மேரி கோம் திரைப்படமும், மணிப்பூரும்

நன்றி -எதிர்கொள்

தேசிய இனங்களின் மீதான ஒதுக்குதல், ஒடுக்குதல் ஆகியவற்றிலிருந்து மீறி சர்வதேச அளவில் தமது திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களை வைத்து ‘பாலிவுட்’டும், இந்தியாவும் சிறந்த வணிகங்களை செய்து வருகிறது.சமீபத்தில் பேசப்பட்ட ’பாக் மில்கா பாக்’ என்கிற மில்கா சிங்கின் வெற்றி வாழ்க்கையை வைத்து வணிகம் செய்தார்கள். தற்பொழுது மணிப்பூரின் குத்துச்சண்டை வீராங்கனை ‘ மேரி கோம்’மின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் செய்திருக்கிறார்கள்.

இதில் என்ன தவறு என்கிறீர்களா?.

சீக்கிய இளைஞரை, மணிப்பூரினைப் பற்றி பேசி பணம் செய்யும் இந்த திரையுலகம், அம்மக்கள் இது நாள்வரை சந்தித்த இந்திய அரசின் ஒடுக்குமுறை, ராணுவமயமாக்கல், மனித உரிமை மீறல் குறித்து பொதுவெளியில் கூட பேசுவதில்லை. அம்மக்களின் அரசியல் உரிமைகள் மீறப்படுவது எந்த இடத்திலும் பதியப்பட்டதில்லை. இதற்கும் மேலாக இப்படங்கள் அரசியல் ரீதியில் இந்தியத்தினை உயர்த்திப் பிடிப்பதாகவும் அந்த தேசிய இன மக்களின் அடையாளங்களை முற்றிலும்/ பெரும்பாலும் தவிர்த்து இப்படங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாநிலங்களில் தேசிய இனவிடுதலைப் போராட்டங்கள் வலிமை பெற்று நடந்து கொண்டிருக்கும் போதிலும் வலிந்து இந்திய அடையாளம் திணிக்கப்படுவதை காணலாம்.

மேலும் இது ஹாலிவுட்டில் செய்யப்படும் திரைப்படங்களில் வெள்ளையர்களே காந்தியாகவும், ஏனையராகவும் இருப்பதைப் போன்று, ஒரே நாட்டில் இருப்பதாக சொல்லிக்கொண்டு தேசிய இனமக்களில் இருந்து கலைஞர்களை முன்னிறுத்தாமல் பாலிவுட் திரைப்பட கதாநாயகர்களை முன்னிறுத்துகிறார்கள்(வணிக நோக்கத்திற்காக இது செய்யப்படுவதாக சொல்கிறார்கள்). இது தொடர்பாக மணிப்பூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மணிப்பூரின் கலைஞர்கள் தேசிய விருது பெற்றவர்கள் , அவர்களை முன்னிறுத்தாமல் மணிப்பூரி இனமக்களை முற்றிலும் பிரதிபலிக்காத உடல்வாகு , முகம் கொண்டவர்களை ஏன் முன்னிறுத்துகிறீர்கள் என்று குரல் மணிப்பூரில் எழுகிறது.

 

 

இதை விட மோசமான விடயம், மணிப்பூரில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்திய ராணூவத்தின் வன்முறை குறித்தோ, அங்கு அமுல்செய்யப்பட்டுள்ள சிறப்பு சட்டம் (AFSPA) குறித்தோ இதுவரை இந்த கலையுலகம் கவலைப்பட்டதில்லை. இந்த சட்டத்தினை திரும்பப்பெறவேண்டுமென்று தொடர்ச்சியாக அம்மக்கள் , குறிப்பாக, பெண்கள் போராடிக்கொண்டிருப்பதை இந்தியாவின் எந்த ஊடகங்களும் கவலை கொண்டதில்லை.

மேரி கோமின் வாழ்க்கையை வைத்து நடிகை பிரயங்கா சோப்ராவினால் நடிக்கபெற்றிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் எந்த இடத்திலும் இப்படைப்பாளிகள் ஐரோம் சர்மிளா குறித்து பேசியதில்லை. இக்கலையுலகம் இந்தியாவின் வல்லாதிக்க போக்கினை புனிதபடுத்தும் கருவியாக செயல்படுகிறது. பாக் மில்கா பாக் என்கிற திரைப்படம் 30 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து 100 கோடி ரூபாய் பணத்தினை லாபமாக ஈட்டி இருக்கிறது என்ப்தை நினைவில் கொள்வோம்.

 

 

 

இப்படத்தினை மணிப்பூர் எப்படி எதிர்கொள்கிறது எனப் பார்ப்போம்.

மிக முக்கியமாக புரட்சிகர மக்கள் முன்னனி எனும் மணிப்பூரி போராளி குழு (சுதந்திர மணிப்பூருக்காக போராடும் அமைப்பு) மணிப்பூரில் 2000லிருந்து 15 ஆண்டுகளுக்கு இந்தி திரைப்படங்கள், இந்தி மொழி பயன்பாட்டினை தடைசெய்யதுள்ளது. இதனடிப்படையில் இப்படத்தினையும் அவர்கள் திரையிட அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற நட்சத்திரத்தினை விட இந்த வாழ்க்கையே இதன் சிறப்பு இதையே மையப்படுத்தி இருக்கவேண்டுமென்றும் , ப்ரியங்கா சோப்ராவின் முக அமைப்பு மேரி கோமின் மணிப்பூரி இனத்தினரினை பிரதிபலிக்கவில்லை என்பதையும் விவாதமாக்கி எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவினர் தங்களது இனவெறி, அக்கறையின்மை ஆகியவற்றினையே இப்படத்தில் மணிப்பூரி கலைஞர்களை புறக்கணித்து பாலிவுட் முக அமைப்புகளை காட்டியதன் மூலம் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

கருத்து சுதந்திரம், இந்தி-இந்தியம் , தேசிய இனவெறி, தமிழ்த் தேசிய-பாசிசம் என்றெல்லாம் பேசித்திரியும் தமிழகத்தின் அறிவுசீவி, பத்திரிக்கையாளர்கள், கமலஹாசன் வகையறாக்கள், இந்தியை படித்தால் முன்னேற்றம் எனபேசி திரிபவர்களுக்கு இது புதுசெய்தியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கக் கூடும். இந்தியாவில் பிற மாநிலங்களில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்தல் கொண்டுவந்தால் பல உண்மைகள் புரியும்.

இப்படத்தின் முன்னோட்டத்தினை பார்க்க :

இந்தப் படத்தின் எதிர்ப்பினைப் பற்றிய செய்தி குறிப்பு.

http://www.americanbazaaronline.com/2014/08/19/mary-kom-trying-hard-convince-indian-government-release-manipur-film-based-life/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *