தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

 உஷா வை

(தமிழாக்கம்: உஷா வை.) – Thanks :http://solvanam.com –பெண்கள் சிறப்பிதழ்)

காப்ரியல் லீசெனு(Gabriel Liiceanu), ஹெர்டா முல்லர்(Herta Müller)- உரையாடல்:

ஹெர்டா முல்லரும் காப்ரியல் லீசெனுவும் மொழியையும், அரசு எதிர்ப்பையும் பற்றி உரையாடுகிறார்கள் சௌஸெஸ்குவின் ஆட்சியை எதிர்க்காமல் மெத்தனமாய் இருந்த ரொமனீய அறிவாளர்களை, ஹெர்டா முல்லர் பகிரங்கமாய் கண்டனம் செய்திருக்கிறார். பதிப்பாளரும் தத்துவவாதியுமான காப்ரியல் லீசியானுவுடன் புகரெஸ்ட் மாநகரில் அக்டோபர் 2010ல் பேசுகையில், நோபேல் விருது பெற்ற இந்த எழுத்தாளர், தனி வாழ்வில் அறிவார்ந்த நேர்மையைக் காப்பது மட்டுமே அரசியல் எதிர்ப்புக்குப் போதாத வடிவம் என்ற, பலருக்கும் ஒவ்வாத, தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

ஹெர்டா முல்லரை குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரையை படிக்கலாம் :http://solvanam.com/?p=16723

***      ***     ****

கே லீ : இப்போது நீங்கள் வாசித்த ‘ஆட்டம்ஷௌகல்’ என்ற பகுதியில் இருந்தே நமது உரையாடலை ஆரம்பிப்போமா? ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள் “ஆனால் பசி உணவுத் தட்டின் முன் இருக்கும் ஒரு நாயைப் போல இருந்து, தன்னைத்தானே விழுங்கிக் கொண்டிருந்தது.” எழுத்தாளராக இருப்பது என்பது, பொருள்களுக்கிடையே இருக்கும், பிறரால் உணரப்படாத, உறவுகளைக் காண்பதும், பொருள்களிடம், வேறு யாருக்கும் புலப்படாது, இருக்கும் நுண்ணிய குணங்களைக் கண்டெடுப்பதும், பொருள்களுக்கும் வார்த்தைகளுக்குமிடையே வேறு யாரும் உருவாக்காத ஒரு உறவை ஏற்படுத்துவதும் எனலாம். என்னுடைய எண்ணத்தில், எழுத்தாளன் என்பவன் பொருட்களுக்கிடையே உள்ள உறவுகளை, இது வரை யாரும் செய்யாத வகையில் சுட்டிப் பெயரிடும் சிறப்புச் சலுகை பெற்றவன். இதனால்தான், எழுத்தாளன் உலகத்துடன் இதற்கு முன் இருந்திராத ஒரு உறவைத் திறக்கிறான் என்று சொல்ல நான் விழைகிறேன். அவனோ, அவளோ ஒரு புதுத் தடம் பதிக்கும் முன்னோடி. இருந்தாலும், பல சமயங்களில் நீங்கள் எழுத்தாளனுக்கு இந்த அசாதாரணமான பணி இருப்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

 

 

ஹெ.மு: உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை. அதை எழுத்தாளர்களிடம் பரீட்சிக்க முடியும்-ஏனெனில் அவர்கள் வேலையே எதையும் எழுதி வைப்பதுதான். இதை நீங்களே காணவும், விவாதிக்கவும் முடியும். மற்றவர்களைப் பொறுத்த வரை, பொருட்களும், கருத்துகளும் புறத்தில் வெளிப்படுவது இல்லை, அதனால் நம்மால் அவற்றைக் காண முடிவதில்லை. அதுதான் வித்தியாசம். பல துறைகளில் பலவகைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களிடையே, நுண்ணுணர்வுள்ளவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் எழுத்தில் வெளிப்படாத இவர்கள் பார்க்காத ஏதோ ஒன்றைப் பார்க்கக் கூடியவளாக என்னை நான் என்றும் நினைத்ததில்லை. மொழியால் வாழ்க்கையை விவரிக்கக் கூடும் என்றால், அது எழுதாதவர்களுடைய மொழியாகத்தான் இருக்கும். அவர்களின் மொழியை நான் உபயோகிக்கவேண்டும். அவர்களது மொழியை ஒரு விதமாய் நான் உபயோகிக்கும்போது, இலக்கியம், கவிதை, கவிதைச்சூழல் என்று நாம் அழைப்பதை எல்லாம் உருவாக்குகிறென்.

கே லீ: அப்படியானால் எங்களில் சிலர்– காட்டாக, உங்கள் புதினமான ‘ஆட்டம்ஷௌகலி’ல் வார்த்தைகளை இணைக்கும் ஒரு புது முறையை, வாசகர்களிடம் முதன் முறையாக மொழி உருவாக்கும் ஒரு அதிர்ச்சியைப் பார்த்தவர்கள் – தவறாய் முடிவு கட்டி இருக்கிறோம். வேறு ஒன்றைப் பேசுவோம். ‘சீரியஸான விஷயங்களை’ ப் பற்றி பேசுவோம்.

உங்களைப் பாதித்த சில விஷயங்கள், எவற்றிலிருந்து சில எண்ணங்கள் பிறந்து உங்களை ஆட்டிப் படைக்கின்றனவோ, அவை எங்களையும், குறைந்தபட்சம் எங்களில் சிலரையாவது, பாதித்திருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்பீர்களா? உங்கள் தொடக்கக்கால கட்டுரைத் தொகுப்பான ’டே(யெ)ர் கூனிஷ் ஃபெனைட் சிஹ் உண்ட் டொடட்’ (Der König verneigt sich und tötet) இல் நீங்கள் ஹோர்ஹெ ஸெம்ப்ருனை (Jorge Semprún) மேற்கோளாய்க் காட்டுகிறீர்கள்: ”சொந்தநாடு என்பது நீங்கள் பேசும் மொழி அல்ல, ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது.” இது உங்களது குறிப்பு: ”ஒரு சமூகக் குழுவில் ஒருவராக நீங்கள் ஆக, பேச்சின் மூலம் என்ன தெரிவிக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு குறைந்த பட்ச ஒப்புதல் உங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதை ஹோர்ஹெ ஸெம்ப்ருன் அறிவார்.” நீங்களோ, நானொ, அல்லது நம் தலைமுறையை சார்ந்த பல ரொமனீயர்களோ இந்த உட்புறக் கருத்து ஒற்றுமையை நம் வாழ்க்கைகளில் அடையவில்லை. பகிரங்கமாக பொதுவில் சொல்லப்பட்டவையுடனும், அதிகாரப்பூர்வ சொல்லாடல்களுடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டால், நமக்குச் சொந்தமான நாடு என்பது எது? நமக்குச் சொந்தமாய் ஒரு நாடு இருந்ததா? நாம்- மொழி மூலம் சொல்லப்படுவன எல்லாம்பறிக்கப்பட்டவர்களும், ஒருபோதும் தம்முடையதாகக் கொள்ளாத பொதுச் சொல்லாடல்களின் இடையே தாம் இருப்பதைக் காணும் நம் போன்றவர்களும்- எல்லோருமே சொந்த நாடற்றவர்கள்தாமே?

ஹெ.மு: நான் இதில் ஒரு வேறுபாட்டைக் காண்பேன். ’சொந்த மண்’ என்பது கருத்தியல் காரணங்களுக்காக மிகையாய் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது. ஜெர்மன் சரித்திரத்தில், தேசிய சோசலிசத்திலாகட்டும் (நாஜியிசம்), கிழக்கு ஜெர்மனியின் ஸ்டாலினியத்திலாகட்டும், அல்லது இன்ன பிற சோஷலிஸ நாடுகளிலாகட்டும், இந்தப் பதம் மிகையாய் உபயோகப்படுத்தப் பட்டுவிட்டது. ’வீடு’ என்ற பதம் மிகக் குறைந்த அர்த்தம் உடையது, அதே சமயம் மிகக் கூடுதலான அர்த்தமும் உடையது. நான் ஸெம்ப்ருனை மேற்கோள் காட்டியதன் காரணம், நான் பலசமயங்களில் சொற்பொழிவுகளிலும், கருத்தரங்குகளிலும் சந்தித்த பல ஜெர்மானிய எழுத்தாளர்கள் தங்கள் மொழியை தங்களின் சொந்த நாடு என்று சொல்வதைச் சுவையாகக் கருதுவதைப் பார்த்திருக்கிறேன். எனக்குக் கோபம் வந்து, என்னையே கேட்டுக்கொண்டேன்: ”இந்தச் சொந்தநாட்டைப் பற்றி எவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்?” அவர்கள் வாழ்கையில் எப்பொழுதுமே அவர்களுக்கு சொந்த நாட்டைப் பற்றிய பிரச்சினைகள் இருக்கவில்லை.

1950 களில் மேற்கில் (ஜெர்மனியில்) பிறந்த எவரையும் யாரும் அவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறர்களா, இல்லையா என்று கேட்கவில்லை, அவர்கள் தங்கள் நாட்டை விட்டுப் போகவும் திரும்பி வரவும் முடிந்தது. ”மொழியே சொந்தநாடு” என்ற இந்தச் சொற்றொடர் தேசிய சோஷலிசத்தின் போது ஹிட்லரின் சர்வாதிகாரத்திடமிருந்து ஓடிப் போனவர்களால் உருவாக்கப்பட்ட்து. ஸெம்ப்ருனைப் பொருத்தவரையில் அவருக்கு இதைப்பற்றித் தெரியும் என நான் உணர்ந்தேன் – ஏனெனில் அவரும் ஃப்ராங்கோவின் ஆட்சியில் தலைமறைவாய் இருந்திருக்கிறார், பின் நாஜிகளை எதிர்த்து ஃப்ரான்ஸில் போராடி இருக்கிறார், பின் ஸ்பெயினுக்கு பலமுறை பொய்யான மாறுபெயர்களில், தன்னடையாளத்தை மறைத்துப் போயிருக்கிறார்; அதனால் அவருக்கு இதெல்லாம் எது பற்றியெனத் தெரியும். பொது மொழி, வாழ்க்கையாலும், என் பிறப்பினாலும் எனக்கும் உரியதே. ஆனால் இந்த மொழி என் வாழ்விற்கு ஊறு விளைவிக்குமானால் அதனால் எனக்கு என்ன பயன்? அது என் சொந்த வீடு போல் இராததை அது இன்னும் தீவிரமாகத்தான் காட்டுகிறது.

தன் இருப்பிடம் போல் உணர்வது என்ற இந்த எண்ணத்திற்கு எதிர்மறையும் உண்டு. சொந்தநாடு என்பதைக்குறிக்கும் ஜெர்மானியப் பதமான ஹெய்மாட் என்பது நம்மால் சகித்துக்கொள்ளமுடியாததும் ஆனால் விட்டு நீங்கமுடியாததுமான ஒன்றைக் குறிக்கும்.. நடந்து போய் விலகி விட முடிந்தாலும், நம் தலைக்குள் அனைத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம் – ஏனெனில் வாழ்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன. அதிலும், நீங்கள் கடந்துவந்த அந்தக் கடினமான தருணங்கள் ஒதுக்கித் தள்ளமுடியாத அளவுக்குப் பெரிதானவை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மதிகெட்ட சொந்தநாடு என்பது, நாம் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பித்துப் போன இடத்திற்குக்கூட நம் கூடவே வரும், நம்மைச் சித்திரவதை செய்யும்.

பெரும்பாலும் நான் வெளிநாடுகளில் இருக்கும்போது சொந்தநாடு என்பது ’சொந்த வீடு’ என்பது போல மனதுக்குத் தோன்றுகிறது. ஒருமுறை நான் பார்ஸலோனாவில் இருந்தபோது அங்கே ஏதோ ஊர் விழா போல நடந்து கொண்டிருந்தது. அது என்ன விழா என்று எனக்குத் தெரியவில்லை, சிலரைக்கேட்டபோது அவர்களுக்கும் தெரியவில்லை. பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒரு பொது வெளியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். தங்கள் பைகளையும், காலணிகளையும் நடுவே ஓரிடத்தில் குவியலாக விட்டுவிட்டு நடனப் பாதணிகளை அணிந்திருந்தனர். அவர்கள் கிராமீய இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர் ஆனால் அந்த இசை மிக நன்றாய் இருந்தது. இதுபோன்ற தருணங்களில் எனக்குக் கண்ணீர் பொங்குகிறது, ஏனெனில எனக்கு அப்போது தெரிகிறது, இந்த உலகத்தில் பல மக்கள் அவர்களது நாட்டை விட்டு வெளியேறத் தேவை இருக்கவில்லை, அவர்கள் சில விஷயங்களைச் சாதாரணமாய், கேள்வி ஏதும் கேட்காமல், தம்முடையதாய் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஏனெனில் ஒரு உரையாடல் நடத்த விரும்புகையில், நமது சொந்தநாட்டையே கேள்விக்குள்ளாக்க வேண்டி இருந்தால், அங்கே ஏதோ சரியாக இல்லை.

கே லீ: நான் உங்களைக் கேட்டது என்னவென்றால், தம் சொந்தவீடாக இல்லாத தம் நாட்டிலேயே வாழ்ந்த நம்முள் சிலர் ஒரு புதுவகையான இருப்பின் அடையாளச் சின்னங்கள் ஆகிறார்களா, இருபதாம் நுற்றாண்டிலேனும்? கருக்காகச் சொல்வதானால், தம் பொதுக்கருத்தைத் தெரிவிக்க உள்ள மொழியாகச் சொல்லப்பட்ட மொழியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாததினால், ஒருபோதும் தமது இருப்பிடத்தில் வாழ்வதாக உணராத ஒரு முழுத் தலைமுறையின் கதி என்ன? அவர்கள் எங்கும் போகவில்லை, நடனப்பாதணிகளை அணிந்து பொது இடத்தில் நடனமாடும் ஆனந்தத்தை அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் அதிர்ச்சியால் நோய்ப்பட்ட மனதுள்ளவர்களா?

ஹெ.மு: நீங்கள் இங்கே தங்கி இருந்தீர்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம்: நீங்கள் ரொமனீயாவில் இருக்கிறீர்கள், நீங்கள் பிறந்தது இங்கே, இதனால் அதனுடன் வந்த எல்லாவற்றினுடன் இங்கே தங்கி இருந்திருக்கிறீர்கள். நான் ஏறக்குறைய அதே விஷயங்களுடன் 1987 வரையில் வாழ்ந்திருந்தேன், அவ்வளவுதான், அதன்பிறகு என்னை வெளியேற்றிவிட்டார்கள். இப்போது என்னால் திரும்பி வர முடியாது, வருவது வெறும் பொய்க் கனவாகத்தான் இருக்கும். நாடுகடத்தலின் சரித்திரமே இப்படித்தான் இருந்திருக்கிறது; நீஙகள் வெளியேறியபடியே நீஙகள் திரும்புவதில்லை. நீங்கள் அதை விரும்பவில்லை என்பதால் அல்ல, மாறாக, வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்வதற்கு, உங்களையே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என அறிவதற்கு, நீங்கள் போய்ச் சேர்ந்த இடத்திற்குத் தக்கபடி மாறவேண்டி இருந்ததினால். நீஙகள் திரும்பலாம், ஆனால் எல்லாம் துண்டிக்கப்பட்டிருக்கும், அந்தச் சரடு இப்போது இல்லை, உங்களால் தொடர முடியாது. அது மதிமயக்கமாய் இருக்கலாம், பொறாமையாய் கூட இருக்கலாம். இது என்னைப் பற்றியது இல்லை, நாடுகடத்தல் என்பது எந்த நாட்டுக்கும் ஒரு பெரிய இழப்பு. வழக்கமாய் முதலில் வெளியேற முயற்சிப்பவர்கள் நேர்மையானவர்கள், இதையெல்லாம் இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலைக்கு வந்தவர்கள், நுட்ப உணர்வுள்ளவர்கள், இவர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களில் இவர்களே முன்னிலை.

கே லீ: சிலசமயங்களில் நுண்ணுணர்வுள்ளவர்களிலும் சிலர் தங்குகிறார்கள்…

ஹெ.மு: ரொமனீயர்கள் அவர்களின் நாட்டில் தங்கியதின் காரணம், அவர்கள் வாழ்வில் சூழல் முழுதும் மாறி விட முடியாத அளவுக்கு, அவர்களது எண்ணிக்கை கூடுதலாய் இருந்தது. மாறாய், ரொமனீயாவின் ஜெர்மானியர்களில் பெரும்பாலோர் விட்டுப் போயிருப்பார்கள். ரொமனீயாவின் ஜெர்மனிய கலாச்சாரம் கடந்த காலத்தது, அதன் வரலாறு முடிந்தது. கிராமங்களில் சில தனித்துப் போன வயோதிகர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள். இந்த நாட்டில் ஜெர்மானிய சிறுபான்மையினரின் எதிர்காலம் முதியோர் இல்லங்களில்தான். நான் இங்கே வந்து ஏதானும் செய்ய, எனக்கு எதுவும் இருக்காது, என்னுடன் அதைச் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். அது நடக்க இயலாத விஷயம். இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்த ஜெர்மானியர்கள் அனைவரும் இப்போது உலகத்தின் வேறொரு மூலையில் இருக்கிறார்கள். இது சில சமயங்களில் எனக்கு வேதனையாய் இருக்கிறது, ஆனால் மற்ற தருணங்களில் நான் என்னை அதிருஷ்டசாலி என்று எனக்கே சொல்லிக்கொள்கிறேன்.

நான் ரொமனீயாவை விட்டுப்போனது எனது அதிருஷ்டம்தான் என்பதில் ஐயமில்லை, நான் ரொமனீயாவில் என்ன செய்து கொண்டிருந்திருப்பேன் என்று தெரியாது, சில புத்தகங்களை எழுதியபின் இங்கு இன்று இருந்திருப்பேனா என்றும் எனக்குத் தெரியாது. எனினும், எனது அதிருஷ்டம் எனது துரதிருஷ்டத்தின் தலைகீழ் திருப்பம் என்பது எனக்குக் கோபமூட்டுகிறது. இது வேறுவிதமாக இருந்திருக்கலாம். ரொமனீயாவை விட்டுப் போய் வாழ்க்கையில் முன்னுக்கு வராத பலரையும் எனக்குத் தெரியும்; தேக்கமடைந்து, தங்களுக்கென ஒரு இடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் இருந்திருக்கிறார்கள். சோக்க்கதைகளும் உண்டு. என்னுடைய இந்த எழுத்துத் தொழிலால் நான் மிக அதிருஷ்டமானவளாக இருந்திருக்கிறேன். நான் எழுதுகிறேன். மற்றவர்கள் நிரந்தரமாய் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறர்கள்.

கே லீ: இந்தச் ”சாதாரணமான” தொழில்…

ஹெ.மு: ஆமாம். இந்தத் தொழிலில் நான் என்னுடன் மட்டுமே உறவாடுகிறேன். மற்ற சராசரித் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் சூழல நிலைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறர்கள். ஒரு வேலையைத் தேடும் தகுதி இருக்க, அவர்களுக்கு ஒரு பட்டம் வேண்டும். கலைகள் என்று சொல்லப்படும் தொழில்கள், குறைந்தபட்சம் தனிநபராக பயிலக் கூடிய கலைகள், அவற்றைத் தவிர மற்றத் தொழில்களில் இப்படித்தான்.

கே லீ:அந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் சிறுபான்மை சமூகக் குழுவினரான உங்கள் நிலைமையின் உள்ளே புக முயற்சி செய்தேன். எங்களில் சிலரும் சிறுபான்மையினராய் உணர்ந்தோம் என்பதையும் எடுத்துரைக்க முயன்றேன். எஙகளை நீங்கள் ஒத்துக்கொண்டால் நல்லது. மாட்டெனென்றால் வேறு வழி கண்டுபிடிப்போம்.

ஹெ.மு: சர்வாதிகாரத்தால் நான் தொல்லைக்குள்ளாகி, அத்துடன் போராடினேனே, அப்போது நம் போலப் பலர் இருப்பதைப் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்…ஆனால் பெரும்பாலோர் அமைதி காத்தனர், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; அதனால் சிறுபான்மை என்பது கண்ணுக்குத் தென்படவில்லை. அது என்னை உறுத்தியது.

கே லீ: இதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை ஏனென்றால் நாம் இந்த விஷயத்திலேயே சிக்கிப் பேசிக்கோண்டிருப்போம், மேலும் என் மனதில் வேறு பல விஷயங்கள் இருக்கின்றன– ’டே(யெ)ர் கூனிஷ் ஃபெனைட் சிஹ் உண்ட் டொடட் (Der König verneigt sich und tötet) என்ற அதே கட்டுரைத் தொகுப்பில் ”ஜெர்மனி, நம் நாடு” என்ற கட்டுரையில் நீங்கள் சொல்கிறீர்கள்: “எழுதுகையில் நான் மிகவும் புண்பட்ட இடத்தில் என்னை நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.” உங்களின் இந்தக் காயத்தை பற்றி இனிமேற்கொண்டு யாருக்கும் கவலை இல்லை என்றால் என்ன ஆகும்?

இதை நான் கேட்பதின் நோக்கம் நான் 1990க்கு முன்பு அனுபவித்தவற்றை பேசும் போது என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் இது போன்ற ஒரு எரிச்சலை உணர்ந்திருக்கிறேன். “ஏன் இத்தனை விடாப்பிடியாய் இருக்கிறிர்கள்?” என்ற கேள்வியை அப்போதிலிருந்து பல நூறு முறைகள் கேட்டிருக்கிறேன். உங்கள் புத்தகங்கள் யாவையும் நீங்கள் 1980 களில் ரொமேனியாவில் அனுபவித்த கொடுமையான விஷயங்களைப் பற்றியவைதான்: விசாரணைகள், அத்துமீறப்பட்ட வீடுகள், சித்திரவதைக்குள்ளான நண்பர்கள், சதியாய் கொல்லப்பட்டவர்கள் பற்றியே. ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள்: ”என் நண்பன், கட்டிடப் பொறியாளர், அன்று அவனுக்கு 28 -இன்னும் 4-5 வருடங்களில் தூக்கிலிடப்பட்டிருக்கக் கூடியவன், இன்று அரசாங்கப்பதிவுகளில் தற்கொலையாய் காட்டப்படுபவன்.” பிறருக்கு நிகழ்ந்த கோர நடப்புகளை தம் வாழ்வில் முன்பு நடந்ததில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் என்ன செய்வது? உங்கள் இலக்கியத்தில், நீங்கள் பயணிக்கும் பிரதேசங்களில் தாம் சஞ்சரிக்க, அல்லது இனியும் பயணிக்க மற்றவர்களுக்கு விருப்பமில்லாத நிலை வரும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்களா?

ஹெ.மு: இந்தப்பிரச்சினைகளைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால் நான் எல்லாவற்றுக்கும் முதலாய் எனக்காக நான் அதை செய்கிறேன். ஏனென்றால் எனக்கு வேறு தேர்வு இல்லை. இன்றைக்கு எனக்கு இருக்கும் வாழ்க்கையை வாழ, எனது கடந்தகால வாழ்க்கையை நான் ஒழுங்குபடுத்திப் பார்க்கவேண்டும். இதில் பங்கேற்க வேறு யாரையும் நான் கட்டாயப்படுத்த இயலாது, அப்படிச் செய்ய நான் விரும்பவும் இல்லை. ஒரு புத்தகம் யாரையும் தன்னைப் படிக்கக் கட்டாயப்படுத்த முடியாது. அதைப் படிக்க எடுக்கும் எவரும் அதில் எந்த நனமையையும் பார்க்காத பட்சத்தில், அதைத் தூக்கி எறிய முடியும். ஒரு புத்தகத்தைப் பொருத்த வரையில் ஒவ்வொருவருக்கும் தனக்குச் சரியெனப் படும் வகையில் நடந்துகொள்ளும் சுதந்திரம் உண்டு. ஆனால் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள விரும்புபவர்கள் அத்தனை குறைந்த எண்ணிக்கைதானா என்பது எனக்குத் தெரியாது. நான் அத்தகையவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று எண்ணுகிறேன்.

சர்வாதிகார ஆட்சி விழுந்த பின்பு, இது வேறு எங்குமே கூட நிகழ்ந்து இருக்கலாம் (நாஜி காலத்துக்குப் பின்பட்ட ஜெர்மனியைப் பாருங்கள்), இன்னமும் சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் நிறைய பேர் இரு்ந்தனர். ஆனாலும் அவர்கள் சிறு பான்மையினராகத்தான் இருந்தனர். ஆனால் அப்படியும்தான் ஏன் இருக்கக் கூடாது? 99.9 சதவிகித மக்கள்,எந்த ஊர் மக்களானாலும், ஒரு சர்வாதிகார ஆட்சியில் பங்கேற்காதபோது (தாம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டவற்றை செய்ததினாலோ, அல்லது வாயை மூடிக் கொண்டிருந்த்தாலோ, அல்லது தன்பாட்டைப் பார்த்துக்கொண்டு இருந்ததினாலோ) அந்த சர்வாதிகாரத்தை நடத்தி இருக்க முடியாது. பலர் அனுபவித்த அனுகூலங்களும், அவர்கள் இருந்த பதவிகளும், நடத்திய சுகமான வாழ்வும் அந்த சர்வாதிகாரத்தைச் சார்ந்து இருந்தன என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் அந்தச் சர்வாதிகாரம் சரித்திரத்திலேயே பதிக்குமளவு பெரும் குற்றம் என்று சொல்லாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் தம் கடந்த காலத்தை பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டி வரும். ஒரு தனிமனிதரின் பார்வையில், யாரும் அவரை இதைச் செய்யுமாறு வற்புறுத்த முடியாது. ஆனால் ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கு இது முக்கியம் என நான் நினைக்கிறேன். சமுதாயத்தின் காயங்களை ஆற்றும் வகையில் இந்தப் பிரச்சினைகள் விவாதிக்கப் படாவிட்டால், அவை மறைந்து போகா, அடி ஆழத்தில் அனைத்துக்கும் கீழே புதைந்திருந்து சற்றும் எதிர்பாராத தருணத்தில் வெடித்து மேலெழும்.
எனக்கு எழுதுவதைத் தவிர வேறு தேர்வில்லை. எழுதத் தேவையில்லையென்றால் ஏன் எழுதவேண்டும்? இந்த உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன, அத்தனையையும் யாராலும் படிக்க முடியாது. யாரும் இன்னொரு புத்தகத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. என்னை ஒருங்கிணைத்து வைத்துக் கொள்வதற்கு, எனக்காக நான் இதை எல்லாம் செய்யவேண்டி இருக்கவில்லை என்றால் நான் அதைச் செய்ய மாட்டேன். எழுத்தாளராய் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல, நான் எழுத்தாளராக இருக்க விரும்பவில்லை, நான் எழுதுவதற்கான காரணம் அதுவல்ல. எனக்கு வேறு தேர்வு இல்லை, இன்னொரு விதமாய் சொன்னால் எழுத்தை தேர்வு செய்தது நான் அல்ல.

ரொமனீயாவில் எனக்குக் கிட்டிய வாழ்வை நானாய் தேர்ந்தெடுக்கவில்லை, அதற்காக நான் ஆசைப்படவும் இல்லை. நான் ஒரு வார்த்தை கூட எழுதாமல் இருந்திருக்கலாமே என்று ஒவ்வொரு வினாடியும் என்னுள்ளே சொல்லிக்கொள்கிறென். இவை எல்லாம் எனக்கு நேராமல் இருந்து, வேறு ஏதேனும் தொழில் செய்திருக்க முடிந்தால் அதையே நான் விரும்பி இருப்பேன். அதுதான் நிஜம். என்றாவது ஒருநாள், என்னைச் சிதறாமல் வைத்துக்கொள்ள எழுத்தின் தேவை எனக்கு இல்லை என்றால், நான் பிறகு எழுத மாட்டேன். அந்தக் கணம் வரும் என்று நம்பி, எதிர்பார்க்கிறேன். எழுத்து எனக்கு சந்தோஷம் தருவதல்ல, எழுதுவதை நான் விரும்பி அனுபவிக்கவில்லை. நான் மிகுந்த தயக்கத்துக்குப் பின் விருப்பமில்லாமல்தான் எழுதிகிறேன். ஏனென்றால் அது என்னை எப்படி முடக்குகிறது என்று எனக்குத் தெரியும், அதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பதும் எனக்கு எப்போதும் தெரியும். ஆனால் சில சமயம் அதைச் சந்திக்க, வெற்றுத்தாளை வெறித்துக்கொண்டு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு, எனக்குப் பிடிக்காது. அது என்னை விழுங்குகிறது, அதன் தேவை எனக்கில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கே லீ: மேற்குக்கு நகருவோம்…

(தொடரும்)

 

_______________________________________________

நன்றி: யூரோஸீன் சஞ்சிகை, 26 மே 2011 ஆம் தேதி வெளியீடு. மூலக் கட்டுரையை இங்கே பார்க்கவும்:http://www.eurozine.com/articles/2011-05-26-mullerliiceanu-en.html

 

 

puf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *