இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம்.

அபர்ணா மஹியர்ஜா (Aparna Mahiyaria)

தமிழில்  – ஜெனி டொலி (JENYDOLLY)

பெண்களை மதிப்பது என்பது, மறுப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட, அவர்களது அனைத்து உரிமைகளையும் மதிப்பது. திருமணமின்றி இணைந்து வாழ்தல் பற்றிய அகில் பாரத்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ பி வி பி) ன் விமர்சனத்துக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி கூறுவது. பெண்கள் மீதான அடக்குமுறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு திருமண உறவின்றி சேர்ந்து வாழும் வழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கினர். இது போன்ற உறவுகள் “இந்திய கலாச்சாரத்திற்கும், குடும்ப முறைக்கும் எதிரானவை,” என தில்லி பல்கலைக்கழகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய ஏபிவிபி களப்பணியாளர்கள் கூறினர்.

“இது போன்ற உறவுகள் வெற்றிபெறுவதில்லை என்பதும் உண்மை,” என்று ஏபிவிபி-யின் தில்லி செயலாளர் சாகேத் பஹூகுனா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்ததார். “நாங்கள் கல்லூரிகளில் குழுக்களை ஏற்படுத்தி இது போன்ற உறவுகளில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி மாணவிகளுக்கு எடுத்துச் சொல்லப்போகிறோம்.”

ஆகஸ்ட்டு மாதம் லக்னோவில் நடைப்பெற்ற பெண்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி பட்டறையில் “மணவுறவின்றி சேர்ந்து வாழ்தல்” குறித்த விவாதித்தாக ஏபிவிபி-யின் தேசிய செயலாளர் ரோஹித் சஹாஹல் தெரிவித்தார்.

சஹாலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அபர்ணா மகியராஜா கீழ் கண்ட கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளார்.

திரு சஹால்,
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.நானும் அவரும் சேர்ந்து வாழ்கிறோம். வீட்டு வேலை செய்யத் தெரிந்தவர் அவர். அவ்வேலைகளை என்னுடன் பகிர்வது கொள்கிறார். அதுமட்டுமின்றி எல்லா பிரச்சனையான,இக்கட்டான சூழல்களிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறோம். ஒரு நாளின் முடிவில் (அது எத்தனை மணியானாலும் சரி) அவரிடம் திரும்பி வருவது ஒரு அழகான உணர்வு.

ஆர். எஸ். எஸ் களப்பணியாளர்களைக் கொண்ட குடும்பம் என்னுடையது. நான் பிஏ படித்து முடித்தவுடன் அவர்கள் தேர்நதெடுத்த (ஒரே சாதி/ மத்தத்தைஸ் சேர்நதவருக்குத் தான்) ஒருவருக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். நான் மேலும் படிக்க வேண்டும் என்ற காரணத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தாலும் திருமணத்தின் “தேவையைப” பற்றி அடிக்கடி பேசி நிம்மதியாக படிக்க கூட முடியாதபடி செய்கிறார்கள்.

பெண்களுக்கு உரிய மரியாதையைக் கேட்கும் உங்கள் களப்பணியாளர்களின் போராட்டத்தைப் பற்றி இப்போது தான் செய்தித் தாளில் வாசித்தேன். பெண்களை மதிப்பது என்பது அவர்களுக்கு தேவையானவற்றை மற்றவர்கள் தேர்ந்தெடுப்பது என்பது கிடையாது. பெண்களை மதித்தல் என்பது அவர்களின் தெரிவுகளை மதித்தல். மறுப்பது தான் அவர்களது தெரிவு என்றால் அதையும் மதித்தல். பெண்கள், மனிதர்களாக பிறநததாலேயே பகுத்தறிந்து பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.திறன் கொண்டவர்கள். பெண்களை மதிப்பதாக நினைக்கும் எவர் ஒருவரும் , பெண்கள் முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

என்னுடைய இந்த உறவு முறிந்து போனாலும் கூட அது என் வாழ்க்கையின் அந்தமாக ஆகிவிடாது. உங்களுடைய ஆணாதிக்க உலகத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு அது பெரிய விஷயம் இல்லை ஏனென்றால் என் துணையாக நான் தேர்ந்தெடுக்கும் ஆணை பொறுத்து என் அடையாளம் நிர்ணயிக்கபடுவதில்லை. உறவை முறித்துக் கொள்வது என்னுடைய முடிவாகவுமிருக்கலாம். அதே போல என் உறவின் வெற்றித் தோல்வியை கையாள்வது என்னுடைய பிரச்சனை,உங்களுடையது அல்ல. இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம். காதல் செய்தல் ஒரு அழகான அனுபவம்.

இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? என் நண்பர் ஒரு இஸ்லாமியர் . நாங்கள் இருவருமே மத நம்பிக்கையற்றவர்கள். எங்கள் உறவு எந்த மதத்தையோ, சாதியையோ சார்ந்ததாக இல்லை. இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சமும புரியாதில்லையா?

பி.கு. சில நேரங்களில் நாங்கள் எங்களுக்கான மதுபானத்தை கலந்து கொண்டு, எங்கள் பால்கனியில் அமர்ந்து பல மணிநேரம் பேசிக் கொண்டிருப்போம். அதே நேரம் உங்களுடனான, உங்களைப் போன்றோருடனான( என் பெற்றோரையும் சேர்த்து தான் சொல்கிறேன்) போராட்டமும் மறுபுறம் ந டந்து கொண்டே தான் இருக்கிறது.

சாஹில் குரேஷியின் மீதான தீராத காதலுடன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *