Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு -செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

(தமிழில்- ரவி)

ஸைமா அல்-ஸாபா.

 

செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

 எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் அறியுமா கவிவாசனை. 2011 ஜனவரி 25 இல் தொடங்கிய தாகீர் சதுக்க எழுச்சியின் 4 வருட நினைவை தாங்கி மலர்வளையங்களுடன் அமைதியாய் ஊர்வலமாகச் சென்ற சோசலிசவழிச் செயற்பாட்டாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஓடமறுத்தவர்களில் அவளும் ஒருத்தியாக தாகீர் சதுக்கத்துக்கு அருகே நடைபாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். மிக அருகில் வைத்து அவள் சுடப்பட்டு இறந்துபோனாள்.

 

 

அவள் எழுதிய கவிதை இது.

 

அவளின் நினைவை அவளது வரிகளே காவிச் செல்லும் அவலத்தை இதில் தரிசித்தேன்.

 

எனது “பேர்ஸ்” கடிதம்

 

எனக்கு நிச்சயமாகத் தெரியாது.

உண்மையில் அவள்

ஒரு பேர்ஸை விடவும் மேலாக கொள்ளப்பட முடியாதவள்

என்பேன்.

 

ஆனால்

அவளை இழந்துவிட்டபோது

பிரச்சினை வந்துசேர்ந்தது.

விசேடமாக

அவளின்றி இந்த உலகை எப்படி எதிர்கொள்வது?

ஏனெனில்

வீதிகள் எம்மிருவரையும் ஞாபகப்படுத்திக் கொள்ளும்.

என்னை விடவும்

கடைகளுக்கு அவளை நன்றாகவே தெரியும்.

ஏனெனில்

அவள் மட்டுமே வழங்கியாக இருந்தாள்.

 

எனது இனிமையின் வாசனை அவளுக்குத் தெரியும்

அதை அவள் அன்புசெய்தாள்.

அவளுக்கு பலவிதமான பேரூந்துளைத் தெரியும்

அதன் சாரதிகளோடு தன் உறவுமுறையை பேணுகிறாள்.

கட்டணத்தை ஞாபகப்படுத்திக் கொள்வாள்.

எப்போதுமே

செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை

மிகச் சரியாகவே வைத்திருப்பாள்.

 

ஒருமுறை நான் வாங்கிய வாசனைத் திரவியம்

அவளுக்கு பிடித்திருக்கவில்லை.

முழுவதுமாக கொட்டிச் சிந்திவிட்டாள்

அதை என் பாவனைக்கு மறுத்தாள்.

இன்னும் சொல்வதானால்

எனது குடும்பத்தை அவளும் நேசித்தாள்.

தன் நேசிப்புக்கு உள்ளானவர்களின் புகைப்படங்களை

எப்போதுமே தன்னுடன் காவித்திரிந்தாள்.

 

இப்போ

என்னவிதமான உணர்வுகளால் அவள்

அலைக்கழிதல் கூடும்.

பீதியடைந்திருப்பாளா? அல்லது

அறிமுகமற்றவர்களின் வியர்வை மணத்தில்

வெறுப்புற்றிருப்பாளா?

புதிய வீதிகளால் தொந்தரவுக்குள்ளாகிறாளா?

 

நாம் இருவருமாய் சுற்றித் திரிந்த சந்தையொன்றால்

அவள் வழிமறிக்கப்படுகிறபோது

முன்னர் விரும்பிய அதே பொருட்களால் கவரப்படுவாளா?

 

எப்படியாகிலும்

வீட்டுச் சாவிகள் அவளிடமுள்ளது.

அவளுக்காய் நான் காத்திருக்கிறேன்.

 

 A letter in my purse

By Shaimaa El-Sabbagh, trans. (in English) Maged Zaher

 

காணொளி

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *