பீமாயணம்

Thanks to -maattru.com

peemayanam

கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச நான் விரும்பினேன். பீமாயணத்தைப்பற்றி பேசுகின்றாயா? என்று கேட்டபோது ஆம்.. என்று கூறினேன்.அப்போது அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர், அவர்தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களை வடிவமைத்தார் போன்ற சில செய்திகளை மட்டுமே அறிந்திருந்தேன். பின்னர் பீமாயணம் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அம்பேத்கர் குறித்த படம், ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம், அம்பேத்கரின் இறுதிப்பேச்சு (, அருந்ததிராயின் பேச்சு மற்றும் விக்கிபீடியா முதலியவற்றைப் பார்த்தும் படித்தும் அம்பேத்கரைப்பற்றி கூடுதலாக அறிந்தேன்.

அம்பேத்கர் தனது சிறுவயதிலிருந்தே தண்ணீர், இருப்பிடம் முதலிய தனக்கான அன்றாடத் தேவைகளைப் பெறக்கூட மிகவும் துன்புற்றார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரைத்தொட அனுமதிக்கப்படவில்லை, குடிப்பதற்கான நீரை ஒரு பியூன் கையில் ஊற்றுவார். மேலும் பள்ளியில் வகுப்பறைக்கு வெளியில் கோணிப்பையின் மீது அமர்ந்துதான் பாடம் கற்க வேண்டியிருந்தது. அவர் ஒருமுறை மகாராஷ்டிராவில் உள்ள மசூர் கிராமத்திற்குச் சென்றபோது அவரும் அவரது உறவினர்களும் மஹர் (மஹர் என்பவர்கள் சதாரா, மசூர் முதலான மகாராஷ்டிர கிராமங்களில் தலித் மக்களாக நடத்தப்பட்டு வந்தனர்.)என்பதை ஸ்டேஷன் மாஸ்டர் அறிந்ததும் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கான வண்டியை ஏற்பாடு செய்தபோது, இரண்டுமடங்கு பணம் தந்ததோடு அவர்கள் வண்டியை யாரும் ஓட்ட முன்வராததால் அம்பேத்கர் குடும்பத்தாரே வண்டியை ஓட்ட வேண்டியதாயிற்று. இந்த சம்பவத்திற்குப் பிறகு அம்பேத்கர் ‘‘சாதி எப்படி ஒரு மனிதனுடைய தேவைகளை மறுக்கமுடியும் என்கிற பாடத்தைப் புரியவைத்தது! தாகம் போன்ற அத்தியாவசியமான உணர்ச்சிகளைக்கூட அது மறுத்தது” என்கிறார்.

அவர் சிறுவயதிலேயே 8 வயதுச் சிறுமியை மணந்தார். அவர் வளர்ந்தபிறகு பரோடா மகாராஜாவின் பண உதவியால் லண்டன் சென்றார். அங்கு அவர் முனைவர்பட்டம் வரை படித்தார். அவருடைய தீஸிஸ் “இந்தியாவின் சாதிகள்: அவற்றின்தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் இருந்தது. அம்பேத்கர் அவருடைய மொத்த வாழ்வையும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தார், இரண்டாம் முனைவர் படிப்பை இந்தியாவின் பொருளாதாரம் குறித்துச் செய்வதாக முடிவெடுத்தபிறகு பரோடா மன்னர் அவருக்கு அளித்த பண உதவி முடிந்துவிட்டது. எனவே பத்து ஆண்டுகள் பரோடா மன்னரிடம் பணிபுரிய முடிவெடுத்தார். அங்கும் பார்சிகள் இருந்த சத்திரத்தில் அவர் தங்கியிருந்ததால் வெளியில் துரத்தியடிக்கப் பட்டார். பின்னர் பரோடா மன்னரின் உதவியால் ஊமையத் தலைவன் எனும் இதழை வெளியிட்டார். இவ்விதழ் தலித் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தது. பிறகு லண்டன் சென்று அவரது இரண்டாம் பி.எச்.டி.யை முடித்தார்.

peemayanam

அம்பேத்கர் லண்டனில் இருக்கும்போது அவரது மகனும், மன்னனும் இறந்து விட்டனர். படிப்பும், தலித்களின் முன்னேற்றமும் முக்கியம் எனக்கருதியதால் அவர்களின் இறுதிச்சடங்கில் கூட அவரால் பங்கேற்க இயலவில்லை. பிஎச்.டி முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தலித்துகளின் முன்னேற்றத்திற்காகவே முழுநேரமும் பாடுபட்டார். மனுஸ்மிருதியை தலித் மக்களின் முன்னால் எரித்தார். அது ஒரு பெரிய நிகழ்வு. பிரான்சில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கூட்டத்திற்கு பின்னர் இக்கூட்டத்தில்தான் அதிக மக்கள் பங்கேற்றனர்.

அம்பேத்கர் முதல் மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டு நிகழ்வுகளிலும் அவர் தலித் மக்களின் முன்னுரிமைக்காகவே குரல்கொடுத்தார். இந்தியா ஐந்தில் ஒருபங்கு தலித்மக்களால் ஆனது, அவர்களுக்கே இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்கிறபோது இந்தியாவின் விடுதலையைப் பற்றி பேச நாட்கள் இருக்கிறது என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட்டார். காந்தி தலித்தின் முன்னுரிமையைவிட இந்தியாவின் விடுதலையே அவசியமென திண்ணமாகக் கூறினார். அம்பேத்கர் 1955 இல் பி.பி.சி ()க்கு அளித்த பேட்டியில் Ôகாந்தி ஒரு சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு பழமையைக் கடைப்பிடிக்கும் இந்து மட்டுமே. காந்தியைப் பிறர் தெய்வமாக நினைக்கின்றனர். ஆனால் நான் அவரை எதிரியாகக் கண்டேன். எனவே அவருடைய மற்றொரு முகத்தைப் பார்த்தவன் நானே’ என்கிறார். இந்த பேட்டியை யூடியூபில் காணலாம். அது அம்பேத்கரின் குரலைக் கேட்க ஒரு வாய்ப்பாக அமையும்.
அம்பேத்கர் துணிச்சலுடனும் உறுதியாகவும் கூறினார் ””. அருந்ததிராயின் பேச்சில் இண்டர் நேஷனல் கிரைம் ரெகார்ட்ஸ் ஆஃப் பியூரோவின் ஆய்வை முன்வைத்தார். அதில் தினசரி நான்கு பாலியல் வன்முறை, பதிமூன்று கொலை, ஆறு கடத்தல் அனைத்தும் தலித்மக்களிடம் நடப்பதாகவும், 2012 இல் 1500 தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சத்யமேவ ஜெயதே எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆவணப்பட இயக்குநர் ஸ்டாலின் அவர்களின் காணொலியில் அதிர்ச்சிதரும் தகவல் ஒன்று இருந்தது. காசி சிவன்கோவில் பூசாரி ஒருவர் ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்து மதத்திற்கு எதிராக உள்ளது. எனவே நாங்கள் அதனைப் பின்பற்ற மாட்டோம்” என்று கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவன் இந்தியனாம். மேலும் அதில் தலித் மக்கள் இன்றுவரை மலத்தைக் கையால் சுத்தம் செய்கின்றனர் என்ற செய்தியும் கூறப்பட்டிருந்தது.இவை அனைத்தும் நகரத்தில் வாழும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

தீண்டாமை என்பது இந்துமதத்தில் மட்டுமல்லாமல் இஸ்லாம், சீக்கிய மதங்களிலும் இருக்கிறது என்பதை அறிந்த அம்பேத்கர் புத்தரைக் குறித்து புத்தரும் தம்மமும் எனும் புத்தகத்தை எழுதினார். அவரது இறப்பிற்கு முன்னால் அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறினார். அவரைப் பின்பற்றியவர்கள் ஐந்து லட்சம் பேர் புத்தமதத்திற்கு மாறினார்கள். அவரது இறப்பிற்குப் பின்னும் இன்றுவரை மாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்துவாகப் பிறந்தது என் தவறல்ல ஆனால் இந்துவாக இறப்பது எனது தவறே என்று கூறினார் அம்பேத்கர். அம்பேத்கர் முன்னெடுத்த தலித் மக்களின் முன்னேற்றம் விழலுக்கிறைத்த நீராகாமல் காப்பது இந்தியர்களாகிய நம் கடமை.

1 Comment on “பீமாயணம்”

  1. //அம்பேத்கர் முன்னெடுத்த தலித் மக்களின் முன்னேற்றம் விழலுக்கிறைத்த நீராகாமல் காப்பது இந்தியர்களாகிய நம் கடமை.//வாழ்த்துகள் நிவேதிதா பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *