பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..

— JESEEMA HAMEED -இலங்கை
(கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி)
 

பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..

முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்தது
அவர்தம் மனங்களின் பாஷையோ
உறவுகளின் கண்ணீராய்
உலகோடு பேசுது….

எப்போதும் போலவே

எல்லார்க்கும் விடிந்தது
பூக்கள் மலர்ந்தன‌
தென்றல் வீசியது
தேகம் சிலிர்த்தது
பூமியின் தாகமோ
புதுமையாய் இருந்தது…..
நீரை உறிஞ்சி
விதையை விழுங்கி
பசுமையாய்ப் புரட்சி செய்யும்
இந்த பூமியா
எங்களைத் தின்றது…?
தாயே தன் பிள்ளையை கொல்வதா…?

தூக்கித் தாலாட்டி
தொட்டிலிட்ட பிள்ளை
தோட்டமெல்லாம் தொழில் செய்து
அலுப்படைந்த ஆன்மாக்கள்
கல்விக்காய் விழித்திருந்து
களைப்புக்காய் கண்சாய்ந்த‌
எம் கல்லூரித் தோழர்கள்…
மெளன மொழி கூறுகிறார்
நாங்களின்னும் தூங்குகிறோம்
நிலமென்னும் தாய் மடியில்
குடைந்து எழுப்பாதீர்
எம்துயிலை கலைக்காதீரென்றே….

ஆடித்திரிந்த விளையாட்டுத் திடல்களும்
பச்சைப் பரப்பிய
தேயிலைச் செடிகளும்
பசும்புற் தரைகளும்
பிரியா உறவாய்
எம்மோடு புதைந்தது….

ஆடுகளும் கோழிகளும்
மாடுகளும் மைனாக்களும் என‌
மனிதம் தாண்டிய சொந்தங்களுமல்லவா
எம்மோடே வந்தது……?

மானுட சொந்தங்களே
நாம் விட்டுப்போன‌
எச்சங்களே
ஏங்கித்தவிக்காதீர்
எதிர் நீச்சல் போடுங்கள்
இறைவிதிக்கு விதிவிலக்காய்
யாரெம்மை காத்திடுவார்
துயர் துடைத்து எழுந்திடுங்கள்
துன்பமற வாழ்ந்திடுங்கள்….

மூச்சடைத்து மாண்டாலும்
உம் உயிர்மூச்சாய் வாழுகிறோம்
பேச்சிழந்து போனாலும்
உம் உணர்வெல்லாம் பேசுகிறோம்
பிரார்த்தியுங்கள் சோதரரே
பூமியின் பொறுமைக்காய்……
நாளையொன்றில் வாய்ப்பிருந்தால்
நாமெல்லாம் சேர்ந்திருப்போம்….

……………………………………..


மனநிறைவின் பதிவு…..

மா/குரிவெல ஹமீதியா கல்லூரியில் 2014 கலை,வர்த்தகபிரிவு மாணவர்களின் உயர்தரப் பரீட்சை பெறுபேறு அக்கல்லூரியின் வரலாற்றில் புதியதொரு சாதனைப் பதிவாக விளங்கப் போகிறது.கலைப் பிரிவில் ஒரே தடவையில் மூன்று மாணவிகள் 3A, சித்திகளையும்,ஒரு மாணவி 2A,1B சித்தியையும் மேலுமிரண்டு மாணவிகள் A,1B,C சித்திகளையும் பெற்றுள்ளதோடு மொத்தம் 24 மாணவ மாணவிகளுமே சித்தியடைந்துள்ளமை எமது கல்லூரியின் மிகப்பெரிய சாதனை. அதே போல் வர்த்தக பிரிவிலும் ஒரு மாணவி 2A,1B எடுத்துள்ளதோடு ,2B,C ,A B,C , என பெற்று அனைத்து மாணவர்களுமே தமது திறமையை காட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..இப்பதிவில் எனது மனநிறைவு யாதெனில் நான் அவர்களது வகுப்பாசிரியை என்பதோடு 3A, எடுத்து அசத்தியுள்ள மூவருமே நான் கற்பிக்கும் வரலாறு பாடத்தையும் தமது பாடத்தெரிவில் உள்ளடக்கியவர்கள் என்பதாகும்.இன்னும் வரலாற்று பாடத்தை என்னிடம் மற்றுமே கற்றார்கள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.இலங்கையின் நாலாபுறமிருந்தும் மாணவர்கள் வரலாறு பாடத்துக்கான தமது அபார பெறுபேறுகளை கூறிக்கொண்டிருப்பது அளவிலா ஆனந்தத்தை தருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்த்துக்கள் என் அன்புச் செல்வங்களே
பாத்திமா ரஹீசா,ரோஜா,சனீஹா,ஹசூரா,அப்ரார்,சிபானா,ரஸீகா,மொஹமட் ஹசன்,சகீல்,நபீஸ்,சஹீருல்லாஹ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *