பெண்ணிய பயங்கரம்!

ரஞ்சனி கிருஷ்ணகுமார்- தமிழில் :மித்திலன்  (நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…)

திகில் கதைகள்’ என்றும் ‘பேய்க் கதைகள்’ என்றும் நாம் அழைக்கும் கதைகளைப் பெண்கள் இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஆங்கில மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆன் ராட்கிளிஃப், மேரி ஷெல்லி, ஷார்லாட் பிராண்டீ போன்றவர்கள் 18ஆம் நூற்றாண்டு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் எழுதிக் கொண்டிருந்தவர்கள். அப்போதே அவர்கள் காத்திக் மரபையொட்டி ‘பெண் தன்மை’ கொண்ட கதைகள் எழுதினார்கள்.. சொல்லப்போனால், பெண் எழுத்தாளர்களுக்குப் பேய்க்கதைகள் தனிப்பட்ட வகையில் வசீகரமாக இருந்தன என்றுகூட நாம் வாதிட முடியும். காரணம், தம்மளவிலேயே பேய்க்கதைகளின் வடிவமும், கூறுமொழியும் பெருந்திரள் இலக்கியத்தின் தேவைகளால் மூச்சுத் திணறலடைந்த பெண் எழுத்தாளர்களை விடுவிக்கும் தன்மைகொண்டிருந்தன.

 

சொந்த வாழ்வில் தாம் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தும் வாய்ப்பு காத்திக் மரபில் எழுதும் பெண்களுக்குக் கிட்டியது. தவிரவும், தம் காலத்தின் சிக்கலான பிரச்சினைகளைப் பேசும் சாத்தியத்தையும் அவர்கள் இந்தக் கதைகளில் பயன்படுத்திக் கொண்டனர்.

பெண்ணிய இலக்கியக் கோட்பாட்டில், மிக அதிக அளவில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, மிகப் பலவகைகளில் புரிந்து கொள்ளப்பட்ட நாவல்களில் மேரி ஷெல்லியின் பிராங்கென்ஸ்டைனுக்கு ஓர் இடமுண்டு. பிராங்கென்ஸ்டைனை ஆய்ந்த துவக்க கால விமரிசகர்களில் ஒருவர் எல்லன் மொயர்ஸ். அவர், இந்தப் புத்தகத்தின் சில கூறுகள் சுவையாகவும், ஆற்றல் மிகுந்தவையாகவும், ‘பெண்தன்மை’ கொண்ட இலக்கியப் படைப்பாக உள்ளதாகவும் எழுதுகிறார். ஃப்ரான்கென்ஸ்டைன் நாவல்,”பிறப்பு என்பதைப் பற்றிய ஒரு பெண்ணின் தொன்ம உருவாக்கம் என்பது தெளிவு” என்றும் “பிரசவத்துக்குப் பின்னான பெருவலி” (trauma of afterbirth) என்றும் அவர் எழுதுகிறார். மேரி ஷெல்லியின் தனி வாழ்வு ஆதாரங்களைக் கொண்டு மொயர்ஸ் தன் வாதங்களை முன்னிறுத்துகிறார். தன்னிகரற்றப் பெண்கற்பனையின் ஆக்கம்தான் இது என்று தீவிரமாக வலியுறுத்துகிறார். ஷெல்லியின் காலத்தில் துவங்கி இன்று வரை, பெண் எழுத்தாளர்கள் பேய்க்கதைகளையும் திகில் கதைகளையும் பெண்தன்மை கொண்ட வெளிப்பாட்டுச் சாதனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்- ஷார்லட் பெர்கின்ஸ் கில்மன், ஈடித் வார்ட்டன், ஏஞ்சலா கார்ட்டர், ஷர்லி ஜாக்சன் முதலானோர் இவர்களில் சிலர்.

இந்தத் திகில் கதைகள் பெண்களல்லாதோரின் கதைகளிலிருந்து எப்படி வேறுபடுகின்றன?

வெனிடா கோயெலோ

‘Haunting the house of fiction: Feminist perspectives on ghost stories by American woman’ (புனைகதை அகத்தில் பீடிப்பு: அமெரிக்கப் பெண்களின் பேய்க்கதைகள் பற்றிப் பெண்ணியப் புலப்பாடு): என்ற புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எழுதியவர்கள் இப்படிப்பட்ட ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள்: ஆண் மரபில் வருவதைவிட முற்றிலும் மாறுபட்ட விஷயங்களைப் பெண் எழுத்தாளர்கள் தங்கள் திகில் கதைகளில் விவாதிக்கின்றனர். அதே சமயம், அவர்கள் இயற்கையையும், அதி-இயற்கையையும் பிரிக்கும் எல்லையை நெகிழ்வானதாகக் கையாள்கிறார்கள்.

Venita_Coelho

வெனிடா கோயெலோ

பேய்க்கதைகளை எழுதுவதில் இப்படி ஒரு மாறுபட்ட அணுகலால்தான் வெனிடா கோயெலோவின் Washer of the Dead (இறந்தாரைக் குளிப்பாட்டுபவர்) என்ற தொகுப்பு பெண் எழுத்தின் திகில்கதை மரபுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு பங்களிப்பைத் தருவதாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களையோ அல்லது வெனிடாவின் எழுத்தையும்கூட ‘பெண்ணிய எழுத்து” என்று சொல்வது சற்று சிக்கலானது. துவக்க காலங்களில் எழுதியவர்கள் பெண்ணியம் என்ற சொல் உருவாக்கம் பெறுவதற்கு முன்னர் எழுதியவர்கள். ஷார்லட் பெர்கின்ஸ் கில்மன் தன்னை ஒரு ‘மானுட நோக்காளர்’ (humanist) என்று அடையாளப்படுத்திக் கொண்டார். ‘பெண்ணியத்தைக் கடந்து விட்டதாகச் சொல்லப்படுகிற’ இந்நாட்களில் கோயெலோவின் எழுத்தைப் பெண்ணிய எழுத்து என்று குறிப்பிடுவது தேவையற்ற எதிர்மறைத் தன்மையைத் தருவதாக இருக்கிறது.

பெயர் சூட்டல் சிக்கல்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், பெண்களின் அனுபவங்களைப் பற்றி இதுவரை இந்திய ஆங்கில இலக்கியத்தில் எழுதப்பட்ட எதையும் போல அல்லாத, மனதைச் சில்லிட வைக்கும், உள்ளத்தை நெகிழ்த்தும் கதைகள் கொண்டதாக Washer of the Dead தொகுப்பு இருக்கிறது. இதில் உள்ள பதினேழு கதைகள் குழந்தைகளையும் சிறுமிகளையும் பெண்களையும் பற்றிப் பேசுகின்றன. தேசம், சாதி, சமயம், பொருளாதாரம் என்று அனைத்து எல்லைகளையும் ஊடுருவி, மானிட மனதுக்கு அனுபவப்படும் அனைத்து உணர்ச்சிகளையும் நிறப்பிரிகையாக வெளிப்படுத்துகின்றன. இவற்றில் உள்ள பெண்கள் அன்னைகளாகவும் பாட்டிகளாகவும், மாமியார்களாகவும், சூனியக்காரிகளாகவும், இசைக்கலைஞர்களாகவும், இறந்தவர்களைக் குளிப்பாட்டுகிறவர்களாகவும், வணிகப் பாலுறவுத் தொழிலாளிகளாகவும், அதிலேயே சிறாரான தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர்.

இவை பெண்களின் கதைகள், பெண்கள் அதி-இயற்கையைச் சாதிக்கும் கதைகள் – ஆனால் ஒவ்வொரு கதையும் திகில் கதையாக ஆவது அதில் ஓர் ஆவி இருப்பதால் அல்ல, மாறாக அவை, நாம் வாழ்வில் ஏதோ சில கட்டங்களில் கேள்விப்பட்டிருந்த அல்லது அடைந்த அனுபவங்களை வினோதமான ஒரு வகையில் ஒத்திருக்கின்றன என்பதால்தான். இவை ஒவ்வொன்றும் செய்தித்தாள்களில் வாசித்த, அல்லது அன்றாட வாழ்வில் கேள்விப்பட்ட செய்திகளுக்க்கு எதிர்வினையாற்றும் வகையில் கோயெலோ இவற்றை எழுதியிருப்பதே அதற்கான காரணம். “ஒவ்வொரு நாளும் காலையில் செய்தித்தாளை எடுத்துப் பார்க்கும்போது பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதையும் சூனியக்காரிகள் என்று தெருக்களில் ஆடையின்றி ஊர்வலம் விடப்பப்படுவதையும், பெண்களின் முகங்களில் அமிலம் வீசப்படுவதையும், அவர்கள் தம் பெற்றோர்களாலேயே கொலை செய்யப்படுவதையும் வாசிப்பது சோர்வைத் தந்தது. சோர்வடைந்தது மட்டுமல்ல, எனக்கு ஆத்திரமாகவும் இருந்தது. அந்தக் கோபத்தில் பிறந்ததுதான் இந்தப் புத்தகம்”.

கோயெலோவின் பேய்கள் அனைத்துமே தீயன அல்ல, எல்லாமே வெள்ளைப்புடவை அணிந்து விளக்கைக் கையில் ஏந்திய பெண்களல்ல- அவை எல்லாமே இறந்தவையுமல்ல. அவை காற்றின் வடிவம் கொள்கின்றன, அவை பிணங்களைப் பேச வைக்கின்றன, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள சின்னஞ்சிறிய பாலத்தில் அவை வசிக்கின்றன. அவை காதலிக்கின்றன, கற்பிக்கின்றன, கட்டிப் பிடிக்கின்றன. கோயெலோவின் பேய்களில் ஒன்று உலக அனுபவம் போதாத, புதிதாய் மணமான ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறது – அது அவளது மார்பகங்களைத் தொட்டுக் கொஞ்சுகிறது, அவளது காயங்களை நாவால் வருடுகிறது, அவளது கண்ணீரைக் குடிக்கிறது – அவள் ஏதையும் சிறிதும் அறியாமலேயே. ஒரு பெண் பேய் “ஸ்பெஷலாய் ஒன்று” கொடுப்பதாக அழைத்து ரத்தத்தாலான சின்னச் சின்ன ரத்தினங்களை கனிவு மிக்க ஒரு பார்டென்டருக்காகச் சிந்துகிறது. தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிற பாசக்கார அன்னையின் பேயொன்று காலமெல்லாம் தன் பெண்ணை கவனித்துக் கொள்வதற்காகத் திரும்பி வந்திருக்கிற கதையும் உண்டு. வேறு வகைப் பேய்களும் உண்டு- சிறுமி ஒருத்தி கொட்டகையில் பார்த்த பேயைப் போன்றது – அது அவளது ஆடையில் ஒரு காசைப் போட்டுவிட்டு, எடுப்பதற்கு அவளது உடலெங்கும் தொட்டுத் தேடுகிறது. “தைரியத்தை முறித்துச் சதை வணிகத்துக்கு அவர்களைத் தயாரிக்க, அலமாரியில் பூட்டப்பட்ட சின்னஞ்சிறு பெண்களின்” ஆவிகளும் உண்டு.

பெண்கள் எப்படிப்பட்ட பயங்கரங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனங்களுக்கு உணர்த்தி, அது குறித்து ஏதேனும் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்பது குறித்து அவருக்கு முழுமையான தெளிவு இருந்தாலும், அதுவே பெண்ணியக் குமுறலாக ஆனால், ஒரு குறுகிய வட்டத்துக்கு வெளியே வாசிக்கப்பட மாட்டாது என்பதை கோயெலோ அறிந்திருக்கிறார். எனவே சாதுரியமாக, மையநீரோட்டத்தில் உள்ள ஒரு புனைவு வகையை எடுத்துக் கொள்கிறார்- “தந்திரம் செய்து, கிளர்ச்சிக்காகப் படிக்க வைக்க வேண்டும்- ஆனால் நாம் பெண்களை நிஜ வாழ்வில் எப்படி நடத்துகிறோம் என்பதன் பயங்கரத்தை அவர்கள் கதையின் முடிவில் எதிர்கொள்ள வேண்டும். மதிப்பீடுகளைத் திசைமாற்றுவது என்பதே அடிப்படை நோக்கம். கவனிக்கப்படாமல் நுழைத்து விட வேண்டும். தப்ப முடியாமல் சிக்கும் வரை, முத்தாய்ப்பான கருத்தை ஒத்தி வைக்க வேண்டும்.”

ஆனால் இந்த வழிமுறை சுலபமாக் கைவசப்படாது. ஒவ்வொரு கதையிலும் கோயெலோ நம்மைச் சற்றே நிற்க வைக்கிறார், நாம் சரியாகப் புரிந்து கொண்டோமா என்பதையறிய கடந்த சில கடைசி வரிகளைத் திரும்பப் படிக்க வைக்கிறார். ஒரு திரைப்படத்தை நாம் எப்படிப் பார்ப்போமா அதுபோல், நம் மனதில் அவர் தோற்றுவித்திருக்கும் உருவம் தாங்க முடிய அளவு அருவருப்பானதாக இருப்பதால் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டியிருப்பதைப் போல், புத்தகத்தையும் அணுகச் செய்கிறார்.. ஆனால் இது இயல்பான ஒன்றுதான், அவர் எழுதும் விதம் அப்படி. “எனக்கு உருவங்களில்தான் கதை துவங்குகிறது. நான் ஒரு ஓவியராக இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரிசையாக சில உருவங்களைப் பார்க்கிறேன், இவை கிளர்வூட்டி என்னைச் சிந்திக்கத் தூண்டுன்றன. அதன்பின் அவற்றுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதத் துவங்குகிறேன். ஆனால் கதை எழுதும்போது, இதை மட்டும்தான் செய்ய வேண்டும். உனது நோக்கம், உனது பெண்ணிய வாதையைப் போகவிட வேண்டும்- உனக்குள் இருக்கும் கதைசொல்லிக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்.”

இந்தப் பேய்க்கதைகளை எழுதுகையில், கோயெலோ தன் வேதனையை உருவகங்களில் புதைத்து வைக்கிறார், அதில் அத்தனை வெற்றி பெறவில்லை என்பதால் அவை ஏகதேச உருவகங்களாக நிற்கின்றன எனலாம்.. ” கேளிக்கை என்ற வேடத்தில் பெண்ணியத்தை உள்ளே சரித்து விடுகையில்”, இவர் பெண்ணின் விரிவான அனுபவப் பரப்பை ஆவிகளின் வாழ்வுக்கு உரித்தாக்குகிறார். பெண்குழந்தைகள் பாலுறவுக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது, வரதட்சிணை, பாலுறவு வக்கிரங்கள், தனிமை, மௌனம், விபசாரம். ஆண்களின், வதையை முனைப்பாகக் கொண்ட பாலுறவு வக்கிரங்களை அனுமதிக்கும் பச்சை குத்தப்பட்ட வேசியை நாம் புரிந்துணர்வுடன் அணுகச் செய்கிறார். கோயெலோ மரணத்தை ஒரு சோக முடிவாகப் பேசுவதில்லை. பல இடங்களிலுமே அதை அவர் ஒரு விடுதலையாகவே பார்க்கிறார்: முன்னியும் ஜுகுனுவும் தப்பியோடுவதில் (நமக்குக் கிட்டும்) அசௌகரியமான சந்தோஷம், விடுபட்டு ஓடுவது அவர்களது ஆவிகள் மட்டுமே என்று உடனடியாக நாம் அறியும்போது அதிர்ச்சியாகவே ஆகிறது.

இவர் எப்போதும் ஆண்களைக் கொடியவர்களாகக் காட்டுகிறார் என்று சொல்ல முடியாது, தீய செயல்களைச் செய்பவர்களையே எப்போதும் குற்றம் சொல்கிறார் என்று சொல்ல முடியாது. கோயெலோ, பலியானவர்களைச் சுட்டும் தெளிவான கோடுகளை எப்போதும் தீட்டுவதில்லை. அவர் சொல்லும் கதைகள் பலவும் நிஜ வாழ்வின் பிரச்சினைகளைப் போலவே சிக்கலாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, Ave Maria என்ற கதையில் வரும் பெண் தன் அப்பாவிடம் இறந்து போன தன் அம்மா தனக்கு பியானோ கற்றுத் தருகிறாள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.. ஆனால் அவளது தந்தையோ, “உனக்கே தெரியும், இதை நீ மறுபடியும் ஆரம்பிக்கக் கூடாது என்று ஏற்கனவே நாம் பேசி ஒத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றுதான் சொல்கிறார். அதே அப்பா அதன் பின் அவளைக் குழந்தை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்- “மிகவும் புத்திசாலியான, நுண்ணுணர்வுள்ள இந்தக் குழந்தை தன் விருப்பத்துக்கு உலகைக் கற்பனை செய்து கொள்கிறாள். அது அம்மா தன்னுடன் உள்ள ஒரு உலகம், எப்போதும் அம்மா இருக்கப்போகும் ஒரு உலகம்,” என்று அந்த மருத்துவர் சொல்கிறார். இந்தக் கருத்தை எண்ணிப் பார்ப்பதே அவளுக்குச் சித்திரவதையாகிறது, எல்லாமே தன் மனதில்தான் இருந்தது எனபதை அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பாதிரியார் வாசிக்க அவள் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலமாக இது அத்தனையையும் இவள் எழுதும்போது, பாதிரியார் பதில் சொல்கிறார், “உன் ஒப்புதல் முழுதும் எனக்குச் சொல்வது, ஒன்றுதான் அழியாதிருக்கிற\து என்பதைத்தான் – அதுதான் தாயன்பு. உன்னைப் பேய் பீடிக்கவில்லை. நீ ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாய்..”

மன இறுக்கத்தில் உள்ள, உலகெங்கும் பயணம் செய்யும், பேய்களால் வாதனை செய்யப்படும் இசைக்கலைஞர்களின் குடும்பம் பற்றிய கதை சொல்பவர் அடுத்துச் சில பக்கங்களுக்குப் பின், தண்ணீர் இல்லாததால் நொறுங்கிச் சிதறிய ஏழைக்குடும்பம் பற்றிய கதைக்கு நகர்கிறார். ‘நிர்வாண ஆவி’ ’எனும் கதையில் த்ரௌபதி இருக்கிறாள். அரைக் குடுவை தண்ணீரை எடுத்துக் கொண்தற்காக அவளது ஆடைகள் பிடுங்கப்படும்போது அவளைக் காப்பாற்ற எந்தக் கிருஷ்ணனும் வரவில்லை. “நீதி எங்கே,” என்று அவள் அலறுகிறாள், “இறந்தவர்களுக்கு நீதி”, ஆனால், “அவளை விரட்டும் முயற்சியில்” அவள் அடித்து உதைத்து காயப்படுத்தப்படுகிறாள். நிர்வாணமாய் நிற்கும் பெண்ணின் பார்வை வழியே- அவள் அவமானம் தாங்காமல் இறந்தவள் – நாம் வாழும் தேசத்தின் சமூக, பண்பாட்டு, அரசியல் அடித்தளங்களை கோயெலோ நீக்க முடியாத வாதைக்குட்படுத்துகிறார்.

ஒவ்வொரு கதையிலும் நாம் மனதைத் துயரில் கனக்கச் செய்யும் அற்புத எழுத்தை எதிர்கொள்கிறோம் – அது நம்மை அதிர வைக்கிறது, நாமிருக்கும் இடத்தில் நிறுத்திவைத்து, திகிலும் எச்சரிக்கையுமாக நம்மைச் சுற்றித் திரும்பிப் பார்க்க வைக்கிறது. தனக்கு முன்னர் திகில் கதைகள் எழுதிய பல பெண் எழுத்தாளர்களைப் போல்- உதாரணத்துக்கு ஒரு ஈடித் வார்ட்டன் போல்- கோயெலோ அதி-இயற்கையை இயல்பாக்குகிறார். நாம் உயிர் வாழும் மண்டலத்தில் பேய்களுக்கு ஓர் இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறார். இதுவரை காது கொடுத்துக் கேட்கப்படாதவர்களுக்காகப் பேசுகிறார். அதி-இயற்கையில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்- அங்கு நமக்கு எவையெல்லாம் இயல்பாய் இருக்கின்றனவோ அவையனைத்தும் பயங்கரமானவை.

தமிழாக்கம்: மித்திலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *