இந்தியாவின் இழிவு

நன்றி -http://www.vinavu.com/2014/12/02/intro-to-arundhati-roy-essay-on-cast/

பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை “இந்தியாவின் இழிவு”.

prospecta roy 1

இந்தியாவின் சாதிகளில் ஆகக் கடைசியாக ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், தீண்டாமையின் கொடூரம், அந்த கொடூரமெல்லாம் ஒரு விசயமா என்று செல்வாக்கு செலுத்தும் பொதுப்புத்தி, இதை எதிர்த்து அம்பேத்கரின் போராட்டம், பொருளாதார- கலாச்சார அரங்குகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன-பனியா கூட்டணி என்று வரலாறு, நடைமுறை, சம்பவம், ஊடகங்கள், அதிகார வர்க்கம், போலீசு, சட்டம் என்று விரிவாக பேசுகிறார் அருந்ததி ராய்.

கட்டுரையின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“சாதி அமைப்பை அழிக்க முடியுமா? நாம் நமது மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை, புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை, பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர் தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண், பெண்களாகவே நாம் இருந்து வருவோம், அவர்களுக்கோ நலம் பெற வேண்டுமென்னும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.”

கட்டுரையின் ஆரம்பத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:

என் தந்தை ஓர் இந்து பார்ப்பனர். நான் வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக் குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத” திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின் பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும் தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும் மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை. இந்திய எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936-ல் வழங்கிய உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றும் கூட அவ்வாசிப்பு எனக்குத் தெளிவாக உணர்த்தியது.

a roy 1கட்டுரையின் இடையில் வரும் ஒரு பத்தி:

இனவொதுக்கல், இனவெறி, ஆணாதிக்கம், பொருளியல் ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் போன்ற ஏனைய சமகாலத் தீச்செயல்களை எதிர்த்துப் பன்னாட்டு மன்றங்களில் அரசியல் வகையிலும், அறிவு வகையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஆய்வுகளிலிருந்தும், குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்தியாவின் சாதி நடைமுறை, மனிதச் சமுதாயம் அறிந்துள்ள மிகக் கொடுமையான படிமுறைச் சமுதாய அமைப்புகளில் ஒன்றாகிய இந்த நடைமுறை மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? ஒருவேளை சாதியம் இந்து மதத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால், அது தெய்விகம், ஆன்மிகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, புலால் உண்ணாமை, காந்தி, யோகா, வெளிநாட்டு யாத்ரிகர்கள், பீடில்ஸ் இசைக்குழு என அன்பும் இனிமையும் வாய்ந்த பலவற்றுடன் இணைத்துப் பேசப்படும் காரணத்தால், குறைந்தது அயலாருக்கேனும் அதனைத் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்வது முடியாத காரியமாக உள்ளது.

“இப்பவெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?” என்று சலித்துக் கொள்ளுவோர் இந்தக் கட்டுரையை பொறுமையுடன் படிக்க வேண்டும். கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முனைய வேண்டும். சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.

அருந்ததிராயின் ஆங்கிலக் கட்டுரையை நலங்கிள்ளி (தமிழ்த் தேசம் – திங்களேடு) மொழிபெயர்த்திருக்கிறார். கட்டுரையை முழுமையாக படிக்க கீற்று தளத்திற்கு செல்லுங்கள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *