகமானவை வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், நவமனி, சரிநிகர் போன்ற பத்திரிக்கைகளிலும,; ஏனைய கட்டுரைகள் குன்றின் குரல், கொழுந்து, மல்லிகை, ஞானம், சௌமியம், செங்கதிர், செய்தி, நூலகவியல், பெண்ணின் குரல், கொந்தளிப்பு போன்ற சஞ்சிகைகளிலும் மலையக சாகித்திய விழா மலர்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் தாயகம், ஆண்டு மலர் புது வசந்தம் சஞ்சிகையிலும் சாரல் பற்றிய பதிவுகளும,; பகிர்வுகளும் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் சாரல் தொடர்பாக பத்திரிக்கைகளில் வந்த பகிர்வுகள் பல காணப்பட்டாலும், அவர் பற்றி முக்கியமானது என கருதப்பட்ட ஒரு சில பதிவுகளை பகிர்வது காலத்தின் தேவையாகும். அந்த வகையில்

1. 17.05.1987 சிந்தாமணி வாரமலர்

சிவி என்னம் சிறந்த பெருமகனின் சிறப்புக்களை எல்லாம் சுமார் 70 பக்கம் கொண்ட சிறு நூலில் அடக்கி விடுவது என்பது சாத்தியமான காரியம் அல்ல இருந்தாலும் சாரல் என்னும் ரஸவாதி தமது நூலில் இந்த அற்புதத்தை அதிசயிக்கும் படி சாதித்திருக்கின்றார்.

2. 22.02.1987

யோகா பாலச்சந்திரன் தினகரன்

கூடியவரை லயம் விலகாது தகவல் சேகரிப்பு மேற்கோல்களாகவே தொகுத்து விவரணத்தை நடத்திச் செல்லும் பாங்கு இரண்டுமே எனக்கு பிடித்துள்ளன.
3. பங்குனி 1988 தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம்

N. இரவீந்திரன்.

சி.வி. வேலுப்பிள்ளையின் வரலாற்றையும் பணிகளையும் மிகச் சிரமப்பட்டு தேடி ஆராய்ந்து தொகுத்து எடுத்து தேடி ஆராய்ந்து நூலாக வெளியிட்டுள்ள முன்னோடி முயற்சிக்கு பாராட்டு

4. பங்குனி 1987 மல்லிகை

ஊ.ஏ வேலுப்பிள்ளை அவர்களின் வரலாற்றையும் பணிகளையும் மிகச்சிரமப்பட்டு தேடி ஆராய்ந்து தொகுத்தெடுத்து நூலாக வெளியிட்டுள்ள முன்னோடி முயற்சி பாரட்டுக்குரியது.

பேராசிரியர் கைலாசபதி

மலையக இலக்கியத்தின் மேல் கொண்ட மதிப்பின் அடையாளமாக பேராசிரியர் மலையக படைப்புக்களை தான் ஆசிரியராக தினகரன் பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அதிகமாக பிரசுரித்தார்
அதற்கமைய சாரல் நாடன் எழுதிய “ எவளோ ஒருத்தி” என்ற சிறுகதையை தினகரனில் பிரசுரித்த பேராசிரியர் சாரல் நாடனின் ஆற்றலைக் கண்டு தனது கைப்பட சாரலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மிக முக்கியமாக எழுதுவதை நிறுத்தி விட வேண்டாம் என்;;றும், தொடர்ந்து எழுதும் படியும் கேட்டுள்ளார். சாரலின் எழுத்துக்கள் தொடர்பாக பேராசிரியரின் தீர்க்கதரிசனமான கருத்தினை நோக்குமிடத்து மலையக இலக்கியத்தின் அடையாளங்களாக சாரலின் எழுத்துக்கள் அமையும் என்பது இன்று மெய்யாகியுள்ளது.
தமிழ் நாட்டு சஞ்சிகையான சுபமங்களா சஞ்சிகையின் ஆசிரியரும,; தண்ணீர் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான கோமல் சுவாமி நாதன் 1994 ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து மலையக பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின் மலையக இலக்கியவாதிகள் தொடர்பாக தனது பயணக்கட்டுரையில் மலர் 07, இதழ் 02 ஜீன் 1994 பக்கம் 04ல் எழுத்தாளர் சாரல் நாடனின் புகைப்படமும் கீழ்கண்ட பகிர்வினையும் தந்துள்ளார்.

நடேசய்யர் ஒரு யுகப் புயல்
மலைகளுக்கு நடுவே வீசிய சன்ட மாரதம்
மலைநாட்டின் முடிசூடாமன்னனாக
மூன்று தசாப்தங்கள் காரியம் ஆற்றிய சாதனையாளர்
ஆண்டவனின் அவதாரமாக தவறை கையெடுத்து
வணங்கிய மலையக தோட்டத் தொழிலாளர்கள்
கொத்தடிமைகளாக அதுவரை
கூனி குறுகி நின்ற கூழிகள்
நிமிர்ந்து நின்றனர்
சுமார் ஒரு தசாப்தம் சரித்திரம் என்று சாரல் கூறுகின்றார் ,என்று கூறியுள்ளார்.

மக்கள் இலக்கியவாதி கோமல்சுவாமிநாதனின் இலங்கை விஜயமும், மலையக பிரதேசங்களில் நடாத்தப்பட்ட நாடக பட்டரைகளும் அனுபவப் பகிர்வுகளும் ஈழத்து இலக்கியத்திற்கு சிறந்த அஙீகாரத்தினையும் மலையக இலக்கியத்தின் போராட்ட குணாதிசியத்தினையும் இந்திய இலக்கிய பரப்பில் பறைசாற்றுவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது என்றால் மிகையாகாது. மேற்கூறிய இலக்கிய இசைவியக்கத்திற்கு உரம் தந்தவர்கள் பட்டியலில் சாரல் அவர்கள் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கின்றார்.

1996 ஆம் ஆண்டு தமிழகத்தின் இலக்கிய சிகரங்களான வள்ளிக்கண்ணன், தாமரை மகேந்திரன், பொன்னவன் ஆகியோரின் இலக்கிய பயணம் இலங்கை தமிழ் இலக்கிய வாதிகளுக்கு மற்றும் ஓர் உற்சாக செயற்பாடாய் அமைந்தது. இந்த இலக்கிய பயணத்தின் பின்பு தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் இவர்களின் கட்டுரைகள் வெளியான போது மலையக இலக்கியம் தொடர்பான பகிர்வில் எழுத்தாளர் சாரல் நாடனின் பெயர் பல இடங்களில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலையக வெளியீட்டகம் வெளியிட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையும், சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற குறு நாவலான தி. ஞானசேகரத்தின் கல்வாத்து குறு நாவலிலே கதாசிரியர் தனது நன்றி நவிலலில் முதலாவதாக எழுத்தாளர் சாரல் நாடன் அவர்களுக்கு- இக்குறு நாவலை நான் எழுதுவதற்கு தூண்டு கோலாக இருந்த பிரபல எழுத்தாளர் சாரல் நாடனுக்கு என்று கூறியுள்ளார்.

1988ஆம் ஆண்டு வெளியான கொழுந்து சஞ்சிகையில் எழுத்தாளர் சாரல் நாடனின் கட்டுரையும், இடம்பெற்றிருந்தது என்பதுடன் 1994ல் தி. ஞானசேகரன் எழுதிய லயத்து சிறைகள் நாவலில் பிரபல மலையக எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல் நாடன் நான் கடமையாற்றிய தோடத்திற்கு மாற்றலாகி வந்ததன் பின் மலையகம் தொடர்பான நாவல் ஒன்றினை எழுதுமாறு நட்புரிமையுடன் வேண்டிக் கொண்டிருந்தார். இவர்கள் தந்த ஊக்கத்திலேயே லயத்து சிறைகள் உறுப்பெற்றது.

எழுத்தாளர் சாரல் நாடன் தான் தனியே இலக்கியத்தில் பெயரும் புகழும் பெற வேண்டும் என்ற சுயநல போக்கில் இருந்து விடுபட்டு மற்றவர்களுக்கும் உற்சாகமளித்து எழுத வைத்துள்ளார். என்பதற்கு மேற்கண்ட தி. ஞான சேகரத்தின் பகிர்வு சான்றாதாரமாக அமைகின்றது. மலையக பிரதேசத்திலும் சரி, வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் சரி பிரதேச வாத காலப்புணர்வுகளும், விமர்சனங்களும் மிகையாக காணப்படுகின்றது. அதிலும் இலக்கியவாதிகள் அதிகமானோர் மலையகத்தில் வளர்ந்து வரும் இலக்கியவாதிகளை அவர்களுடன் சேரவேண்டாம் இவர்களின் அமைப்பில் இருக்க வேண்டாம் வடக்கு கிழக்கு தலைமைகளின் கீழ் அரசியல் நடவடிக்கையில் செயற்பட வேண்டாம் என்னும் நச்சு சிந்தனைகளை பரப்புவோர் மத்தியிலும், வடக்கு கிழக்கு சார்ந்த சில எழுத்தாளர்கள் மலையகத்தை பயன்படுத்தி இலக்கிய உலகத்துக்குள் சஞ்சரித்து, மலையக மக்களை இழிவு படுத்தும் சிதைவுற்ற மனப்பாண்மையில் வாழ்ந்த சந்தர்ப்பத்தில் சாரல், ஞான சேகரம் அவர்களை எழுதுவதற்கு எழுத தூண்டியமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக அமைகின்றது.

மட்டகளப்பு மண்ணில் இருந்து வெளிவரும் செங்கதிர் சஞ்சிகையின் 17ஆவது மலையக சிறப்பிதழ், சாரல் எழுதிய மலையக நாவல்கள் என்னும் கட்டுரையை பிரசுரித்தது. 17ஆவது செங்கதிர் சஞ்சிகை பற்றிய பகிர்வினை 13.09.2009 தினம் வீரகேசரி ஞாயிறு பத்திரிகையின் உயிர் எழுத்து பகுதியில் சை. கிங்ஸிலி கோமஸ் எழுதிய செங்கதிர் மலையக சிறப்பிதழ் ஒரு பார்வை பகுதியில் சாரலின் கட்டுரைத்தொடர்பாகவும் பகிரப் பட்டிருந்தது.

எழுத்தாளர் சாரல் நாடன் பற்றி பல செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், பாராட்டுக்கள் பலராலும் பல பத்திரிக்கைகளிலும் பிரசுரிக்கப்பட்ட போதிலும் குறிஞ்சி தென்னவன் கவிச்சரங்கள் தொகுப்பு நூலுருவாக்கம் பெற்றதன் பின் சாரல் மீது விமர்சனங்களை பலரும் பல பார்வைகளில் முன்வைத்தனர். பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் ஊடாக பலரும் தங்களின் கருத்துக்களை பதிந்திருந்தனர். எழுத்தாளர் மு. சிவலிங்கம், திரு. லெனின் மதிவாணன், சை.கிங்ஸிலி கோமஸ் ஆகியோரது விமர்சனங்கள் ஞாயிறு வீரகேசரி, தினக்குரல், இணையத்தளங்கள் என்பவற்றில் வெளியிட்டிருந்தனர்.

மலையக இலக்கியம் புதிய பாதையில் பயணிக்க வேண்டியதன் அவசியத்தினையும், இலக்கியத்தினுள் புதைந்து போயுள்ள வர்க்க குணாம்சங்களின் வெளிபாட்டினையும் அடையாளப்படுத்த வேண்டியதன் தேவையினை மேலே குறிப்பிட்ட கட்டுரையாளர்களின் எழுத்துக்களில் பொதிந்திருந்தமை அடையாளப்படுத்தப் பட வேண்டியவையாகும். எழுத்தாளர் சாரல் நாடன் தேசிய பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் தொடர்பாக பகிர்தவை பற்றிய பார்வையை இரண்டாம் பகுதியில் ஆய்விற்கு உட்படுத்தும் போது மலையக வரலாற்றின் பல வெளிப்படாத பக்கங்களை இனம் காணக் கூடியதாய் உள்ளது.

மலையகத்தில் வெளியான பத்திரிகைகள் சஞ்சிகைகள் தொடர்பாக தன்னால் முடிந்த தேடலை செய்து வாசகர்களுக்கும,; ஆய்வாளர்களுக்கும் தந்துள்ளமை வியக்கத்தக்கது.
மலையகம் வளர்த்த தமிழ் எனும் தனது நூலில் பக்கம் 147 1978ல் வெளியான ஜனமித்திரன் 1995ல் வெளியான சூரியன் என்னும் பத்திரிகை வரை பட்டியளிட்டுள்ளார். இதில் நூல்கள், அவற்றின் பெயர்கள் வெளியான ஆண்டு, ஆசிரியர் என்போரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது ஓர் சிறப்பான தேடலாகும். இதில் தலவாக்கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட ஆக்கம் சஞ்சிகையின் முதலாவது பிரதி ரோனியோ பதிப்பாக முத்துவேல் ஆசிரியராக கடமையாற்றி நூலை உருவாக்கியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விலாசத்திற்காக திரு. P.ஆ. செல்வராஜ் அவர்களின் பெயர் பொதிக்கப்பட்டதாகவும் திரு .சாரல் நூலின் ஆசிரியர் திரு. P.ஆ. செல்வராஜ் என்று அடையாளப்படுத்தியுள்ளதாகவும் திரு. முத்துவேல் கூறியுள்ளார்.

1960 தொடக்கம் 1993 வரை கவிஞர் குறிஞ்சி தென்னவனின் படைப்புக்கள் வெளியான பத்திரிகைகள்,சஞ்சிகைகளை பட்டியளிட்டுள்ளார். இதில் மாணவர் முரசு துவங்கி, குறிஞ்சி பூவரை பேசப்பட்டுள்ளது. சிந்தாமணி பத்திரக்கைப்பற்றி விஷேடமாக பல இடங்களில் பகிர்ந்துள்ளார். சு.ஆ. நாகலிங்கம் அவர்கள் ஆசிரியராக கொண்டு கண்டியிலிருந்து வெளியான (1963) செய்தி எனும் பத்திரிக்கைக்காக கவிஞர் குறிஞ்சித் தென்னவன், எழுத்தாளர் சாரல் நாடனை நேர்க்கண்டு பதிவான கதாசிரியனைக் காணும் கவிஞன் எனும் நேர்காணலை புதிய பண்பாடாகவும் புதிய சிந்தனையாகவும் இனங்காணக்கூடியதாக உள்ளது. இன்றைய மலையக எழுத்தாளர்கள் ஒருவர் மேல் ஒருவர் காலப்புணர்ச்சிக் கொள்தலும் இணைந்து இயங்க மனமற்றவர்களுமாகி மனநோயாளர்களாய் வாழும் நிலையில் அன்றைய இலக்கியவாதிகளை முன்னுதாரணமாய் கொள்ளல் சிறப்பாய் அமையும்.
இதற்கு அப்பால் காங்கிரஸ், மகாவலி, நம்நாடு என்னும் தொழில்கள் சார்ந்த பத்திரிக்கைகளில் குறிஞ்சித் தென்னவனது படைப்புக்கள் வெளியானமை பகிர்ந்துள்ளது.

மலையகம் வளர்த்த தமிழ் நூலில் வீரகேசரி பத்திரிக்கையின் குறிஞ்சி பரல்கள் பகுதி மலையக எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுத்தது என குறிப்பிடுகின்றார். பக்கம் 79. மேலும் இந்த நூலில் 1980ல் பத்திரிகைகளின் தமிழ் இலக்கியத்திற்கான பக்கம் அதில் மலையக எழுத்தாளர்கள் என்னும் பகுதி பகிரப்பட்டுள்ளது. கவிஞர் குறிஞ்சித்தென்னவன் காங்கிரஸ் பத்தரிக்கையில் எழுதியவர,; பின்பு மாற்று அரசியல் பத்திரிக்கைகளில் ஏன் எழுதினார் அவரது எழுத்துக்களின் பரினாம வளர்ச்சி, விமர்சன பாங்கு, வர்க்க குணாம்சம், போராட்ட வடிவம் என்பவற்றை நுனுக்கமாக ஆராய்ந்து வழங்கியமை சாரலின் ஆய்வின் நுட்பத்தினையும் வித்தியாசமான பார்வையினையும் எடுத்தியம்புகின்றது.

2002ஆம் ஆண்டு அந்தனி ஜீவாவை ஆசிரியராக கொண்டு வெளியான மத்திய மாகாண சாகித்திய விழா மலரில் சாரல் எழுதிய கடி அரசன் பற்றிய கண்டி ராசன் கதை என்னும் கட்டுரை மிகவும் வித்தியாசமான தேடலாக காணலாம். 1998ல் வீரகேசரியில் வெளியான நரேந்திர சிம்மன் பள்ளு என்னும் வரலாற்றுக் கட்டுரை பற்றிய பகிர்வினையும் சாரல் தனது கட்டுரையில் பகிர்ந்து வழங்கயுள்ளார்.

இவை அனைத்துக்கும் மகுடமாக 2010ஆம் ஆண்டின் மத்தியமாகாண தமிழ் சாகித்திய விழா மலரில் சாரல் பகிர்ந்துள்ள 1953ல் உதவி பொருளாதார விரிவுரையாளராக இலங்கை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், சிறந்த ஆய்வாளர், மலையக மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர் என வர்ணிக்கப்பட்ட ஐ.எச் வண்டர்சன் டிரைசன் என்பவர் எழுதிய வுhந டழபெ றயல என்னும் நூல் பற்றிய பகிர்வினை நீண்ட நடைப்பயணம் என்னம் தலைப்பில் பகிர்ந்துள்ளார். இதில் அடையாளப்படகூடிய மலையக செய்திகளை தாங்கிவந்த கீழ்கண்ட செய்தி தாழ்கள் பற்றிய பகிர்வு காணப்படுகின்றது.

1)     The Ceylon Historical Journel

2)     The Ceylon Journel of Historical and social statics

3)     Times of Ceylon

4)     The Ceylon times

5)     the Examinar

பல பேராசிரியர்கள் கல்விமான்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள், விரிவுரையாளர்கள் மலையகத்தில் இருந்து தோன்றிய போதும் மலையகம் பற்றிய ஆய்வினை பலர் செய்திருந்த போதும் மலையகம் பற்றிய தேடல்கள் செய்யாமல் வெருமனே விமர்சித்துக் கொண்டிருக்கம் கல்விமான்கள் காணப்பட்டபோதும் மலையகம் பற்றிய சிறந்த ஆய்வுகளையும், பதிவுகளையும் எமக்காய் படைத்து சென்றுள்ள சாரலின் இலக்கியங்கள் போற்றப் படக் கூடியவை
மலையகத்தில் பலர் ஆய்வுகளை செய்கின்றேன் என்று கூறி ஏற்கனவே எழுதப்பட்ட பலவிடயங்களை சற்று வசன மாற்றங்களை மாத்திரம் செய்து தனது சொந்த இலக்கியம் என்று நூலாகவும், கட்டுரையாகவும் வெளியிடும் பல பம்மாத்து ஆய்வாளர்கள் மலையகத்தில் எழுதிவருவது பலராலும் இனம்காணப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சட்டத்தரணி இ.தம்பைய்யா எழுதிய மலையக மக்கள் என்போர் யார் என்னும் தொகுதியில் மலையக மக்களின் அடையாளம் சுய நிர்ணய உரிமை என்பவை பற்றிய பதிவினை இன்று பலர் அவர்களின் நூல்களிலும், கட்டுரைகளிலும் எழுதி குறைந்தபட்;சம் உசாத்துணை நூல் பட்டியலில் கூட அடையாளப் படுத்தாத சிறுப்பிள்ளைத்தனமான எழுத்துக்களுக்கு மத்தியில் சாரல் என்னும் இலக்கியப் படைப்பாளி மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் தனது நூல்களுடன் தான் உசாத்துணையாக பாவித்த நூல் பட்டியலையும், தந்துள்ளமை தங்களை ஆய்வாளர்கள் என்று கூறிக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த முன்னூதாரணமாக காணப்படுகின்றது. சாரலின் தேடல் இருப்பினை தொலைத்துக் கொண்டிருக்கும் மலையக மக்களின் இருப்பிற்கான சான்றாதாரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *